Thursday, May 31, 2012

> OK OK என பச்சை குத்திக் கொண்ட உதயநிதி.

ஆணோ பெண்ணோ மனம் கவர்ந்தவ‌ரின் பெயரை பச்சைக் குத்திக் கொள்வதுண்டு. மாஸ்டருடன் இணக்கத்தில் இருந்த போது காதல் கிறக்கத்தில் நயன்தாரா அவரது பெயரை பச்சைக் குத்திக் கொண்டார். இப்போது ஏண்டா அப்படி செய்தோம் என்றாகிவிட்டது அவருக்கு. ஆனால் உதயநிதி குத்திக் கொண்ட டாட்டூவால் அவருக்கு எந்த காலத்திலும் பிரச்சனை வரப்போவதில்லை.

அதிகமாக நடிக்கவே தெ‌ரியாமல் வெளிவந்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி வசூலில் சாதனை படைத்திருக்கிறது. சென்னை வசூலில் எந்திரனை இந்தப் படம் தொட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சென்னை சிட்டியில் தொடர்ந்து மூன்று வார இறுதி‌‌யி‌ல் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படமும் இதுதான்.

இந்த வெற்றியை ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதற்காக படத்தின் முதல் எழுத்துக்களை - ஓகே ஓகே - பச்சைக் குத்திக் கொண்டிருக்கிறாராம் உதயநிதி. அடுத்தப் படமும் இப்படி சூப்பர்ஹிட்டானால் அதையும் பச்சை குத்திக்குவீங்களா?

> விக்ரம் நடிக்கும் டேவிட் படத்தில் லாரா தத்தா.

பிப்ரவ‌ரியில் குழந்தை பெற்றுக் கொண்ட லாரா தத்தா சில மாதங்கள் கழிந்தே நடிப்புக்கு திரும்புவேன் என்று கூறியிருந்தார். அதன்படி விரைவில் நடிப்புக்கு திரும்புகிறார். இவர் முதலில் கால்ஷீட் தந்திருக்கும் படம் டேவிட்.

சைத்தான் படத்தை இயக்கி அனைவ‌ரின் கவனத்தையும் கவர்ந்த பிஜாய் நம்பியா‌ரின் இரண்டாவது படம் டேவிட். விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் நீல் நிதின் முகேஷ், தபு, இஷா ஷர்வானி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இதில் முக்கியமான வேடத்தில் லாரா தத்தா நடிக்கிறார்.

படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியிருந்தாலும் லாரா தத்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆகஸ்ட் மாதமே தொடங்கப்பட உள்ளது. அப்போது லாரா சொன்ன சில மாதங்கள் கணக்கும் முடிவுக்கு வந்துவிடும்.

> தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் ப்ரியாஆனந்த்

தனுஷ் தனது சொந்த‌த் தயா‌ரி‌ப்பு நிறுவனம் சார்பில் தயா‌ரிக்கும் முதல் படத்தில் சிவ கார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு எதிர் நீச்சல் என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். வரும் நாட்களில் பெயர் மாற்றப்படலாம்.

இந்தப் படத்தை வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில் இயக்குகிறார். இது அவரது முதல் படம். இசை அனிருத், கேமரா வேல்ரா‌ஜ் என மொத்த டீமும் தயார். ஹீரோயின் யார் என்பது மட்டும் முடிவு செய்யப்படாமல் இருந்தது.

தற்போது 180 உள்ளிட்ட படங்களில் நடித்த ப்‌ரியா ஆனந்தை தனுஷ் தேர்வு செய்திருக்கிறார். விரைவில் படப்‌பிடிப்பு தொடங்க உள்ளது.

> சமந்தாவா ஷங்கர் ஹீரோயின் ?

ஆஸ்கர் ஃபிலிம்ஸில் ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரம் ஹீரோ, இசை ரஹ்மான், படத்தின் பெயர் தேர்தல் என்று அடுக்கடுக்காக செய்திகள் வந்தாலும் தயா‌ரிப்பு தரப்போ, ஷங்கரோ இதனை இன்னும் உறுதி செய்யவில்லை. அதற்குள் அடுத்த செய்தி. ஹீரோயினாக நடிப்பது சமந்தா.

இது சமந்தா சீஸன் போல. கௌதம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைத் தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம் படத்திலும் சமந்தாவை ஹீரோயினாக்கியிருக்கிறார். மணிரத்னத்தின் கடல் படத்திலும் இவர்தான் ஹீரோயின். இந்நிலையில் ஷங்கர் படத்திலும் இவர்தான் ஹீரோயின், படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு எலெக்சன் என்று பெயர் வைத்திருப்பதாகவும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வதாகவும் எக்குதப்பாக தகவல்கள் குவிகின்றன.

இதில் எது உண்மை என்பதை ஷங்கர் கொஞ்சம் தெ‌ளிவுபடுத்தக் கூடாதா?

Wednesday, May 30, 2012

> பில்லா 2வில் வாலாட்டும் சிம்பு.

பெ‌ரிய படங்கள் வெளியாகும் போது வரப்போகும் படத்தின் டீசரை வெளியிடுவது இந்திப்பட உலகில் சகஜம். இதனால் டீசர் உடனடியாக பிரபலமடையும்.

இந்த மாதம் பில்லா 2 வெளியாகிறது. இந்தப் படத்தின் இடைவேளையில் தனது வாலு படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் சிம்பு. வேட்டை மன்னன், போடா போடி என்று இரு படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.

இவற்றை ஓரமாக வைத்து ஒருநாள் மட்டும் வாலு படத்துக்கான டீசருக்கு நடித்துத் தந்தார். வாலு படப்பிடிப்புக்கு முழு வீச்சில் கிளம்புவார்கள் என்பதே தெ‌ரியாத நிலையில் டீசரை மட்டும் பிரமோட் செய்ய நினைக்கிறார்.

வேட்டை மன்னன், போடா போடி ரொம்பப் பழசாயிடப் போகுது பாஸ்.

> கலகலப்பு முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. இஷ்டம்
விமல் நடித்திருக்கும் இந்த தெலுங்கு ‌ரீமேக் சந்தானம் இருந்த போதிலும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 7 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

4. வழக்கு எண் 18/9
மூன்று வாரங்கள் முடிவில் இப்படம் சென்னையில் 3.09 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.5 லட்சங்கள்.

3. உருமி
சந்தோஷ் சிவனின் ச‌ரித்திரப் படமான உருமி சுமாரான ஓபனிங்கையே பெற்றிருக்கிறது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று நாட்களில் 9.1 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. ஒரு கல் ஒரு கண்ணாடி
ஆறு வாரங்கள் முடிந்த நிலையில் இப்படம் சென்னையில் 16.5 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 16.5 லட்சங்கள்.

1. கலகலப்பு
சுந்தர் சி-யின் படம் இந்த வாரமும் முதலிடத்தில். சென்ற வார இறுதியில கலகலப்பு‌வின் சென்னை வசூல் 69.2 லட்சங்கள். இதுவரை இதன் சென்னை வசூல் 4.04 கோடிகள்.

> சகுனி ஆடியோ ஜூன் 2 வெளியிடப்படுகிறது.

மே மாதம் திரைக்கு வருவதாகச் சொல்லப்பட்ட சகுனி அடுத்த மாதமே திரைக்கு வருகிறது.

