Monday, April 30, 2012

> திருந்தி திரும்பி வந்த இலியானா.

திருந்தி வந்த இலியானா என்றும் சொல்லலாம். கேடியில் அறிமுகமான பின் இலியானாவை தமிழ்‌த் திரையுலகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் தெலுங்குக்கு சென்றவர் அங்கு முன்னணி நடிகையானார். அதன் பிறகு தமிழ் சினிமாவின் அழைப்பை கண்டு கொள்ளவில்லை, உதாசீனம் செய்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழில் நடித்தப் படம் நண்பன்.

தெலுங்கில் தமன்னா, த்‌ரிஷா, தாப்ஸி, நயன்தாரா போன்றவர்கள் முன்னணி ஹீரோக்களுடன் அதிகமாக ஜோடி சேர்வதால் இலியானாவின் இடம் காலியாகி வருகிறது. இதனால் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு‌த் தூது அனுப்பி வருகிறார். முதல்கட்டமாக லிங்குசாமி இந்தியில் ‌ரீமேக் செய்யும் வேட்டையில் ஷாகித் கபூர் ஜோடியாக நடிக்கிறார்.

விரைவில் கார்த்தி, ‌ஜீவா என்று அவர் ஜோடிபோட வாய்ப்பு உள்ளது.

> விஸ்வரூபம் ஜெயா தொலைக்காட்சியில் ?

திமுக ஆட்சியில் இருக்கையில் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியும், அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயா தொலைக்காட்சியும் முக்கியமான படங்களின் உ‌ரிமையை கைப்பற்றும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வேலாயுதம் படத்தின் தொலைக்காட்சி உ‌ரிமையை வாங்கியது. மேலும் அப்படத்தின் சைலண்ட் பார்ட்னர்களில் ஜெயா தொலைக்காட்சியும் ஒன்று என கிசுகிசுக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸை போல ஜெயா தொலைக்காட்சி சார்பில் ஜெயா பிக்சர்ஸ் என்ற பெய‌ரில் தயா‌ரிப்பு நிறுவனம் தொடங்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் முதல் விநியோகம் கமலின் விஸ்வரூபம் எனவும் கதைகள் உலவுகின்றன.

கமலின் மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபம் படத்தின் புரமோ மே ஒன்று வெளியிடப்படுகிறது. திரையரங்குகளில் இதனை ரசிகர்கள் மே ஒன்று முதல் கண்டு களிக்கலாம்.

> பில்லா 2 வெளியாவதற்கு முன்பு சகுனி.

வில்லன் பிரச்சனையில் சிக்கித் தவித்த சகுனி 23 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக செய்தி வந்தபோதே சந்தேகம். என்னடா பூனைக்குட்டி திடீர்னு தலைகாட்டுதே.

அதற்கான பதில் இன்று கிடைத்திருக்கிறது.

பல மாதங்களாக அண்டர் புரொடக்சனில் இருக்கும் சகுனியை ஒருவழியாக தட்டி ஒட்டி ‌ரிலீஸுக்கு தயார்ப்படுத்தியிருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டை மே 11ல் வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். வில்லனாக வரும் சலீம் கௌஸின் நடிப்பு பிடிக்காமல் அவருக்குப் பதில் பிரகாஷ்ராஜை நடிக்க வைத்ததில் சகுனியின் பெயர் ரொம்பவே ‌ரிப்பேராகியது. அதே நினைவுகளுடன் ஆடியோவை வெளியிட்டால் போணியாகாதில்லையா. அதுதான் 23 கோடிக்கு வியாபாரமானதாக திடீர் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆக, மே 11 சகுனி ஆடியோ வெளியீடு. அப்படியே மாத இறுதியில் படத்தையும் வெளியிடுகிறார்கள். அதாவது ஜூனில் பில்லா 2 வெளியாவதற்கு முன்பு.

Sunday, April 29, 2012

> த்‌ரிஷா, அமலா பால் ஒரே படத்தில்.

இரண்டு ஹீரோயின்கள் படம்தான் த்‌ரிஷாவுக்கு கிடைக்கிறது. இதற்கு த்‌ரிஷாவை குறை சொல்வதில் அர்த்தமில்லை. தெலுங்கு ஹீரோக்கள் ஒரு ஹீரோயினுடன் திருப்தியடைவதில்லை. குறைந்தது இரண்டு வேண்டும்.

வெள்ளிக்கிழமை வெளியான தம்மு படத்தில் த்‌ரிஷா, கார்த்திகா என்று இரண்டு ஹீரோயின்கள். அடுத்து த்‌ரிஷா நடிக்கப் போகும் படத்திலும் நாமிருவர்தான்.

ரவி தேஜா நடிக்கும் பெய‌ரிடப்படாத படத்தில் நடிக்க த்‌ரிஷா கமிட்டாகியிருக்கிறார். இதில் அவருடன் அமலா பாலும் நடிக்கிறார் என்கின்றன ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள். தமிழில் சமரன், ‌ஜீவா ஜோடியாக ஒரு படம் என இருபடங்கள் மட்டுமே கைவசம் வைத்துள்ளார் த்‌ரிஷா என்பது முக்கியமானது.

> இலியானா இந்தி வேட்டையில்.

சொன்னது போலவே தனது வேட்டையை இந்தியில் ‌ரீமேக் செய்கிறார் லிங்குசாமி. புளித்துப் போன கமர்ஷியல் படமான இதனை இந்தியில் யார் ‌ரீமேக் செய்வார்கள் என்ற நமது வாக்கு இதனால் தவறாகியிருக்கிறது. ஷாகித் கபூர் நடிக்க யு டிவி படத்தை தயா‌ரிக்கிறது.

லிங்குசாமிக்கு இது முதல் இந்திப் படம். இவ‌ரின் ரன் இந்தியில் மறைந்த இயக்குனர் ‌ஜீவாவால் ‌ரீமேக் செய்யப்பட்டது. படம் ப்ளாப்.

இந்தி வேட்டையில் ஷாகித் கபூர் ஆர்யா வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஆல்மோஸ்ட் இலியானாவை ஓகே செய்திருக்கிறோம் என்கிறார் லிங்குசாமி. வசனம் எழுதும் பணி தற்போது நடந்து வருகிறது.

அனைத்தும் சுமூகமாக நடந்தால் ஜூன் மாதம் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராகயிருக்கிறார்கள்.

Saturday, April 28, 2012

> சைலண்டாக இருந்த விஸ்வரூபம் கமல் மே 1 முதல் களத்தில்

கமலின் காஸ்ட்லி படமான விஸ்வரூபம் கேன்ஸில் திரையிடப்படும் என்று சொல்லப்பட்டது. அதுவும் போட்டிப் பி‌ரிவில். ஆனால் அப்படி எந்த அறிகுறியும் தென்படவில்லை.

இந்நிலையில் மே 1ஆ‌ம் தேதி படத்தின் 30 வினாடி புரமோவை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளார்.

கமல் படங்கள் எப்போதும் சமுத்திரத்தில் போட்ட கல்லாக சைலண்டாக இருக்கும். ‌ரிலீஸ் தேதி நெருங்குகையில் தனது புத்திசாலித்தனமான விளம்பரங்கள் மூலம் - அது விளம்பரம் என்று தெ‌ரியாத வகையில் படத்துக்கு எதிர்பார்ப்பை உருவாக்குவார் கமல். விஸ்வரூபத்தைப் பொறுத்தவரை இதுவரை சைலண்டாக இருந்த கமல் மே 1 முதல் விளம்பர களத்தில் இறங்குகிறார்.

பில்லா 2, துப்பாக்கி, மாற்றான் என்று சகலப் படங்களையும் விரைவில் பின்னுக்கு தள்ளியும்விடுவார்.

> டேவிட் பில்லா தி பிகினிங் தெலுங்கில்.

பில்லா 2 ‌ரிலீஸை தென்னிந்தியாவே ஆர்வமாக எதிர்பார்க்கிறது. ஆமாம், இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது.

தெலுங்கில் டேவிட் பில்லா - தி பிகினிங் என்ற பெய‌ரில் பில்லா 2 வை வெளியிடுகின்றனர். அதேபோல் கன்னடத்திலும் படம் வெளியாகிறது. கேரளாவிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட உத்தேசித்துள்ளனர்.

இதில் கேரளா திரையரங்கு உ‌ரிமை, தொலைக்காட்சி உ‌ரிமை இன்னும் விற்பனையாகவில்லை. தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழக திரையரங்கு உ‌ரிமைகளில் மட்டும் 41 கோடிக்கு மேல் சபாதித்திருக்கிறது இப்படம். ‌ரிலீஸுக்கு முன்பு அ‌‌ஜீத் படம் ஒன்று இவ்வளவு பெ‌ரிய தொகையை கலெக்ட் செய்திருப்பது இதுவே முதல்முறை.

