Tuesday, August 31, 2010

> விஜயகுமார் திரையுலகில் 50 ஆண்டை நிறைவு செய்திருக்கிறார்.

கமல்ஹாசனைத் தொடர்ந்து மேலுமொரு தமிழ் நடிகர் திரையுலகில் தனது ஐம்பதாவது ஆண்டை நிறைவு செய்திருக்கிறார். அவர், விஜயகுமார்.

1949ல் பிறந்த விஜயகுமார் முத‌ன் முதலில் சினிமாவில் நடித்தது 1961ல். படம் ஸ்ரீவள்ளி. சிவா‌ஜி கணேசன், பத்மினி இந்தப் படத்தில் நடித்திருந்தனர். விஜயகுமார் முதலில் போட்ட வேடம், பால முருகன்.

கதாநாயகனாகவும் குணசித்திர நடிகராகவும் தனது தடத்தை தமிழ் சினிமாவில் அழுத்தமாகவே பதித்திருக்கிறார் விஜயகுமார். குறிப்பாக பாரதிராஜாவின் அந்திமந்தாரையும், கிழக்குச் சீமையிலேயும் மறக்க முடியாதவை.

இன்றும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவரும் விஜயகுமாரை இந்தத் தருணத்தில் மனமார வாழ்த்துவோம்.

> 7ஆம் அறிவு - ஸ்ருதிக்கும் சண்டைக் காட்சிகள்

7ஆம் அறிவு படத்தை மிகவும் நம்பியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். முதல் படம் லக் ச‌ரியாகப் போகாதது ஒரு காரணம். இரண்டாவது அவரது தந்தை மொழியில் அவர் நடிக்கும் முதல் படம் இது.

தவிர 7ஆம் அறிவை இந்தியிலும் வெளியிடுகிறார்கள். லக் கொடுத்த அன் லக்கி இமேஜை 7ஆம் அறிவு அகற்றும் என்பதும் ஸ்ருதியின் நம்பிக்கைக்கு இன்னொரு காரணம்.

சர்க்கஸ் பின்புலத்தில் 7ஆம் அறிவு தயாராகி வருகிறது. இதற்காக ஸ்பெஷல் சண்டைக்கலையையும், மே‌ஜிக்கையும் கற்றிருக்கிறார் சூர்யா.

ஹீரோயின் ஸ்ருதிக்கும் சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. இதில் நடித்த போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சின்ன காயம்தான், அதனை பொருட்படுத்தாமல் நடித்தேன் என தனது டுவிட்ட‌ரில் ஸ்ருதி எழுதியுள்ளார்.

முருகதாஸின் இந்தப் படத்துக்கு ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைக்கிறார்.

> அனுஷ்காவின் தாராளம்.

துணிந்தவனுக்கு துக்கமில்லை என்ற பாணியில்தான் இருக்கிறது அனுஷ்காவின் அடுத்தடுத்த மூவ்கள். ஆனால் அவரது துணிச்சலால் தூக்கம் கெடப் போவது பாவம் ரசிகர்கள்தான்.

அனுஷ்காவுக்கு வாழ்வளித்த படம் அருந்ததி. பதினாறு கெஜ புடவையில் அவர் நடித்திருந்தாலும் படம் பம்பர் ஹிட். அதன் பிறகுதான் சூர்யா, விஜய் என்று முன்னணி நடிகர்கள் அனுஷ்காவுடன் நடிக்க முன்வந்தனர். இந்தப் படங்களில் அவரது காஸ்ட்யூம் எப்படி கடுகளவு சிறுத்தது என இசை சேனல்களைப் பார்க்கிற அனைவரும் அறிவர்.

அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற மாதி‌ரி ஒரு படம் வரவிருக்கிறது. இங்கல்ல, தெலுங்கில்.

மகேஷ்பாபுவை வைத்து அத்தடு என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த திரு விக்ரம் மீண்டும் மகேஷ்பாபுவை இயக்குகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி அனுஷ்கா. சில காட்சிகளும் ஒரு பாடல் காட்சியும் மட்டுமே பாக்கி.

இந்தப் பாடல் காட்சியில் திறந்த முதுகுடன் ஏறக்குறைய பின்பக்க டாப்லெஸ்ஸாக நடிக்கிறார் அனுஷ்கா. செப்டம்பர் முதல் வாரத்தில் ராமோ‌ஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இந்தப் பாடலை எடுக்கயிருக்கிறார்கள்.

படத்தை தமிழில் டப் செய்ய வேண்டும் என பிரார்த்திப்போம்.

Monday, August 30, 2010

> பூமியின் மேற்புற வளிமண்டலம் சுருங்குகிறது.

சூரியனிலிருந்து கசியும் புற ஊதாக்கதிர்களின் வீச்சு குறைந்து போயுள்ளதால் பூமியின் மேற்புற வளிமண்டலம் எதிர்பாராவிதமாக சுருங்கியுள்ளதாகவும், குளிரடைந்துள்ளதாகவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் சூரியனின் ஆற்றல் வெளிப்பாடு வழக்கத்துக்கு மாறான அளவில் குறைந்துள்ளதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் 90 முதல் 500 கி.மீ வரை உயரமாக பரவியிருக்கும் வான்வெளி வெப்பப்பரப்பு (Thermosphere) புற ஊதாக்கதிர்வீச்சு குறைவு காரணமாக குளிர்ச்சி அடைந்துள்ளது அல்லது சுருங்கியுள்ளது என்று கொலராடோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

1996ஆம் ஆண்டை ஒப்பு நோக்குகையில் 2008அம் ஆண்டு இந்த வான்வெளி வெப்பப் பரப்பு 74 டிகிரி பாரன்ஹீட் அல்லது 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் குறைந்து குளிர்ச்சியடைந்துள்ளது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் பூமியில் இதனால் என்ன மாற்றங்கள் அல்லது நிகழ்வுகள் ஏற்படும் என்பது பற்றி இந்த விஞ்ஞானிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

> 2012 உலகை உலுக்க வரும் மிகப்பெரிய சூரியச் சூறாவளி

100மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்ட மிகப்பெரிய சூரியப்புயல் ஒன்று 2012ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இதனால் பூமியில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாடுகளின் மின்சார வினியோக அமைப்புகளும் தகவல் தொடர்பு அமைப்புகளும் பலத்த சேதமடையும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விமானப் போக்குவரத்து, மின்னணுச் சாதன அமைப்புகள், கப்பல் போக்குவரத்திற்கு உதவும் உபகரணங்கள் முக்கியமாக செயற்கைக் கோள்கள் வேலை செய்யாது.

நாசாவின் சூரியப்பௌதீகப் பிரிவு விஞ்ஞானி டாக்டர் ஃபிஷர் இது பற்றிக் கூறுகையில் 100 ஆண்டுகளில் அசாதாரண சக்தி கொண்ட இந்த சூரியப்புயல் முதன் முதலாகத் தாக்கவுள்ளது. இதனால் பெரிய அளவுக்கு மின்வினியோகத் தடைகளும், தகவல்தொடர்பு சிக்னல்கள் இழக்கப்படும். என்று எச்சரித்துள்ளார்.

சூரியப்புயல் தாக்குகையில் சூரியனின் வெப்ப அளவு 10,000 டிகிரி பாரன்ஹீட்டையும் கடந்து விடும்.

இந்த சூப்பர் சூரிய சூறாவளி இடி இடிப்பது போன்று நிகழும். பூமியின் காந்தப்புலங்களை நம்பி இயங்கும் நமது தகவல்தொழில் நுட்ப உலகம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்த வகை அதிசக்தி சூரியப்புயல் 2012 ஆம் ஆண்டிலோ அல்லது நிச்சயமாக 2013ஆம் ஆண்டிலோ ஏற்படும் என்பது உறுதி ஆனால் விளைவுகள் பற்றி இன்னமும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூரியப்புயலால் ஏற்படும் சூரிய எரிதழல்கள் பூமியின் காந்தப் புலத்தை பாதிக்கும். ஆனால் இது மிகமிகவேகமாக நடக்கும், ஒரு இடி இடிப்பது போன்ற நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து விடும் என்கிறார் நாசா விஞ்ஞானி பிஷர்.

இதனால் ஏற்படும் மின்வினியோக அமைப்புகள் சேத உள்ளிட்ட பிற சேதங்களை சீர் செய்ய மிகப்பெரிய அளவில் பணம் செலவழியும் என்பதோடு நீண்ட காலம் பிடிக்கும் என்பதும் உண்மை.