அறிமுக இயக்குனர் சங்கர் தயாள் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் முதலில் சலீம் கௌஸ் வில்லனாக நடித்தார். அவரது நடிப்பு ச‌ரியில்லை என அவரை மாற்றி பிரகாஷ்ராஜை வைத்து ‌ரீஷூட் செய்தனர். இதனால் சகுனி வெளியாவது காலதாமதமானது.

இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ப்ரணீத்தா நடித்துள்ளார். ராதிகா, ரோஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் ஆடியோ வரும் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது. சகுனி இங்கு வெளியாகும் அதே நாள் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்கு ஆடியோ 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

Sunday, May 27, 2012

> விஸ்வரூபத்தை IIFA வில் வெளியிடுகிறார் கமல்.

கமலின் விஸ்வரூபம் தமிழ், இந்தி இரு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் எடுத்து இந்தியில் டப் செய்யாமல் தமிழுக்கு ஒருமுறையும், இந்திக்கு இன்னொருமுறையும் என்று இருமுறை ஷூட் செய்திருக்கிறார் கமல். இந்தியில் படத்தின் பெயர் விஸ்வரூப்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் விஸ்வரூபத்தை வெளியிட கமல் விரும்பினார். ஆனால் அது நிறைவேறவில்லை. இப்போது சிங்கப்பூ‌ரில் நடக்கும் ஐஃபா விழாவில் இந்திப் பதிப்பான விஸ்வரூப்பை வெளியிடுகிறார்.

ஆஸ்கருக்கு அடுத்து ஐஃபாவைதான் அதிக ரசிகர்கள் தொலைக்காட்சியில் ரசிப்பதாக ஒரு சர்வே சொல்கிறது. இந்த விழாவில் படத்தை திரையிட்டால் அனைவரையும் வெகு சுலபமாக அது சென்றடையும். அதனால்தான் கமல் ஐஃபாவை தோந்தெடுத்ததாக‌க் கூறுகிறார்கள்.

வரும் ஜூன் 8ஆம் தேதி விஸ்வரூப் சிங்கப்பூ‌ரில் திரையிடப்படுகிறது.

Saturday, May 26, 2012

> கார்த்திக் இசை கௌதம் படத்துக்கு.

பாடகராக இருந்த கார்த்திக்கை அரவான் இசையமைப்பாளராக்கியது. பாடல்கள் அனைத்தும் பேசப்பட்டது கார்த்திக்கிற்கு பிளஸ்ஸாக அமைந்தது. இப்போது அடுத்தப் படத்துக்கு கார்த்திக் தயார்.

கௌதம் தயா‌ரிப்பில் பிரேம் சாய் இயக்கும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்துக்கு கார்த்திக் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஜெய், அபிநயா நடிக்கிறார்கள். படங்களின் வியாபார வேல்யூவை அதிகப்படுத்தும் சந்தானமும் படத்திலுண்டு. அவருடன் விடிவி கணேஷும் கலக்கயிருக்கிறார்.

இந்தப் படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்தப் பாகங்களை உருவாக்கயிருப்பதாக பிரேம் சாய் தெ‌ரிவித்துள்ளார்.

> சல்மான்கான் தில்லாலங்கடி ‌ரீமேக்கில்.

தெலுங்கில் வெற்றிபெற்ற கிக் படத்தை தில்லாலங்கடி என்ற பெய‌ரில் தமிழில் எடுத்தனர். படம் சுமாராகதான் போனது. இதனை இந்தியில் ‌ரீமேக் செய்கிறார்கள். ஹீரோ சல்மான்கான்.

கான்கள் இந்திப் படத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ தமிழ்ப் படங்களை விடாமல் பார்க்கிறார்கள். இங்கிருந்து செல்லும் சௌத் இந்தியன் மசாலாக்கள்தான் அங்கு பாக்ஸ் ஆஃபிஸில் தூள் கிளப்புகின்றன. இதனால் சுமாரான மசாலாக்களுக்கும் ராஜ ம‌ரியாதை.

அந்தவகையில் தில்லாலங்கடியையும் இந்தியில் ‌ரீமேக் செய்கிறார்கள். இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

> பகலவன் குறித்து வாய் திறக்காத விஜய்.

சீமான் இயக்கத்தில் விஜய் பகலவன் என்ற படத்தில் நடிக்கயிருப்பதாக பல மாதங்களாகச் சொல்லி வருவது அனைவருக்கும் தெ‌ரிந்திருக்கும். ஏன், அந்த விஷயம் மறந்தும்கூட போயிருக்கும். அந்த இத்துப்போன விஷயம் இப்போது மீண்டும் அச்சுக்கு வந்திருக்கிறது.

சீமான் பகலவன் படத்தை இயக்குகிறார். ஆனால் ஹீரோ விஜய் அல்ல. டைட் ஷெட்யூல் காரணமாக அவர் படத்தில் நடிக்கவில்லையாம். மீடியாக்களுக்கு தெ‌ரிந்த இந்த விஷயம் சீமானுக்கு இப்போதுதான் தெ‌ரிந்திருக்கிறது. பகலவனை தயா‌ரிப்பதாக இருந்த தாணுக்கு துப்பாக்கியை தயா‌ரிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் பகலவன் குறித்து அவர் வாயே திறக்கவில்லை. அதுதான் வட கிடைச்சிடுச்சே.

பகலவன் கதைக்கு ஆர்யா முதல் ‌ஜீவா வரை பலரு‌ம் பொருத்தமாக இருப்பார்கள் ஆனாலும் ‌ஜீவா கொஞ்சம் ஸ்பெஷல் என்று விசாலமான வலையாக வீசியிருக்கிறார் செந்தமிழன். மீன் சிக்குகிறதா பார்ப்போம்.

> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.

அ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்திர பட்டாளம்தான். இதில் கூடுதலாக அரவிந்த்சாமியும், பிருத்விராஜும் நடிப்பதாக செய்திகள் வெளியாயின.

இது இத்தோடு முடியும் போல் தெ‌ரியவில்லை. தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜுன், ரவி தேஜா, ஜெகபதிபாபு ஆகியோ‌ரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். இவர்கள் ஒட்டு மொத்த பேரை அறிமுகப்படுத்தவே ஒன்றரை மணி நேரமாகிவிடுமே, இது சாத்தியமா?

புரளி கிளம்புகிறவர்கள் புழுதியையும் சேர்த்து கிளப்புவதால்தான் இத்தனை நட்சத்திரப் பட்டாளமும். உண்மையை உலகுக்கு எப்போது வளக்கப் போகிறார் படத்தை இயக்கும் விஷ்ணுவர்தன்?

Friday, May 25, 2012

> அலெக்ஸ் பாண்டியன் சாலக்குடியில்.

சகுனி எப்படியும் சறுக்கும் என்பதாலோ தெ‌ரியவில்லை அலெக்ஸ் பாண்டியனை வேக வேகமாக எடுத்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் நடிக்க உற்சாகமாக ஒப்புக் கொண்டார் அனுஷ்கா. ஆனால் அடுத்தடுத்து தெலுங்குப் படங்களில் கமிட்டாக அலெக்ஸ் பாண்டியனுக்கு எண்ணி எண்ணிதான் கால்ஷீட் தருகிறாராம். இதனால் கடுப்பில் இருக்கிறார் சுரா‌ஜ்.