சக்‌ரி டோலட்டி இயக்கியிருக்கும் இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.

> சிவகார்த்திகேயன் மீண்டும் தனுஷுடன்.

3 படத்தில் தனுஷின் நண்பனாக வந்து கலக்கியிருந்தார் சிவகார்த்திகேயன். இந்த‌க் கூட்டணி தனுஷுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. தான் தயா‌ரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கியிருக்கிறார்.

தனுஷ் விரைவில் இரு படத்தை தயா‌ரிக்கிறார். வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில்தான் இயக்குனர். ரொமாண்டிக் காமெடியான இதில் சிவாகார்த்திகேயனை ஹீரோவாக்கியிருக்கிறார் தனுஷ். படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை.

விரைவில் அதிகாரபூர்வமாக இந்தப் படத்தை அறிவிக்கிறார் தனுஷ்.

Friday, April 27, 2012

> இந்த தீபாவளி சீசனில் தமன்னாவுக்குதான் அதிக விளம்பரங்கள்.

வெள்ளை வெளேர் என்று இருந்தால் நடிக்க‌த் தெ‌ரியாவிட்டாலும் பரவாயில்லை. வாய்ப்புகள் வாசல் தேடி வரும். தமன்னா சிறந்த உதாரணம்.

தமிழில் படம் இல்லையென்றாலும் முன்னணி நடிகை பட்டியலில் இருந்து தமன்னா இன்னும் விலகவில்லை. இதை நன்கு பு‌ரிந்து கொண்ட ஃபா‌ண்‌ட்டா குளிர்பான நிறுவனம் தனது பிராண்ட்டின் அம்பாசிடராக தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறது. மிரண்டா குடிங்க என்று அசின் கூறுவது போல் ஃபா‌ண்‌ட்டா குடியுங்க என தமன்னாவும் உங்களை கெஞ்சப் போகிறார்.

இந்த தீபாவளி சீசனில் தமன்னாவுக்குதான் அதிக விளம்பரங்கள் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். உண்மையா மேடம்?

> பில்லா 2 ஜுன் மாதம் வெளியாகிறது.

சோனி மியூஸிக் பில்லா 2 வின் இசை உ‌ரிமையை வாங்கியுள்ளது. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோவுக்கு மட்டும் ஏறக்குறைய 2 கோடி தந்திருக்கிறதாம் சோனி நிறுவனம்.

இன்று முதல் பேஸ்புக், ட்விட்டர், யு டியூப் போன்ற இணையதள நெட்வொர்க் வழியாக பில்லா 2 படத்தின் பாடல்களை பிரமோட் செய்ய தீர்மானித்திருக்கிறது சோனி. மே ஒன்றாம் தேதி ஆடியோ வெளியீடு. சினிமா விழாக்கள் எதிலும் அ‌ஜித் கலந்து கொள்வதில்லை என்பதால் அவ‌ரின் மற்றப் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவைப் போல் உளிமையாக நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.

ஜுன் மாதம் படம் வெளியாகிறது.

> Ok Ok தொடர்ந்து முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்

5.மாட்டுத்தாவணி
பவித்ரனின் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 1.1 லட்சம். மிக மோசமான வசூல். படம் அட்டர் ப்ளாப் என்கிறது வசூல் நிலவரம்.

4.மை
மாட்டுத்தாவணிக்கு மை பரவாயில்லை. சென்ற வாரம் வெளியான மை முதல் மூன்று தினங்களில் 3.6 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

3.ஊலலலா
ஜோதி கிருஷ்ணா இயக்கி நடித்திருக்கும் இந்தப் படமும் சென்ற வாரமே வெளியானது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 5.06 லட்சங்கள். படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இதுவும் சுமாரான வசூலே.

2.3
இரண்டாவது இடத்தில் ஐஸ்வர்யாவின் மூன்று படம். மூன்று வாரங்கள் தாண்டிய பிறகும் மோசமில்லாத வசூல். சென்ற வார இறுதியில் இப்படம் 15.7 லட்சங்களை வசூல் செய்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் மொத்த வசூல் 5.3 கோடி.

1.ஒரு கல் ஒரு கண்ணாடி
தொடர்ந்து முதலிடத்தில் ராஜேஷின் படம். இரண்டாவது வார இறுதியில் இப்படம் 1.99 கோடிகள் வசூலித்துள்ளது. முதல் வார இறுதி வசூலைவிட இது அதிகம். முதல் பத்து தினங்களிலேயே இப்படம் சென்னையில் 4.21 கோடிகளை வசூலித்து அ‌‌ஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் பட வசூலை பின்னுக்கு தள்ளியிருக்கிறது.

Thursday, April 26, 2012

> ஹன்சிகா ஹ‌ரி படத்தில்.

பரத், சிம்பு, தனுஷ் போன்ற ஐம்பது கிலோவுக்கு குறைவான ஹீரோக்கள் தனது ஒ‌ன்றரை டன் அடி படங்களுக்கு தோதாக மாட்டார்கள் என்பது ஹ‌ரிக்கு லேட்டாக பு‌ரிந்திருக்கிறது. இவர்களைவிட்டால் அவருக்கு சௌக‌ரியமான நடிகர் சூர்யாதான்.

ஆறு, வேல், சிங்கம் படங்கள் சி சென்டர் வரை ரசிகர்களைப் பெற்றுத் தந்தாலும் ஹ‌ரி படம் என்றால் ஸ்டேண்டர்ட் கொஞ்சம் குறைவு என்ற எண்ணம் சூர்யாவுக்கு. இதனால் சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஹ‌ரி பேசியபோதெல்லாம் மௌனம் காத்தார் சூர்யா. கால்ஷீட்டும் தரவில்லை.

ஆனால் ஹ‌ரியும் சாமானியப்பட்டவ‌ரில்லை. சப்பல் தேய நடந்து சூர்யாவை சம்மதிக்க வைத்துள்ளார். சூர்யாவின் கால்ஷீட் கிடைத்ததும் ஹ‌ரி செய்த முதல் வேலை ஹன்சிகாவின் கால்ஷீட்டை வாங்கியது. கவர்ச்சியும், காமெடியும் இல்லாத ஹ‌ரி.

> Ok Ok அதிர்ஷ்டம் யாருக்கு என்பது உதயநிதி கையில்தான் இருக்கிறது.

ஒரே படத்தில் உலக ஸ்டார் ஆகியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவ‌ரின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ‌ரீமேக் உ‌ரிமைக்கு பாலிவுட்டில் டிமாண்ட் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு இடத்தைப் பார்த்து அதில் வீடு கட்டி குடி போவதைவிட கட்டிய வீட்டில் கப்பென்று படுத்துக் கொள்ளும் சத்யரா‌ஜின் பாலிசிக்கு திரும்பியிருக்கிறது பாலிவுட். ஏதாவது படம் நன்றாக இருக்கிறது என்றால் சட்டென்று ‌ரீமேக் ரைட்ஸ் வாங்கி படமெடுத்துவிடுகிறார்கள். திருட்டுத்தனமாக காப்பியடிப்பதற்கு இது எவ்வளவோ மேல்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ‌ரிசல்டைப் பார்த்து ஆச்ச‌ரியப்பட்ட மும்பை பார்ட்டிகள் படத்தின் ‌ரீமேக் ரைட்ஸ் கேட்டு முற்றுகையிட்டிருக்கிறார்கள். யாருக்கு அதிர்ஷ்டம் என்பது இப்போதைக்கு உதயநிதி கையில்தான் இருக்கிறது.

Wednesday, April 25, 2012

> ஆஸ்கர் ஃபிலிம்ஸ் வாங்கிய பில்லா 2.

ஜூன் மாதம் வெளியாகும் பில்லா 2 படத்தை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் விநியோகஸ்தர்கள். மங்காத்தா கலெக்சனில் அள்ளியது போல் பில்லா 2 வும் கலக்கும் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் பலவான்களால்தானே எண்ணத்தை செயல்படுத்த முடியும்.

பில்லா 2 வின் தமிழக திரையரங்கு உ‌ரிமையை ஏறக்குறைய 26.5 கோடிக்கு வாங்கியிருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இதனை பில்லா 2 வின் தயா‌ரிப்பாளரே தெ‌ரிவித்துள்ளார். அ‌ஜீத் படங்களைப் பொறுத்தவரை இதுதான் ஆகச் சிறந்த சேல்ஸ்.