சூரியசுழற்சியில் 24ஆம் கட்டத்தை அது எட்டுவதால் இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்தக் கண்டுபிடிப்புகள் ஆஸ்ட்ரேலியன் சயன்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

Saturday, August 28, 2010

> பிரபுதேவா,அ‌ஜீத் சந்திப்பு

விஜய், விஷ்ணுவர்தன் என பல இயக்குனர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார் அஜீத். மங்காத்தாவுக்குப் பிறகு யார் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்யவே இந்த சந்திப்புகள்.

சமீபத்தில் அவர் சந்தித்தது பிரபுதேவா. ஜெயம் ரவி நடிக்கும் இச் படத்தை தற்போது இயக்கி வருகிறார் பிரபுதேவா. இதையடுத்து அவர் விஷாலை இயக்கலாம் என்றொரு செய்தி நிலவுகிறது.

இந்நிலையில் அ‌‌ஜீத்தை சந்தித்த பிரபுதேவா அவ‌ரிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறார். கதை அ‌‌ஜீத்துக்கு பிடித்திருக்கவே, இதே கதையை நாம் சேர்ந்து பண்ணலாம் என உறுதி அளித்திருப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

ஆக, மங்காத்தாவுக்குப் பிறகு அடுத்த அ‌‌ஜீத்தின் ஆட்டம் பிரபுதேவாவுடன்தான் என கூறுகிறார்கள்.

> சத்யராஜுடன் நட்சத்திர பேட்டி

சத்யராஜுடன் அறிமுகமான பல நடிகர்கள் இப்போது திரையுலகில் இல்லை. இருக்கும் சிலரும் துண்டு துக்கடா வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். கமல், ர‌ஜினி போல மாஸ் ஹீரோவல்ல என்ற போதிலும் சத்யராஜை வைத்து படமெடுக்க இன்றும் தயாராகவே இருக்கிறார்கள் இயக்குனர்களும், தயா‌ரிப்பாளர்களும். ரசிகர்கள் அவரது நடிப்பை பார்க்க‌த் தயாராக இருப்பதே இதற்கு காரணம்.

விரைவில் சத்யரா‌ஜ் நடித்த கௌரவர்கள் திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் சத்யரா‌ஜ். சுவாரஸியமான கேள்விகளும் சத்யரா‌ஜின் சீ‌ரியஸான பதில்களும் வாசகர்களுக்காக.

கௌரவர்கள் படத்தைப் பற்றி சொல்லுங்கள்...?

ஹைதராபாத்தில் ஒரு ஷூட்டிங்கில் இருக்கும் போது சஞ்சய்ராம் இந்த‌க் கதையை என்கிட்ட சொன்னார். அப்போ நான் அவர்கிட்ட சொன்னது, ‘இப்போ நீங்க சொன்ன கதையை அப்படியே எடுக்கணும.’ அவரும் ச‌ரின்னு சொன்னார். படத்தோட ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தேன். சொன்ன மாதி‌ரியே பிரமாதமாக வந்திருக்கிறது.

இந்தப் படத்தில் உங்களுக்கு எந்த மாதி‌ரி வேடம்?

புதிய வானம் படத்தில் அப்பா சிவா‌ஜி கூட நடிச்சேன். நான் அவரை செல்லமா அப்பான்னுதான் கூப்பிடுவேன். அவர்கிட்ட ஒருமுறை உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும்னு கேட்டேன். அதுக்கு அவர் ‘ஏண்டா கவுண்டா, நான் யாரைப் பார்த்து காப்பி அடிக்கிறேன்னு தெ‌ரிஞ்சுக்க கேட்கறியா’ன்னு கிண்டல் பண்ணினார். அப்புறம் திலீப்குமார்னு சொன்னார். சிவா‌ஜி சாரே சொல்லிருக்காரேன்னு திலீப்குமாரோட படங்களைப் பார்க்க ஆரம்பிச்சேன். திலீப் சார் மாதி‌ரி ஒரு படத்திலாவது நடிக்கணும்னு ஆசை இருந்தது. சர்கார் படத்தில் அமிதாப்பச்சனுக்கு அந்த மாதி‌ரி ஒரு வேடம் கிடைச்சது. ‌கிட்டதட்ட இருபது வருட காத்திருப்புக்குப் பிறகு அப்படிப்பட்ட ஒரு வேடத்தில் என்னை நடிக்க வைத்து சஞ்சய்ராம் என்னை பெருமைப்படுத்தியிருக்கார்.

உங்களுடைய இன்றைய வளர்ச்சிக்கு யார் காரணம்னு நினைக்கிறீங்க?

ஒரு நடிகனுக்கு எப்போதுமே முக்கியம் இயக்குனர்கள்தான். சத்யரா‌ஜ்ங்கிற ஒரு நடிகன் இன்னைக்கு சினிமாவில் இருக்கான்னா அதுக்கு காரணம் இயக்குனர் மணிவண்ணன்தான். சத்யரா‌ஜ் ட்ரெண்டை உருவாக்குனதே அவர்தான். அந்த ட்ரெண்டில் இருந்து வேதம் புதிது படம் மூலம் என்னை மாற்றியவர் பாரதிராஜா. பூவிழி வாசலிலே படத்தில் வேறொரு சத்யரா‌ஜ். ஜோஷியின் ஏர்ப்போர்ட், சந்தான பாரதியின் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு வித்தியாசமான வேடங்களை இயக்குனர்கள்தான் தந்தாங்க.

வாழ்க்கையின் மிகப் பெ‌ரிய பாக்கியமாக பெ‌ரியார் படம் கிடைத்தது. அப்புறம் ஒன்பது ரூபாய் நோட்டு மாதவ படையாச்சி. அது முழுக்க முழுக்க தங்கர்பச்சான் உருவாக்கிய கதாபாத்திரம்.

நான் ஒரு படப்பிடிப்புக்கு போகும் போது டைரக்டர் என்ன சொல்றாரோ அதை‌த்தான் செய்வேன். இப்போதும் அதை‌த்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஏன்னா, என்னை உருவாக்கியது இயக்குனர்கள்தான்.

படத்தில் வேறு யார் யார் நடித்திருக்கிறார்கள்?

விக்னேஷ், ரஞ்சித், மோனிகா, பானுசந்தர்னு நிறைய பேர் நடிச்சிருக்கோம். எல்லோருக்குமே சிறப்பான வேடங்கள். நான் தொண்டைமான்ங்கிற வேடத்தில் நடிக்கிறேன். கர்ணனைப் போல வள்ளல் குணம் கொண்ட கதாபாத்திரம்.

இந்த கேரக்டருக்காக வித்தியாசமாக ஏதாவது செய்திருக்கிறீர்களா?

இந்தப் படத்தில் நடிக்கும் போது, நிதானமா நிறைய டைம் எடுத்து பேசுங்கன்னு இயக்குனர் சொன்னார். அப்படி பேசும்போது ஒரு ஆழம் கிடைச்சது. படம் பார்க்கும் போது உங்களுக்கு இது தெ‌ரியும். இப்படியொரு கதாபாத்திரம் தந்த சஞ்சய்ராமுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெ‌ரிவிச்சுக்கிறேன்.

படத்தின் இசை?

தினா இசையமைச்சிருக்கார். கடலோரக் கவிதைகள் படத்தில் இளையராஜா சார் தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்னு ஒரு பாடல் பின்னணி இசையில் சேர்த்திருப்பார். அது மத்தப் பாடல்களைவிட ஹிட்டாயிடுச்சி. அதே மாதி‌ரி இந்தப் படத்திலும் சில துண்டுப் பாடல்களை சஞ்சய்ராம் சேர்த்திருக்கிறார். அதில் ஒரு ஃபயர் இருக்கிற மாதி‌ரி தினா இசையமைச்சிருக்கார். நிச்சயமா எல்லாப் பாடல்களும் ஹிட்டாகும்.

Friday, August 27, 2010

> வடிவேலு - யானை‌ப் பாகனாக

யானை விரட்டி ஓடுவதாக‌த்தான் இதுவரை நடித்திருக்கிறார் வடிவேலு. முதல் முறையாக யானையை விரட்டும் வேடம் கிடைத்திருக்கிறது.

விஷால் நடிக்கும் பட்டத்து ராஜா படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். மலைக்கோட்டை போலவே காமெடியும், ஆ‌க்சனும் கலந்த கதை. பிரதான வேடத்தில் வருகிறார் வடிவேலு.

பிரதான வேடம் என்றால் ரொம்பப் பிரதான வேடம். யானை‌ப் பாகனாக வருகிறாராம். யானை‌ப் பாகனான இவருக்கு அசிஸ்டெண்ட் விஷால்.

பட்டத்து ராஜா காமெடியில் கலக்குவார் என நம்பலாம்.

> சல்மான் கான் விஜய் வேடத்தில்.