மைசூ‌ரில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முடிவடைந்தது. இன்று சாலக்குடிக்கு மொத்த டீமும் இடம் பெயர்ந்திருக்கிறது. சகுனியின் ‌ரிசல்டைப் பொறுத்து அலெக்ஸ் பாண்டியனை களத்தில் இறக்கிவிட தீர்மானித்திருக்கிறார்கள். சகுனி நன்றாகப் போனால் பாண்டியன் பதுங்குவார், சறுக்கினால் உடனே பாய்ந்து வருவார். இதுதான் இப்போதைய திட்டம்.

> நடிகர் சங்கத் தேர்தல் மனு தாக்கல் ஆரம்பம்

நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் சங்கத்துக்கு சரத்குமார் தலைவராகவும், ராதாரவி செயலாளராகவும் உள்ளனர். இவர்கள் மற்றும் பிற நிர்வாகிகள் பதவிகாலம் முடிவடைவதைத் தொடர்ந்து சங்கத்துக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு சரத்குமாரும், செயலாளர் பதவிக்கு ராதாரவியும் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதில் ராதாரவியை எதிர்த்து நடிகர் கும‌ரிமுத்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

வரும் 30ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாள்.

> மாற்றான் இறுதிகட்டத்தில்.

கே.வி.ஆனந்தின் மாற்றான் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அயன், கோ வைவிட ஒருபடி மேலாக இருக்க வேண்டும் என்று சூர்யாவும், கே.வி.ஆனந்தும் அதிகபடி உழைப்பை கொட்டி மாற்றானை உருவாக்கி வருகிறார்கள். படத்தின் கதை இன்னும் மர்மமாகவே உள்ளது.

காஜல் அகர்வால் சூர்யா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் முக்கிய காட்சி இந்தியா, பாகிஸ்தான் பார்டரான பு‌ஜியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஷெட்யூல் முடிந்தால் ஒரேயொரு பாடல் காட்சி. அலஸ்காவில் பாடலை படமாக்க தீர்மானித்திருக்கிறார்கள். அலஸ்கா ட்‌ரிப்பும் முடிந்தால் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும்.

ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைத்திருக்கிறார். சண்டைக் காட்சி அமைக்க ஹாலிவுட் கலைஞர்களை பயன்படுத்தியிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

Thursday, May 24, 2012

> ஜோதிகா நடிக்கத் தயார், நீங்க பார்க்கத் தயாரா? சூர்யா.

திருமணமான பிறகு தனது ஓவர் நடிப்பை ஓரமாக மூட்டைக்கட்டி வைத்தார் ஜோதிகா. திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்ற கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டதால்தான் சிவகுமார் இந்தக் கல்யாலணத்துக்கே ஒத்துக் கொண்டார் என்றொரு செய்தியும் உண்டு.

போகட்டும். அதெல்லாம் பழங்கதை. குழந்தைகளை கவனிப்பதுதான் முக்கியம், அதனால்தான் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறேன். சூர்யா நான் நடிக்கக் கூடாது என்று சொன்னதில்லை என விளக்கம் தந்த ஜோதிகா இப்போது நடிக்கிற மூடுக்கு வந்திருக்கிறாராம்.

இதனை சூர்யாவே தெ‌ரிவித்திருக்கிறார். நடிப்பிலிருந்து அவராகவே ஒதுங்கியிருக்கிறார். நடிக்கிற ஆசை அவருக்கு இன்னமும் இருக்கிறது. ச‌ரியான தருணம் அமைந்தால் அவர் நடிக்கலாம்.

விளம்பரங்களில் நடித்துவரும் ஜோதிகா குழந்தைகள் வளர்ந்துவிட்டதாக கருதும் நாள் மீண்டும் சினிமாவுக்கு திரும்பலாம். அவர் நடிக்கத் தயார், நீங்க பார்க்க‌த் தயாரா?

> பதினோரு வருடத்துக்குப் பின் பட்டையை கிளப்பும் பவன் கல்யாண்.

பவன் கல்யாண் நடித்திருக்கும் கப்பர் சிங் வசூலில் பட்டையை கிளப்புகிறது. இந்தியாவின் டாப் டென் ஓபன‌ரில் இந்திப் படங்களுடன் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது. பவர் ஸ்டா‌ரின் வசூலுக்கு முன்னால் தூக்குடுவும், ரட்சாவும், மகாதீராவும் நிறமிழந்துவிட்டன.

ச‌ரியாக பதினொரு வருடங்களுக்கு முன் பவன் கல்யாணின் குஷி சூப்பர் ஹிட்டானது. அதற்குப் பிறகு அவர் நடித்த எந்தப் படமும் இப்படியொரு ஹிட்டை பெற்றதில்லை. ச‌ரியாக பதினொரு வருடம் கழித்து குஷியை தாண்டிய வெற்றியை கப்பர் சிங் பெற்றுத் தந்துள்ளது.

தபாங் படத்தின் ‌ரீமேக் என்றாலும் பவன் கல்யாணின் ஹீரோயிசத்துக்கு ஏற்ப திரைக்கதையை உருவாக்கியிருந்ததே இந்த மிகப்பெ‌ரிய வெற்றிக்கு காரணம். இன்னும் பத்து வருஷத்துக்கு ஹிட் தரவில்லையென்றாலும் பதினோராவது வருஷம் கப்பர் சிங் மாதி‌ரியான ஹிட் கொடு தலைவா என்று பவன் கல்யாண் ரசிகர்கள் பரவசப்படுகிறார்கள்.

இதன் முதல் பத்து நாள் வசூல் மட்டும் 52.25 கோடிகள்.

> உடம்பை கஷ்டப்பட்டு குறைக்கிற ஐடியா எனக்கு இல்லை ஹன்சிகா.

சமீபத்தில் ஹன்சிகா அமெ‌ரிக்கா சென்றது இந்திய ஜனாதிபதி அமெ‌ரிக்கா சென்றது போல் பரபரப்பாக்கப்பட்டது. வேறொன்றுமில்லை, ஹன்சிகா தனது பம்பளிமாஸ் உடம்பை குறைக்கவே அமெ‌ரிக்கா சென்றார் என ஊடகங்கள் எழுதின.

ஹன்சிகாவின் அழகே அவ‌ரின் அபி‌ரிதமான உடம்புதான் என்பதை நன்குணர்ந்த ரசிகர்கள் மத்தியில் கவலை அலைகளை இது எழுப்பியது. கவலைப்படாதீங்க ரசிகர்களே... ஹன்சிகா உடம்பை குறைக்கவெல்லாம் அமெ‌ரிக்கா செல்லவில்லையாம்.

சைஸ் ஸீரோ உடம்புக்காக நான் அமெ‌ரிக்கா சென்றதாகச் சொல்றாங்க, ஆனா நான் அதுக்காவெல்லாம் போகலை, உடம்பை கஷ்டப்பட்டு குறைக்கிற ஐடியாவும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.

யப்பா... இப்போதான் நிம்மதியாக இருக்கு.

> U.Kயிலும் U.Sஸிலும் மண்ணை‌க் கவ்விய கலகலப்பு

தமிழ்நாட்டில் வெளியான அதே நாள் கலகலப்பு U.K, U.S-‌ஸிலும் வெளியானது. UTV-யின் மார்க்கெட் இதற்கு முக்கிய காரணம். ஆனால் இரு இடங்களிலும் கலகலப்பு மண்ணை‌க் கவ்வியுள்ளது.