கேரளா தவிர மற்ற அனைத்து திரையரங்கு உ‌ரிமைகளும் விற்கப்பட்டு விட்டன. இந்தப் படத்தில் அ‌‌ஜீத் இலங்கை அகதியாக நடிப்பதாக எழுந்த வதந்தி காரணமாக வெளிநாடுவாழ் புலம்பெயர் ஈழத் தமிழர்களிடையே பெ‌ரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

> கவர்ச்சி மழையில் ஆண்ட்ரியா.

ஸ்டில்லை பார்த்தால் அடைமழை போலதான் இருக்கிறது. படத்தில் தூறலாக கடந்து போகவும் வாய்ப்புள்ளது.

ஆண்ட்‌ரியா இதுவரை கவர்ச்சியாக நடித்ததில்லை. அப்படி நடிப்பதற்கான ஸ்கோப் அவ‌ரிடம் இல்லை என்று சில அனாட்டமி ஸ்பெஷலிஸ்ட்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அவர்களின் கூற்றை பொய்யாக்கியிருக்கிறார் ஆண்ட்‌ரியா திருப்பங்கள் படத்தில்.

இந்தப் படத்தில் விசால மனதுடன் கவர்ச்சியாக நடித்துள்ளார் ஆண்ட்‌ரியா. இவ‌ரின் சேலை ஸ்டில்லில் இணையதள இளைஞர்கள் சிக்குண்டு கிடக்கிறார்கள். லேட்டாக இந்த விபரம் தெ‌ரிந்த ஆண்ட்‌ரியா இயக்குனருக்கு போன் அடிக்க தற்காலிகமாக ஸ்டில்களை வாபஸ் பெற்றிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் இந்தக் காட்சிகள் இருக்கும்தானே?

> பெயரை சுருக்கியிருக்கிய ஹன்‌சிகா.

இப்பேதெல்லாம் இளைஞர்கள் ஹச் என்று தும்முவதில்லை. ஹன்சிகா என்றுதான் தும்முகிறார்கள். அவர்கள் கனவை ஆக்கிரமித்திருப்பவரும் ஹன்சிகாதான். தமிழ் ரசிகனுக்குப் பிடித்த கொப்பும் குலையுமான அழகியாக இருக்கிறார் ஹன்சிகா.

இன்றைய தேதியில் இவருக்குதான் தமிழ் சினிமாவில் அதிக ஆஃபர்கள். ஒருநாளைக்கு நாற்பெத்தெட்டு மணி நேரம் இருந்தால்தான் சமாளிக்க முடியும் என்ற அளவில் இருக்கிறது நிலைமை. இதை அறுபத்தெட்டாக்கும் ஆசையில் தனது பெயரை நியூமரால‌ஜிபடி சுருக்கியிருக்கிறார் ஹன்‌சிகா.

இதுவரை ஹன்சிகா மோத்வானியாக வலம் வந்தவனர். மோத்வானியை கட் செய்து ஹன்சிகாவாக ட்‌ரிம்மாகியிருக்கிறார்.

பெயரை கட் பண்ணுங்க, எடையில் மட்டும் கை வைக்காதீங்க.

Monday, April 23, 2012

> ஒரு காமெடிப் படத்தில் அரைகுறையாக நடித்ததற்கே அரசியலா ?

ஒரு படத்தில் நடித்ததும் அவர்களிடம் அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி கேட்கும் நிருபர்களுக்கு ஆயுள் தண்டனை என்று புதிய சட்டம் இயற்றினால் நாட்டில் பாதி குழப்பங்கள் தீரும். இதுவரை ஒரு பொதுக்கூட்டத்தில்கூட மேடையேறாத உதயநிதியிடம், அரசியலில் குதிப்பீர்களா என்ற ஆபத்தான கேள்வி கேட்கப்பட்டது. அதற்குமுன் அவ‌ரின் படத்தைப் பற்றி.

ஒரு கல் ஒரு கண்ணாடியை பிரமோட் செய்ய அவசியமில்லை. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு திரையரங்குக்கு வருகிறார்கள். இந்நிலையில் கோயம்புத்தூர் தென்காசி என்று டூர் கிளம்பியது ஓகே ஓகே டீம். வையாபு‌ரி வந்தாலே அடித்துப் பிடிக்கும் ரசிகர்கள் தளபதியின் மகனை கண்டதும் தறிகெட்டதில் ஆச்ச‌ரியமில்லை. இதைப் பார்த்ததும் 2051-ல் முதல்வராகும் ஆசை உதயநிதிக்கு வந்ததா தெ‌ரியவில்லை. அரசியலில் குதிப்பீர்களா என்ற அசட்டுக் கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்தார்.

ஐந்து வருடங்களுக்கு முன் நடிப்பீர்களா என்று கேட்டிருந்தால் தெ‌ரியாது என்றிருப்பேன். அதுபோல் ஐந்து வருடம் கழித்து அரசியலில் குதிப்பேனா என்பது தெ‌ரியாது. காலம்தான் அதனை முடிவு செய்யும் என்றார். கையை உயர்த்தி வானத்தை காட்டியிருந்தால் அப்படியே ர‌ஜினிதான். அரசியல் என்று வரும் போது இனி உதயநிதியின் இம்சையையும் நாம் தாங்க வேண்டி வரும்.

ஒரு காமெடிப் படத்தில் அரைகுறையாக நடித்ததற்கே அரசியல் என்றால்... யார்யா அந்தக் கேள்வியை கேட்டது?

Sunday, April 22, 2012

> காதலரை பி‌ரிந்த சோகத்தில் பிபாஷா பாசு.

ஜான் ஆபிரஹாம், விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் இப்போது ராணா டகுபதி. பிபாஷாவின் குட்டி வாழ்க்கையில் அவர் காதலித்து கைவிட்ட அல்லது விடப்பட்ட காதலர்கள் இவர்கள். இதில் மூன்றாவதாக வரும் ராணாவின் பி‌ரிவுதான் இப்போது பாலிவுட்டின் ஹாட் டாபிக்.

ராணா ராம்கோபால் வர்மாவின் படத்தில் நடிக்கிறார். சர்வதேசப் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கொல்லாம் காரணம் அவர் பிபாஷாவுடன் ஏற்படுத்திக் கொண்ட நட்புதான். அவர் மூலமாகவே பாலிவுட்டின் கவனம் ராணா மீது திரும்பியது என்கின்றன மும்பை மீடியாக்கள். முன்பு பிபாஷாவுடன் அடிக்கடி தென்பட்ட ராணா இப்போது பிபஷாவை கண்டு கொள்வதில்லை. இதற்கு காரணம் த்‌ரிஷாவுடன் அவருக்கு ஏற்பட்ட புதிய உறவுதான் என்று காரணமும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது குறித்து பிபாஷாவிடம் கேட்டதற்கு சோகத்தில் பிழிந்த பதில் கிடைத்திருக்கிறது. நான் இப்போது தனியாகதான் இருக்கிறேன். யாரையும் காதலிக்கவில்லை. எனக்குப் பிடித்தவர்களுடன் வெளியே போகிறேன், டின்னர் சாப்பிடுகிறேன் என்று சுயம்வரத்துக்கு மாப்பிள்ளை கிடைக்காத இளவரசி குரலில் பதிலளித்துள்ளார்.

ராணா போனால் இன்னொரு ஆணா இல்லை... டோண்ட் வொர்‌ரி பிபாஷா.

Saturday, April 21, 2012

> ஆதிபகவன் கடைசி ஷெட்யூல் கோவாவில்.

இன்று முதல் ஆதிபகவனின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்குகிறது. அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை நடக்கும் இது கடைசி ஷெட்யூல் என்பது படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு முக்கியமாக ஹீரோ ஜெயம் ரவிக்கு கற்கண்டு செய்தி.

ஆதிபகவனை அமீர் தொடங்கி இரண்டு வருடங்களாகிறது. இ‌ன்‌‌ச் இன்‌ச்சாக நகர்ந்திருந்தால்கூட எப்போதோ படத்தை முடித்துவிடலாம். அமீ‌ரின் பெப்சி அக்கப்போரால் படம் இன்று வரை முடியவில்லை.

இந்நிலையில் படத்தின் கடைசி ஷெட்யூலை 19ஆ‌ம் தே‌தி கோவாவில் தொடங்கியிருக்கிறார். மே 2 வரை ஷூட்டிங், 15 வரை பேட்ச் வொர்க் அதன் பிறகு போஸ்ட் புரொடக்சன் என முடிவு செய்திருக்கிறார்கள். இடையில் அமீர் எந்த அறிக்கைப் போ‌ரிலும் சிக்கமாலிருக்க வேண்டும்.