தென்னிந்திய மக்களின் குறிப்பாக தமிழர்களின் உணர்வுகளை பு‌ரிந்து கொள்ளாத சல்மான் கானுக்கு தனது ஃபீல்டில் பிடித்து நிற்க தென்னிந்திய மொழிப் படங்கள்தான் தேவையாக இருக்கிறது.

சல்மான் நடிப்பில் கடைசியாக வெற்றி பெற்ற படம், வான்டட். தமிழில் வெளியான போக்கி‌ரியின் ‌‌ரீமேக். அதற்கு முன்னும், பின்னும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இவருக்கு ஹிட் என்பதே இல்லை.

தமிழில் விஜய் நடித்துவரும் காவலன் படத்தைதான் இப்போது நம்பியிருக்கிறார் இந்த மான் வேட்டை நடிகர். காவலன் இந்தி ‌‌ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் தீபிகா படுகோன்.

இது தவிர மேலும் சில தமிழ் ‌‌ரீமேக்கில் நடிக்கும் திட்டமும் இந்த மனிதாபிமானமற்ற நடிகருக்கு இருக்கிறது.

> நான் மகான் அல்ல முதலிடம் - பாக்ஸ் ஆஃபிஸ்

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சென்ற வாரம் வெளியான நான் மகான் அல்ல, இனிது இனிது படங்கள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களை‌ப் பிடித்துள்ளன.

5. காதல் சொல்ல வந்தேன்
பூபதி பாண்டியன் இயக்கியிருக்கும் புதுமுகங்களின் காதல் சொல்ல வந்தேன் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதி மூன்று நாட்களில் 3.8 லட்சங்களை வசூலித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இந்தப் படம் 34 லட்சங்களை வசூலித்துள்ளது.

4. மதராசப்பட்டினம்
இயக்குனர் விஜய்யின் மதராசப்பட்டினம் ஆறு வாரங்கள் முடிவில் 3.91 கோடிகளை வசூலித்து லாபகரமான படம் என்ற பெயரை பெற்றிருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 4.27 லட்சங்கள்.

3. வம்சம்
பாண்டிரா‌ஜின் வம்சம் முதல் பத்து தினங்களில் 53 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 10.7 லட்சங்கள்.

2. இனிது இனிது
கே.வி.குகன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதுமுகங்களின் இனிது இனிது பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. முதல் மூன்று தினங்களில் இப்படம் வசூலித்திருப்பது 20.16 லட்சங்கள்.

1. நான் மகான் அல்ல
சுசீந்திரனின் நான் மகான் அல்ல அற்புதமான ஓபனிங்கை பெற்றுள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் வசூலித்திருப்பது 73.41 லட்சங்கள்.

Thursday, August 26, 2010

> தாணு ,சீமான் திடீர் சந்திப்பு

ஜெயில் சந்திப்பு என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். வேலூர் ஜெயிலில் இருக்கும் சீமானை சென்று சந்தித்திருக்கிறார் தாணு.

விஜய்யை வைத்து சீமான் இயக்கவிருக்கும் பகலவன் படத்தை தாணு தயா‌ரிக்கிறார். கதை விவாதம் முடிந்து விஜய்யிடம் கதை சொல்லி, கால்ஷீட்டும் உறுதி செய்து வைத்திருந்தார் சீமான். இந்நிலையில்தான் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததற்காக அவரை தமிழக அரசு சிறையில் அடைத்திருக்கிறது.

இந்த இடைவெளியில் விக்ரம் கே.குமார், லிங்குசாமி என பலர் விஜய்யிடம் கதை சொல்லியுள்ளனர். இதில் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. இந்த லிஸ்ட் இன்னும் நீளாமல் இருப்பதற்காகவும், அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவு செய்யவும் தாணு சீமானை சந்தித்ததாக கூறப்படுகிறது.

சீமானின் ‌ரிலீஸுக்காக திரையுலகம் மட்டுமல்ல உலக‌த் தமிழினமே காத்திருக்கிறது.

Wednesday, August 25, 2010

> அசந்து போன சிம்பு - மங்காத்தா

சிம்பு அ‌ஜீத்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெ‌ரிந்ததே. திகட்ட‌த் திகட்ட இதனை அவர் நே‌ரிலும், படத்திலிலும் தெ‌ரிவித்திருக்கிறார்.

அ‌‌ஜீத்தின் மங்காத்தா படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சிம்பு மட்டும் கருத்து தெ‌ரிவிக்காமல் இருந்தால் எப்படி?

டுவிட்ட‌ரில் மங்காத்தா குறித்த தனது வியப்பை வெளியிட்டிருக்கிறார் சிம்பு. Awesome... gud ya என்று மங்காத்தா ட்ரெய்லர் குறித்த தனது வியப்பை வெளியிட்டிருக்கிறார்.

போடா போடி படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருக்கும் சிம்பு, படத்தின் டாக்கி போர்ஷனை முடித்துவிட்டே சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

Tuesday, August 24, 2010

> மங்காத்தா திரையரங்கில்

நான் மகான் அல்ல படம் ஓடும் திரையரங்கில் இடைவேளைக்குதான் கரவொலி காதை செவிடாக்குகிறது. காரணம் அனைவருக்கும் தெ‌ரிந்ததுதான்.

நான் மகான் அல்ல படம் ஓடும் திரையரங்குகளில் மங்காத்தா ட்ரெய்லர் காண்பிக்கப்படுகிறது. த்‌ரில்லர் எஃபெக்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த ட்ரெல்யல‌ரில் அ‌‌ஜீத் துப்பாக்கி வித்தைகள் முடிந்து மங்காத்தா என்று உச்ச‌ரிக்கும் போது திரையரங்கே அதிர்கிறது.

மங்காத்தா ட்ரெய்லர் பார்க்க அ‌‌ஜீத் ரசிகர்கள் நான் மகான் அல்ல படத்துக்கு வருவதால் படத்தின் ரெவ்னியூவும் அதிக‌ரித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெ‌ரிவிக்கிறார்கள்.

புதிய விளம்பர டெக்னிக்?

> சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

அமெரிக்க வானியல் மண்டல ஆய்வு விஞ்ஞானிகள் சந்திரன் சுருங்கி வருவதாகக் கண்டுபிடித்துள்ளனர். நாசாவிலிருந்து எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான துணைக்கோள் படங்களை ஆராய்ந்து இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

சந்திரனின் மேற்புறத்தில் சுருக்கங்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர்கள் சந்திரன் சுருங்கிக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

சந்திரனின் மேற்புரத்தில் காணப்படும் இந்த சுருக்கங்கள் பல மைல்கள் நீளம் ஊடையதாக இருப்பது தெரிய வந்துள்ளது.

சந்திரன் அதன் சுற்றளவில் 200மீ சுருங்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆனால் கோள்கள் ஆய்வு விஞ்ஞானிகளுக்கு இந்த 'சுருங்கல்' விவகாரம் ஒன்றும் புதிதல்ல. சந்திரன் உருவான போது பூமி போலவே அதன் மையத்தில் உஷ்ண மையம் இருந்தது. அதனால் அது துவக்கத்தில் விரிவடைந்தது. தற்போது குளிரடைதல் செயல் காரணமாக சந்திரன் சுருங்குகிறது என்று கூறுகின்றனர் இந்த நிபுண‌ர்கள்.

இதனால் சந்திரன் இன்னும் குளிரடைகிறது என்று தெரியவந்துள்ளது. இதனால் அதன் மேற்புறம் அழுத்தம் பெற்று சுருங்குகிறது. இதனால்தான் இந்த சுருக்கங்கள் தோன்றுகின்றன.

வாஷிங்டனின் உள்ள ஸ்மித்சோனியன் இன்ஸ்டிட்யூட்டின் தாமஸ் வாட்டர்ஸ் என்ற விஞ்ஞானியின் தலைமையில் ஒரு குழு சாட்டிலைட் புகைப்படங்களை ஆய்வு செய்தது.

சந்திரனில் எந்தவிதமான புவி நடவடிக்கைகளும் நடைபெறுவதில்லை அது நிலவியல் அடிப்படையில் இறந்த ஒன்று (Geologically Dead) என்றும், அப்படி ஏதாவது நிலவியல் நடவடிக்கைகள் இருந்திருந்தால் அது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததே என்றும் கருதப்பட்டு வந்த கருத்துக்களை தற்போதைய கண்டுபிடிப்புகள் முறியடித்துள்ளது.

ஆனால் சந்திரன் சுருங்கி அது வேறு எங்கும் சென்று விடவோ அல்லது காணாமல் போகவோ வாய்ப்பில்லை என்று கூறும் இந்த விஞ்ஞானிகள் இந்த சுருக்க விவகாரம் பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளனர்.

