Wednesday, June 30, 2010

> சொன்னதை உண்மையாக்கிய மனிஷா.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்ற கேள்விக்கு தயக்கமில்லாமல் எஸ் சொன்னவர் மனிஷா கொய்ராலா. அன்று சொன்னதை இன்று உண்மையாக்கியிருக்கிறார்.

பம்பாய் படத்தில் ரசிகர்களை கிறங்கடித்த மனிஷா கொய்ராலா ஏறக்குறைய பீல்ட் அவுட் ஆகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மாமியார், அம்மா போன்ற பே‌ரிளம் வேடங்கள்தான் இவருக்கு கிடைக்கின்றன. இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட அவர் திருமணத்தை காரணம் சொல்லி நடிப்புக்கு முழுக்குப் போடுவார் என்றே பலரும் நினைத்தனர்.

மாறாக திருமணமான ஒரே வாரத்தில் புதிய படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். பெய‌ரிடப்படாத இந்த இந்திப் படத்தில் மனிஷா அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.

அப்படியே தமிழ்ப் படத்துக்கும் கால்ஷீட் கொடுங்க.
மேலும் அறிய

> ரத்த ச‌ரித்திரம் படைத்த ச‌ரித்திரம்

விவேக் ஓபராய் நடித்திருப்பதால் ரத்த ச‌ரித்திரம் படத்தை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வெளியிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர் சிலர்.

தீவிரமாக இருக்க வேண்டிய சீமானோ, தம்பி சூர்யாவுக்காக விவேக் ஓபராயை மன்னிப்பதாக பேட்டி கொடுத்து திடீர் பாதி‌ரியாகியிருக்கிறார். சீமானின் கருணையின் பெருவெள்ளம் ராஜபக்சேயை தீண்டி திருநிலைப்படுத்தினாலும் ஆச்ச‌ரியமில்லை.

இந்த‌க் குழப்படிகள் ஒருபுறமிருக்க, ரத்த ச‌ரித்திரத்தை வாங்குவதில் ஒரு போட்டியே நடக்கிறது. குறிப்பாக படத்தின் வெளிநாட்டு விநியோக உ‌ரிமைக்கு.

இங்கிலாந்து, அமெ‌ரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கான விநியோக உ‌ரிமை 4.5 கோடிக்கு விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. சூர்யா நடித்த ஒரு படம் இத்தனை அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> அ‌‌‌ஜீத் உடன் இணையும் வெங்கட்பிரபு ?

கௌதம், அ‌‌‌ஜீத் இணையும் படம் டேக் ஆஃப் ஆகுமா என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள். மாஸ் ஹீரோவின் படத்தில் இப்படி குழப்பம் ஏற்படும் போது அடுத்ததாக எழும் உடனடி கேள்வி, அடுத்த இயக்குனர் யார்?

இந்தமுறை இந்த கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில், வெங்கட்பிரபு.

அ‌‌‌ஜீத்தும் வெங்கட்பிரபுவும் நண்பர்கள். ச‌ரியாகச் சொன்னால் அ‌‌‌ஜீத் வெங்கட்பிரபுவின் நலம் விரும்பி. நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று அ‌‌‌ஜீத் வெங்கட்பிரபுவிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான காலம் இப்போதுதான் கனிந்திருப்பதாக வெங்கட்பிரபு தரப்பு கூறுகிறது.

தயா‌ரிப்பாளர் சிவாவுக்காக பூச்சாண்டி என்ற படத்தை இயக்க இருக்கிறார் வெங்கட்பிரபு. காலம் தகைந்து வந்தால் பூச்சாண்டியை கிடப்பில் போட்டு அ‌‌‌ஜீத் படத்தை வெங்கட்பிரபு இயக்கலாம் என்கிறார்கள். அ‌‌‌ஜீத்துக்கான ஸ்கி‌ரிப்ட் வேலையில் வெங்கட்பிரபு தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் ஓ‌ரிரு நாளில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை ரசிகர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும் அறிய

Tuesday, June 29, 2010

> HD TV வாங்குவோரிற்கு பயனுள்ள குறிப்புகள்

தொலைக்காட்சி சாதனப் பெட்டி கண்டுபிடித்த நாள் முதல் பல தலமுறைகளைக் கடந்துவிட்டது. கேதோட்-ரே-டியூப் எனப்படும் CRT தொலைக்காட்சிப் பெட்டியின் கருப்பு-வெள்ளை தொகுப்பில் தொடங்கி இன்று HDTV வரை வந்துவிட்டோம். HDTV பற்றி அறியும் முன் சில தொலைக்காட்சி நுட்பங்களைப் பற்றி முதலில் அறிந்துக் கொள்வோம்.

முன்னரெல்லாம் தொலைக்காட்சி அனலாக் சிக்னல் அதாவது "தொடர்முறைக் குறிகை" மூலமாக மட்டுமே இயங்கக் கூடியதாக இருந்தன. தொலைக்காட்சிகளில் படங்கள் நிழற்படங்களாக பெறப்படும். அனலாக் சிக்னல் மூலமாக இயங்கிய தொலைக்காட்சி சாதனங்கள் 4:3 (LetterBox) நீள-அகல விகித படங்களை ஒளிபரப்பியன. பெறப்பட்ட நிழற்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக நொடிக்கு 25 நிழற்படங்களை காட்சிக்கு தருமாறு வடிவமைக்கப்பட்டன.

சில தலைமுறைகளுக்குப் பின்னராக இன்று HDTV என அழைக்கப்படும் உயர்-துல்லிய தொலைக்காட்சிகள் வழமைக்கு வந்துவிட்டன. LCD, LED, மற்றும் Plasma ஆகிய வகைகளில் இவ்வகைத் தொலைக்காட்சிகள் சந்தைகளில் கிடைக்கப்பெறுகின்றன.

HDTV மற்றும் முந்தையத் தலைமுறைத் தொலைக்காட்சிகளின் வித்தியாசங்களை பெரும்பாலும் முதற் பார்வையிலேயே சொல்லி விட முடியும். சில குறிப்பிடத் தக்க வித்தியாசங்கள்

HDTV தொலைக்கட்சிகளில் 16:9 நீள-அகல விகிதப் படங்கள் தோன்றும், ஆனால் CRT போன்றத் தொலைக்கட்சிகளில் 4:3 விகத படங்கள் தோன்றும்.


HDTV தொலைக்கட்சியின் துல்லியம் அளவில் 1080 நீள வரிகள் வரை இருக்கும். ஆனால், CRT போன்றத் தொலைக்கட்சிகளில் வெறும் 30 நீள வரிகளே கொண்டிருக்கும்.

HDTV தொலைக்காட்சி முறை LCD, LED, Plasma ஆகிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப் படுவதால் மின்சாரத்தின் தேவை மிகவும் குறைவானதே. ஆனால், CRT வகைத் தொலைக்காட்சிகளில், கேதோட்-ரே-கண் (Cathode-ray emitting gun) பயன்படுத்தப் படுவதால் மின்சாரப் பயன்பாடு அதிகமாக் இருக்கும். இதனால் CRT தொலைக்காட்சிகள் இன்றையத் தலைமுறைத் தொலைக்காட்சிகளை விட பல மடங்கு அதிக மின்சாரம் வீனடிக்கின்றன.

HDTV பற்றி:
HDTV தொலைக்காட்சிகள் அனைத்துமே 16:9 தெளிவு விகிதமாக இருப்பதால் 16:9 விகித அளவுக் கொண்ட படங்களை தெளிவாகக் காணலாம்.


HDTV-யில் பயன்படுத்தப்படும் சிக்னல்:
720p - 720 வரிகள் கொண்ட Progressive மேவுதல்
1080p - 1080 வடிகள் கொண்ட Progressive மேவுதல்
720i - 720 வரிகள் கொண்ட Interlace மேவுதல்
1080i - 1080 வரிகள் கொண்ட Interlace மேவுதல்

HDTV-யில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
HD அளவு:
கடைகளில் பலவேறு HDTV பார்க்கும் போது, ஒன்றைக் கவனித்து இருப்போம். சில தொலைக்காட்சிகளில் HalfHD என்றும் சில தொலைக்காட்சிகளில் FullHD என்றும் குறிக்கப்பட்டிருக்கும். அவை தான் HD-யின் அளவு. அரை HD தொலைக்காட்சிகள் 720p அல்லது 720i சிக்னலை வெளியிடும். முழு HD ஆனது, 1080p அல்லது 720p சிக்னலை வெளியிடும். எல்லாவித தொலைக்காட்சிகளும், எல்லா வித சிக்னலையும் உள்வாங்கும் திறன் கொண்டவை தான். இந்த அளவீடுகள் வெறும் வெளிக்கொனரும் சிக்னல் மட்டுமே. முழு HD மற்றும் அரை HD இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் நம் கண்ணிற்கு தெரியும் தெளிவின் அளவுகள். இதனை ஆங்கிலத்துல் Resolution என்று அழைக்கிறோம்.

ஒரு முழு HD (FullHD) = 1080p அல்லது 1080i = 1920x1080 pixels
ஒரு அரை HD (HD Ready) = 720p அல்லது 720i = 1280x720 pixels

நீங்கள் வாங்கப் போகும் தொலைக்காட்சி 42'-ற்கு மேற்பட்டு இருந்தால் முழு HD வகை தேர்ந்தெடுங்கள். குறைவாக இருந்தால், அரை HD வகை தேர்ந்தெடுங்கள். 42'ற்கும் குறைவாக இருக்கும் தொலைக்காட்சிகளில் முழு HD மற்றும் அரை HD ஆகியனவற்றிற்கான வேறுபாடுகள் தெரியாது, அதனால், போதுமான அளவான அரை HD தேர்ந்தெடுக்கொம் போது நீங்கள் பணத்தை மிச்சப்படுத்துகிறீர்கள்.

வண்ண பேத விகிதம் (Contrast Ratio)
கடைகளில் நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சிகளில், 30,000:1 முதல் 1,50,000:1 வரையிலான விகித அளவுகள் வண்ண பேத விகிதமாக குறிக்கப்பட்டிருக்கும். மனிதக் கண்களால் மிஞ்சிப் போனால் கும்மிருட்டில் அமர்ந்துப் பார்த்தால் கூட 600:1 அளவிற்கு மேல வித்தியாசம் உணர முடியாது. எனவே, இதெல்லாம் சந்தைகளில் போட்டிக் காரணமான உயர் புள்ளிகள் தாம். அதனால் இதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. குறைந்த அளவிலால் ஆன தொலைக்காட்சியைத் தேர்ந்தெடுத்து பணத்தை மிச்சப்படுத்தலாம்.