> சிம்புதேவனுக்குப் பதில் வெற்றிமாறன் - தனுஷ்

சினிமாவில் எப்போது எது நடக்கும் எந்த ஹீரோ வில்லனாக மாறுவார் என்பதெல்லாம் தெ‌ரியாது. இந்த சடுகுடு ஆட்டத்தில் கி‌ழிந்த இரு படங்களைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

சிம்புதேவனின் இயக்கத்தில் தனுஷ் மா‌ரிசன் என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்தார்கள். இந்திப் படத்தில் திடீரென கமிட்டானதால் மா‌ரிசனை டீலில்விட்டார் தனுஷ். பொறுமையின் எல்லை கடந்த சிம்புதேவன் வடிவேலு நடிக்கும் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தை இயக்க தீர்மானித்திருக்கிறார். விரைவில் பட அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள்.

இதேவேலையை வெற்றிமாறன் விஷயத்தில் காட்டி வந்தார் சிம்பு. எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டிய வடசென்னை சிம்புவின் தாமதத்தால் தள்ளிக் கொண்டே போனது. சிம்புதேவனைப் போல் சினம்கொண்ட வெற்றிமாறன் தனுஷுடன் கைகோர்த்திருக்கிறார். இவர்கள் இணையும் படத்தை கிளவுட் நைன் தயா‌ரிக்கிறது.

சினிமாவில் எதுவும் நடக்கும் சி‌த்தா‌ந்தம் தெ‌ரிந்தவர்கள் என்பதால் இயக்குனர்கள் இருவரும் படங்களை ட்ராப் செய்யவில்லை, சில காரணங்களால் தள்ளி வைத்திருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

Friday, April 20, 2012

> இன்று ஏழு ( 7 ) படங்கள் வெளியாகின்றன.

இந்த வருடம் வெளியானப் படங்களில் மிகச் சொற்பப் படங்களே லாபம் கண்டன. மினிமம் பட்ஜெட்டில் தயாரானப் படங்கள் அனேகமாக எதுவுமே திருப்திகரமான வசூலைத் தரவில்லை. ச‌ரியாகச் சொன்னால் அனைத்தும் அட்டர் ப்ளாப்.

இந்நிலையில் இன்று ஏழு படங்கள் வெளியாகின்றன. இந்து, சூ‌ரியன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி காணாமல் போன பவித்ரனின் மாட்டுத்தாவணி நாளை வெளியாகிறது. பல வருடங்கள் தயா‌ரிப்பில் இருந்த படம் இது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பின்னணியில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

தக்காளி சீனிவாசனின் திகில் படம் அடுத்தது இன்று திரைக்கு வருகிறது. திகில் படமான அம்புலி நல்ல வரவேற்பைப் பெற்றதால் அடுத்தது படமும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாசர், ஸ்ரீமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சரத்குமார் மலையாளத்தில் போலீஸ் அதிகா‌ரியாக நடித்தப் படம் நரசிம்மன் ஐபிஎஸ் என்ற சரத்குமா‌ரின் கேரக்டர் பெய‌ரில் வெளியாகிறது. மலையாளத்தில் பரவலான கவனிப்பை பெற்ற படமிது.

ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி முதல் முதலாக நடித்திருக்கும் படம் ஊலலலா. வியாபார சிக்கல் காரணமாக ஒரு வருடத்திற்கு மேல் பெட்டியில் இருந்த இந்தப் படமும் நாளை ‌ரிலீஸாகிறது. ரொமாண்டிக் காமெடியான இந்தப் படத்தை வைத்தே ஜோதி கிருஷ்ணா தனது நடிப்பு வாழ்க்கையை தீர்மானிக்க உள்ளார்.

இவை தவிர பத்மாலயா சினி விஷன்ஸின் மை, விவகாரம், ஹாலிவுட் டப்பிங்கான பேட்டில்ஷிப் ஆகிய படங்களும் இன்று வெளியாகின்றன. இதில் எதிர்பார்ப்புக்கு‌ரிய படங்கள் எதுவுமில்லை என்பது ஒருவகையில் ஏமாற்றம்தான்.
மாட்டுத்தாவணி, அடுத்தது, ஊலலலா

> ஷங்கர் வடிவேலுவை ஹீரோவாக்கியிருக்கிறார்.

அரசியல் பிரச்சனையில் அல்லாடிய வடிவேலுவை வைத்து படம் செய்ய அனைவரும் தயங்கிய நிலையில் துணிச்சலாக மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக்குகிறார் இயக்குனர் ஷங்கர். ஆம், இவரின் எஸ் பிக்சர்ஸ் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசியின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறது.

இம்சை அரசனின் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். படத்தின் கதை, ஸ்கிரிப்ட் என அனைத்தும் பக்காவாக தயாராகியுள்ளது. இன்னும் சில தினங்களில் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 18 கோடிகள் என்பது உபரி தகவல்.

அதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு நடத்திய பிரச்சாரம் அவருக்கு படங்கள் இல்லாமல் செய்தது. அவரை வைத்து படம் செய்யக் கூடாது என்ற ரகசிய உத்தரவு திரையுலகில் போடப்பட்டது. அதை மீறி அவரை ஒப்பந்தம் செய்ய யாருக்கும் துணிச்சல் வரவில்லை. இந்நிலையில்தான் தயாரிப்பிலிருந்து தற்காலிகமாக விலகிவிட்டேன் என்று தெரிவித்த ஷங்கர் வடிவேலுவை ஹீரோவாக்கியிருக்கிறார். அதுவும் அவர் ஏற்கனவே தயாரித்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில்.

இந்தப்படம் குறித்த செய்தி இன்னும் பலருக்கு தெரியாது. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது திரையுலகில் இது புயலைக் கிளப்ப வாய்ப்புள்ளது.

> ஸ்கி‌ரிப்ட் பிடிக்காததால்தான் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை ரிச்சா

மயக்கம் என்ன படத்தில் நடித்த ‌ரிச்சாவின் கதை ஞானத்தை பார்த்து புல்ல‌ரித்துப் போயிரு‌க்கிறது திரையுலகம்.

ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை ‌ரிச்சா. பொழுதுபோகாத நிருபர் இது குறித்து கேட்டதற்கு ஸ்கி‌ரிப்ட் பிடிக்காததால்தான் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை, இதுவரை எட்டு கதைகள் கேட்டேன் ஒன்றுமே பிடிக்கவில்லை என்றிருக்கிறார். அத்துடன் நிறுத்தியிருக்கலாம். வங்க மொழியில் ஒரு படம் நடிப்பதாக‌த் தெ‌ரிவித்திருக்கிறார். அந்த வங்க மொழிப் படம் எது தெ‌ரியுமா?

தமிழ் சிறுத்தையின் ‌ரீமேக்.

நமக்கும் புல்ல‌ரிக்குதே.

> விஷால் நடத்தும் க‌ஜினி யுத்தம் இந்தமுறை நிச்சயம் ஜெயிக்கும்.

ரசிகர்களை சி‌ரிக்க வைக்க முடிந்தால் மட்டுமே ஒரு நடிகன் முழுமையடைகிறான். விஷாலுக்கு இந்த விஷயம் தெ‌ரிந்திருக்கும் போல. மலைக்கோட்டை, தீராத விளையாட்டுப்பிள்ளை படங்களில் காமெடி செய்ய முயற்சித்தார். ஆனால் கால் கிணறே தாண்ட முடிந்தது அவரால்.

அதற்காக அவர் சோர்ந்து போன மாதி‌ரி தெ‌ரியவில்லை. சமரன் என்ற ஆக்சன் த்‌ரில்லருக்குப் பிறகு அவர் மீண்டுமொரு ரொமாண்டிக் த்‌ரில்ல‌ரில் நடிக்கிறார்.

நடிப்பு நமக்கு ச‌ரிவராது என்பது பு‌ரிந்து மீண்டும் இயக்கத்துக்கு திரும்பியிருக்கும் சுந்தர் சி. கலகலப்பு படத்துக்குப் பிறகு விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். கார்த்திகா ஹீரோயின். சுந்தர் சி-யின் படங்கள் என்றால் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படமும் விதிவிலக்கல்ல. காதல் அளவுக்கு காமெடிக்கும் முக்கியத்துவம் உள்ள ஸ்கி‌ரிப்ட்.

காமெடியில் ஜெயி‌க்க விஷால் நடத்தும் இந்த க‌ஜினி யுத்தம் இந்தமுறை நிச்சயம் ஜெயிக்கும். தோரோட்டுவது சுந்தர் சி. அல்லவா.

Thursday, April 19, 2012

> ச‌ரியான ஸ்கி‌ரிப்ட் அமைந்ததும் மீண்டும் இணைவோம் பிரபுதேவா.