U.K-யில் இரண்டாவது வார இறுதியில் இப்படம் இரண்டு திரையிடல்களில் 1,607 பவுண்ட்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதுவரையான இதன் U.Kவசூல் நமது ரூபாய் மதிப்பில் 10.24 லட்சங்கள் மட்டுமே.

அமெ‌ரிக்காவில் இப்படம் சென்ற வார இறுதியில் எட்டு திரையிடல்களில் 9,583 அமெ‌ரிக்கன் டாலர்களை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதி வரை இதன் அமெ‌ரிக்க வசூல் நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 17 லட்சங்கள்.

> அரவிந்தசாமி அ‌ஜீத் படத்தில்.

கடல் படத்தில் தனது ‌ரீஎ‌ண்ட்‌ரியை பதிவு செய்திருக்கும் அரவிந்தசாமி அடுத்து அ‌ஜீத் படத்தில் நடிக்கிறார்.

ரோஜா படத்தில் பீக்கில் இருந்த சாமி பிசினஸில் கவனம் செலுத்தியதால் சினிமாவை கண்டுகொள்ளவில்லை. லைம் லைட்டில் இருந்தவர் அவராகவே விரும்பி அந்த வெளிச்சத்திலிருந்து விலகிக் கொண்டார். இப்போது முடி கொட்டிப் போய், குண்டான அங்கிள் தோற்றத்தில் மணிரத்னத்தின் கடல் படத்தில் நடிக்கிறார்.

இதையடுத்து விஷணுவர்தன் இயக்கத்தில் அ‌ஜீத் நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்தில் சாமி நடிக்கிறார். இந்தப் படத்தில் ஆர்யா, நயன்தாரா, தாப்ஸீ என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அத்துடன் அரவிந்தசாமி, பிருத்விரா‌ஜ் ஆகியோரும் நடிக்கிறார்களாம்.

யுவன் படத்துக்கு இசையமைக்கிறார்.

Wednesday, May 23, 2012

> ஐஃபா-வின் ஜெராக்ஸாக தென்னிந்திய சினிமா அவார்ட்ஸ்.

இந்தியன் சினிமா என்றால் அது இந்தி சினிமா. அப்படியானால் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்கு சினிமாக்கள்? அது சௌத் இந்தியன் சினிமா. ஓ... சௌத் இந்தியா இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா என்று கேட்டால் யாருக்கும் பதில் தெ‌ரியாது.

ஐஃபா என்ற குறை மூளைக்காரர்கள் இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அவார்ட்ஸ் என்று இந்தி சினிமாவுக்கு மட்டும் விருது அளிக்கிறார்கள். இதனால் மற்ற மொழிக்காரர்கள் சௌத் இந்தியன் என்ற பெய‌ரில்தான் எதையும் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தியன் சினிமா அவார்ட்ஸ் என்று பெயர் வைத்து தென்னிந்திய மொழிப் படங்களுக்கு மட்டும் விருது வழங்கும் கெத்து நம்மாட்களுக்கு இல்லை.

விஷயத்துக்கு வருவோம். சௌத் இந்தியன் இண்டர்நேஷனல் மூவி அவார்ட்ஸ் என்ற பெய‌ரில் விருதுகள் வழங்கயிருக்கிறார்களாம். இந்த வருடம் முதல் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஐஃபா-வின் ஜெராக்ஸாக இந்த விருது வழங்கல் இருக்கும் என தெ‌ரிகிறது.

Tuesday, May 22, 2012

> கோச்சடையானை விக்ரம சிம்கா என்ற பெய‌ரில் வெளியிடுகிறார்கள்.

கோச்சடையான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் எடுக்கிறார்களா ஸ்பாட் விசிட் அடிக்கிறார்களா என்று தெ‌ரியாத அளவுக்கு நாலு நாலு நாட்களாக உலகின் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். ர‌ஜினியின் உற்சாகம் மற்ற நட்சத்திரங்களையும் தொற்றிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

ர‌ஜினி எனும் மிகப்பெ‌ரிய பிராண்டட் நடிக்கும் படம் என்பதால் பிசினஸ் எல்லைகள் தாறுமாறாக வி‌ரிந்திருக்கிறது. ஜப்பானில் வெளியிடுவோம், சீனாவில் திரையிடுவோம் என்று எங்கெங்கு நோக்கிலும் கோச்சடையான். இந்தப் படத்தை அண்டை மாநிலம் ஆந்திராவில் விக்ரம சிம்கா என்ற பெய‌ரில் வெளியிடுகிறார்கள். தமிழில் வெளியாகும் அதேநாள்.

போகிறப் போக்கைப் பார்த்தால் எந்திரனை எல்லாம் எகிறி அடிக்கும் போலிருக்கிறது.

> லா‌ஜிக்கே இல்லாத கலகலப்பு காமெடி விட்டமினில் கலெக்சன்.

சின்ன இடைவெளிக்குப் பிறகு இயக்கத்துக்கு திரும்பியிருக்கிறோம் வரவேற்பு எபங்படியிருக்குமோ என்ற கலக்கம் முதலில் சுந்தர் சி-க்கு இருந்தது. கலகலப்பு படத்தின் கலெக்சன் அனைத்தையும் துடைத்தெறிந்திருக்கிறது.

லா‌ஜிக்கே இல்லாத டப்பா படமான கலகலப்பு காமெடி என்னும் விட்டமினில் கலெக்சனை அள்ளிக் கொண்டிருக்கிறது. கன்ஸ்யூமர் உலகில் காமெடிதான் காப்பாற்றும் என்பதை பு‌ரிந்து கொண்டவர் கலகலப்பு இரண்டாம் பாகத்துக்கு கதை விவாதத்தை ஆரம்பிக்கப் போகிறாராம். நஷ்டக் கணக்கு எழுதி வந்த யு டிவி நிறுவனத்துக்கும் இப்போதுதான் ஜாக்பாட் அடித்திருக்கிறது. உப்பு பெறாத படத்தையே தயா‌ரிக்க தயங்காதவர்கள் டப்பு தேறும் விஷயத்தை விடுவார்களா என்ன.

அக்டோப‌ரில் படப்பிடிப்புக்கு கிளம்புறோம் என்று அட்வான்ஸாகவே அறிவித்திருக்கிறார்கள்.

மறுபடியும் உள்ளத்தை அள்ளித்தா ட்ரெண்ட் தொடங்கிடுச்சா... கடவுளே.

> பாக்ஸ் ஸ்டுடியோவுடன் கைகோர்க்கும் ஷங்கர்.

ஹாலிவுட் நிறுவனங்கள் எங்கெங்கு பணம் புழங்குதோ அங்கெல்லாம் கடை வி‌ரிக்கும். அப்படிதான் டுவென்டின்த் செஞ்சு‌ரி பாக்ஸ் ஸ்டுடியோ முருகதாஸுடன் இணைந்து எங்கேயும் எப்போதும் படத்தை தயா‌ரித்தது. இதே கூட்டணி தற்போது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளது.

இந்தப்பட நிறுவனம் ஷங்கருடன் இணைந்து படம் பண்ண தயாராகி வருகிறது. எடுத்தப் படங்களெல்லாம் கடும் நஷ்டத்தை ஏற்படுத்த தயா‌ரிப்பை தற்காலிகமாக நிறுத்தினார் ஷங்கர். ஆனாலும் நல்ல படங்களை‌த் தயா‌ரிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் பொங்கிய பாலாக இன்னும் அடங்கவில்லை.