Refresh Rate:
Refresh Rate ஆனது, தொலைக்காட்சியின் திரை ஒரு நொடிக்கு எத்தனை நிழற்படங்களைத் தோற்றுவிக்க வல்லது என அறியப் பயன்படும் அளவு ஆகும். 1/30 எனக் குறிப்பிட்டு இருந்தால் அந்த திரையில், நொடிக்கு 30 நிழற்படங்கள் தோன்றும். ஆனால், பெரும்பாலான கேமராக்கள் 1/25 அளவில் தான் படம் பிடிக்கின்றன. ஆனாலும், Refresh Rate அதிகமாக இருப்பதால் படம் பார்க்கும் போது செதில் செதிலாகத் தோன்றாமல் கண்களுக்கு கடினம் இல்லாமல் பார்க்க இயலும். இதனால் குறைந்த பட்சம் 1/30 அளவில் தேர்ந்தெடுப்பது நல்லது.

மற்றவை:
ஒரு பரிந்துரைக்கத் தக்க தொலைக்காட்சியில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச இதர அம்சங்கள்:

ஒரு RGB-OUT
மூன்று RGB-IN (பின் பக்கம் இரண்டும், பக்க வாட்டில் ஒன்றும்)
இரண்டு HDMI-IN (பின் பக்கம் ஒன்றும், பக்க வாட்டில் ஒன்றும்)
இரண்டு USB-IN (ஒன்று பராமரிப்பிற்காக)
ஒரு Antenna-IN

குறைந்த பட்சம் இந்த வசதிகள் உள்ள HDTV வாங்குவதற்கு பரிந்துரைக்கலாம்.

HD பற்றியும், ப்ரொக்ரசிவ் மற்றும் இன்டர்லேசிங் ஸ்கேனிங் பற்றியும், இன்னும் சில தொழில் நுட்பம் பற்றியும் தனி தனி இடுகைகளில் காண்போம்.

Posted by வினோ
மேலும் அறிய

Sunday, June 27, 2010

> கருணாஸின் காமெடி பட்டியல்

கருணாஸ் தன்னைச் சந்திக்கும் பத்திரிகையாளர்களிடமெல்லாம் அம்பாசமுத்திரம் அம்பானி பற்றியும் தன் கைவசமிருக்கும் படங்களின் பட்டியல் பற்றியுமே விடாமல் சொல்கிறாராம். என்னதான் அவரோட சொந்தப் படமா இருந்தாலும் எவ்ளோ தான் கேக்கிறது என் இவரைக் கண்டாலே பத்திரிகையாளர்கள் இவரைக் கண்டாலே நழுவத் தொடங்குகின்றனர்.

அம்பானிக்குப் பின் கற்றது தமிழ் ராம், இயக்குநர் ராம்நாத்தின் இன்னொரு படம் உட்பட மூன்று படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம். இதுபோக 15 படங்களில் காமெடி ரோலும் பண்ணுகிறார். குழந்தைகளுக்கான 3டி ஆங்கிலப் படமொன்றில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறதாம்.
மேலும் அறிய

Friday, June 25, 2010

> மேக்னா நாயுடு கர்ப்பமா?

வீராசாமி, சரவணா, வைத்தீஸ்வரன் போன்ற படங்களில் நாயகியாக நடித்த மேக்னா நாயுடுவை ஞாபகமிருக்கிறதா? சொந்த மாநிலம் ஆந்திராவானாலும் இந்தி, தமிழ் என்று மொழி பேதம் பார்க்காமல் கலைச்சேவை செய்து வருகிறார் மேக்னா.

திடீரென்று மேக்னாவின் நண்பர்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதாக அவரது மெயிலிலிருந்தே செய்தி வந்தது. கூடவே அவரது பிஆர்ஓ டேல் பகவாகருடன் சாட்டிங்கில் தொடர்பு கொண்ட மேக்னா, தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இருந்தும் சற்று சந்தேக‌‌ம் அடைந்த டேல் மேக்னாவை தன் செல்லில் இருந்து தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டபோது கடந்த சில நாட்களாகத் தான் மெயிலைப் பயன்படுத்தவே இல்லை என்றார். விஷயம் இதுதான், மேக்னாவின் மெயிலுக்கான பாஸ்வேர்டை யாரோ ஒரு விஷமி தெரிந்து கொண்டு மேக்னாவின் பெயரில் அவர் அனுப்புவது போலவே செய்திகள் அனுப்பியிருக்கிறான். மேக்னா இப்போது போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருக்கிறார். ஜாக்கிரதை, ஜாக்கிரதை இ-மெயில் ஜாக்கிரதை.
மேலும் அறிய

> அனுஷ்கா காணும் கனவு

வேட்டைக்காரன் படம் தமிழில் கனவுக் கன்னி அந்தஸ்தைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்தார் அனுஷ்கா. அது புஸ்வாணமானதில் ஏமாற்றமடைந்த அனுஷ்காவுக்கு ஹரியின் சிங்கம் நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

அப்துல் கலாம் பாணியில் தமிழ்த் திரையுலகின் கனவுக் கன்னியாகும் கனவிலிருக்கும் அனுஷ்கா, தமிழின் முன்னணி வரிசையில் இடம் பிடித்திருக்கும் தமன்னா, ஸ்ரேயா போன்றோரையும் அவர்களது படங்களையும் உற்றுக் கவனித்து வருகிறார்.

யாராவது கனவுக் கன்னியாவது எப்படி என்று டியூசன் எடுத்தால் பீஸ் கட்டி சேர்ந்துவிடுவார் என்பது போல ஆர்வம் காட்டும் இந்த நாயகி, அதன் முதற்கட்டமாக சென்னைக்கு குடிவந்துவிடத் திட்டமிட்டிருக்கிறார்.
மேலும் அறிய

Thursday, June 24, 2010

> சிங்கம் தெலுங்கில்

தமிழ்த் திரையரங்குகளில் சிங்கத்தின் மெகா வெற்றி தெலுங்குத் தயாரிப்பாளர்களின் பார்வையை இப்படத்தின் பக்கம் திருப்பியுள்ளது.

ஏற்கனவே சூர்யாவின் முந்தைய படங்களான வாரணம் ஆயிரம், அயன் போன்றவையும் தெலுங்கில் டப் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றன. போதாதற்கு, ஹரி படங்கள் தெலுங்கில் டப் ஆகும்போது நல்ல வசூலை அள்ளும்.

இந்தப் படம் இருவரின் காம்பினேஷன் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 2ஆம் தேதி தெலுங்கில் யமுடு என்ற பெயரில் ரீலிசாகிறது சிங்கம்.
மேலும் அறிய

> அரசியலுக்கு ஆயத்தமா? பிறந்தநாள் கொண்டாட்டமா?

நடிகர் விஜய் தன் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தார்.

வழக்கமாக இன்றைய ஆளும்கட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டுத்தான் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது வழக்கம்.

அதே பாணியில் பிறந்த நாள் கொண்டாடுவது தற்செயலாகவா, எதிர்கால அரசியல் பிரவேசத்தை மனதில் வைத்தா என்பது எம்பெருமான் வேலாயுதபாணிக்கே வெளிச்சம்.


"விஜய்க்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
தமிழ்நெட்வேர்க்.இன்போ விஜய் ரசிகர் மன்றம்
மேலும் அறிய

Wednesday, June 23, 2010

> தனுஷய் தேடி வரும் யோகம்

சிங்கம்- படத்தின் சூப்பர் டூப்பர்ஹிட் வெற்றி தந்த உற்சாகத்துடன் அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார் ஹரி. நாயகன் நம்ம சுள்ளான் தனுஷ். நாயகி தமன்னா.

வழக்கம்போல் ஹரி ஆக் ஷன் கதையைத் தான் தேர்வு செய்திருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தில் அசத்தலான கேரக்டர் ரோல் ஒன்றைப் பண்ணுகிறார் ராஜ்கிரண்.

ஒருவேளை தனுஷ் கொஞ்சம் ஒல்லியாக இருப்பதால் சிறுத்தை என்று பெயர் வைப்பாரோ என்னவோ?
மேலும் அறிய

> சத்யராஜ் அரசியல்வாதியாகவும் ஆசிரியராகவும்

எடக்கு மடக்கான அரசியல்வாதி கதை கையிலிருப்பவர்கள் நேரே தஞ்சமடைவது நடிகர் சத்யராஜைத்தான்.

இயக்குநர் மஜீத் மட்டும் விதிவிலக்காயிருக்க முடியுமா? கையிலிருக்கும் 'காதலர் கதை ' ரீலிசானதும் சத்யராஜின் 'ஆசிரியன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனச் சொல்கிறார் மஜீத்.

இந்தப் படத்தில் சத்யராஜுக்கு இரட்டை வேடமாம். ஆசிரியராகவும் அரசியல்வாதியாகவும் கலக்கும் இந்தப் படம், சத்யராஜின் அமைதிப் படை ரேஞ்சுக்கு கலகலப்பாகவும் வெற்றிப்படமாகவும் இருக்கும் என்கிறார்கள். வெறுமனே லொள்ளு மட்டும் பேசாமல் , நல்ல அரசியல்வாதிக்கான இலக்கணத்தையும் எடுத்துக்கூறப்போகிறார்களாம்.
மேலும் அறிய

> ரஜனி இளமையைக் குறைக்கும் தனுஷ்

இந்த தனுஷுக்கு வேற வேலையே இல்லை. கேரளா ஆயுர்வேத நிலையங்களுக்கும், இமயமலை குகைகளுக்கும் போய் நம்ம சூப்பர் ஸ்டார் இளமையைத் தக்க வைக்கப் பார்க்க, தனுஷோ மீண்டும் அவருக்கு ஒரு பேரனைத் தந்து அவர் தாத்தா என்பதை நினைவூட்டியிருக்கிறார்.

மறுபடியும் ஒரு பேரனுக்குச் சொந்தமாகியிருக்கும் இந்த தாத்தா, எந்திரன் படக்குழுவினருக்கு ஒரு சூப்பர் பார்ட்டி வைத்துக் கொண்டாடும் திட்டத்திலிருக்கிறார்.
மேலும் அறிய

Tuesday, June 22, 2010

> ராவண‌ன் - விமர்சனம்

தளபதி படத்தில் மகாபாரத கதையை எடுத்துக் கொண்ட மணிரத்னம் இந்தமுறை எடுத்திருப்பது ராமாயணத்தை.