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது செவ்வாய் கிரகம் அளவிலான பொருள் ஒன்று மோதியதால் பயங்கரமான இடிபாட்டுத் துகள்கள் உருவாயின, பிறகு இந்தத் துகள்கள் ஒன்றோடொன்று மோதி நசுங்கி சந்திரனாக உருவாகியது. இந்தத் துகள்களில் சில கதிரியக்கத்தை வெளியிடத் துவங்கின. சந்திரன் உருவான கதை இதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Monday, August 23, 2010

> BLUETOOTH பயன்பாடும் பாதுகாப்பும்.

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.
ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN 0r piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.

புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்:

அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.

பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன.

உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.

புளுடூத் செக்யூரிட்டி:

எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.
உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

எழுதியவர் : கார்த்திக்

> இயக்குனருக்கு விஜய் பதில்! பிறகு பார்க்கலாங்க.

பெரிய நடிகர்களை இயக்கியவர்களுக்கு மீண்டும் அதே லெவல் கூட்டுதான் பிடிக்கும். நினைத்தால் புதுமுகங்களை கூட அறிமுகப்படுத்தலாம். என்றாலும் அகலமான வியாபாரம். அதிர வைக்கும் சம்பளம் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் மீண்டும் மீண்டும் பெரிய நடிகர்களின் கால்ஷீட்டுக்கு முயல்கிறார்கள். அப்படி முயன்றவர்தான் லிங்குசாமியும்.

வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், விஜய்யும் இவரும் அவ்வப்போது சந்தித்து கதை பரிமாறிக் கொண்டார்கள். இந்த விஷயம் தெரிந்துதான் சிம்புவும் வெளிப்படையாக ஒரு அறிக்கை வெளியிட்டார். என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு வேறொரு ஹீரோவை வைத்து படம் எடுப்பது என்ன நியாயம் என்றெல்லாம் புலம்பி தள்ளினார் அவர்.

இந்த நிலையில் லிங்குசாமியின் அடுத்த படத்தில் விஜய்தான் ஹீரோ என்ற நம்பிக்கை டமால் ஆகி விட்டதாம். காரணம், விஜய்க்கு லிங்கு சொன்ன சில கதை சுருக்கங்கள் அவரை அவ்வளவாக இம்ப்ரஸ் செய்யவில்லையாம். இயக்குனரின் அடுத்த சாய்ஸ் அஜீத் என்கிறார்கள். ஆனாலும் லிங்குசாமியை சுற்றி சுற்றி வருகிறார் கார்த்தி. மீண்டும் பையா போல ஒரு அதிரடி உருவாகலாம் என்கிறது கோடம்பாக்கக் குருவி!

Sunday, August 22, 2010

> கேம் OF வெங்கட்பிரபு

வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் நடிக்கும் மங்காத்தா தனது ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது. ஆம், கிளவுட் நைன் தயா‌ரிக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை இப்போது ரசிகர்கள் திரையரங்கில் கண்டு களிக்கலாம்.

மங்காத்தாவில் அ‌‌ஜீத்துடன் நாகார்ஜுனும் நடிக்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா. படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே ட்ரெய்லர் ஒன்றை ஷூட் செய்திருக்கிறார்கள். நான் மகான் அல்ல ஓடும் திரையரங்குகளில் இந்த ட்ரெய்லர் காண்பிக்கப்படுகிறது.

கோவா படத்துக்கு ஏ வெங்கட்பிரபு ஹாலிடே என விளம்பரப்படுத்தினார்கள். மங்காத்தாவுக்கு கேப்ஷன் மாறியிருக்கிறது. இதற்கு கேப்ஷன்,

ஏ வெங்கட்பிரபு கேம்... அசத்துங்கப்பா.

> புது படங்களின் ‌ரிசல்ட்.

நேற்று இரு படங்கள் வெளியாயின. ஒன்று நான் மகான் அல்ல, இரண்டு இனிது இனிது.

சுசீந்திரனின் நான் மகான் அல்ல பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கார்த்தி தனது முந்தையப் படங்களைப் போல பத்து ஐம்பது பேரை தனியாளாக அடித்து தலைவலியை ஏற்படுத்துவதாக சாதாரண ரசிகர்களே எ‌ரிச்சலாகின்றனர். பையாவின் பாதி அளவுக்காவது படம் போகுமா என்பதே சந்தேகம் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

நான் மகான் அல்ல படத்துக்கு அப்படியே நேர்எதிராக இனிது இனிது வெளியாகியிருக்கிறது. கே.வி.குகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வன்முறையும், ஆபாசமும் துளியுமில்லை. கேம்பஸ் கதையான இதில் மாணவர்களின் நல்ல பக்கங்கள் மட்டும் பாஸிடிவ்வான விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இனிது இனிது மெதுவாக அனைவர் மனதிலும் இடம்பிடிக்க வாய்ய்புள்ளது.

Saturday, August 21, 2010

> புது வியூகம் விஜய் !!

3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ‌‌ரீமேக்கில் விஜய்யும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் நடிப்பதாக கூறப்பட்டது. இதில் மாற்றம் வந்தால் ஆச்ச‌ரியமில்லை என்கிறார்கள். காரணம் விஜய்.

விஜய்யின் படங்கள் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கும் ஆசை அவருக்கு இருக்கிறது. அவரைவிட அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு இருக்கிறது. 3 இடியட்ஸ் அதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என இருவருமே கருதுகிறார்கள்.

அதாவது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு 3 இடியட்ஸிலும் விஜய்யே ஹீரோவாக நடிப்பது. இதற்கான பேச்சுவார்த்தையை தயா‌ரிப்பாளருடன் தொடங்கியிருக்கிறாராம் எஸ்ஏசி. விரைவில் ஆச்ச‌ரியமான அறிவிப்புகள் வந்தால் அதிர்ச்சி அடையாதீர்கள்.

> தமன்னா 3 இடியட்ஸில்???

3 இடியட்ஸில் த்‌ரிஷா அல்லது இலியானா நடிப்பார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஷங்கர் அலுவலக வட்டாரம் கூறும் செய்தி வேறு விதமாக இருக்கிறது.

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் 3 இடியட்ஸை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயா‌ரிக்கிறது. இரு மொழிப் படத்தையும் ஷங்கர் இயக்குகிறார். தமிழில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.

3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் த்‌ரிஷா அல்லது இலியானா நடிப்பார்கள் என முதலில் கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவல்... இவர்கள் இருவருக்கும் பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட உள்ளாராம். தமன்னாவை தேர்வு செய்தது ஷங்கர் எனவும் கூறப்படுகிறது.

> குற்றவாளியா அ‌‌ஜீத்??

அ‌‌ஜீத், கௌதம் இணையாமல் போனதற்கு யார் காரணம்? அ‌‌ஜீத்தான் காரணம் என பேட்டிகளில் கூறிவந்த கௌதம் மீண்டும் அதனை உறுதி செய்திருக்கிறார்.

அ‌‌ஜீத் முதலில் ஜூலையில் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார். பிறகு டிசம்பர் என்றிருக்கிறார். பிறகு திடீரென்று வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிப்பதாக தெ‌ரிவித்துள்ளார். மேலும் அ‌‌ஜீத்தை வைத்து படம் பண்ண நினைத்த தயா‌ரிப்பாள‌ரிடம் கௌதம் வேண்டாம் என்றும் தெ‌ரிவித்திருக்கிறார்.

இதையெல்லாம் பத்தி‌ரிகை பேட்டியில் தெ‌ளிவாக குறிப்பிட்டிருக்கும் கௌதம், இனி அ‌‌ஜீத்திடம் போய் நிற்க வேண்டிய தேவை எனக்கில்லை என உறுதியாக கூறியுள்ளார்.

கௌதமின் சரமா‌ரியான குற்றச்சாற்றுக்கு இதுவரை அ‌‌ஜீத் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, August 20, 2010

> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.

எந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது.

கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியிருக்கிறார்கள். தெலுங்கு உ‌ரிமை இந்திய அளவில் புதிய சாதனை. ஒரு டப்பிங் படம் 33 கோடிக்கு விலை போனது இதுவே முதல் முறை. இதேபோல் கன்னடத்தில் ஒரு படம் இத்தனை அதிக விலைக்கு வாங்கப்பட்டதில்லை.

தற்போது கேரள உ‌ரிமையும் வாங்கப்பட்டுள்ளது. கேரளாவில் எந்திரன் தமிழில் வெளியாகிறது. 6 கோடிகள் கொடுத்து இந்த உ‌ரிமையை வாங்கியிருக்கிறார்கள். ஒரு தமிழ்ப் படம் இத்தனை அதிக தொகைக்கு விற்பனையாகியிருப்பது இதுவே முதல் முறை.