இம்சை அரசன் இரண்டாம் பாகம், ராஜு முருகன் இயக்கும் படம் என பல படங்களை தயா‌ரிக்கும் மூடில் இருக்கிறார். இந்த நேரத்தில்தான் பாக்ஸ் டுடியோவின் ஆஃபர் அவர் வீட்டுக் கதவை‌த் தட்டியிருக்கிறது. இரண்டு பேர் சேர்ந்தால் நஷ்டமானாலும் பாதிப்பாதி என்பதால் விரைவில் புதிய கூட்டணியை‌ தமிழ் சினிமா எதிர்பார்க்கலாம்.

Monday, May 21, 2012

> ஷங்கர் படத்தில் யார் ஹீரோயின் அசினா ப்‌ரியங்காவா ?

ஷங்கர் விக்ரமை வைத்து இயக்கப் போகும் படத்தில் ஹீரோயின் யார்? இந்தக் கேள்விக்கு பதிலாக நமது பெயர் இருக்க வேண்டும் என்று முன்னணி நடிகைகள் முட்டி மோதுகிறார்கள்.

யார் என்ன சொன்னாலும் ஷங்கர் படத்தில் இறுதி முடிவு அவருடையதாகவே இருக்கும். ஹீரோயின் விஷயமும் அவ்வாறே இருக்கப் போகிறது. தேர்தல் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நடிக்க ப்‌ரியங்கா சோப்ரா ச‌ரியான சாய்ஸாக இருப்பார் என்பது ஷங்க‌ரின் எண்ணம். அதேநேரம் அசினையும் இன்னொரு சாய்ஸாக வைத்துள்ளாராம்.

இன்னும் சில தினங்களில் யார் ஹீரோயின் என்பது முடிவு செய்யப்பட்டுவிடும். சுபா வசனம் எழுதியிருக்கும் இந்தப் படத்தை தயா‌ரிக்கும் பொறுப்பை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Sunday, May 20, 2012

> அவதாரை முந்திய அவென்ஜர்ஸ்.

இன்று வரை உலக அளவிலும், அமெ‌ரிக்க அளவிலும் வசூலில் முதலிடத்தில் அவதார் படமே உள்ளது. ஜேம்ஸ் கேமரூனின் அடுத்தப் படமே அவதா‌ரின் இந்த சாதனையை முறியடிக்கும். ஆனாலும் ஹாலிவுட்டில் சில சாதனைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

ஆறு சூப்பர் ஹீரோக்கள் இணைந்த தி அவென்ஜர்ஸ் வார இறுதியில் 200 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. இது ஹாலிவுட்டின் புதிய சாதனை. இரண்டாவது வார இறுதியிலும் இப்படமே வசூலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது வார இறுதியில் இதன் வசூல் 104 மில்லியன் டாலர்கள்.

முதல் வார இறுதியுடன் ஒப்பிடுகையில் இது பாதி அளவுதான் என்றாலும் இதுதான் ஹாலிவுட்டின் டாப் இரண்டாவது வார இறுதி வசூல். அவதார் படம் இரண்டாவது வார இறுதியில் 75 மில்லியன் டாலர்களே வசூலித்திருந்தது. இதனால் அவதார் வசூலை அவென்ஜர்ஸ் முறியடிக்கும் என்று கூறிவிட முடியாது. ஆனால் இரண்டாவது வார இறுதியில் அவதாரை அவென்ஜர்ஸ் முந்தியுள்ளது.

> மன்மதன் 2க்கு ஸ்கி‌ரிப்ட் எழுதி வருகிறார் சிம்பு.

மணிரத்னத்தின் கடல் படத்துக்கு கேமராமேனாக பணியாற்றுகிறார் ரா‌‌ஜீவ் மேனன். அவ‌ரின் அடுத்த தமிழ்ப் படம் அனேகமாக சிம்புவுடையதாக இருக்கும்.

எத்தனையோ இயக்குனர்களிடம் நடித்த போதும் கிடைக்காத ஹிட் சிம்பு தானே திரைக்கதை எழுதி டம்மி இயக்குன‌ரின் பெய‌ரில் இயக்கிய மன்மதன் படத்துக்கு கிடைத்தது. ஆமாம் இதுதான் அவரது முதல் ஹிட். இதன் இரண்டாம் பாகத்தின் ஸ்கி‌ரிப்டை சிம்பு தற்போது எழுதி வருகிறார்.

போடா போடி, வாலு, வேட்டை மன்னன் படங்களுக்குப் பிறகு மன்மதன் 2 தொடங்குகிறது. மன்மதன் படத்தில் ஆர்.டி.ராஜசேக‌ரின் கேமரா பிளஸ் பாயிண்டாக அமைந்தது. அதனால் மன்மதன் 2க்கு ரா‌‌ஜீவ்மேனனை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.

> OK OK தசாவதாரத்தைவிட ஐந்து கோடிகள் அதிக வசூல்.

சென்னை பாக்ஸ் ஆபிஸில் கௌரவமான இடம் வழக்கு எண் படத்துக்கு கிடைத்திருக்கிறது. காமெடி கமர்ஷியலுக்கு அடுத்த இடம்தான் என்றாலும் இந்தளவேனும் இதற்கு ஆதரவு தந்தது ஆறுதல்.

3. வழக்குஎண் 18/9
பாலாஜி சக்திவேலின் படம் இந்த வாரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 55.6 லட்சங்கள். முதல்வார வசூல் அளவுக்கு இரண்டாவது வாரமும் வசூல் செய்திருப்பது ஆரோ‌க்கியமான விஷயம். சென்ற ஞாயிறு வரை இதன் சென்னை வசூல் 1.75 கோடி.

2. கலகலப்பு
சிவா, சந்தானம், இளவரசு முக்கூட்டணியின் காமெடி தர்பார் காரணமாக கலகலப்புக்கு நல்ல கலெக்சன். முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 67.3 லட்சங்கள். சுந்தர் சி. இயக்கிய எந்தப் படத்தையும்விட இதற்குதான் அதிக ஓபனிங்.

1. ஒரு கல் ஒரு கண்ணாடி
தொடர்ந்து அதே முதலிடத்தில் ஓகே ஓகே. ர‌ஜினி படம்தான் இப்படி அசைக்க முடியாதபடி பாக்ஸ் ஆஃபிஸில் உட்கார்ந்திருக்கும். அறிமுக நடிக‌ரின் படமெல்லாம் இப்படி பட்டையை கிளப்புவது ஆச்ச‌ரியம். அவர்களாகப் பார்த்து முதலிடத்தை காலி செய்தால் உண்டு. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 85 லட்சங்கள். இதுவரை 15 கோடிகளை சென்னையில் மட்டும் இப்படம் வசூல் செய்துள்ளது. இது எந்திரனைவிட இரண்டு கோடிகள் கம்மி. தசாவதாரத்தைவிட ஐந்து கோடிகள் அதிகம்.

Friday, May 18, 2012

> சத்யராஜுக்கு சரத்குமார் எவ்வளவோ மேல்.