மலைவாழ் மக்களின் ஆதர்ஷ நாயகனாக இருப்பவன் வீரா (விக்ரம்). ஆனால் காவல்துறையை பொறுத்தவரை பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி. வீராவின் அண்ணன் சிங்கராசா (பிரபு)இ தம்பி சக்கரை (முன்னா), தங்கை வெண்ணிலா (ப்‌ரியாமணி).

வெண்ணிலாவின் திருமணத்தன்று வீராவை பிடிக்க வரும் போலீஸ் ப்‌ரியாமணியை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் வெண்ணிலாவின் இறப்புக்கு பழி வாங்க போலீஸ் அதிகா‌ரி தேவின் (பிருத்விரா‌ஜ்) மனைவி ராகினியை (ஐஸ்வர்யாராய்) வீரா கடத்துகிறான். ராகினியின் துணிவும், அழகும் வீராவை கவர்கிறது. இந்த பொருந்தாத காதல் நடைமுறைக்கு ச‌ரிவராது என்று அவளை அவளது கணவன் தேவுடன் அனுப்பி வைக்கிறான் வீரா. ஆனால் தேவ் மனைவியின் கற்பை சந்தேகப்படுகிறான். ராகினி கணவனைவிட்டு வீராவை தேடி வருகிறாள். அவளுக்கும் வீரா மீது காதல் தோன்றுகிறது. ஆனால் ராகினி ஒரு துருப்பு சீட்டு என்பதை நாமும், வீராவும் உணரும் போது காலம் கடந்துவிடுகிறது.

மணிரத்னத்தின் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷுவல் ட்‌ரிட் ஒவ்வொரு ப்ரேமிலும் நிரம்பி வழிகிறது. குறிப்பாக உசுரே போகுதே பாடல் காட்சி. இத்தனை அடர்த்தியான, அழகான காட்டை இதற்குமுன் எந்த தமிழில் சினிமாவிலும் பார்த்ததில்லை என்று உறுதியாக கூறலாம்.

ரஹ்மானின் இசையில் உயிரே போகுதே, வீரா பாடல்கள் கவர்கின்றன. நடிப்பைப் பொறுத்தவரை அனைவருமே பாஸ் மார்க் வாங்குகிறார்கள். ஆனாலும் டிஷ்டிங்ஸன் விக்ரமுக்கும், ஐஸ்வர்யாராயுக்கும்தான். முரட்டு வீரா கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்திப் போகிறார் விக்ரம். முகபாவங்கள் காட்டி வந்த ஐஸ்வர்யாராய்க்கு தனது உடல் பலத்தையும் காட்ட வேண்டிய கதாபாத்திரம். படத்தின் நிறைவான கதாபாத்திரமும் இவருடையதுதான். அனுமானை நினைவுப்படுத்தும் காட்டிலாகா அதிகா‌ரியாக வருகிறார் கார்த்திக். நீ இனிமே இங்கத்தானே இருக்கப் போற என்று விக்ரம் சொன்னதும் ஒரு முகபாவம் காட்டுகிறாரே...சபாஷ். பிரபு, ப்‌ரியாமணி, முன்னா, ரஞ்சிதா ஆகியோருக்கு இந்தப் படம் இன்னொரு வாய்ப்பு மட்டுமே.

சந்தோஷ் சிவன், மணிகண்டன் இருவரும் அசுரத்தனமாக உழைத்திருக்கிறார்கள். சமீர் சந்தாவின் கலை இயக்கம் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக அந்த சிவன் சிலையும், கோடு போட்டா பாடல் காட்சியில் வரும் அந்த கோயில் பகுதியும். ஆக்சன் காட்சிகளும் பழுதில்லை.

தொழில்நுட்பம் மற்றும் நடிப்பைப் பொறுத்தவரை ராவணன் படத்தில் குறைகள் பெருமளவு இல்லை என்றே சொல்லலாம். ஆனால் படம் ரசிகர்களை கவர்கிறதா என்றால், இல்லை. படத்தின் நிறைகள் ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் பொருந்தாமல் குழப்பியடிப்பதுதான் முக்கிய காரணம்.

படத்தின் மைய கதாபாத்திரம் வீரா. ஆனால் இந்த வீரா யார் என்று சா‌ரியாக காட்டப்படவில்லை. ஒருநேரம் கிராமத்தில் இருக்கிறார். இன்னொரு நேரம் மலைவாழ் மக்களுடன் இருக்கிறார். இவர் போராடுவது இதில் யாருக்காக? குறிப்பாக எதை எதிர்த்துப் போராடுகிறார்? மலைவாழ் மக்கள் வீராவைப் பற்றி சொல்லும் சித்திரம் அந்த கதாபாத்திரத்தை விளக்குவதற்குப் பதில் குழப்பவே செய்கிறது. இந்த தடுமாற்றம் உரையாடல், லேண்ட்ஸ்கேப், கலை இயக்கம் என்று எல்லாவற்றிலும் பிரதிபலிக்கிறது.

படத்தின் மிகப் பெ‌ரிய ஏமாற்றம் பின்னணி இசை. பெரும்பாலான நேரம் காட்சிக்கு ஒட்டாமலே ஒலிக்கிறது. உதாரணமாக ஐஸ்வர்யாராய் விக்ரமை தாக்கும் இடம். அவர் ஆக்ரோஷமாக தாக்க, விக்ரம் அதை ரொமான்டிக்காக அனுபவிக்க பின்னணியில் யாத்தே... காட்டு சிறுக்கி என்றெல்லாம் ஈனஸ்வரத்தில் பாடல் வருகிறது. நடிப்பு, உணர்வு, சூழல், பின்னணி இசை என எதுவும் பொருந்திப் போகாத இடங்களில் இதுவும் ஒன்று.

வசனத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். ப்‌ரியாமணி திருநெல்வேலி ஸ்லாங்கில் ஏல போட்டு பேசுகிறார். திடீரென அம்புட்டுதேன் என்று திருநெல்வேலிக்கு சம்பந்தமில்லாமலும் பேசுகிறார். தங்கை திருநெல்வேலி பாஷை பேச அண்ணன்கள் பேசுவதோ வேறு ஒன்று.

தண்ணீருக்கு நடுவில் படகை உடைத்து ஒரு பெண் கடத்தப்படுகிறாhள். கடத்தியது யார் என்று தொ‌ரியாது. என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியாது. இந்நிலையில் அந்தப் பெண் என்ன செய்வாள்? மணிரத்னம் படத்தின் நாயகி ஆக்ரோஷமாக கவிதைப் படிக்கிறாள். யதார்த்தத்தை மீறி மணிரத்னம் செய்யும் இந்த ரொமான்டிஸம் படம் நெடுக வருகிறது. படத்தின் சீ‌ரிஸ்னசுக்கு வேட்டு வைப்பது இந்த ரொமான்டிஸம்தான்.

படத்தின் இன்னொரு முக்கியமான குறை லேண்ட்ஸ்கேப். கதை திருநெல்வேலி அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரம் என்ற ஊ‌ரில் நடிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அங்கு நடக்கும் ப்‌ரியாமணியின் திருமண ஊர்வலத்தில் வாரணாசியில் உள்ளது போன்ற கோயில்களும் கோபுரங்களும் பின்னணியில் வருகின்றன. வட இந்தியர்களைப் போலதான் பலநேரம் உடை உடுத்தியிருக்கிறார்கள் இந்த திருநெல்வேலி மக்கள். ஃபெர்பக்ஷனிஸ்ட் என்று அழைக்கப்படுகிற மணிரத்னத்தின் படத்தில்தான் கதைக்களம் இந்தளவுக்கு துண்டாடப்பட்டிருக்கிறது. (இதற்கு முந்தையப் படம் குரு).

கதை கூறும் முறையிலும் கோர்வையில்லாமல் காட்சிகளும், உணர்வுகளும் துண்டாடப்படுகின்றன. படத்தின் லா‌‌ஜிக் மீறல்கள் பற்றி பல பாராக்கள் எழுதலாம். மொத்தத்தில்,

ராவணன் - ஆன்மா இல்லாத அழகு.
மேலும் அறிய

> தமன்னா, சிம்பு ஜோடி

கே.வி.ஆனந்தின் கோ படத்திலிலிருந்து சிம்பு விலகியதற்கு தமன்னாவை ஹீரோவாகப் போடாததும் ஒரு காரணம் என்று சில பத்தி‌ரிகைகள் எழுதின. இந்த குற்றச்சாற்றை சிம்பு மறுத்தார்.

தமன்னாவை சிம்பு ஹீரோயினாகப் போடச் சொன்னது உண்மையோ பொய்யோ... சிம்புவின் சீக்ரெட் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது.

லிங்குசாமியின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்துக்கு தமன்னாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகிறது. தமிழில் சிம்பு ஹீரோ. தெலுங்கில் மகேஷ்பாபு.

தமிழில் தமன்னா ஹீரோயின். தெலுங்கில்? இன்னும் முடிவு செய்யவில்லையாம்.
மேலும் அறிய

Sunday, June 20, 2010

> சீமானுடன் இணைந்து நடிக்கிறார் சிபிரா‌ஜ்

சீமானுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார் சிபிரா‌ஜ். ஜூலை இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

ராமன் தேடிய சீதை படத்துக்குப் பிறகு ஜெகன்‌ஜி இயக்கும் படத்துக்கு ரோஜா மல்லி கனகாம்பரம் என்று பெயர் வைத்திருந்தனர். இந்தப் படத்தில் ஹீரோவாக சீமான் நடிக்கிறார். தற்போது இரண்டாவது ஹீரோவாக சிபிராஜை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஜெகன் இயக்கிய கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களுக்கு முற்றிலும் மாறான ஆக்சன் கதைக்களத்தை கொண்டதாம் இந்தப் படம். அதனால் ரோஜா மல்லி கனகாம்பரம் என்ற பெயரை மாற்றி புதுப்பெய‌ரிட முடிவு செய்துள்ளனர்.

ஜூலை இறுதியில் படப்பிடிப்புக்கு கிளம்ப திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அறிய

> ராவணன் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா?

மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான ராவணன் நேற்று வெளியானது. படத்தைக் காண உள்ளூ‌ரிலும், வெளியூ‌ரிலும் ரசிகர்கள் முட்டி மோதினார்கள். இந்தியிலும் இதுதான் நிலைமை.

ஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா?

மணிரத்னத்தின் தீவிர விசிறிகளைக் கூட திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. வழக்கம்போல ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம், ஆக்சன் காட்சிகள், பாடல் காட்சிகள் என தொழில்நுட்ப விஷயத்தில் ராவணன் மிரட்டியிருக்கிறது. ஆனால் கதை, திரைக்கதை, யதார்த்தம் இவற்றில் படம் பெருமளவு சறுக்கியிருக்கிறது.