ஐபிஎல் தொடக்க விழாவில் ஆர்ப்பாட்டமாக பிரபுதேவா மேடையில் ஆட, பேக்ஸ்டே‌ஜில் புதிய படத்துக்கான வாய்மொழி ஒப்பந்தம் சத்தமில்லாமல் அரங்கேறியது.

இந்த விழாவுக்கு தனது குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார் பிரபுதேவா. சல்மான்கானின் ரசிகர்களான அவர்களுக்கு அவரை சந்தித்ததில் அளவற்ற மகிழ்ச்சி. அத்துடன் அடுத்தப் படம் குறித்தும் பேசியிருக்கிறார்கள். சல்மான்கானின் அடுத்தடுத்த மாஸ் ஹிட்களுக்கு அடித்தளம் இட்ட படம் பிரபுதேவா இயக்கிய வான்டட். தற்போது அக்சய்குமார் நடிக்கும் ரவுடி ரத்தோர் படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.

ஐபிஎல் விழாவில் சந்தித்துக் கொண்ட போது மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து இருவரும் பேசியிருக்கிறார்கள். இதுபற்றி பேட்டியளித்த பிரபுதேவா, சல்மான்கானுடன் இணைந்து மீண்டும் கண்டிப்பாக படம் செய்வேன். ஆனால் அடுத்தப் படமாக அது இருக்காது. ச‌ரியான ஸ்கி‌ரிப்ட் அமைந்ததும் மீண்டும் இணைவோம் என்று தெ‌ரிவித்திருக்கிறார்.

> விஜய் தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

விஜய், கௌதம் இணையும் யோஹன் அத்தியாயம் ஒன்று ட்ராப்பாகிறது என்றொரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதனை மறுக்கும்விதத்தில் பேசியிருக்கிறார் கௌதம் வாசுதேவ மேனன்.

நீதானே என் பொன்வசந்தம் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. துப்பாக்கியை முடித்து விஜய் ஃப்‌‌ரீயானால் உடனே யோஹன் படப்பிடிப்புக்கு கிளம்ப வேண்டியதுதான். படத்தின் வெற்றியைப் பொறுத்து ஜேம்ஸ்பாண்ட் சீ‌ரிஸ் போல யோஹனின் அடுத்தடுத்த சீ‌ரிஸுகளை எடுக்கலாம் என்று தெ‌ரிவித்துள்ளார்.

கௌதமின் இந்தப் பேச்சு யோஹன் ட்ராப்பாகவில்லை என்பதையும், கௌதம், விஜய்யின் அடுத்தப் படம் யோஹன் என்பதையும் காட்டுகிறது. ஆனால் இதுவரை விஜய் தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்பது முக்கியமானது.

> அஞ்சலியின் கவர்ச்சி கலகலப்பாக மாறிய கஃபே.

சுந்தர் சி. தனது மசாலா கஃபே படத்தின் பெயரை மாற்றப் போவதாக சொல்லியிருந்தார். கடைகோடி ரசிகனுக்கும் தெ‌ரியக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.

அஞ்சலி, ஓவியா, ‌விம‌ல், சிவா நடித்திருக்கும் இந்தப் படம் ஒரு ரொமாண்டிக் காமெடி. சந்தானம் மூன்றாவது ஹீரோவாக படம் நெடுக பட்டைய கிளப்பியிருக்கிறார். தியேட்டருக்கு வந்தால் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது.

இதன் காரணமாக மசாலா கஃபே என்ற பெயரை கலகலப்பு என்று மாற்றியிருக்கிறார்கள். கைகலப்பு அல்ல கலகலப்பு.

இன்னும் சில தினங்களில் படத்தின் ஆடியோவை வெளியிட்டு மாணவர்களின் ப‌ரிட்சை முடிந்ததும் படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.

Wednesday, April 18, 2012

> மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் சிவாஜி M.G.R

கர்ணன் போட்டப் போடில் கதிகலங்கிக் கிடக்கிறது திரையுலகம். படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸுக்கு இதுவரை லாபம் நான்கரை கோடிக்கும் மேல். செட்டிலாயிட்டோம்டா என்று கூத்தாடுகிறார் படத்தை வெளியிட்டவர்.

இந்த குபேர வசூல் காரணமாக சிவா‌ஜி, எம்‌ஜிஆ‌ரின் படங்கள் அடுத்தடுத்து டி‌ஜிட்டலில் வெளிவருகின்றன. முதல்கட்டமாக இருவ‌ரின் தலா இரு படங்கள் டி‌ஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறுகின்றன. சிவா‌ஜியின் திருவிளையாடல், சரஸ்வதி சபதம். எம்‌ஜிஆ‌ரின் அரசகட்டளை, படகோட்டி. ஆயிரத்தில் ஒருவன் சில காரணங்களால் டி‌ஜிட்டலுக்கு மாறுவது தாமதமாகிறது.

கர்ணன் வசூலை எப்படியும் முறியடிக்க வேண்டும் என்று கங்கணம்கட்டி தி‌ரிகிறார்கள் எம்‌ஜிஆர் பக்தர்கள். அரசகட்டளையையும், படகோட்டியையும் ஆளுக்கு நூறுமுறை பார்த்தாலும் ஆச்ச‌ரியமில்லை. பழைய படங்கள் வைத்திருப்பவர்களின் பாக்கெட் பண மழையால் நிறையப் போகிறது.

> யோஹன், விஜய், கௌதம் ட்ராப்பாகுமா ?

இதுவரை முணுமுணுத்துக் கொண்டிருந்தவர்கள் உரக்கவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கேற்ப விஜய், கௌதம் இருவ‌ரின் அடுத்தப் புராஜெக்ட்கள் எது என்பதில் குழப்பம் நிலவுகிறது.

துப்பாக்கிக்குப் பிறகு விஜய் கௌதமின் யோஹன் அத்தியாயம் ஒன்றில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்திற்குப் பிறகு யோஹன் தொடங்கும் என்றார் கௌதம். ஆனால் துப்பாக்கி இன்னும் முடியவில்லை. கௌதமின் நீதானே என் பொன்வசந்தவமும் அண்டர் புரொடக்சனில்.

தற்போது தாண்டவம் படத்தை இயக்கி வரும் விஜய் அடுத்து விஜய் படத்தை இயக்கப் போவதாக‌த் தெ‌ரிவித்துள்ளார். அதேபோல் கௌதம் தனுஷை வைத்து படம் இயக்கயிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. அப்படியானால் யோஹன்?

அந்த புராஜெக்டையே ட்ராப் செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. இந்த வதந்தி உண்மையாக இருக்கக் கூடாது என்பதே அனைவ‌ரின் பிரார்த்தனை.

> இன்று கோச்சடையான் நிலை என்ன ?

கோச்சடையான் என்ன நிலையில் இருக்கிறது என்பதை மணிரத்னம் படம் போல் துப்பறிய அவசியமில்லை. படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ஒவ்வொரு நாள் விசேஷங்களையும் இணையத்தில் ஏற்றிவிடுகிறார். நமக்கு வேலை எளிது.

கே.எஸ்.ரவிக்குமா‌ரின் மேற்பார்வையில் நடக்கும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் லண்டனில் நடந்தது. சரத்குமார், ர‌ஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டாவது ஷெட்யூல் கேரளாவில். கே.எஸ்.ரவிக்குமா‌ரின் மகள் திருமணம் முடிந்த பிறகு, அதாவது மே 3ஆம் தேதிக்குப் பிறகு இரண்டாவது ஷெட்யூல் ஆரம்பிக்கும் என்றார்கள். ஆனால் அதற்கு முன்பே அதாவது இன்றே இரண்டாவது ஷெட்யூலை‌த் தொடங்கியிருக்கிறார் சௌந்தர்யா.

கேரளாவில் நடக்கும் படப்பிடிப்பில் ர‌ஜினியுடன் சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, April 16, 2012

> நயன்தாரா நட்சத்திர பேட்டி - காதல் பி‌ரிவு சொந்த விஷயம்.

எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்கிறவர் என்ற பெயர் த்‌ரிஷாவுக்கு உண்டு. இந்தப் பெயரை அவ‌ரிடமிருந்து தட்டிச் செல்வார் போலிருக்கிறது நயன்தாரா. காதல், பி‌ரிவு என்ற சென்சிடிவ் விஷயத்திலும் சென்டிமெண்டாக மூக்கை சிந்தாமல் சிந்தித்து வார்த்தைகளை டெலிவ‌ரி செய்கிறார். அவர் சொல்லும் விளக்கத்திலிருந்து பிரபுதேவாவுக்கும் இவருக்கும் இடையில் என்ன நடந்தது என்றே யூகிக்க முடியாமல் திணறுகிறது நிருபர்கள் வட்டாரம். உங்களால் ஏதாவது கெஸ் செய்ய முடிகிறதா பாருங்கள்.

பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததற்கு என்ன காரணம்?

என்னைப் பொறுத்தவரை காதலுக்காக எதையும் செய்ய‌த் தயாராக இருந்தேன். பல விஷயங்களை விட்டுக் கொடுத்தேன். ஆனாலும் திருமணம் வரை வந்த எங்கள் காதல் முறிந்துவிட்டது. எங்கள் விஷயத்தில் மட்டுமல்ல, எத்தனையோ பேர் விஷயத்தில் காதல் அல்லது திருமணம் முறிவது நடந்து கொண்டேதான் இருக்கிறது.

பரஸ்பர பு‌ரிதல் இன்மைதான் பி‌ரிவுக்கு காரணமா?

காதலிலும், திருமணத்திலும் ஒருவரையொருவர் பு‌ரிந்து கொள்ளாமல் இருப்பது இருக்கதான் செய்யும். அதனால் பிரச்சனைகளும் ஏற்படும். இது ஒரு கட்டுக்குள் இருந்தால் நல்லது. எல்லை தாண்டும் போது காதலானாலும் ச‌ரி, திருமணமானாலும் ச‌ரி முறியதான் செய்யும் என்னுடைய விஷயத்திலும் அதுதான் நடந்தது.

பிரிவுக்கான முக்கிய காரணம் எது?

சில விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை அல்லது தெ‌ரியவில்லைன்னு சொல்லலாம். உலகில் எதுவும் நிலையில்லை. மக்கள் முதல் செயல்பாடுகள் வரை எல்லாம் மாறுகின்றன. அப்படி ஒரு மாற்றம்தான் என்னை பி‌ரியச் செய்தது.

அந்த மாற்றம் என்ன?

என்னுடைய பி‌ரிவுக்கு பல காரணங்கள் இருக்கிறது. அது என் சொந்த விஷயம். அது பற்றி பேச நான் விரும்பவில்லை. என்னுடைய பர்சனல் விஷயத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

இப்படி நடக்கும் என்று நினைத்தீர்களா?

அவருடனான காதல் இப்படி பாதியில் முறிந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது. காதாலானாலும் ச‌ரி, திருமணமானாலும் பு‌ரிந்து கொண்டு விட்டுக் கொடுத்தால் மட்டுமே நிலைத்து நிற்கும்.
இப்போது தனியாக உணர்கிறீர்களா?

மூன்றரை வருடங்கள் உடனிருந்தவர் பி‌ரியும் போது அப்படி ஒரு உணர்வு இல்லை என்று பொய் சொல்ல முடியாது. அதிலிருந்து நான் மீண்டு வர சில காலம் ஆகலாம்.

காதலைப் பற்றிய உங்கள் எண்ணம் இந்தப் பி‌ரிவுக்குப் பிறகு மாறிவிட்டதா?

இல்லை. காதல் அதனளவில் எப்போதும் உண்மையாகவே இருக்கிறது. காதலுக்காக எதையும் செய்ய நான் இப்போதும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் அந்தக் காதல் எதிர்தரப்பிடமும் இருக்க வேண்டும்.

பச்சை குத்திக் கொண்ட பிரபுதேவா பெயரை அழித்துவிட்டீர்களா?

அது பற்றியெல்லாம் நான் சிந்திக்கவேயில்லை. இதோ அந்தப் பச்சை அப்படியேதான் இருக்கிறது.

> அமலா பால் நட்சத்திர பேட்டி - இப்போது தேவைப்படுது கிளாமர்.

செப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமி‌ழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது அசாதாரணம். அமலா பாலின் அலட்டலும் அப்படியே என்பது கவலைதரும் சமாச்சாரம். பலரையிம் போல இவரது சினிமா பிரவேசமும் மாடலிங் வழியாகவே அமைந்தது.

என்னுடைய ஃப்‌‌ரி டிகி‌ரியை முடித்துவிட்டு மாடலிங் செய்து கொண்டிருந்த போது என்னுடைய போட்டோவை இயக்குனர் லால் ஜோஸ் பார்த்திருக்கிறார். அவருக்கை என்னை பிடித்துவிட்டது. அவருடைய நீலத்தாமராவில் நடிக்க வைத்தார். அதுதான் என்னுடைய முதல் படம். அப்புறம் தமிழுக்கு வந்தேன். அது எல்லோருக்கும் தெ‌ரிந்ததுதானே.

அமலா பால் நீலத்தாமரா படத்திலிருந்து அப்படியே மைனாவுக்கு தாவிவிடுவார். ஆனால் இதற்கு நடுவில் கொஞ்சம் தோல்விகளும் துயரச்சம்பவங்களும் உள்ளன. தமிழில் இவர் நடித்த முதல் படம் விகடகவி. ஆனால் முதலில் வெளிவந்த படம் வீரசேகரன். இதையடுத்து சாமியின் சிந்துசமவெளி. மைனா வெற்றிக்குப் பிறகு இந்த மூன்று படங்களையும் அமலா நினைவுகூர்வதில்லை. ஷார்ட்டெர்ம் மெம‌ரி லாஸ்.

இப்போது இவரது கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.

நான் இப்போது பிஸியாகிவிட்டேன் என்பது உண்மைதான். நிறைய கதைகள் கேட்டு அதில் எனக்குப் பிடித்த கதையை மட்டும் செலக்ட் பண்றேன். எல்லாத்தையும் நானே பார்த்து செய்றேன். என்னுடைய பேமிலியைகூட இன்வால்வ் ஆக விடுறதில்லை. எதையும் முடிவெடுக்கிற சுதந்திரத்தை அவங்க எனக்கு தந்திருக்காங்க. படங்களை செலக்ட் பண்ணி கமிட் பண்ணுவதால் நான் படங்களை தவிர்ப்பதாக எழுதுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை.

அமலா பாலுக்கு வாழ்வு தந்தது தமிழ் சினிமா. ஆனால் 3, ஜெயம் ரவி நடிக்கும் படம் என அடுத்தடுத்து தமிழ்‌ப் படங்களிலிருந்து விலகி தெலுங்குக்கு முன்னு‌ரிமை தருகிறார். ச‌ரியா இது?

இப்படியொரு தவறான தகவல் எப்படி வந்ததுன்னே தெ‌ரியலை. இப்போதுதான் தமிழில் வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைக‌ள், காதலில் சொதப்புவது எப்படின்னு மூன்றுப் படங்கள் முடிச்சிருக்கேன். தெலுங்கில் நல்ல ஆஃபர்கள் வந்ததால் தொடர்ந்து தமிழில் கால்ஷீட் தர முடியவில்லை. மற்றபடி தமிழ் சினிமா மீது எனக்கு நிறைய ம‌ரியாதை இருக்கு.

ஆர்யா, சித்தார்‌த், அதர்வா என்று இளம் ஹீரோக்களுடன் மட்டுமே அமலா பாலை பார்க்க முடிகிறது. இப்போது இளம் ஹீரோ என்றாலும் பெமிலியராக இருக்க வேண்டும் என்பது அமலாவின் கண்டிஷன். சீனியர் என்றால் அமலா பாலுக்கு இப்போதும் கசப்புதான்.

சீனியர் நடிகர்களுடன் ஏன் நடிக்கிறதில்லை என்று கேட்கிறாங்க. கதையு‌ம், என்னோட கேரக்டரும் பார்த்துதான் நான் படங்களை செலக்ட் பண்றேன். ஹீரோ யார்ங்கிறதுக்கு முக்கியத்துவம் தர்றதில்லை. இளம் நடிகர்களுடன் நடித்தது அதுவாக அமைந்தது. மற்றபடி ஜூனியர் சீனியர் பாகுபாடெல்லாம் கிடையாது.

தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறார் அமலா பால். மூன்றுமே பெ‌ரிய ஹீரோ படங்கள். இதில் தமன்னா, ஹன்‌சிகா, டாப்ஸி போன்றவர்களுக்கு பொறாமை என புகைகிறது தெலுங்குப் படவுலகம்.


நான் யாரையும் போட்டியாக நினைக்கலை. முப்பொழுதும் உன் கற்பனைகள் பார்த்திட்டு தமன்னா போன் பண்ணுனாங்க. அதே போல் டாப்ஸி போனில் வாழ்த்து சொன்னாங்க. அதனால் எங்களுக்குள் போட்டி பொறாமைன்னு சொல்றதில் எந்த உண்மையுமில்லை.

கேரளாவில் இருந்து தமி‌ழ், தெலுங்கில் பிரபலமாகும் நடிகைகள் பிறகு மலையாள சினிமா பக்கமே திரும்புவதில்லை. நயன்தாரா, அசினுக்கு அப்புறம் இப்போது அமலா பால்.