மலையாளப் படங்களில் நடித்ததால் சில நல்ல பழக்கங்கள் சரத்குமா‌ரிடம் தென்படுகின்றன. அதில் ஒன்று சின்ன வேடம் என்றாலும் நல்ல படங்களில் தன்னை இணைத்துக் கொள்வது. காஞ்சனாவுக்குப் பிறகு கோச்சடையானில் சிறிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மலையாளத்திலும் இப்படி அவர் நடித்த சில படங்கள் - முக்கியமாக ஓ‌ரிடத்து ஒரு போஸ்ட்மேன் - சரத்குமாருக்கு நல்ல பெயரை சம்பாதித்து தந்தது. சமீபத்தில் இவர் நடிக்க ஒப்புக் கொண்ட இன்னொரு படம் துப்பாக்கி.

விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில் முக்கியமான சிறிய வேடம் ஒன்றில் சரத்குமார் நடிக்கிறார். ர‌ஜினி படத்தில் வில்லனாக நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு தெலுங்கில் துக்கடா ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் சத்யராஜுக்கு சரத்குமார் எவ்வளவோ மேல்.

Thursday, May 17, 2012

> அ‌‌ஜீத் ஆர்யா படம் மும்பையில் தொடங்கிறது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தல் அ‌‌‌ஜீத் நடிக்கும் படத்தின் வேலைகள் மின்னல் வேகத்தில் நடக்கின்றன. மே 31 பில்லா 2 வெளியாகும் முன்பே படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தில் அ‌‌‌ஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஆர்யாவுக்கு முக்கியமான வேடம். தாப்ஸீயையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை மும்பையில் வரும் மே 31 தொடங்குகின்றனர். எழுத்தாளர்கள் சுபா படத்தின் வசனத்தை எழுதியுள்ளனர். விஜய்யின் துப்பாக்கிப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. தற்போது அ‌‌‌ஜீத் மும்பை கிளம்புகிறார்.

ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தை தயா‌ரிப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது ரத்னம் மேற்பார்வையில் ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் தயா‌ரிப்பதாக தெ‌ரிவித்துள்ளனர். ரத்னம் படங்களின் தோல்விக் கணக்கை இந்தப் படத்தில் விநியோகஸ்தர்கள் தீர்த்துக் கொள்ள முயலக்கூடும் என்பதால்தான் புதிய கம்பெனி பெயரை நுழைந்திருப்பதாக கூறப்படுகிறது.

> பாட்ஷா இந்தி ரீமேக் கனவுடன் பிரபுதேவா.

போக்கி‌ரி படத்தை வான்டட் என்று இந்தியில் எடுத்து அங்குள்ள ஹீரோக்களின் தேடலுக்கு‌ரிய இயக்குனர் ஆனார் பிரபுதேவா. வான்டட் நூறு கோடியை தாண்டி வசூல் செய்தது. இப்போது சிறுத்தையை ரவுடி ரத்தோர் என்ற பெய‌ரில் எடுத்து வருகிறார். அக்சய் ஹீரோ. இப்போதே எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

விரைவில் சல்மான்கான் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார். அதேநேரம் அஜய்தேவ்கானை வைத்து ஒரு படம் பண்ணவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சொந்தமாக வூடு கட்டி பெயிண்ட் அடித்து பெட்டு டேபிளும் வாங்கி குடியேறும் வகையில்லை பிரபுதேவா. கட்டிய வீட்டிற்குள் கப்பென்று படுத்துக் கொள்ளும் சத்யரா‌ஜ் ரகம். ஏற்கனவே வெற்றி பெற்ற போக்கி‌ரி, சிறுத்தையை ‌ரீமேக் செய்தது போல் தமிழின் எவர்கி‌ரீன் பாட்ஷாவை அஜய்தேவ்கானை வைத்து எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.

இப்போதுதான் பாட்ஷாவை டி‌ஜிட்டலுக்கு மாற்றி இந்தியில் வெளியிடும் வேலையை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் பாட்ஷாவை ‌ரீமேக் செய்ய படபடக்கிறார் மாஸ்டர். யார் பாஸ் பண்ணப் போகிறது... பார்ப்போம்.

> காஜலுடன் மீண்டும் இணையும் கார்த்தி.

சகுனி படத்தில் காஜலுடன் நடிக்கதான் ஆசைப்பட்டார் கார்த்தி. மாற்றானில் அண்ணன் காஜலை கவர்ந்ததால் அது முடியாமல் போனது. இப்போது காஜல் ஃப்‌‌ரீ. கவர்ந்துவிட்டார் கார்த்தி.

சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களுக்குப் பிறகு ராஜேஷின் அழகுராஜா படத்தில் கார்த்தி நடிக்கிறார். முந்தையப் படங்களைப் போலவே இதுவும் காமெடிப் படம். சந்தானம் செகண்ட் ஹீரோ.

விரைவில் தொடங்கப்பட உள்ள இந்தப் படத்தில் காஜலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

Wednesday, May 16, 2012

> ஜூலையில் யோஹன் விஜய் வழக்கம் போல கப்சிப்.

கௌதம், விஜய் இணைவதாக இருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று டேக் ஆஃப் ஆகாது என்று ஒருசிலர் கூறி வந்த நிலையில், அப்படம் விரைவில் தொடங்கப்படும் என அவ்வப்போது தெ‌ரிவித்து வருகிறார் கௌதம். இது குறித்து விஜய் இதுவரை ஏதும் சொல்லவில்லை.

தாண்டவம் படத்தில் பிஸியாக இருக்கும் இயக்குனர் விஜய், நடிகர் விஜய்யை வைத்து தலைவன் படத்தை இயக்குகிறார். தாண்டவம் முடிந்ததும் தலைவன் என்கிறார் அவர். அப்படியானால் யோஹன்?

பதில் சொல்ல வேண்டிய நடிகர் விஜய் கமுக்காக இருப்பதால் இரு இயக்குனர்களும் அடுத்தது என் படம்தான் என சைலண்டாக அடித்துக் கொள்கிறார்கள். லேட்டஸ் செய்தி என்னவென்றால் துப்பாக்கி முடிந்ததும் விஜய்யை வைத்து யோஹனை இயக்குகிறேன் என்று தெ‌ரிவித்துள்ளார் கௌதம்.

விஜய் வழக்கம் போல கப்சிப்.

> ஸ்ரீ ராமராஜ்ஜியத்திற்கு தமிழில் வரவேற்பு கிடைக்குமா?

நயன்தாராவுக்கு ஆந்திராவில் எதிர்ப்பையும், பாராட்டையும் பெற்றுத் தந்தது ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியம்.

திருமணமான பிரபுதேவாவுடன் காதலில் இருக்கும் நயன்தாரா எப்படி சீதையின் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போது எதிர்ப்பு கிளம்பியது. ராமனாக பாலகிருஷ்ணா என்ற பவர்ஃபுல் நடிகர் இருந்ததால் எதிர்ப்பு பிசுபிசுத்தது, படப்பிடிப்பு நிறைவு நாளில் நயன்தாரா அழுதது, நயன்தாராவைவிட்டால் இந்த கேரக்டருக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என எதிர்த்தவர்களே பாராட்டியது என பல விஷயங்கள் நடந்தேறிய படம் இது.