ஓபனிங் நன்றாக இருந்தாலும் ஒரு வாரத்துக்குள் படத்தின் கலெ‌க்சன் பெ‌ரிய அளவில் பாதிக்கப்படும் என பாலிவுட் விமர்சகர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த‌க் கணிப்பும், படம் பார்த்து வரும் ரசிகர்களின் மனநிலையும் ஒன்றாக இருப்பதுதான் ராவணனின் முன்னிருக்கும் மிகப் பெ‌ரிய சவால்.
மேலும் அறிய

Saturday, June 19, 2010

> சீமான் பல்டி அதிர்ச்சியில் தொண்டர்கள்!

கா‌ரியவாதி அரசியல்வாதிகளுக்கு நடுவில் தமிழ் உணர்வை காட்டுவதில் கறாராக இருக்கிறாரே சீமான் என்று மகிழாத தமிழ் மனம் இல்லை. ஆனால் இந்த‌க் கறார் உணர்வாளர் தனது கொள்கையிலிருந்து திடீரென கவிழ்ந்திருப்பது தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இலங்கையில் நடந்த பட விழாவில் கலந்து கொண்ட அனைத்து நட்சத்திரங்களின் படங்களையும் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னகத்திலுள்ள ஐந்து மாநிலங்களிலும் அனுமதிக்க மாட்டோம் என திரைப்பட சங்கங்கள் அறிவித்துள்ளன. பட விழாவில் கலந்து கொண்ட ஹிருத்திக் ரோஷனின் கைட்ஸ் படத்தை சென்னை திரையரங்குகளிலிருந்து தூக்க வேண்டும் என திரையரங்க உ‌ரிமையாளர்களுக்கு கடிதம் கொடுத்து, இந்த‌ச் செயல் திட்டத்தை தொடங்கி வைத்தவர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சியினர். (அதே நேரம் இலங்கை படவிழாவில் கலந்து கொண்ட கத்‌ரினா கைஃபின் ரா‌ஜ்நீதி திரைப்படம் இன்னும் சென்னையில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது).

இந்த இனத்துரோக படவிழாவில் பங்கேற்றதுடன் தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தி ராஜபக்சேயின் முதல்தர அடிவருடி என்ற பெயரை தட்டிச் சென்றவர் விவேக் ஓபராய். படவிழா முடிந்த பிறகும் கொலைகாரன் ராஜபக்சேவின் விருந்தினராக இலங்கையில் தங்கியிருந்ததுடன் அவன் ஏற்பாடு செய்த கண் துடைப்பு திருமண விழாவுக்கு சீஃப் கெஸ்டாக சென்று தமிழர்களின் உணர்வை காலில் போட்டு மிதித்த நடிகர் விவேக் ஓபராய்.

இந்த விவேக் ஓபராயை சீமான் மன்னித்துவிட்டாராம். ஏதற்கு?

விவேக் ஓபராய் நடித்த ரத்த ச‌ரித்திரம் ஆகஸ்டில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு எதிராக சீமான் போராட்டம் நடத்த மாட்டாராம். ரத்த ச‌ரித்திரத்தில் சூர்யா நடித்திருப்பதால் விவேக் ஓபராயை மன்னித்து படத்தை வெளியிட அனுமதிப்பாராம். ரத்த ச‌ரித்திரத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அது சூர்யாவுக்கு எதிரான போராட்டமாகிவிடுமாம்.

பத்து கோடி தமிழர்கள் சம்பந்தப்பட்ட உணர்வுமிக்க விஷயத்தில் தன்னிச்சையாக பொது மன்னிப்பு வழங்க சீமான் யா‌ர்? எப்போது அவர் பாவமன்னிப்பு வழங்கும் பாதி‌ரியானார்?

சொந்த பிள்ளைகளுக்காகவும், உடன்பிறவா சொந்தங்களுக்காகவும் கொள்கையை பறக்கவிடும் மற்ற அரசியல்வாதிகளுக்கும் சீமானுக்கும் என்ன வித்தியாசம்? கட்சி தொடங்கி இரண்டு மாதம்கூட பூர்த்தியாகாத நிலையில், எதற்காக கட்சி தொடங்கினாரோ அந்த‌க் கொள்கையையே ஏதோ ஒரு தம்பிக்காக விட்டுத் தருகிறார் என்றால் நாளை இன்னொரு தம்பிக்காக தமிழர்களையே கை கழுவ மாட்டார் என்று எப்படி நம்புவது?

மற்றவர்கள் ஒரு சயனைடு குப்பியை கழுத்தில் தொங்கவிட்ட போது தனது குடும்பத்தின‌ரின் கழுத்தில் இரு சயனைடு குப்பிகளை தொங்கவிட்ட தமி‌ழீழ தேசிய‌த் தலைவ‌ரின் தம்பி என்று சொல்லிக் கொள்கிற தகுதி தனக்கிருக்கிறதா என்று சீமான் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மேலும் அறிய

> வேலாயுதம் படத்தில் ரிப்போர்டர் ஜெனிலியா

வேலாயுதம் படத்தில் பத்தி‌ரிகை நிருபராக நடிக்கிறார் ஜெனிலியா. இது தெலுங்கில் சௌந்தர்யா நடித்த வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் நாகார்ஜுன், சௌந்தர்யா, ஷில்பா ஷெட்டி நடித்த ஆஸாத் படத்தைதான் தமிழுக்கேற்ப மாற்றி வேலாயுதமாக எடுக்கின்றனர். இதில் நாகார்ஜுன் வேடத்தில் விஜய்யும், சௌந்தர்யா நடித்த வேடத்தில் ஜெனிலியாவும் நடிக்கின்றனர். சௌந்தர்யா ஆஸாத்தில் பத்தி‌ரிகை நிருபராக நடித்திருந்தார்.

ஷில்பா ஷெட்டி நடித்த வேடத்தை தமிழில் செய்பவர் ஹன்சிகா மோத்வானி.

இவர்கள் தவிர சரண்யா மோகனும் வேலாயுதத்தில் நடிக்கிறார். இவர் விஜய்யின் தங்கையாக நடிக்கிறார். ப்‌ரியன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஒளிப்பதிவு செய்யும் முதல் விஜய் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> எந்திரன் ஆடியோ ஜூலை 18 முதல்?

ஜூலையில் எந்திரன் படத்தின் பாடல்கள் வெளியிடப்படுவதாக படத்தை தயா‌ரிக்கும் சன் பிக்சர்ஸின் குடும்பப் பத்தி‌ரிகையான தினகரன் தெ‌ரிவித்துள்ளது. ஆனால் தேதி?

அனேகமாக 18ஆ‌ம் தேதியாக இருக்கலாம் என்கிறார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை துபாயில் நடத்தயிருப்பதாக முன்பு தகவல் கசிந்தது. இப்போது அதிலும் மாற்றம். விழா நடக்கும் இடம் மலேசியாவாக இருக்கலாம் என்கிறார்கள்.

ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ர‌ஜினி, சன் பிக்சர்ஸ் என்று பலம் வாய்ந்த கூட்டணி என்பதால் பாடல்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ர‌ஜினி கூறியது போல் படம் ஆகஸ்டில் வெளிவந்தாலும் ஆச்ச‌ரியமில்லை என்கிறார்கள்.
மேலும் அறிய

> ராவணன் ரா‌ஜ் TVயில்

ராவணன் போன்ற பிரமாண்ட படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை வாங்குவதில் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு நடுவில்தான் கடும் போட்டியிருக்கும்.

ஆனால் இந்தமுறை போட்டியில் இன்னொரு நிறுவனமும் கலந்து கொண்டது. அது, சிறு படங்களின் ஒளிபரப்பு உ‌ரிமையை மட்டுமே வாங்கும் ரா‌ஜ் தொலைக்காட்சி.

போட்டியில் கலந்து கொண்டது மட்டுமின்றி மற்ற இரு தொலைக்காட்சிகளையும் முந்திக்கொண்டு ராவணன் ஒளிபரப்பு உ‌ரிமையை தனதாக்கிக் கொண்டுள்ளது. ஆம், ராவணன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை ரா‌ஜ் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

இந்த ஜாக்பாட்டுக்கு ரா‌ஜ் தொலைக்காட்சி கொடுத்த விலை ஐந்து கோடிகள். தமிழில் தசாவதாரத்துக்கு அடுத்து அதிக விலைக்கு விற்பனையானது ராவணன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

Friday, June 18, 2010

> விஜய்க்காகவா இந்த பிரிவு

ஹ‌ரியின் கண்கள் என்று சொல்லலாம் ஒளிப்பதிவாளர் ப்‌ரியனை. ஹ‌ரியின் படத்தில் எது மாறினாலும் ஒளிப்பதிவாளர் ப்‌ரியன் என்பது மட்டும் மாறாது. இறுதியாக வெளியான சிங்கத்திலும் ப்‌ரியன்தான் ஒளிப்பதிவு.

இந்த வெற்றி‌க் கூட்டணி விரைவில் பி‌ரியப் போகிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இந்தப் பி‌ரிவுக்கான காரணம் என்ன என்பதை இருவரும் தெ‌ரிவிக்கவில்லை. அதேநேரம், ஹ‌ரியின் கமர்ஷியல் படத்துக்கு தொடர்ந்து ஒளிப்பதிவு செய்வதால் தனது மனதுக்குப் பிடித்த யதார்த்தப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய முடியவில்லை என்ற குறை ப்‌ரியனுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெ‌ரிவிக்கிறார்கள். அந்த‌க் குறையை‌த் தீர்க்க ப்‌ரியன் எடுத்த முதல் முயற்சிதான் இந்தப் பி‌ரிவு என்றும் கூறப்படுகிறது.

மேலும், விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு ப்‌ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்க்கும் ஹ‌ரிக்கும் ஆகாது என்பது இன்டஸ்ட்‌ரி முழுவதுக்குமே தெ‌ரியும்.

இந்த‌க் காரணத்தால் பி‌ரிவு நிச்சயம் என்கிறார்கள்.
மேலும் அறிய

> ‌‌ரீ ஷூட் ஆகும் ரத்த ச‌ரித்திரம்

ராம்கோபால் வர்மாவின் ரத்த ச‌ரித்திரத்தில் சூர்யா, ப்‌ரியாமணி நடித்துள்ளனர். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத விவேக் ஓபராயும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

இந்த கறுப்பு ஆடு காரணமாக ரத்த ச‌ரித்திரத்தை தமிழகம் மட்டுமின்றி மேலும் நான்கு மாநிலங்களில் வெளியிட இயலுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. சூர்யாவுக்காக விவேக் ஓபராய் இடம்பெற்ற ஒரு படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்று சங்கங்கள் திட்டவட்டமாக கூறிவிட்டன.