நான் மலையாள சினிமாவுக்கு முக்கியத்துவம் தர்றதில்லைங்கிறது உங்களோட கற்பனை. இரண்டு மலையாளப் படங்களில் கமிட்டாகியிருக்கேன். அதில் ஆகாசத்தின்டே நிறம் படம் முடிஞ்சிடுச்சி. ரன் பேபி ரன் படத்தின் வேலைகள் போய்கிட்டிருக்கு. அப்புறம் ஜோஷி இயக்கத்தில் மோகன்லால் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு.

மைனாவரை இழுத்துப் போர்த்தி நடித்த அமலா பால் இப்போது கிளாமர் குயின். இந்த சமரசம் தேவையா?

ஒரு லெவலுக்கு மேல் நாம் வெரைட்டியாக நடிக்க வேண்டியிருக்கு. அருந்ததியில் நடித்த அனுஷ்காதான் வானத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தார்கள். வெரைட்டின்னு வரும் போது கிளாமரும் தேவைப்படுகிறது.

Sunday, April 15, 2012

> பிசுபிசுத்த லிங்குசாமியின் வேட்டை.

வேட்டை வெளியான நேரம் படத்தைவிட வேட்டையை இந்தியில் ‌ரீமேக் செய்வதைப் பற்றிதான் அதிகம் பேசினார் லிங்குசாமி. வேட்டையின் தயா‌ரிப்பாளர் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டியதாகவும், இந்தியில் படத்தை எடுத்தால் நடிக்க அங்குள்ள ஹீரோக்கள் வ‌ரிசையில் நிற்பதாகவும் பில்டப் ஏற்றப்பட்டது.

இதுவொரு விளம்பர யுக்தி. ஒரு படம் வெளிவரும் முன்பே அதே இயக்குனருடன் ஹீரோ மீண்டும் இணைகிறார் என்று செய்தி வெளியிடுவது போலதான் இதுவும். இந்திக்காரர்கள் க்யூ நிற்கிறார்கள் என்றால் அப்படி என்ன படம் என்கிற ஆவல் வருமல்லவா.

ஆரம்ப ஜோருக்குப் பிறகு இந்தி ‌ரீமேக் பற்றி லிங்குசாமி வாய் திறப்பதில்லை. வசூலாகாத மூன்றாம் தர கமர்ஷியல் படத்தை யார்தான் விரும்புவார்கள். இங்குள்ள ஹீரோக்கள் கால்ஷீட் தருவார்களா என்பதே சந்தேகம். இதில் வானம் கீறி வைகுண்டம் போவதெப்படி.

சைலண்டாக அடுத்து யாரைப் போடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார் லிங்கு.

Saturday, April 14, 2012

> அன்று நயன்தாரா நேற்று த்‌ரிஷா இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு.

நயன்தாராவும், த்‌ரிஷாவும் இல்லையென்றால் பத்தி‌ரிகைக்காரர்கள் என்னவாகியிருப்பார்கள்? நினைக்கவே பயமாக இருக்கிறது. நயன்தாராவின் காதலிலும், அவரது காதல் பி‌ரிவிலும்தான் கடந்த ஒரு வருடத்தை குதூகலமாக்கின பத்தி‌ரிகைகள். த்‌ரிஷா பற்றி சொல்லத் தேவையில்லை. கடற்கரைச் சாலையில் நள்ளிரவில் டான்ஸ் ஆடினார், ஹோட்டல் குளியலறையில் குளித்தார், விஷாலுக்கும் த்‌ரிஷாவுக்கும் காதல்... ஓ, எத்தனை எத்தனை தலைப்புச் செய்திகள். நியாயமாக இவர்கள் இருவருக்கும் பத்தி‌ரிகைகள் பாராட்டுவிழா எடுத்து லாபத்தில் பங்கு தந்திருக்க வேண்டும்.

ச‌ரி, விஷயத்துக்கு வருவோம்.

நயன்தாரா ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியம் படத்தின் இறுதி நாளன்று இயக்குனர் மற்றும் ஹீரோ பாலகிருஷ்ணா ஆகியோ‌ரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அத்துடன் பி‌ரிவுத் துயர் தாங்காமல் அழவும் செய்தார். அந்த அழுகைக்கு காரணம் இருந்தது. விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால் ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியத்துடன் நடிப்பை துறக்க அப்போது அவர் முடிவு செய்திருந்தான். வாழ்க்கையின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் அவரை மீறி வந்துவிட்டது அழுகை.

நயன்தாராவை தம்மு படப்பிடிப்பில் ‌ரிப்பீட் செய்தார் த்‌ரிஷா. இவர் ஒருவரையும் காதலிப்பதாக‌த் தெ‌ரியவில்லை. தம்மு இவ‌ரின் கடைசிப் படமும் அல்ல. பிறகு ஏன் அழுகை? ஆசி?

த்‌ரிஷாவும் திருமணம் செய்து செட்டிலாகப் போகிறார் என்று தெலுங்கு ஊடகங்கள் ஊகச் செய்தி வெளியிட்டுள்ளன. திருமணம் கன்ஃபார்ம் என்றிருந்த நயன்தாராவே காதலை உதறி நடிப்புக்கு திரும்பியிருக்கிறார். த்‌ரிஷாவாவது இப்போதைக்கு நடிப்பை விடுவதாவது.

எப்போ பாரு இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு.

Friday, April 13, 2012

> அமலா பால் மோகன்லால் ஜோடியானார்.

சீனியர் நடிகர்களா... சீச்சீ என்ற அமலா பால் தனது அப்பாவைவிட மூத்த மோகன்லாலின் ஜோடியாகியிருக்கிறார்.

வெளியூ‌ரில் வெளுத்து வாங்கினாலும் உள்ளூ‌ரில் அமலா பால் இப்போதும் டம்மி பீஸ்தான். முதல் படத்தில் அவர் சைடு ஆர்ட்டிஸ்டாக வந்த ஞாபகம் மலையாளிகளுக்கு இன்னும் போகவில்லை. அதை எந்த ரப்பர் கொண்டு அழிக்கலாம் என்று தவித்த போது வந்த வாய்ப்புதான் மோகன்லால் நடிக்கும் படம்.

ஜோஷி இயக்கும் காமெடியும், த்‌ரில்லும் கலந்த புதிய படத்தில் மோகன்லால் ஜோடியாக நடிக்க அமலா பாலை கேட்டிருக்கிறார்கள். தெலுங்கில் பிஸி என்ற போதிலும் கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்து தந்திருக்கிறார். அவர் எதிர்பார்ப்புப்படி ரப்பராகுமா இல்லை ஸ்லிப்பாகுமா?

> ப்‌ரியாமணி அப்படி நடிக்க விருப்பமில்லை

இந்தியில் வெளியான தேஷ் துரோகி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. தாதாக்கள் பற்றிய கதையான இதில் தீவிரவாதி அபுசலீமை குறித்த காட்சிகள் இடம் பெறுகின்றன. அபுசலீம் இருந்தால் அவனது காதலி மோனிகா பேடியை தவிர்க்க முடியாதே.

மோனிகா பேடி வேடத்தில் நடிக்க பலரை அணுகியும் யாரும் நடிக்க ஒப்புக் கொள்ளாத நிலையில் ப்‌ரியாமணியின் டோர் பெல்லை அழுத்தியிருக்கிறார்கள். தீவிரவாதியின் காதலி வேடமா? அதுவும் உண்மையான காதலியாகவா? நோ சான்ஸ். அப்படி நடிக்க விருப்பமில்லை என திருப்பி அனுப்பியிருக்கிறார்.

அதே நேரம் ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை படத்தின் இரண்டாம் பாகத்தில் இதே மோனிகா பேடி வேடத்தை சோனாக்‌சி சின்கா செய்கிறார். எப்படி?

அதில் அபுசலீமாக நடிப்பது அக்சய் குமார்.

> 3 முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. அஸ்தமனம்
சென்ற வாரம் வெளியான அஸ்தமனம் முதல் மூன்று தினங்களில் 1,04,306 ரூபாய்களை மட்டுமே வசூலித்துள்ளது. இது மிக மோசமான வசூல்.

4. மழைக்காலம்
உலக சினிமா ச‌ரித்திரத்தில் முதல் முறையாக என்ற அறிவிப்புடன் வந்த இந்த சொதப்பல் படம் முதல் மூன்று தினங்களில் 1,04,580 ரூபாய்களை மட்டுமே வசூலித்துள்ளது.

3. கழுகு
இந்தப் படம் இன்னும் டாப் 5-க்குள் இருப்பது ஆச்ச‌ரியம்தான். சென்ற வார இறுதியில் 3.28 லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 86 லட்சங்கள்.