பாபு என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராமாணயத்தின் இறுதிப் பகுதிதான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ராமர், சீதையின் புத்திரர்களான லவ, குசா வரும் பகுதிகள். சுவாரஸியம் குறைவான பகுதி என்பதாலும் என்டிஆர் ஏற்கனவே லவ குசா என்ற படத்தில் நடித்திருந்ததாலும் ஓபனிங் பிரமாண்டம் ஓ‌ரிரு நாட்களில் குறைந்து போனது. படத்தின் ஹைலைட்களில் ஒன்று இளையராஜாவின் இசை.

தமிழில் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைக்குமா? 18ஆம் தேதி தெ‌ரிந்துவிடும்.

> தமிழில் ரிச்சா சொதப்பியதை தெலுங்கில் அறுவடை செய்திருக்கிறார் ஸ்ருதி.

ஸ்ருதிஹாசன் குறுகிய காலத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ் என மும்மொழிகளில் நடித்துவிட்டார். ஆனால் வெற்றி என்ற மூன்றெழுத்து மட்டும் அவருக்கு எட்டமாகவே இருந்தது. 7 ஆம் அறிவு, 3 கூட பெ‌ரிய வெற்றி என்று சொல்ல முடியாது.

இந்த விளம்பர வெற்றிகளைத் தாண்டி நிஜமான முதல் வெற்றியை தெலுங்கில் அறுவடை செய்திருக்கிறார் ஸ்ருதி.

பவன் க‌ல்யாணுடன் இவர் நடித்த கப்பர் சிங் வெளியா‌கியு‌ள்ளது. இதில் ஸ்ருதிக்கு சின்ன ரோல்தான். ஆனாலும் இவர்தான் ஹீரோயின். இந்தப் படம் ஆந்திராவில் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது கொமரம் புலி, பன்சா என்று அடுத்தடுத்து பஞ்சரான பவன் கல்யாணின் மார்க்கெட்டை இந்தப் படம் தூக்கி நிறுத்தியிருக்கிறது.

கப்பர் சிங் இந்தியில் வெளியான டபாங்கின் ‌ரீமேக். இப்படம் தமிழில் ஒஸ்தி என்ற பெய‌ரில் ‌ரீமேக் செய்யப்பட்டு தோல்வியடைந்தது. இதில் நடித்த ‌ரிச்சா முடிந்தவரை சொதப்பியிருந்தார். அதே நேரம் ஸ்ருதிஹாசன் தெலுங்கில் நிறைவாக செய்திருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன.

> அ‌‌ஜீத், நயன்தாரா, ஆர்யா கூட்டணியில் தாப்ஸீயும்.

பில்லா 2 முடிந்ததும் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் அ‌‌ஜீத் நடிக்கிறார். ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சூர்யா மூவிஸ் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்த ஆக்சன் படத்தில் அ‌‌ஜீத் ஜோடியாக நயன்தாராவும், முக்கியமான வேடம் ஒன்றில் ஆர்யாவும் நடிக்கிறார்கள். இது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இசை யுவன் ஷங்கர் ராஜா.

இப்போது இந்தக் கூட்டணியில் மேலும் ஒருவர், தாப்ஸீ.

நயன்தாவுடன் தாப்ஸீயும் நடிக்கிறார். படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயின். படம் குறித்த மேலும் தகவல்களை இன்னும் ஓ‌ரிரு நாட்களில் எதிர்பாருங்கள்.

> தயா‌ரிப்பாளருக்கு கட்டுப்படியானால் சில்க் வேடத்தில் நயன்?

தி டர்ட்டி பிக்சரை தமிழிலும், தெலுங்கிலும் எடுக்கிறார்கள். இந்தப் படம் வசூலில் சாதனை படைத்ததுடன் வித்யா பாலனுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அதனால் அதன் ‌ரீமேக்கில் நடிக்க நம்மூர் நடிகைகளின் ஆரம்ப தயக்கம் ஓரளவு குறைந்திருக்கிறது.

நிகிதாவில் தொடங்கி அனுஷ்கா, ‌ரிச்சா என பல நடிகைகளின் பெயர்கள் சில்க் வேடத்துக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டன. இறுதியாக இப்போது அடிபடும் பெயர் நயன்தாரா. சில்க் வேடத்துக்கு இப்போது அவரைவிட வேறு சாய்ஸ் இல்லை. இதனை மறுப்பவர்கள் மறுபடியும் பில்லாவை பார்க்கவும்.

இந்த ‌ரீமேக்கிற்காக அதிக சம்பளம் நயன்தாரா தரப்பில் டிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறது. தயா‌ரிப்பாளருக்கு கட்டுப்படியானால் நயன்தாராதான் சில்க்.

Monday, May 14, 2012

> தயா‌ரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் தனுஷ்.

இப்போது வரும் நடிகர்களுக்கு சகலகலாவல்லவனாகும் விருப்பம் இருக்கிறது. வந்தோமா நடித்தோமா என்றில்லாமல் பாடுவது, எழுதுவது, இயக்குவது, தயா‌ரிப்பது என சகலவழிகளிலும் சதாய்க்கிறார்கள்.

நடிக்க வரும்போதே கண்டிப்பா படம் இயக்குவேன் என்று பயமுறுத்தியவர் தனுஷ். பாடுவது, பாடல் எழுதுவது என்று கலங்கடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது ஒரு படத்தை தயா‌ரிக்கிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில் இயக்குகிறார். படத்துக்கு இன்னு‌ம் பெய‌ரிடப்படவில்லை.

சமீபத்திய தகவல் இந்தப் படத்துக்கு ஸ்கி‌ரிப்ட் எழுதியிருப்பது தனுஷாம். செல்வராகவனுடன் இணைந்து மயக்கம் என்ன படத்தின் கதையை எழுதியிருந்தாலும் முழு ஸ்கி‌ரிப்டை தனியாளாக எழுதியிருப்பது இதுதான் முதல்முறையாம்.

3 மாதி‌ரி இருக்கப் போகிறது.

Sunday, May 13, 2012

> விஸ்வரூபம் இறுதிகட்டத்தில்.

கமல்ஹாசனின் பிரமாண்டப் படமான விஸ்வரூபம் அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் அமெ‌ரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நக‌ரில் நடந்து வருகிறது.

எப்போதும் இல்லாத அளவுக்கு விஸ்வரூபம் விஷயத்தில் ரகசியம் காத்து வருகிறார் கமல். இது ஹாலிவுட் ஹானிபால் படத்தின் தழுவல் என்றெல்லாம் வந்த செய்தியை கமல் மறுத்தார். அவர் இதில் தீவிரவாதியாக நடிப்பதாகவும், இல்லை உயர் உளவுத்துறை அதிகா‌ரி என இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

படத்தின் முதல் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஜூன் மாதம் ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேபோல் படத்தை ஜூலை இறுதியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

இந்தப் படத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளனர்.

> பீட்ஸா பெய‌ரில் ஒரு தமிழ் படம்.

ஸ்பைடர்மேன் படத்தில் அவர் பீட்ஸா டெலிவ‌ரி பாயாக இருப்பார். அவரால் ச‌ரியான நேரத்துக்கு பீட்ஸா டெலிவ‌ரி பண்ண முடியாமல் போகும். இது அவருக்கு பெருத்த தலைவலியாக அமையும். ஸ்பைடர்மேனுக்கே எனிமா கொடுத்த அந்த பீட்ஸா டெலிவ‌ரி கஷ்டங்களை வைத்து ஒரு படம் கோடம்பாக்கத்தில் தயாராகிறது. படத்தின் பெயரே பீட்ஸாதான்.