இந்நிலையில் படத்தின் சில காட்சிகளை ‌‌ரீ ஷூட் செய்ய தீர்மானித்துள்ளார் வர்மா. இதற்காக 15 நாட்கள் கூடுதல் கால்ஷீட் கொடுத்துள்ளார் சூர்யா.

என்ன கொடுத்தாலும் படம் பார்வையாளர்களின் பார்வைக்கு வருமா என்பதுதான் சந்தேகம்.
மேலும் அறிய

Thursday, June 17, 2010

> விஜய் படத்தில் திடீர் மாற்றம்

விஜய் சித்திக் இயக்கத்தில் காவல்காரன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படம் வேலாயுதம். ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிக்க, ஜெயம் ராஜா இயக்குகிறார்.

இந்தப் படத்தில் இரு ஹீரோயின்கள். ஒருவர் ஹன்சிகா மோத்வானி. இன்னொருவர் சர்ச்சையில் சிக்கிய ஜெனிலியா. இவர்களுடன் சரண்யா மோகனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய் படத்தில் இத்தனை இளம் பெண் கதாபாத்திரங்கள் இடம் பெறுவது இதுவே முதல் முறை.

வேலாயுதத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்வார் என முதலில் கூறப்பட்டது. தற்போது அவருக்குப் பதில் ஹ‌ரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்‌ரியனை ஒப்பந்தம் செய்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
மேலும் அறிய

> முதல் 3 இடங்களில் சிங்கம் - சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது ஹ‌ரியின் சிங்கம். இதுவரை இந்தப் படத்தின் இறுதி மூன்று நாள் வசூல் 50 லட்சத்துக்கு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5. மாஞ்சா வேலு
மொட்டை அடிப்பது, காட்டுக் கூச்சல் போடுவது, தசையை முறுக்கி வில்லன்களை அடிப்பது, கட்டிடத்துக்கு கட்டிடம் தாவுவது... இதெல்லாம் ஒரு படத்தை ஓட வைக்காது என்பதை அருண் விஜய்க்கு உணர்த்தியிருக்கும் படம். சென்ற வார இறுதியில் 1.76 லட்சங்களை மட்டுமே வசூலித்திருக்கும் இப்படம் மூன்று வார முடிவில் 32 லட்சங்களை வசூலித்துள்ளது.

4. பா.ர.பழனிச்சாமி
டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் நடித்திருக்கும் இந்தப் படம் அவரது வயதைப் போலவே தடுமாறுகிறது. முதல் மூன்று தினங்களில் இந்தப் படம் 2.45 லட்சங்களை மட்டுமே வசூலித்து தயா‌ரிப்பாளருக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

3. இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
இந்த காமெடி சிங்கத்தின் கர்ஜனை கலெ‌க்சனில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஐந்து வார முடிவில் சென்னையில் 1.47 கோடிகளை வசூலித்த இந்தப் படம் சென்ற வார இறுதியில் 2.52 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

2. பெண் சிங்கம்
வரலாறு காணாத விளம்பரத்துடன் வந்த பெண் சிங்கம் சென்ற வார இறுதியில் 2.7 லட்சங்களை மட்டுமே வசூலித்து அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது. இப்படி சொல்ல காரணம் உள்ளது. இதன் முதல் பத்து நாள் வசூல் 25 லட்சங்கள். ஓபனிங்கில் எடுத்த கலெ‌‌க்சனை தவிர்த்தால் இப்படம் வசூலித்திருப்பது மிக மிக சொற்பம்.

1. சிங்கம்
தொடர்ந்து முதலிடத்தில் சிங்கம். சென்ற வார இறுதியில் 57 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது. இரு வாரங்கள் முடிவில் சென்னையில் மட்டும் 3.42 கோடிகளை வசூலித்து அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தை தந்துள்ளது.
மேலும் அறிய

> கமலின் கண்டிப்பான முடிவு

கதை விஷயத்தில் எப்போதும் கண்டிப்புடன்தான் இருப்பார் கமல். ஆனால் மன்மதன் அம்பு விஷயத்தில் கண்டிப்பின் சதவீதம் அதிக‌ரித்திருக்கிறது.

இந்த ரொமா‌ண்டிக் காமெடி படத்தின் கதை விவாதத்தில் கமல், கே.எஸ்.ரவிக்குமார், இரா.முருகன், கிரேஸி மோகன் என்று சொற்ப நபர்களே கலந்து கொண்டனர். படத்தின் ஒன் லைன் கூட கே.எஸ்.ரவிக்குமா‌ரின் உதவியாளர்களுக்கு தெ‌ரியாது என்கிறது ஆழ்வார்பேட்டை அலுவலகம்.

இந்த ராணுவ பாதுகாப்புக்கு காரணம் இருக்கிறது. கமல் எந்தப் படத்தைத் தொடங்கினாலும் இது என் கதை என்று வழக்குப் போட ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கிறது. கதை கசிந்தால்தானே இந்த வில்லங்கம் என்று யாருக்கும் கதையை சொல்லாமல் படப்பிடிப்புக்கு கிளம்பியிருக்கிறார்கள்.

காய்ப்பது ஒருவகை கஷ்டமென்றால் கல்லடி படாமல் தப்பிப்பது அதைவிட கஷ்டம் போலிருக்கிறதே.
மேலும் அறிய

> அடம் பிடித்தால் அசினுக்கு ஆப்பு

சல்மான் கான், விவேக் ஓபராய்... இந்தியாவின் கொலஸ்ட்ரால் நடிகர்கள். தென்னிந்திய திரையுலகம் திரண்டு எதிர்த்த பிறகும் பாசிஸ ராஜபக்சேயின் அழைப்பை ஏற்று இலங்கை சென்றதோடு இல்லாமல் இதற்கு மேலும் செய்வோம் என்று ஈழத் தமிழ‌ரின் கல்லறை மீதேறி சவாலும் விட்டிருக்கிறார்கள்.

அதன்படி இலங்கை பாசிஸ அரசு ‘ஏற்பாடு’ செய்திருந்த கண் துடைப்பு கல்யாணத்துக்கு சென்று திரும்பியிருக்கிறார் விவேக் ஓபராய். அவருக்கு நான் சளைத்தவனா என்று முண்டா தட்டுகிறார் சல்மான் கான்.

தெலுங்கில் வெளியான ரெடி படத்தை தமிழில் உத்தமபுத்திரன் என்ற பெய‌ரில் ‌ரீமேக் செய்வதைப் போல் இந்தியிலும் ‌‌ரீமேக் செய்கிறார்கள். அங்கு படத்தின் பெயர் அதே ‘ரெடி.’

இந்தப் படத்தில் சல்மான் கான் ஹீரோ. ஹீரோயின் அசின். முதலில் இதன் படப்பிடிப்பை இலங்கையில் நடத்துவதாக திட்டமே இல்லை. ஐஃபா விழாவில் கலந்து கொண்ட பின் வீம்புக்காக இலங்கையில் படப்பிடிப்பை வைத்தாக வேண்டும் என்று கறாராக கூறியிருக்கிறார் சல்மான் கான்.

மலபார் அழகி அசினும் சல்மான் கானுடன் இலங்கை செல்ல பெட்டி படுக்கையை தயார் செய்வதாக பாலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

இலங்கை அரசுக்கு ஆதரவான நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்பதை அறிந்த பிறகும் அசினின் முடிவில் மாற்றம் எதுவுமில்லை. பணத்துக்காகவும், புகழுக்காகவும் மனித நேயமற்ற கொலைகாரர்களுக்கு குடை பிடிக்கும் இது போன்ற ‌‌ஜீவிகளை என்னவென்று சொல்வது?

அசினை தென்னிந்தியாவின் ஐந்து மொழிகளிலிருந்தும்; துரத்தியடிக்க வேண்டும் என்பதே அனைவ‌ரின் ஒருமித்த வேண்டுகோள்.
மேலும் அறிய

Wednesday, June 16, 2010

> சீமான் - ஜெகன்‌ஜி இயக்கத்தில்?

சீமானின் நாம் தமிழர் அரசியல் கட்சியில் தினமும் இருபத்தைந்து பேர்களாவது உறுப்பினராகி வருகிறார்கள். இதன் காரணமாக எப்போதும் ஜேஜே என்றிருக்கிறது அவரது வளசரவாக்கம் வீடு.

இயக்குனர் சீமானை பார்க்க வந்தது யார், அரசியல்வாதி சீமானை பார்க்க வந்தது யார் என்ற குழப்பம் இருப்பதால் புதிதாக கட்சி அலுவலகம் ஒன்றை அதே வளசரவாக்கத்தில் திறந்துள்ளார்.

நிற்க. நாம் சொல்ல வந்தது வேறு. தாணு தயா‌ரிப்பில் விஜய்யை வைத்து பகலவன் படத்தை சீமான் இயக்குவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. படத்தின் முதல் பகுதியை மட்டும் விஜய்யிடம் கூறியிருக்கிறார் சீமான். அதுவே போதும் நடிக்கிறேன் என்று சம்மதம் தெ‌ரிவித்துள்ளார் விஜய்.

இயக்கத்துடன் தனது நடிப்பையும் சீமான் தொடரயிருக்கிறார். ஜெகன்‌ஜி அடுத்து இயக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் சீமான்தான் ஹீரோ. சீமான் ஹீரோ என்பது தீர்மானமானதால் படத்தின் பெயரையும் ஆக்ரோஷமாக மாற்றப் போகிறார்களாம்.

ஜூலையில் படப்பிடிப்பை‌த் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அறிய

> A.R ரஹ்மானின் புதிய ஹிட்.

விண்ணைத்தாண்டி வருவாயா பட‌ம் இந்தியில் ‌‌ரீமேக் செய்யப்படுகிறது. கௌதமே இந்தி ‌‌ரீமேக்கையும் இயக்குகிறார். படத்துக்கு இசை, ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்திக்கு ஏற்ப படத்தில் சில மாறுதல்களை கௌதம் செய்துள்ளார். முக்கியமாக ஹீரோயின் வீடு இருக்கும் இடம். தமிழில் கேரளாவின் ஆலப்புழா என்றிருந்ததை கோவாவாக மாற்றியிருக்கிறார் கௌதம்.

தமிழுக்காக ரஹ்மான் போட்ட பாடல்களை அப்படியே பயன்படுத்துகிறார்கள். ஒரு பாடலின் டியூன் மட்டும் மாறுகிறது. இன்னொரு பாடலை புதிதாக சேர்க்கயிருக்கிறார்கள்.