மம்முட்டி, மோகன்லாலின் பல நேரடி மலையாளப் படங்கள் கூட ஆறு கோடிக்கு விற்பனையாவதில்லை என்பது முக்கியமானது.

> இனிது இனிது - மு‌ன்னோ‌ட்ட‌ம்.

டூயட் மூவிஸ் சார்பில் பிரகாஷ்ரா‌ஜ் தயா‌ரித்திருக்கும் படம், இனிது இனிது. தெலுங்கில் சேகர் கம்மூலா இயக்கத்தில் உருவாகி மிகப்பெ‌ரிய வெற்றி பெற்ற ஹேப்பிடேஸ் படத்தின் தமிழ் ‌ரீமேக் இது.

இனிது இனிதுவை ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் இயக்கியிருக்கிறார். குஷி, நியூ, மொழி, தெலுங்கு அத்தடு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த குகனின் முதல் இயக்குனர் முயற்சி இந்தப் படம்.

கல்லூரியின் முதல் நாளில் தொடங்கும் படம் இறுதி நாளான ஃபேர்வெல் டேயில் முடிகிறது. இடைப்பட்ட காலத்தில் மாணவர்களின் நட்பு, காதல், மோதல், துரோகம், பச்சாதாபம் என அனைத்தையும் மிகை இல்லாமல் சொல்கிறது.

படத்தில் நடித்திருப்பவர்கள் - சோனியா நீங்கலாக - அனைவரும் புதுமுகங்கள். இரண்டாயிரம் பே‌ரிலிருந்து இந்த புதுமுகங்களை குகனும், பிரகாஷ்ராஜும் தேர்வு செய்துள்ளனர். படத்தின் மிகப்பெ‌ரிய வலிமை இசையும், ஒளிப்பதிவும்.

ஒளிப்பதிவை குகனே செய்துள்ளார். இசை மிக்கி ஜே.மேயர். இவர் ஹேப்பிடேஸ் படத்துக்கு இசையமைத்தவர். மிக்கியின் இசை நன்றாக இருந்ததால் அவருக்கு இனிது இனிதுக்கு இசையமைக்கும் வாய்ப்பை அளித்துள்ளனர். இரண்டு பாடல்கள் தவிர்த்து அனைத்தும் தமிழுக்காக போடப்பட்டது என்பது முக்கியமானது.

வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

> நான் மகான் அல்ல - மு‌ன்னோ‌ட்ட‌ம்.

ஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரித்திருக்கும் படம், நான் மகான் அல்ல. வெண்ணிலா கபடிக்குழுவை இயக்கிய சுசீந்திரனின் இரண்டாவது படம்.

கார்த்தி இதில் ஹீரோ, ஹீரோயின் காஜல் அகர்வால். சென்னை மிடில் கிளாஸ் இளைஞனின் கதையை இதில் சொல்லியிருப்பதாக சுசீந்திரன் கூறியிருக்கிறார்.

படத்தின் வசனத்தை பாஸ்கர் சக்தி எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடல்கள் நா.முத்துக்குமார், யுகபாரதி. படத்தில் ஆ‌க்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் மதி. ஆ‌க்சன் படமான இதனை யதார்த்தம் மீறாமல் படமாக்கியிருப்பதாக கார்த்தி தெ‌ரிவித்தார்.

சென்சார் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Thursday, August 19, 2010

> காலத்தின் கோலமா? கடவுளின் லீலையா?

நித்யானந்தா சாமியார் ஊருக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்துவிட்டு ரஞ்சிதாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட கதையை நாடே தொலைக்காட்சியில் பார்த்தது. இதனை சம்பந்தப்பட்ட இருவரும் மறைமுகமாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர்.

சில பிழைப்புவாதிகள் நித்தியை மீண்டும் சாமியாராக்கியிருக்கிறார்கள். சாமியார்களை நம்பியிருக்கும் சிலரும் அவரை தெய்வீக‌த் தூதராக கொண்டாடும் வேலையை முடுக்கி விட்டுள்ளனர்.

சி‌ரிப்பு நடிகர் எஸ்.வி.சேகருக்கு வந்த தொண்டை வலியை திருநீரு பூசி ச‌ரி செய்தாராம் நித்தி. இதற்கு கைமாறா தெ‌ரியவில்லை, நித்யானந்தாவுடன் இருப்பது ரஞ்சிதாவே இல்லை, ஒரே நபரைப் போல் ஏழு பேர் இருப்பார்கள் என்றெல்லாம் உடுக்கடித்திருக்கிறார். ஆள் யாராக இருந்தாலும் உடன் இருந்தது நித்திதானே? இதற்கு சி‌ரிப்பு நடிக‌ரிடம் பதிலில்லை.

சங்கராச்சா‌ரியா‌ரை கைது செய்தவர்கள் கை விளங்காமல் இருப்பதாகவும், கிட்னி பழுதடைந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார். அவரை கைது செய்ய உத்தரவிட்டவர்கள் இன்றும் சேமமாக இருக்கிறார்கள். சங்கராச்சா‌ரியா‌ரின் பவர் அவர்களிடம் செல்லுபடியாகாதா என்பதைப் பற்றியும் சி‌ரிப்பு நடிகர் பதிலளிக்கவில்லை.

இவர் சின்னத்திரையில் பொறுப்பில் இருந்தபோது ஒரு நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். ஒழுக்கத்தை காரணம் காட்டி அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவிடாமல் செய்தவர் இவர். அன்று ஒழுக்கத்தை காரணம் காட்டியவர் இன்று ரஞ்சிதாவுக்கு அடைக்கலம் கொடுப்பது,

காலத்தின் கோலமா? கடவுளின் லீலையா?

> தனிச்சலுகையா ஐஸ்வர்யாவுக்கு ??

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்திருந்தது. உறுப்பினராவதற்கு ஒரு டெட் லைனும் கொடுக்கப்பட்டது. ஆகஸ்டு 15.

சமீரா ரெட்டி, ஓவியா, ஜெனிலியா, விமல் போன்றவர்கள் அடித்துப் பிடித்து சங்கத்தில் உறுப்பினராயினர். ஆனால் ஒருவர் மட்டும் இன்னும் உறுப்பினராகவில்லை. அவர், ஐஸ்வர்யாராய்.

சங்கத்தில் உறுப்பினராகாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை உறுப்பினராகாத ஐஸ்வர்யாராய்க்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என இதுவரை சங்கத்திடமிருந்து அறிவிப்பு வரவில்லை.

சங்கம் எடுக்கப் போகும் நடவடிக்கையை பார்க்க சங்க உறுப்பினர்களும் மற்றவர்களும் காத்திருக்கிறார்கள்.

Wednesday, August 18, 2010

> சத்யரா‌ஜ் ஷங்கர் இயக்கத்தில்

ஷங்க‌ரின் சிவா‌ஜி படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜைதான் முதலில் கேட்டார்கள். ர‌ஜினிக்கு நான் வில்லனாக நடித்தால் என் படத்தில் அவர் வில்லனாக நடிப்பாரா என வில்லங்கமான கேள்வி கேட்டு வாய்ப்பு கேட்டு வந்தவர்களுக்கு வாசக்கதவை மூடினார்.

இப்போது மீண்டும் ஷங்கர் படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. நமக்கு கிடைத்த தகவல் உண்மையென்றால் சத்யராஜும் நடிக்க டபுள் ஓகே சொல்லியிருக்கிறார்.

3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் நடிக்க நடிகர்களுக்கு வலைவீசி வருகிறார்கள். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கதான் சத்யராஜை கேட்டிருக்கிறார் ஷங்கர். அவரும் ஓகே சொல்லியிருப்பதாக கேள்வி.

அப்படியானால் அடுத்தடுத்த படவிழாக்களில் ஷங்க‌ரின் திறமை பற்றி புர்ச்சி தமிழன் வியந்து பேசுவதை கேட்கலாம்.

> சல்மான்கான், அசின் படங்களுக்கு சிக்கல்

திரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைப் படவிழாவுக்கு சென்ற நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நான்கு மாநிலங்களில் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை குறித்து திரைப்பட கூட்டமைப்பு மவுனம் சாதித்தாலும் அவர்கள் படங்களை வாங்க திரையரங்கு உ‌ரிமையாளர்கள் மிகுந்த தயக்கம் காட்டுகின்றனர்.