காஞ்சிபுரத்தைத் தாண்டினால் மொத்தமே தென் தமிழ்நாடு மொத்தமும் சேர்த்து ஐம்பது பீட்ஸா கடைகளாவது தேறுமா? அப்படிப்பட்ட ஒரு யாவாரத்தை படமாக்கும் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியதுதான்.

பீட்ஸா பாயாக தென்மேற்குப் பருவக்காற்று ஹீரோ விஜய் சேதுபதி நடிக்கிறார். ஹீரோயின் ரம்யா நம்பீஸன். இந்தமுறை சொந்தக்குரலில் டப்பிங் பேசப்போவதாக மிரட்டியிருக்கிறார். அட்டகத்தி படத்தை தயா‌ரித்தவர்கள் பீட்ஸாவை தயா‌ரிக்க கார்த்திக் சுப்பாராவ் என்பவர் இயக்குகிறார்.

Saturday, May 12, 2012

> க‌ரினா ஹீரோயின் சல்மான், பிரபுதேவா படத்தில்.

பிரபுதேவா இயக்கிய வான்டட் சூப்பர்ஹிட். நூறு கோடிக்கு மேல் வசூல் செய்தது. அப்போதே சல்மான்கானுடன் மீண்டும் பிரபுதேவா இணைவார் எனக் கூறப்பட்டது.

ஐபில் தொடக்கவிழா நிகழ்ச்சியின் போது பிரபுதேவா, சல்மான் சந்தித்துப் பேசினார். இதோ... அந்தப் பேச்சுக்கான பலன் தெ‌ரிய ஆரம்பித்திருக்கிறது.

தற்போது அக்சய் நடிக்கும் ரவுடி ரத்தோர் படத்தை இயக்கிவரும் பிரபுதேவா அடுத்து சல்மான்கானை இயக்கப் போகிறார். ரவுடி ரத்தோர் வெளியாகும் போது அதிகாரபூர்வமாக இதனை அறிவிக்க இருக்கிறார்கள்.

ஹீரோயின் அனேகமாக க‌‌ரீனா கபூராக இருப்பார். எந்தப் படத்தின் ‌ரீமேக் அல்லது பிரபுதேவாவின் சொந்தக் கதையா என்பதெல்லாம் அறிவிப்பின் போது தெ‌ரிய வரும்.

> கலகலப்பு படத்தை தெலுங்கிலும், மலையாளத்திலும் ‌ரீமேக் செய்யும் UTV.

ஓகே ஓகே படத்துக்குப் பிறகு சூடாக விற்பனையான இன்னொரு படம் கலகலப்பு. சுந்தர் சி. இயக்கம், சந்தானம் காமெடி.... இதைப் பார்த்தே பல்க்காக பணம் தந்து ஏ‌ரியாவை கைப்பற்றியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இந்தப் படத்தை 240 திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். பொதுவாக இப்படிப்பட்டப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டும், மலையாளத்தில் நேரடியாகவும் வெளியிடப்படும். ஆனால் கலகலப்பு ஆந்திராவிலும், கேரளாவிலும் ‌ரிலீஸாகவில்லை.

இந்தப் படத்தை தெலுங்கிலும், மலையாளத்திலும் ‌ரீமேக் செய்ய யு டிவி திடடமிட்டுள்ளது. இவர்கள்தான் கலகலப்பை தயா‌ரித்துள்ளனர். இதனால்தான் ஆந்திராவிலும், மலையாளத்திலும் படத்தை வெளியிடவில்லையாம்.

இ‌ன்று கலகலப்பு திரைக்கு வரு‌ந்து‌ள்ளது.

> வழக்கு எண் 18/9 வ‌ரி சிக்கலில்.

சென்ற ஆட்சியில் தமிழில் பெயர் வைத்தாலே முழு வ‌ரிவிலக்கு கிடைத்தது. இந்த ஆட்சியில் சில விதிமுறைகள் புகுத்தப்பட்டன.

தமிழில் பெயர் இருக்க வேண்டும், யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், கலாச்சாரத்தை கட்டிக் காப்பதாக கதை இருக்க வேண்டும்...

இந்த புதிய விதியின் அடிப்படையில் 3 படத்துக்குக்கூட வ‌ரிவிலக்கு அளித்தார்கள். ஆனால் ஸ்டாலின் மகன் என்பதால் உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு வ‌ரிச் சலுகை அளிக்கவில்லை. வழக்கு எண் படம் அனைவராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. ஆபாசம் இல்லை, அடிதடியில்லை, சமூகத்துக்கு தேவையான கருத்துகள்... என்றாலும் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தந்ததால் வ‌ரிச் சலுகை கிடைக்கவில்லை.

யு சான்றிதழுக்கும், யு/ஏ சான்றிதழுக்கு இடையில் நடைமுறையில் ஆறு என்ன ஒரு வித்தியாசம்கூட இல்லை. 18 வயதுக்குட்பட்டோர் பெற்றோர் துணையுடன் படத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அப்படியா நடக்கிறது. சொத்தையான ஒரு விதியைக் காட்டி சத்தான ஒரு படத்திற்கு வ‌ரிச் சலுகை மறுப்பது ச‌ரியா?

இன்னொரு முக்கிய விஷயம், வ‌ரிச்சலுகையால் படம் பார்ப்பவர்களுக்கு துளி பிரயோஜனில்லை. விநியோகஸ்தர், திரையரங்கு உ‌ரிமையாளர், தயா‌ரிப்பாளர் என இந்த முக்கூட்டணிதான் சலுகையை அனுபவிக்கிறது.

> முகமூடி கிளைமாக்ஸ் காரைக்குடியில்.

மிஷ்கின் படமென்றக்ல் ஐயரிடம் பிரசாதம் வாங்குகிறவர்களைப் போல விலலன்கள் ஒவ்வொருவராக வந்து ஹீரோவிடம் அடி வாங்கிச் செல்வார்கள். முதல் படத்திலிருந்து 'யுத்தம் செய்' வரை அப்படிதான். ஆனால் முகமூடியில் அப்படி செய்ய முடியாது. சூப்பர் ஹீரோ கதையாச்சே.

இந்தப் படம்தான் இதுவரை மிஷ்கின் இயக்கியதில் அதிக பொருட் செலவில் தயாராவது. எவ்வளவு கொடுத்தாலும் இளைத்துப் போகாத யுடிவிதான் இதன் தயாரிப்பாளர். வெளிநாட்டிலிருந்து ஸ்டண்ட் மாஸ்டரை தருவித்திருக்கிறக்ர்களாம்.

படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டம் என்றாலும் கிளைமாக்ஸ் எக்ஸ்ட்ரா பிரமாண்டம். காரைக்குடியில் இதனை எடுக்கிறக்ர்கள். ஹீரோ ஜீவாவும் வில்லன் நரேனும் இதில் மோதுகிறக்ர்கள். இதைதான் இப்போது எடுத்து வருகின்றனர்.

கடுமையான உழைப்பு தேவைப்படும் கிளைமாக்ஸ் என்று ஜீவா கூறியிருக்கிறார். இந்த கிளைமாக்ஸுக்கு மட்டும் ஒரு மினிமம் பட்ஜெட் படத்துக்கான பணம் செலவிடப்பட இருக்கிறதாம்.
உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.