இந்த இரு பாடல்களுக்கான டியூனை ரஹ்மான் உடனடியாக போட்டுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> ஜெய் - விஜய் வழியில்

அசப்பில் விஜய் போலவே இருக்கிறார் ஜெய். அவரது பேச்சும், நடிப்பும், மாடுலேஷனும் கூட விஜய் போலவே இருக்கிறது. அவரது லட்சியமும், அதற்காக அவர் போடும் ரூட்டும் கூட விஜய்யையே பிரதிபலிக்கிறது.

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக சினிமாவில் அறிமுகமானவர் ஜெய். ஆனாலும் இவரை அடையாளம் காட்டிய படம் சென்னை 28. இன்னொரு படம் கோவா. இரண்டுமே வெங்கட்பிரபு இயக்கியவை.

இவர் தனி ஹீரோவாக நடித்த எந்தப் படமும் பத்து நாளை தாண்டவில்லை. ஆனாலும் ஜெய்யின் பந்தாவுக்கு மட்டும் குறைவில்லை.

விஜய்யை போல ஆ‌க்சன் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் இவரது ஆசை. அதற்காக விஜய்க்கு கமர்ஷியல் பிரேக் கொடுத்த இயக்குனர்களாக தேடிப் போய் கால்ஷீட் கொடுக்கிறார்.

இப்போதைக்கு இவரது டார்கெட் திருத்தணி படத்தில் பரத்தை இயக்கிவரும் பேரரசு. திருப்பாச்சி, சிவகாசி மாதி‌ரி ஒரு ஹிட் நமக்கும் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் பேரரசை சுற்றி வருகிறார் ஜெய்.

இந்த புதிய பாதை வெற்றி‌ப் பாதையாக அமையுமா?
மேலும் அறிய

> தமன்னா மார்க்கெட் சரிந்து விடலாம்

ஆளே இல்லா ஊருக்கு... என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்களே. அதற்கு நூறு சதவீத பொருத்தம், தமன்னா. த்‌ரிஷா, அசின் போன்றவர்கள் இந்திப் பக்கம் ஒதுங்கியதால் கோடம்பாக்கத்தில் கொண்டாடப்பட்டவர் இவர். அந்த அதிர்ஷ்டம் இப்போது மெல்ல மெல்ல சாயம் போகத் தொடங்கியிருக்கிறது.

விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தனது சம்பளத்தை ஒரு கோடி என்று உயர்த்தினார். இந்த ஒரு கோடியில் அவர் ஸ்ட்ராங்காக உட்காரும் முன்பே ஆந்திராவிலிருந்து புயலடிக்கத் தொடங்கியது. சிங்கம் வெற்றிக்குப் பிறகு அனுஷ்காவுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் முன்னணி ஹீரோக்கள். அதேபோல் ஹன்சிகா மோத்வானி காட்டிலும் அடை மழை.

ஹன்சிகா தனுஷுடன் மாப்பிள்ளை, விஜய்யுடன் வேலாயுதம் என்று டாப் கிய‌ரில் எகிறுகிறார். அசினும் காவல்காரன் படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். அ‌ஜித்தை வைத்து கௌதம் இயக்கும் படத்தில் அ‌ஜித் ஜோடியாக தெலுங்கு நடிகை சமந்தா நடிக்கலாம் என்கிறார்கள். மொத்தத்தில் தமன்னாவுக்கு தண்ணி தெ‌ளிப்பதில் வேகம் காட்டுகிறது கோடம்பாக்கம்.

ஆனால் இந்த ச‌ரிவை உணராமல் ஒரு கோடி கேட்டு அம்மணி சலம்புவதுதான் வேடிக்கை.
மேலும் அறிய

Tuesday, June 15, 2010

> எந்திரன் இசை விழா - துபாயில்

ஆகஸ்ட் மாதம் எந்திரன் வெளியாகும் என்று ர‌ஜினி அறிவித்தாலும், படத்தின் ‌ரிலீஸ் மேலும் இரு மாதங்கள் தள்ளிப் போகும் என்கிறார்கள். ஆனாலும் படத்தை புரமோட் செய்யும் வேலையை இப்போதே தொடங்கிவிட்டது சன் பிக்சர்ஸ்.

ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களை துபாயில் வெளியிட சன் பிக்சர்ஸ் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இதுவரை எந்தத் தமிழப் படத்தின் பாடல்களும் துபாயில் வெளியிடப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யுகே, யுஎஸ்ஏ, ஆஸ்திரேலியா போன்று துபாயிலும் கணிசமான அளவில் இந்தியர்கள் உள்ளனர். தற்போது இந்தியில் வெளியாகியிருக்கும் ரா‌ஜ்நீதி துபாயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியர்கள் அங்கு அதிகமிருப்பதே இதற்கு காரணம்.

இந்த வியாபார சந்தையை சன் பிக்சர்ஸ் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. அதனால்தான் துபாயில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த தீர்மானித்துள்ளனர் என்கிறார்கள்.
மேலும் அறிய

> ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் சூர்யா?

ஆறு மாதத்தில் படத்தை முடிப்பேன் என்று சொல்லிதான் அவன் இவன் படத்தை ஆரம்பித்தார் பாலா. ஆனால் ஆறே நாளில் அது சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெ‌ரிந்துவிட்டது.

படப்பிடிப்புக்கு போவதும் பாதியில் பேக்கப் சொல்லி திரும்புவதுமாக உள்ளே வெளியே ஆடிக் கொண்டிருக்கிறது அவன் இவன் டீம்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது பழைய செய்தி. படத்தில் அவர் நடிகர் சூர்யாவாகவே வருகிறார் என கசிந்திருக்கிறது ஒரு புதுத் தகவல்.

பிதாமகன் படத்தில் சிம்ரன் நடிகை சிம்ரனாகவே ஒரு பாடலுக்கு அடினார் அல்லவா? அதுபோல் சூர்யாவும் அவன் இவனில் ஒரு பாடலுக்கு ஆடயிருக்கிறாராம்.

அப்போ கலெ‌க்சன் உறுதி.
மேலும் அறிய

> விக்ரம் எதிர்பார்க்கும் விருது

பிதாமகன் படத்துக்கு கிடைத்தது போல் இன்னொரு தேசிய விருதை ராவணன் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார் விக்ரம்.

மணிரத்னத்தின் இந்தப் படத்தில் ஹீரோ, வில்லன் என்று இரு வேடங்களிலும் நடித்துள்ளார் விக்ரம். இந்திப் பதிப்பில் போலீஸ் அதிகா‌ரி. தமிழ் பதிப்பில் போலீஸ் அதிகா‌ரியை மிரட்டும் வீரா. இப்படி ஒரு கதையின் இரு வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கேன்ஸில் இந்த இரு படங்களையும் பார்த்தவர்கள் இது எப்படி சாத்தியமாயிற்று என்று ஆச்ச‌ரியப்பட்டிருக்கிறார்கள். அந்தளவு கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.

ராவணன் தனக்கு தேசிய விருது பெற்றுத் தரும் என வெளிப்படையாகவே கூறினார் சீயான்.

கிடைத்தால் நமக்கும் பெருமைதான்.
மேலும் அறிய

> விஜய்யின் புதிய ரசிகர் மிர்ச்சி சிவா.

தமிழ்ப் படத்தில் மொத்த தமிழ்ப் பட ஹீரோக்களையும் கிழித்து தொங்கப் போட்டாலும் விஜய்யை கொஞ்சம் ஸ்பெஷலாகவே கிண்டலடித்தார்கள். அதற்கு பிரயாச்சித்தமா தெ‌ரியவில்லை. தனது புதிய படத்தில் விஜய் ரசிகராக நடிக்கிறார் மிர்ச்சி சிவா.

தமிழப் படத்துக்குப் பிறகு சிவா புஷ்கர்-காயத்‌ரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். லேகா வாஷிங்டன் ஹீரோயின். இந்தப் படத்துக்கு குவார்ட்டர் கட்டிங் என்று பெயர் வைத்திருந்தனர். தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே வ‌ரிச்சலுகை என்பதால் படப் பெயரை மாற்ற இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சிவா விஜய் ரசிகராக நடிக்கிறார். புஷ்கர்-காயத்‌ரியின் முதல் படம் ஓரம்போ. வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து மாறுபட்ட படம் என்பதால் சிவா நடிக்கும் புதிய படத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது கோடம்பாக்கம்.
மேலும் அறிய

> ஸ்ரேயா பேட்டி - என் இளமையின் ரகசியம்

ஸ்ரேயா இப்போது சீனிலேயே இல்லை. சிக்கு புக்கு, ரவுத்திரம் என்று அவர் நடிக்கும் எல்லாப் படங்களும் அன்டர்புரொட‌க்சன் லெவலிலேயே உள்ளன. ஆனாலும் அவரைப் பற்றிய கிசுகிசுகளுக்கு பஞ்சமில்லை. ரவுத்திரம் படம் ட்ராப், தெலுங்கில் ஒரு பாடலுக்கு நடனம், திருமண கிசுகிசு என அனைத்துக்கும் அலட்டாமல் பதில் வருகிறது இந்த கிளாமர் குயினிடமிருந்து.

தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் புலி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறீர்கள். தொடர்ந்து ஒரு பாடலுக்கு ஆடுவீர்களா?

பெ‌ரிய படம், திறமையான இயக்குனர், எல்லாவற்றுக்கும் மேலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதால் புலியில் ஒரு பாடலுக்கு ஆட ஒத்துக் கொண்டேன். இதுபோல் பெ‌ரிய வாய்ப்புகள் வந்தால் மட்டும் ஆடுவது பற்றி யோசிப்பேன். ஆனால் தமிழில் ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன்.

ஏன் தமிழுக்கு மட்டும் பாரபட்சம்...?

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நடித்தாலும் தெலுங்கை விட தமிழுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதனால்தான் ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் என்றேன்.

சிக்கு புக்கு படத்தில் நீங்கள் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராமே?

இந்தப் படத்தின் கதை என்னையும், ஆர்யாவையும் சுற்றிதான் நடக்கும். நான்தான் படத்தின் ஹீரோயின். அம்‌ரிதா ராவின் தங்கை பி‌‌ரீத்தி இந்தப் படத்தில் கவுர வேடத்தில் நடிக்கிறார். இதை‌த்தான் சிலர் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் எனக்கு ஜாலியான கேரக்டர். ரொம்பப் பிடித்து நடித்து வருகிறேன். ரசிகர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.