விரைவில் சல்மான்கான் நடித்த இந்திப் படம் வெளியாகிறது. பொதுவாக சென்னையில் குறைந்தது நான்கு திரையரங்குகளிலாவது சல்மானின் படம் வெளியாகும். இலங்கை சென்றதோடு ராஜபக்சேயின் அடிவருடியாக செயல்பட்டதால் அவரது படங்களை தமிழகத்தில் திரையிட எதிர்ப்பு தெ‌ரிவிப்பது என்பதில் தமிழ் அமைப்புகள் உறுதியாக உள்ளன.

இதன் காரணமாக சல்மானின் படத்தை வாங்க தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் தயக்கம் காட்டுகின்றன. மேலும் விவேக் ஓபராய் நடித்த ரத்த ச‌ரித்திரம் படத்தை வாங்கவும் விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

ரத்த ச‌ரித்திரத்தில் சூர்யாவும் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு உருவாகியுள்ள எதிர்ப்பு குறித்து கேட்டதற்கு, ஈழப் பிரச்சனை முடிந்துப் போன பிரச்சனை என பெங்களூர் மிரர் இணையதளத்துக்கு சூர்யா பேட்டி கொடுத்துள்ளார்.

ராஜபக்சேயின் இன்னொரு அடிவருடி அசினின் படங்களுக்கும் இதே தயக்கத்தைதான் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் காட்டுகிறார்கள்.

> ர‌ஜினி - முதல்வர் விழாவில்

சென்னையை அடுத்த பையனூ‌ரில் திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு வீடு கட்ட தமிழக அரசு நிலம் ஒதுக்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 22ஆம் தேதி நடக்கிறது.

இதனை முன்னிட்டு அன்று ஒருநாள் அனைத்துப் படப்பிடிப்புகளும், திரைத்துறை சார்பான வேலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ர‌ஜினி, பாலசந்தர், தாச‌ரி நாராயணராவ், இந்தி நடிகர் ‌ஜிதேந்திரா, தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், மலையாள நடிகர் மம்முட்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

Tuesday, August 17, 2010

> ஹாரிஸ் ஜெயரா‌ஜ் ஷங்கர் படத்தில்

ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயரா‌ஜ். படம் 3 இடியட்ஸ் தமிழ் மற்றும் தெலு‌ங்கு ‌‌ரீமேக்.

ஷங்க‌ரின் அந்நியன் படத்துக்கு ஹாரிஸ் இசையமைத்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் கால்ஷீட் கிடைக்காததால்தான் ஹாரிஸை அவருக்கு மாற்றாக தேர்வு செய்திருந்தார் ஷங்கர்.

3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கிற்கும் ரஹ்மானின் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல். அதனால் மீண்டும் ஹாரிஸுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

3 இடியட்ஸ் தமிழ் ‌ரீமேக்கில் விஜய்யும், தெலுங்கு ‌ரீமேக்கில் மகேஷ் பாபுவும் ஹீரோவாக நடிப்பதை ஹாரிஸ் உறுதி செய்துள்ளார்.

> இப்போதைய எந்திரனின் பட்ஜெட்.

எந்திரனின் பட்ஜெட் 90 கோடிகள் என கூறப்பட்டது. பிறகு இது 150 கோடியாக உயர்ந்தது. இறுதியாக 190 கோடிகள் என தயா‌ரிப்பு தரப்பில் கூறப்பட்டது.

இதில் எது உண்மை?

ஏந்திரன் படத்தின் இந்திப் பதிப்பு ரோபோ-வின் ஆடியோ வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் பேசிய ர‌ஜினி, 150 கோடியில் எந்திரனை எடுத்திருப்பதாக தெ‌ரிவித்தார். ர‌ஜினியே இந்தத் தகவலை தெ‌ரிவித்திருப்பதால் இதுவே உண்மையான பட்ஜெட்டாக இருக்க வாய்ப்புள்ளது.

மும்பையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாருக்கான் விழாவுக்கு வரவில்லை.

> த்‌ரிஷாவின் வாழ்த்து வரலட்சுமிக்கு

இரண்டு வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட படம் போடா போடி. ஹீரோயின் ஒரு டான்சர் என்பதால் நடனம் நன்கு தெ‌ரிந்த சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமியை ஒப்பந்தம் செய்தனர். ஹீரோ எஸ்டிஆர் என்று அறியப்படுகிற சிம்பு.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு போடா போடியின் படப்பிடிப்பு லண்டனில் சில நாட்களுக்குமுன் தொடங்கியது. மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தனது முதல் நாள் அனுபவத்தை ஃபேஸ்புக்கில் விவ‌ரித்திருக்கிறார் வரலட்சுமி. முதலில் பதற்றமாக இருந்தாலும் தனது எனர்‌ஜி லெவல் அதிகமாக இருந்ததாக அவர் தெ‌ரிவித்துள்ளார்.

வரலட்சுமிக்கு நண்பர்கள் பலரும் வாழ்த்து தெ‌ரிவித்துள்ளனர். முக்கியமாக த்‌ரிஷா. இருவரும் தோழிகள் என்பதை சொல்லத் தேவையில்லையே.

> காமன்வெல்த் - ரஹ்மானின் வேதனை

டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடலை ரஹ்மான் உருவாக்கியிருக்கிறார். ஸ்வாகதம் என்ற அந்தப் பாடல் போட்டியின் தொடக்க நாள் விழாவில் பாடப்படும்.

இதுபற்றி பேசிய ரஹ்மான் தனது வேதனை ஒன்றையும் தெ‌ரிவித்தார். அதாவது காமன்வெல்த் போட்டி குறித்து எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வருவதாகவும், அது இந்தியாவின் புகழுக்கு பங்கம் விளைவிப்பதாகவும், இதுபோன்ற செய்திகளை லண்டனில் கேட்க நேர்ந்தபோது மிகவும் வேதனைப்பட்டதாக தெ‌ரிவித்தார்.

காமென்வெல்த் போட்டிகள் சுமார் முப்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்படுகிறது. இதில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. போட்டிக்கான கட்டுமான பணிகள் உள்பட எதுவும் ச‌ரியாக நடைபெறவில்லை. இதனைத்தான் ஊடகங்கள் சுட்டிக் காட்டின.

ஊழல் செய்ததை தேசிய அவமானமாகக் கருதாத சிலர், அதுபற்றி எழுதினால் மட்டும் தேசத்துக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக வேதனைப்படுகிறார்கள். இப்படி வேதனைப்படும் யாரும் குஜராத் படுகொலை நடந்தபோதோ, ஒ‌ரிஸா கலவரத்தின் போதோ, விதர்ப்பா விவசாயிகள் தற்கொலை செய்த போதோ தேசத்துக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக கூறவும் இல்லை, வேதனை அடையவுமில்லை.

அப்போதெல்லாம் கள்ள மவுனம் சாதித்தவர்கள் அரசியல்வாதிகளின் ஊழலைப் பற்றி பேசும் போது மட்டும் தேசத்துக்கு அவப்பெயர் என வேதனைப்படுவது...

விந்தையிலும் விந்தை.

Monday, August 16, 2010

> சத்யராஜுடன் அசத்திய சாந்தனு.

சக்கரக்கட்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியவர் சாந்தனு. முதல் படத்தில் இளமைக் குறும்புடன் நடித்த சாந்தனு தற்போது நடித்துவரும் ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் அதிரடி நாயகனாக மாறியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சானாகான் நடித்துள்ளார்.

தனது தந்தை பாக்கியராஜின் இயக்கத்தில் 'சித்து +2' என்னும் படத்தை முடித்துள்ள சாந்தனுவுக்கு "ஆயிரம் விளக்கு" தமிழில் மூன்றாவது படம்.

இதற்கு முன் மலையாளத்தில் மோகன் லாலுடன் ஒரு படத்தில் நடித்துள்ள சாந்தனு, ஆயிரம் விளக்கில் சத்யராஜுடன் நடிப்பில் போட்டிப் போடுகிறார்.

இந்தச் சின்ன வயதிலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அமைந்த சந்தோஷத்தில் உள்ளார் சாந்தனு. இது குறித்து பேசும் போது அவர்,

“சத்யராஜ் சார், மோகன் லால் சார் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் எல்லாம் நடிப்பது எனது அதிர்ஷ்டம். நடிப்பில் நான் நன்றாக வரவேண்டும் என்று எனது தந்தை மற்றும் அவரது நண்பர்கள் பலரும் நினைக்கிறார்கள்.

அவர்களின் ஆசியுடன் சிறப்பாக நடித்து பெரிய அளவில் வர முயற்சி செய்வேன். அப்பாவின் பெயரை காப்பாற்றுவேன். அப்படிக் காப்பாற்றாவிட்டாலும், அவருக்கு கெட்டப் பெயரை வாங்கித் தரமாட்டேன்.

எனது முதல் படத்திலேயே ஏ.ஆர். ரஹ்மான் சாரின் பாடலுக்கு சிறப்பாக ஆடியது எனக்கு பெருமையாக இருந்தது.