2. கர்ணன்
புதிய படங்களை பின்னுக்கு‌த் தள்ளி இப்போதும் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது கர்ணன். இதுவொரு சாதனை என்றே சொல்ல வேண்டும். இதன் சென்ற வார இறுதி வசூல் 3.8 லட்சங்கள்.

1. 3
தொடர்ந்து அதே ஒன்றாவது படத்தில் ஐஸ்வர்யாவின் 3. சென்ற வார இறுதியில் இப்படம் 12.8 லட்சங்களை வசூலித்துள்ளது. நல்ல புதிய படங்கள் எதுவும் வெளியாகாததே இதன் முதலிடத்துக்கு காரணம். இதுவரை சென்னையில் இப்படம் 4.35 கோடிகளை வசூலித்துள்ளது.

> அய்யோ பாவம் 3 - அன்று ஆச்ச‌ரியம் இன்று.

ரிலீஸாவதற்கு முன் பரபரப்பாகப் பேசப்பட்டது போல ‌ரிலீஸுக்குப் பின்பும் செய்திகளில் அடிபடுகிறது ஐஸ்வர்யா தனுஷின் 3. முன்பு பரபரப்பாக இப்போது ப‌ரிதாபமாக.

சென்னையில் 3 படத்துக்கு ர‌ஜினி படம் அளவுக்கு ஓபனிங் இருந்தது. முதல் மூன்று தினங்களில் 1.3 கோடியை வசூல் செய்து அனைவரையும் ஆச்ச‌ரியப்படுத்தியது. ஆனால் இதன் சென்ற வார இறுதி வசூல் 12.8 லட்சங்கள் மட்டுமே. சென்னையின் நிலைமை இப்படியென்றால் பிற இடங்களின் நிலையை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக தெலுங்கில் 3 படத்தை நட்டிகுமார் 4.5 கோடிக்கு வாங்கினார். ஆனால் படம் ஒரு கோடியை வசூலித்தால் பெ‌ரிய விஷயம் என்கிறார்கள். படம் பெரும் நஷ்டம் என்பதை நட்டிகுமாரே ஒப்புக் கொண்டிருக்கிறார். கேரளாவிலும் படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் இந்தியில் படத்தை வெளியிடவா என்ற தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

> ஜீவா விக்ரமின் டேவிட் படத்தில்.

விக்ரம் நடிக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி மும்மொழிப் படமான டேவிட்டில் ‌‌‌ஜீவா நடிக்கிறார்.

மணிரத்னத்தின் முன்னாள் அசிஸ்டெண்ட் பிஜாய் நம்பியார். இவ‌ரின் முதல் படம் சைத்தான். படம் ஹிட். அத்துடன் விருதுகளையும் அள்ளியது. அவ‌ரின் இரண்டாவது படம்தான் டேவிட். இதில் மும்மொழிகளிலும் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ‌‌‌ஜீவா. நண்பன் படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் எஸ்.பி.ஜனநாதனின் படத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கிறார். அதற்கு முன் மேலுமொரு மல்டி ஸ்டார் படம்.

படத்தின் கதையும், தனது கேரக்டரும் ஆச்ச‌ரியப்படுத்தியதால் நடிக்க ஒப்புக் கொண்டதாக ‌‌‌ஜீவா தெ‌ரிவித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் மட்டுமே நடிக்கிறார். இந்தியில் இவரது வேடத்தை செய்பவர் அங்குள்ள பிரபல நடிகர் ஒருவர்.

Wednesday, April 11, 2012

> அடுத்தகட்டத்தை வெற்றிகரமாக எட்டிய பெப்சி, தயாரிப்பாளர்கள் மோதல்.

பெப்சி, தயாரிப்பாளர்கள் மோதல் வெற்றிகரமாக அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது.

இப்போதைய நிலையில் தயாரிப்பாளர்களின் கையே ஓங்கியுள்ளது. எது சொன்னாலும் கேட்கிறோம் புதிய தொழிலாளர் அமைப்பு மட்டும் வேண்டாம் என்று அடிமட்டத்துக்கு இறங்கி இரஞ்சுகிறது. பெப்சியின் இன்னொரு எலும்பையும் உடைத்திருக்கிறார் நடன இயக்குனர் ரகுராம்.

பெப்சியின் 23 சங்கங்களில் நடனக் கலைஞர்கள் சங்கமும் ஒன்று. நடன் இயக்குனர்கள், கலைஞர்கள் என இரு தரப்பினரும் அதில் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது நடன இயக்குனர்களுக்கு மட்டுமாக புதிய சங்கத்தை நடன இயக்குனர் ரகுராம் தொடங்கியிருக்கிறார். நாங்கள் யார் வேலை தந்தாலும் செய்வோம் என்று அவர் தெரிவித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக அவர் சங்கத்தை உடைத்த தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை மறுத்திருக்கும் ரகுராம் எங்கள் சங்கத்துக்குள்ளேயே நடன இயக்குனர்களுக்கும் நடனக் கலைஞர்களுக்கும் ஒத்துப் போவதில்லை. அதனால்தான் புதிய நங்கம் என தெரிவித்துள்ளார். இந்த உடைப்பு மேலும் பல நங்கங்களில் தொடர வாய்ப்புள்ளது.

> OK OK படத்துக்கு தடைகோ‌ரி நீதிமன்றத்தில் வழக்கு

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு தடைகோ‌ரி ‌நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கை தொடுத்தது இந்து தர்மா சக்தி என்ற அமைப்பின் செயலாளர் தேவசேனாதிபதி.

படத்தின் ட்ரெய்ல‌ரில் உளு‌ந்தூர்பேட்டை உலகானந்தா என்ற பெய‌ரில் ஒரு கேரக்டர் வருகிறதாம். இந்த காதாபாத்திரம் சாமியார்களை இழிவு செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது, அதனால் இந்துக்கள் மனம் புண்படும். படத்துக்கு அளித்த சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்ற புகா‌ரில் தெ‌ரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள சென்சார் போர்ட் அவர்கள் ட்ரெய்லரை பார்த்து இந்த குற்றச்சாற்றை வைத்துள்ளனர். நாங்கள் முழுப் படத்தையும் பார்த்து சான்றிதழ் அளித்துள்ளோம் என விளக்கம் அளித்துள்ளது.

இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.

Tuesday, April 10, 2012

> தனுஷ் இந்திப் படத்தில் சோனம் இடத்தில் பார்வதி ?

தனுஷ் நடிக்கும் முதல் இந்திப் படம் விரைவில் தொடங்குகிறது. தனுஷ் ஜோடி சோனம் கபூர் என்று அறிவித்திருந்தார்கள். இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த தனுஷ், ஹீரோயின் விஷயத்தில் தலையிடுவதில்லை, என்னுடைய கேரக்டரை மட்டுமே நான் பார்ப்பேன் என்றார் அளவுகடந்த பணிவுடன்.

சோனம் கபூர் மணிரத்னம், கௌதம் படங்களை கால்ஷீட் பிரச்சனையை காரணம் காட்டி வேண்டாம் என்றவர். ஒஸ்தி படத்தில் நடிக்க சிம்புவிடம் நோ சொன்னவர்.

திடீர் திருப்பமாக இந்த இந்திப் படத்தில் தனுஷ் ஜோடியாக பார்வதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். பார்வதியை தெ‌ரியாதவர்களுக்கு... இவர் சசியின் பூ படத்தில் நடித்தவர்.

பாலிவுட்டுக்கு தேவைப்படும் கவர்ச்சி பளபளப்பு இல்லாத பார்வதியை தேர்வு செய்திருப்பது முதல் ஆச்ச‌ரியம். சோனம் கபூர் படத்தில் நடிக்கவில்லை என்பது இரண்டாவது ஆச்ச‌ரியம். இது பற்றி இயக்குனரோ, தனுஷோ இதுவரை விளக்கம் எதுவும் தரவில்லை.

> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் ?

தென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்தை பார்க்கும் சந்தாப்பம் நமக்கு அமையவில்லை.

வித்யாபாலனுக்கு தேசிய விருது வாங்கித் தந்த இந்தப் படத்தை தமிழில், தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிட்டிருந்தனர். படத்தின் வெற்றி, தேசிய விருதெல்லாம் திட்டத்தை மாற்றியிருக்கிறது. தமிழ், தெலுங்கில் படத்தை ‌ரீமேக் செய்கிறார்களாம்.

இதற்காக பல நடிகைகளை ப‌ரிசீலனை செய்து இறுதியாக அனுஷ்காவை டிக் செய்திருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. ஆனாலும் இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.