ரவுத்திரம் படம் என்னவானது?

நான் ‌‌ஜீவா ஜோடியாக நடிக்கும் படம் இது. படம் ட்ராப் என்று வந்த செய்தியை நானும் படித்தேன். அது தவறு. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அதில் நான் கலந்து கொள்ளவில்லை. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது. அதில் நானும் கலந்து கொள்கிறேன்.

உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானதே?

திருமணத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் இதுவரை திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. எனக்கு தகுதியானவரை நான் சந்திக்கும் போது நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன்.

வாட்ஸ் குக்கிங் படத்துக்குப் பிறகு இந்திக்கு அதிக முக்கியத்துவம் நீங்கள் கொடுப்பதில்லையே?

தீபா மேத்தாவின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதன் ஒரு பகுதியாக அவர் தயா‌ரிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாட்ஸ் குக்கிங் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வாங்கியிருக்கிறது. இந்தியை நான் ஒதுக்கவில்லை. சவாலான வேடங்கள் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

தெலுங்கில்...?

ரவிதேஜா ஜோடியாக டான் சீனு படத்தில் நடிக்கிறேன். நான் எதிர்பார்த்த சவாலான வேடம். விரும்பி நடிக்கிறேன்.

படத்துக்கு படம் உங்கள் அழகு கூடி வருகிறதே...?

தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். நீச்சல், யோகா இரண்டும் என்னுடைய டெ‌ய்லி அட்டவணையில் தவறுவதில்லை. என் இளமைக்கு இதுதான் காரணமாக இருக்கலாம்.
மேலும் அறிய

Monday, June 14, 2010

> த்‌ரிஷாவின் கட்டா மிட்டா வெளியாகிறது.

த்‌ரிஷா நடித்திருக்கும் முதல் இந்திப் படமான கட்டா மிட்டா 23ஆம் தேதி வெளியாகிறது. த்‌ரிஷாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய ப்‌ரியதர்ஷனே அவரை இந்தியிலும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கட்டா மிட்டா பல வருடங்களுக்கு முன் ப்‌ரியதர்ஷன் மலையாளத்தில் இயக்கிய வெள்ளானைகளுடே நாடு படத்தின் தழுவல். இந்தப் படத்தில் மோகன்லால், சீனிவாசன், ஷோபனா ஆகியோர் நடித்திருந்தனர். மோகன்லாலுக்கு இதில் ரோடு கான்ட்ராக்டர் வேடம்.

கட்டா மிட்டாவில் அக்ஷய்குமார் மோகன்லால் வேடத்தில் நடித்துள்ளார். ஷோபனாவுக்குப் பதில் த்‌ரிஷா.

கட்டா மிட்டாவின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அக்ஷய்குமாருக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் ப்‌ரியதர்ஷன். த்‌ரிஷா? வெறும் அவுட்ஆஃப் போகஸில் மட்டுமே வந்து போகிறார்.

படத்தில் அப்படி இருக்காது என்று நம்புவோம்.
மேலும் அறிய

Sunday, June 13, 2010

> U.Kயில் கர்யிக்கும் " சிங்கம் "

பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது ஹ‌ரியின் சிங்கம். இந்த வருடம் வெளியான படங்களில் சிங்கம்தான் கலெ‌க்சனில் டாப் என்கின்றன செய்திகள். கடந்த வருடம் கே.வி.ஆனந்தின் அயன் பிடித்த இடத்தை இந்த வருடம் சிங்கம் பிடித்துள்ளது.

யுகே-யிலும் சிங்கத்தின் கர்ஜனை ஓங்கி ஒலிக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் 21வது இடத்தில் இருந்த இந்தப் படம் சென்ற வாரம் 25வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் இதன் வசூல் 16,839 பவுண்ட்கள்.

இதுவரை யுகே-யில் இதன் மொத்த வசூல் 1,04.572 பவுண்ட்கள். இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 71.36 லட்சங்கள். பையா, சுறா, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களி‌ன் வசூலை விட இது மிக அதிகம்.
மேலும் அறிய

> U சான்றிதழ் மதராசப்பட்டினத்துக்கு

ஆர்யா நடிப்பில் கி‌‌ரீடம் விஜய் இயக்கியிருக்கும் மதராசப்பட்டினம் படத்துக்கு சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

கி‌‌ரீடம், பொய் சொல்லப் போறோம் படங்களுக்குப் பிறகு விஜய் இயக்கியிருக்கும் படம் மதராசப்பட்டினம். சுதந்திரத்துக்கு முந்தைய மதராசப்பட்டினத்தில் நடப்பதாக இந்த‌க் கதையை விஜய் உருவாக்கியுள்ளார். ஆர்யா ஹீரோ.

இந்த ச‌ரித்திரப் படத்துக்காக பக்கிங்காம் கால்வாய் உள்பட பழைய மதராசின் அடையாளங்களை மீள் உருவாக்கம் செய்திருக்கிறார்கள். ‌ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஏ‌ஜிஎஸ் எ‌ண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எ‌ஸ் அகோரம் படத்தை தயா‌ரித்துள்ளார்.
மேலும் அறிய

> ராவணன் அமெ‌ரிக்காவில்

வரும் 18ம் தேதி ராவணன் ‌ரிலீஸ். இந்தியில் ராவண், தெலுங்கில் வில்லன், தமிழில் ராவணன் என்று மூன்று மொழிகளில் மணிரத்னத்தின் படம் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

படம் இங்கு வெளியாகும் அதே நாள் அமெ‌ரிக்காவிலும் வெளியாகிறது. இதில் விசேஷம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இப்படம் அமெ‌ரிக்காவில் வெளியாகிறது.

படத்தின் தமிழ், தெலுங்கு அமெ‌ரிக்க உ‌ரிமையை ஐங்கரன் வாங்கியிருப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. இந்தி பதிப்பை ‌ரிலையன்சின் பிக் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

அமெ‌ரிக்காவில் ஒரு படம் பத்து திரையரங்குகளில் வெளியானாலே அதிகம். ராவணன் மற்றும் வில்லன் ஏறக்குறைய நாற்பது திரையரங்குகளில் வெளியாகிறது. தென்னிந்திய மொழிப் படங்களில் இதுதான் அமெ‌ரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம்.

இதேபோல் யுகே, ஆஸ்திரேலியாவிலும் அதிக திரையரங்குகளில் ராவணன் வெளியாகவுள்ளது.
மேலும் அறிய

Saturday, June 12, 2010

> M.S.பாஸ்கர் இலங்கை தமிழர் வேடத்தில்

கமலின் மன்மதன் அம்பு படத்தில் மாதவன், த்ரிஷ, சங்கீதா, ஒரு அறிமுக ஜோடி, இரண்டு குழந்தைகள் என்று ஒரு சின்ன நடிகர் பட்டாளமே நடிக்கிறது.

இவர்களுடன் கடைசி நேரத்தில் இணைந்து கொண்டிருக்கிறார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

எம்.எஸ்.பாஸ்கரன் வசன உச்சரிப்பை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வியந்து பேசுவது கமலின் வழக்கம். காரணம் கமலைப் போலவே சென்னை பாஷை முதல் கோயம்புத்தூர் பாஷைவரை அனைத்தையும் சரளமாக பேசக்கூடியவர் பாஸ்கர். இதன் காரணமாகவே தசாவதாரம் படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் பாஸ்கரை நடிக்க வைத்தார் கமல்.

மன்மதன் அம்பு படத்தில் இலங்கை தமிழர் வேடமாம் எம்.எஸ்.பாஸ்கருக்கு. தெனாலி கமல் அளவுக்கு பிய்த்து உதறுவார் என்று தாராளமாக நம்பலாம்.
மேலும் அறிய

Friday, June 11, 2010

> விஜய்க்கு பஞ்சாயத்து

விஜய் படங்களால் பல கோடி நஷ்டம், விஜய் நஷ்டஈடு தந்தாக வேண்டும் என்று திரையரங்கு உ‌ரிமையாளர்கள் கொளுத்திப் போட்ட தி‌ரி இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை அணைக்க நடிகர் சங்கத்தில் பரஸ்பர மீட்டிங் ஒன்றிற்கு சங்கத் தலைவர் சரத்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

விஜய் சார்பில் அவரும் அவரது தந்தையும் கலந்து கொண்டனர். திரையரங்கு உ‌ரிமையாளர்கள் பன்னீர்செல்வம் தலைமையில் கலந்து கொண்டனர்.

இந்த‌க் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும், திரையரங்கு உ‌ரிமையாளர்களுக்கு சாதகமாக விஜய் விட்டுக் கொடுத்ததாகவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இன்னும் ஓ‌ரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிப்பை திரையரங்க உ‌ரிமையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
மேலும் அறிய

> சென்னையில் 16 திரையரங்குகளில் - ராவணன்

வரும் 18ஆம் தேதி ராவணன் வெளியாகிறது. படம் குறித்து இதுவரை மணிரத்னம் வாய் திறக்கவில்லை. அதனால் என்ன... ரசிகர்கள் அனைவரும் ராவணன் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மணிரத்னம், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ்சிவன் என்று படம் முழுக்க பிரபலங்கள் என்பதால் ராவணன் மீதான எதிர்பார்ப்பு விண்ணை‌த் தொட்டிருக்கிறது.

இதுவரை வெளியான தமிழ்ப் படங்கள் அனைத்தையும் விட ராவணனுக்கு அதிக பி‌ரிண்‌ட்டுகள் போடப்படுவதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. சென்னையில் மட்டும் 16 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. புறநகரையும் சேர்த்தால் எண்ணிக்கை இருபத்தைந்தை தொடும்.

18ஆம் தேதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் ராவணன் வெளியாகிறது. மொத்தமாக ஆயிரம் பி‌ரிண்‌ட்டுகளை தாண்டும் என்கிறார்கள். யுகே, யுஎஸ்ஏ, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் படம் வெளியாகிறது.

இதில் யுகே, யுஎஸ்ஏ இரண்டிலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று பதிப்புகளும் வெளியாகின்றன.
மேலும் அறிய

> கற்றது களவு - விமர்சனம்

கண்ணுக்கு கண் மாதி‌ரி களவுக்கு களவு. ஏமாற்றப்பட்ட ஒருவன் இந்த சமூகத்தை ஏமாற்றத் துணிவதுதான் கதை. இந்த ஒன் லைனுக்குள் சுவாரஸியம் எனும் ஏர் ஜெட் என்‌ஜினை வைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். முதலில் ஜோராக ஓடும் என்‌ஜின் பல இடங்களில் உதறுகிறது.