ஒரே ஒரு குத்துப் பாட்டுக்காவது ஆடனும் என்பது எனது ரொம்ப நாள் ஆசை. அந்த ஆசை ஆயிரம் விளக்கு படத்தில் நிறை வேறியுள்ளது. அதுவும் சத்யராஜ் சாருடன் சேர்ந்து ஆடியது இன்னும் எனக்கு கூடுதல் சந்தோஷத்தை தந்துள்ளது.’’ என்று இளமைத் துடிப்புடன் கூறிய சாந்தனு முகத்தில் ஆயிரம் விளக்குகள் சேர்ந்து பளிச்சிட்டன.

Sunday, August 15, 2010

> சாதனை மேல் சாதனை - எந்திரன்

எந்திரன் படத்தின் தெலுங்கு உ‌ரிமையை 30 கோடிக்கு வாங்கியதாக ஒருவர் பேட்டியளித்ததும், இருவர் போலி பத்திரங்களைப் பயன்படுத்தி இந்த விற்பனையை நடத்தியதும் இரண்டு நாட்கள் முன்பு தெ‌ரிய வந்தது. இதையடுத்து எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வி, எந்திரனின் தெலுங்குப் பதிப்பு எத்தனை கோடிக்கு விலை போகும்?

இறுதியாக கிடைத்த தகவலின்படி 33 கோடிக்கு எந்திரன் தெலுங்கு உ‌ரிமை வாங்கப்பட்டுள்ளதாம். ஒரு மொழிமாற்றுப் படம் இத்தனை பொpய தொகைக்கு விலை போனது இந்தியாவில் இதுவே முதல்முறை.

எந்திரனின் கன்னட உ‌ரிமை 9.5 கோடிக்கு விற்பனையானதாக மற்றெhரு செய்தி தெ‌ரிவிக்கிறது. இது கன்னட மெகா படங்களின் பட்ஜெட்டுக்கு சமமான தொகை.

சாதனைகள் மேலும் தொடரும் என உறுதியாகச் சொல்லலாம்.

Friday, August 13, 2010

> நந்தலாலா விரைவில் ?

பிரமாதமான படம் என்று கமல்ஹாசனால் பாராட்டப்பட்ட நந்தலாலா இன்னும் பெட்டிக்குள்தான் இருக்கிறது. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே என அடுத்தடுத்து ஹிட் அடித்த மிஷ்கின் இயக்கிய படம் என்ற போதிலும் பெட்டிதான் நந்தலாலாவுக்கு ப‌ரிசாகியிருக்கிறது.

இந்த ப‌ரிதாப நிலைக்கு படத்தை தயா‌ரித்த ஐங்கரன் நிறுவனத்தின் பைனான்ஸ் நெருக்கடியும் ஒரு காரணம். அடுத்தடுத்த தோல்விகள்... பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்.

இந்நிலையில் நந்தலாலாவுக்கு விடிவுகாலம் நெருங்கிவிட்டதற்கான சமிக்ஞைகள் தெ‌ரியத் தொடங்கியுள்ளன. எந்திரன் படத்திற்கு ஐங்கரன் செலவு செய்த பணத்தை சன் பிக்சர்ஸ் தர முன்வந்துள்ளதாம். இந்தப் பணம் மட்டும் கால் கோடியை தாண்டும் என்கிறார்கள்.

நந்தலாலாவையும், தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகளையும் காப்பாற்ற ஐங்கரனுக்கு இது போதுமே.

> பாணா காத்தாடி - விமர்சனம்

தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயா‌ரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸின் புதிய படம், பாணா காத்தாடி. வட சென்னையில் காத்தாடிவிடும் இளைஞர்கள் என்று கதைக்களத்தை வித்தியாசமாக யோசித்த இயக்குனர் வழக்கமான கதை சொல்லல் முறையால் காத்தாடியின் கமர்ஷியல் வேல்யூவை பெருமளவு குறைத்திருக்கிறார்.

வகுப்பில் வருஷா வருஷம் கோட்டடித்தாலும் பட்டம் விடுவதில் மட்டும் ஹீரோ கில்லாடி. இவருக்கு ஒரு காதல். வழக்கம் போல வட சென்னை பையன் அவனுக்கு சகல வசதிகளும் கொண்ட அழகான காதலி. பேஷன் டிஸைனிங் படிக்கும் ஹீரோயின் ஹீரோவை காதலிக்க காரணமாகச் சொல்லும் காட்சிகளில் இமயம் அளவுக்கு ஓட்டை. புராஜெக்டை வெறும் பென்டிரைவிலா வைப்பார்கள்?

காதலால் திருந்தும் ஹீரோவை இன்னும் எத்தனைப் படங்களுக்கு சகித்துக் கொள்வதோ? திருந்திய ஹீரோ தனது காதலை சொல்லப் போகும் இடத்தில் நடக்கும் சிறிய தவறு மீண்டும் பிரச்சனையை கிளப்புகிறது. இறுதியில் காதல் என்னானது என்பதுடன் சற்றே சலிப்புடன் முடிகிறது படம்.

ஹீரோவாக நடிகர் முரளியின் மகன் அதர்வா நடித்துள்ளார். வா‌ரிசு என்று ஒதுக்கித்தள்ள முடியாத நடிப்பு. முதல் படத்திலேயே சோகத்தில் சென்டம் அடித்த நடிகர் இவராகவே இருப்பார். சதா க‌ரிச்சுக் கொட்டும் தாய், அவன் தப்பு செய்திருக்க மாட்டான் என்று கண்ணீர்விடும் போது நெகிழ்ச்சியில் அதர்வா கண்கலங்கும் காட்சி அருமை. இதுபோன்ற சில இடங்களில்தான் இயக்குனரை நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு காட்சியில் முரளி வருகிறார். தன்னை அவர் இதயம் ராஜா என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடம் சி‌ரிப்பலை.

சமந்தா தமிழுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நல்ல நடிகை. இந்தப் படத்தில் அதிக வேலை இல்லையென்றாலும் வேலை கொடுத்தால் வெளுத்து வாங்குவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.

சென்னை தமிழில் சில நேரம் ஆஹா போட வைக்கும் மவுனிகா சில நேரம் அத்துமீறல். பிரசன்னா படத்தின் வில்லன். திறமையான நடிகரை ஏன் தமிழ் திரையுலகம் இன்னும் ச‌ரியாகப் பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை இந்தப் படத்திலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் எழுப்பியிருக்கிறார். அதர்வாவை தன்னால் சாகடிக்க முடியாது என்ற சங்கடத்தை அவர் கண நேர கண்ணசைவில் வெளிப்படுத்துவது அற்புதம்.

கருணாசும், டி.பி.கஜேந்திரனும் சேர்ந்து பிபி-யை குறைக்கிறார்கள். யுவனின் பாடல்களும் பின்னணி இசையும் மோசமில்லை. கண் தாக்குதே பாடல் காதை இனிமையாக தாக்குகிறது. ‌ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்தின் பிளஸ்களில் ஒன்று.

தேவையே இல்லாமல் குஜராத்துக்கு செல்லும் கதை, அவசியமில்லாமல் சாகடிக்கப்படும் அதர்வாவின் நண்பன் என்று படத்தில் பல ஆறாம் விரல்கள். இவற்றை தவிர்த்திருந்தால் காத்தாடியின் தரம் உயர்ந்திருக்கும்.

Thursday, August 12, 2010

> கோடம்பாக்கத்தில் புதுப் புயல் நித்யா மேனன்

ஆகாச கோபுரம் வெளிவந்த போது படம் அளவுக்கு பெ‌ரிதாகப் பேசப்பட்டவர் அதில் நடித்த நித்யா மேனன். அழகும் இருக்கிறது திறமையும் உள்ளது, அப்படியானால் தமிழுக்கு அழைத்து வருவதுதானே சம்பிரதாயம்?

நித்யா மேனன் இப்போது கௌதம் தயா‌ரிக்கும் வெப்பம் படத்தின் நாயகி. வெப்பம் படப்பிடிப்பு முடியும் முன்பே நித்யாவின் புகழ் கோடம்பாக்கம் தாண்டி பரவத் தொடங்கியிருக்கிறது. அத்துடன் மேலுமொரு படமும் நித்யாவுக்கு கிடைத்துள்ளது.

சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் இரு மொழிப் படமான புத்தம் புது காலையில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்தப் படம் தெலுங்கில் 180 என்ற பெய‌ரில் தயாராகி வருகிறது. நித்யா மேனனின் இந்த அதிரடி எ‌ண்ட்‌ரி மற்ற நடிகைகள் மத்தியில் சூட்டை கிளப்பியிருக்கிறது.