ராமேஸ்வரத்தில் மாலை மாற்றிக் கொள்ளும் கிருஷ்ணா, விஜயலட்சுமி ஜோடியை டெல்லி போலீஸ் துரத்துகிறது. உயிரை கையில் பிடித்து ஓடும் அவர்களை காப்பாற்றுகிறார் சம்பத். அவர் யார் என்றால் உள்ளூர் போலீஸ். அட, நல்லாயிருக்கே என்று நிமிர்ந்து உட்காரும் போது கட் பண்ணி பிளாஷ்பேக்குக்கு போகிறார்கள்.

மாணவர் வங்கி என்று ஒரு புதிய திட்டத்தை கண்டுபிடிக்கிறார் கிருஷ்ணா. இதனை அவர் வங்கி அதிகா‌ரி சந்தான பாரதியிடம் சொல்ல, அவரோ அது தனது திட்டம் போல் அறிவித்து பணத்தையும் புகழையும் சுருட்டுகிறார். நியாயம் கேட்கும் கிருஷ்ணாவுக்கு கிடைப்பது நித்திய அடி.

விமானப் பணிப் பெண்ணாகும் கனவு கைகூடாமல் வீட்டை விட்டு வெளியேறும் விஜயலட்சுமியுடன் கூட்டணி வைக்கும் கிருஷ்ணா பிறகு ஒவ்வொருவராக ஏமாற்றத் தொடங்குகிறார். அவர்களின் அஜென்டாவுக்குள் எதிர்பாராமல் மத்திய மந்தி‌ரியும் சிக்குகிறார். மந்தி‌ரி இந்த ஜோடியை கொல்ல ஆட்களை அனுப்புகிறார். ஜோடி தப்பித்ததா என்பது கிளைமாக்ஸ்.

முதல் படத்திலிருந்து ரொம்பவே மெருகேறியிருக்கிறார் கிருஷ்ணா. ஏமாறுவதும் ஏமாற்றுவதுமான கேரக்டர் அவருக்கு இயல்பாகவே பொருந்துகிறது. விஜயலட்சுமிதான் பாவம். உடம்பைப் போலவே ரொம்ப மெலிந்த நடிப்பு. நவரசம் தாண்டவமாட வேண்டிய இடங்களில் பல ரசங்கள் மிஸ்ஸிங்.

கிருஷ்ணா ஏமாற்றும் இடங்கள் எல்லாம் படு அமெச்சூர். இன்னும் நன்றாக கற்பனைக்கு சிறகு வி‌ரித்திருக்கலாம். சின்னி ஜெயந்தை ஏமாற்றுவதும், மத்திய மந்தி‌ரியின் படுக்கை அறை வரை போவதும் டூ மச். டெல்லி போலீஸ் அதிகா‌ரி கல்யாண், உள்ளூர் போலீஸ் அதிகா‌ரி சம்பத் இருவரும் நிறைவாக செய்திருக்கிறார்கள். பால்ஜே-யின் பின்னணி இசையும் பாடல்களும் சுமார். படத்தின் மிகப் பெ‌ரிய பிளஸ் நீரவ் ஷாவின் கேமரா. ராமேஸ்வரம் காட்சிகளில் கேமரா விளையாடுகிறது.

லா‌ஜிக் ஓட்டைகளை அடைத்து ரசிகர்களை ஏமாற்றாமலிருந்திருந்தால் அறிமுக இயக்குனரை பாராட்டியிருக்கலாம்.
மேலும் அறிய

Thursday, June 10, 2010

> சிம்பு படத்தில் மாதவன்? நடிப்பாரா ?

விண்ணைத்தாண்டிய வெற்றிக்குப் பிறகு இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சிலம்பரசன். ஒன்று வரலட்சுமியுடன் ஜோடி சேரும் போடா போடி. இதன் படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது.

இன்னொ‌ன்று லிங்குசாமி இயக்கும் படம். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. தெலுங்கில் சிம்பு வேடத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு அண்ணன் கதாபாத்திரம் ஒன்று வருகிறது. ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரமாம் இது. இந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார் லிங்குசாமி.

இரண்டு ஹீரோக்களுடன் மாதவன் நடிப்பது புதிதல்ல. இப்போதும் மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் நடிக்கிறார். கமலுக்கு காட்டிய அதே க‌ரிசனத்தை சிம்புவுக்கும் அவர் காட்டுவாரா?

காத்திருக்கிறது லிங்குசாமியின் டீம்.
மேலும் அறிய

> சீமானுக்கு புதிய சவால் ?

சீமானின் நாம் தமிழர் இயக்கம் முன்னெடுத்த முதல் பிரச்சனை, ஜெயராம் தனது வீட்டில் வேலை செய்த தமிழ்ப் பெண்ணை கருத்து தடிச்ச எருமை போன்ற தமிழச்சி என்று கொச்சையாக கிண்டல் செய்தது.

இந்தப் பிரச்சனையில் ஜெயராமின் வீட்டில் தாக்குதல் நடத்தி கெட்ட பெயரை நாம் தமிழர் இயக்கம் சம்பாதித்தது. தமிழ்நாட்டின் இன்னொரு தடியெடுத்தான் கட்சியா நாம் தமிழர் இயக்கம் என்ற ஐயத்தையும் அது ஏற்படுத்தியது.

ஆனால் இலங்கை பட விழாவுக்கு எதிரான போராட்டம், ஹிருத்திக் ரோஷனின் கைட்ஸ் படத்தை தமிழக திரையரங்குகளில் இருந்து தூக்கியது, ராஷபக்சேயின் வருகைக்கு எதிர்ப்பு என்று அடுத்தடுத்தப் போராட்டங்களில் அனைவரையும் சீமானின் கட்சி கவர்ந்துவிட்டது.

நாம் தமிழர் கட்சியின் அடுத்தக்குறி, ரத்த ச‌ரித்திரம். ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா, ப்‌ரியாமணி நடித்துள்ளனர். கூடவே கருப்பு ஆடு விவேக் ஓபராயும் நடித்துள்ளார்.

கொழும்பு மேடையில் தமிழர்களின் தாய் மாமன் நான் என்ற லெவலில் புளுகித்தள்ளிய இந்த பகல் வேஷத்தா‌ரியின் எந்தப் படத்தையும் தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் நுழையவிடக் கூடாது என்பதில் நாம் தமிழர் இயக்கம் தீவிரமாக உள்ளது.

சூர்யா, ப்‌ரியாமணி போன்றவர்கள் நடித்திருந்தாலும் விவேக் ஓபராய் இருப்பதால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்பதில் சீமானும் தோழர்களும் உறுதியாக உள்ளனர். ரத்த ச‌ரித்திரம் சீமானின் அரசியலில் இன்னொரு ச‌ரித்திரமாக அமைந்தாலும் ஆச்ச‌ரியமில்லை
மேலும் அறிய

> கடைசி நேரத்தில் தப்பித்தார் ஜெனிலியா

கடைசி நேரத்தில் இலங்கைக்கு செல்லாமல் பயணத்தை ரத்து செய்ததால் வேலாயுதம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார் ஜெனிலியா.

இலங்கையில் நடந்த படவிழாவில் ஜெனிலியா கலந்து கொண்டதாக செய்தி வெளியானதும் அவர் நடிக்கும் எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று நடிகர் சங்கமும், பெப்சி அமைப்பும் அறிவித்தது.

சங்கம் சொல்லும் எதற்கும் கட்டுப்படுவோம் என்று அறிவித்தார் ஜெனிலியா ஹீரோயினாக நடிக்கும் வேலாயுதம் படத்தின் தயா‌ரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இந்நிலையில் இலங்கை செல்லவேயில்லை என்று விளக்கம் அளித்தார் ஜெனிலியா. ஆனால் அவரது பேச்சை ஒருவரும் நம்பவில்லை.

தற்போது திடீர் திருப்பமாக அவர் மீதான நடவடிக்கையை சங்கங்கள் நிறுத்தி வைத்துள்ளன. ஜெனிலியா இலங்கை செல்லவில்லை, அதனால் அவர் மீது சங்கங்கள் நடவடிக்கை எடுக்காது என்று ஸ்டுடியோ வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. மேலும் வேலாயுதம் படத்தில் திட்டமிட்டபடி அவர் நடிப்பார் எனவும் தெ‌ரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஜெனிலியாவுடன் இன்னொரு ஹீரோயினாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இதன் போட்டோசெஷன் சாலிக்கிராமத்தில் உள்ள பாலுமகேந்திராவின் ஸ்டுடியோவில் நடந்து முடிந்துள்ளது.
மேலும் அறிய

Wednesday, June 9, 2010

> தெலுங்கு ‌‌ரீமேக் - வேலாயுதம்

விஜய்க்கு வெற்றியை கொடுத்த பெரும்பாலான படங்கள் பிற மொழிகளிலிருந்து ‌‌ரீமேக் செய்யப்பட்டவை. காதலுக்கு ம‌ரியாதை, கில்லி போன்றவற்றை சிறப்பாக குறிப்பிடலாம்.

கடைசியாக வெளியான எந்தப் படமும் ச‌ரியாகப் போகாத நிலையில் மீண்டும் ‌ரீமேக்கிடமே சரணடைந்துள்ளார் இளைய தளபதி. விஜய் தற்போது நடித்துவரும் காவல்காரன் மலையாளத்தில் வெளியான பாடிகா‌ர்ட் படத்தின் ‌ரீமேக். படத்தை இயக்கும் சித்திக் ஏற்கனவே தனது மலையாள ப்ரண்ட்ஸ் படத்தை தமிழில் விஜய்யை வைத்து ‌‌ரீமேக் செய்து ஹிட் கொடுத்தவர்.

அடுத்து ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் வேலாயுதம் படமும் ‌ரீமேக் என்று தெ‌ரிய வந்துள்ளது. சில ஆண்டுகள் முன் நாகார்ஜுனா, சௌந்தர்யா நடித்த ஆஸாத் என்ற படத்தையே வேலாயுதம் என்ற பெய‌ரில் எடுக்கின்றனர். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இவர் தனுஷின் மாப்பிள்ளை படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் தொடங்கி தில்லாலங்கடி வரை தெலுங்கு படங்களை மட்டுமே ‌‌ரீமேக் செய்த ஜெயம் ராஜா, முதல் முறையாக விஜய்யை வைத்து நேரடி தமிழ்ப் படம் செய்வதாக அறிவித்தனர். ஆனால் அதுவும் நேரடிப் படமல்ல, தெலுங்கு ‌ரீமேக்.

சொந்தமா எப்போ யோசிக்கப் போறீங்க ராஜா சார்?
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.