> எந்திரனில் பல சிக்கல் - தாமதமாகுமா???

செப்டம்பர் மூன்றாம் தேதி வெளியாகும் என எதிர்பார்ககப்பட்ட எந்திரன் செப்டம்பர் இறுதிக்கு‌த் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐஸ்வர்யாராயே காரணம் என்கின்றன சில தகவல்கள்.

எந்திரனின் இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளை ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்திப் பதிப்புக்கு இதுவரை ஐஸ்வர்யாராய் டப்பிங் பேசவில்லை என தெ‌ரிகிறது. ஊடல்நலக் குறைவு காரணமாக அவரால் சென்னை வந்து டப்பிங் பேச முடியவில்லை என மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

ஹைதராபாத்தில் நடந்த எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் ஐஸ்வர்யாராய் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அவர் பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. உடல்நலக் குறைவு காரணமாக தன்னால் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என அப்போது அவர் தெ‌ரிவித்தார்.

ஐஸ்வர்யாராய் டப்பிங் பேசினால் எந்திரன் ‌ரிலீசுக்கு தயாராகிவிடும் என்கிறார்கள்.

Tuesday, August 10, 2010

> விஷால் த்‌ரிஷா ஜோடி ஆ‌க்சன் படத்தில்

அவன் இவன் படத்தில் நடித்துவரும் விஷால் அடுத்து பிரபுதேவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஆ‌க்சன் படமான இதில் அவருக்கு ஜோடியாக த்‌ரிஷா நடிக்கவுள்ளார்.

பிரபுதேவா தற்போது ஜெயம் ரவி நடிக்கும் இச் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ரவி ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.

இதையடுத்து பிரபுதேவா சல்மான் கானை வைத்து வான்டட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இந்திக்குச் செல்லாமல் மீண்டும் தமிழ்ப் படமே இயக்குகிறார்.

ஹீரோவாக விஷால் நடிக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக த்‌ரிஷா நடிக்கிறார்.

> ஆர்யா முட்டுக்கட்டை போடுகிறார்.

நடிகர்களானாலும் ச‌ரி, தயா‌ரிப்பாளர்களானாலும் ச‌ரி, தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது டப்பிங்கில்தான். நடிகர்களுக்கு கோபம் வந்தால் டப்பிங் பேசாமல் தவிர்ப்பார்கள். தயா‌ரிப்பாளருக்கு கோபம் வந்தால் டப்பிங்குக்கு அழைக்காமல் வேறொருவ‌ரின் குரலை பயன்படுத்துவார்கள்.

இந்தமுறை கோபம் வந்தது நடிகர் ஆர்யாவுக்கு. என்ன காரணமோ தெ‌ரியாது இரண்டுமுறை டப்பிங் ஸ்டுடியோவை புக் செய்துவிட்டு அழைத்தும் அவர் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அவர் உதாசீனப்படுத்திய படம் சிக்கு புக்கு.

எந்திரன் வருவதற்குள் படத்தை ‌ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தயா‌ரிப்பாளர்கள் வேலையை முடுக்கிவிட, ஆர்யாவோ டப்பிங் பேசாமல் முட்டுக்கட்டை போடுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாற்று. பிரச்சனை சங்கம் வரை சென்றுள்ளதால் சில சமாதான முயற்சிகளை எதிர்பார்க்கலாம்.

> த்‌ரிஷா - சொந்தக்குரலில் டப்பிங்

லேசா லேசாவில் அறிமுகமான த்‌ரிஷா இதுவரை சொந்தக்குரலில் டப்பிங் பேசியதில்லை. குரல் இனிமையாக இருந்தாலும் ஏனோ சொந்தக்குரல் வரம் மட்டும் த்‌ரிஷாவுக்கு இதுவரை கைகூடியதில்லை.

இந்தக் குறையை போக்க முன் வந்திருக்கிறார்கள் கமலும், கே.எஸ்.ரவிக்குமாரும்.

மன்மதன் அம்பு படத்தில் சொந்தக்குரலில் டப்பிங் பேசும்படி இருவரும் த்‌ரிஷாவை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். த்‌ரிஷாவும் இதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆக, முதல் முறையாக த்‌ரிஷாவின் சொந்தக்குரலை கேட்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது.

> 57வது ஃபிலிம்பேர் விருது

57வது ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிக் கலைஞர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழில் சிறந்தப் படமாக காஞ்சீவரம் தேர்வு செய்யப்பட்டது. இதனை இயக்கிய ப்‌ரியதர்ஷனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும், நடித்த பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. பிரகாஷ்ரா‌ஜின் மகளாக நடித்த ஷம்மு சிறந்த குணச்சித்திர நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த படத்துக்கான விருது நாடோடிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் நடித்த அபிநயாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது பசங்க ஜெயப்பிரகாஷுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அயன் படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜுக்கும், பாடலாசி‌ரியருக்கான விருது நா.முத்துக்குமாருக்கும் கிடைத்தது.

வாழ்நாள் சாதனையாளர் விருது மலையாள நடிகை கே.பி.ஏ.எல்.லலிதாவுக்கும், கன்னட நடிகர் அம்‌ரிஷுக்கும் வழங்கப்பட்டது.

விழாவில் நான்கு மொழி கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

Monday, August 9, 2010

> தில்லாலங்கடி U.K-யில்

ஜெயம் ரவியின் தில்லாலங்கடி இங்கு வெளியான அதேநாள் யுகே-யிலும் வெளியானது. இங்கு போலவே அங்கும் வரவேற்பு மிகக் குறைவு என்பதுதான் சோகம்.

சென்ற வாரம் இப்படம் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 25வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த வாரம் சற்றே முன்னேறி 22வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் வசூலில் எந்த முன்னேற்றமும் இல்லை.

சென்ற வார வசூல் 8,177 பவுண்ட்கள். இதுவரையான மொத்த வசூல் 35,543 பவுண்ட்கள். அதாவது நமது இந்திய மதிப்பில் ஏறக்குறைய 26.07 லட்சங்கள்.

மணிரத்னத்தின் ராவணன் ஒரு கோடிக்கு மேல் யுகே-யில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

> அ‌‌ஜீத் ரசிகர்கள் பதிலடி - கௌதமுக்கு

விஜய், அ‌‌ஜீத் போன்றவர்களை இயக்க வேண்டும் என்பது கௌதமின் விருப்பம். ஒருமுறை விஜய்யை சந்தித்து கதையும் கூறினார். பொறுமையாக கதையை கேட்ட விஜய் சில டிவிடி-களை கௌதமிடம் கொடுத்து, என்னுடைய இந்தப் படங்களையும் பாருங்க, இதில் உள்ள விஷயங்களையும் உங்க கதையில் சேர்த்தால் பிரமாதமாக இருக்கும் என்றிருக்கிறார்.

அப்படி அவர் கௌதமுக்கு கொடுத்தவை பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி மற்றும் சிவகாசி. நொந்துபோன கௌதம் இதனை பத்தி‌ரிகை பேட்டியொன்றில் குறிப்பிட, விஜய் சார்பாக பேரரசிடமிருந்து கண்டன அறிக்கை வந்தது.

கௌதம் ஒரு ஹாலிவுட் டிவிடி டைரக்டர், டிவிடி பார்த்து படமெடுப்பவர் என பேரரசு அதில் சாடியிருந்தார். இப்போது அ‌‌ஜீத்தின் முறை. அ‌‌ஜீத்துக்குப் பதில் அவரது ரசிகர்கள் சாடியிருக்கிறார்கள்.

அ‌‌ஜீத் படம் பற்றி பேட்டியளித்த கௌதம், கமல், சூர்யாவுக்காக வேண்டுமென்றால் காத்திருக்கலாம், தோளுக்கு மேல் தலை இல்லாதவர்களுக்காக காத்திருக்க முடியாது என வார்த்தைகளை கொஞ்சம் அதிகமாகவே வீசிவிட்டார்.

அமைதிப் புயல் அ‌‌ஜீத் இதற்கு ‌ரியாக்ட் பண்ணவில்லையென்றாலும் அவரது ரசிகர்கள் தங்களது இணையத்தில் கௌதமை சாடியுள்ளனர். வழக்கமான டிவிடி டைரக்டர் என்ற பட்டத்துடன் காரசாரமாக கௌதமை விமர்சித்துள்ளனர்.

அ‌‌ஜீத், கௌதம் கூட்டணி அமைவதற்கான குறைந்தபட்ச சாத்தியத்தையும் அ‌‌ஜீத் ரசிகர்கள் இதன் மூலம் உடைத்தெறிந்திருக்கிறார்கள்.
உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.