++ எப்போ வரும் விண்டோஸ் 7...?
அதோ இதோ என்று பலமுறை ஒத்தி போடப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த ஆண்டில் நிச்சயம் வர இருக்கிறது. சோதனைக்கு அனுப்பப்பட்ட இதன் சில பதிப்புகளை இயக்கிப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. தற்போது நடைமுறையில் உள்ளதாகக் கருதப்படும் விண்டோஸ் விஸ்டா பல நிலைகளில் தோல்வியைச் சந்தித்ததனால் அதன் குறைகளை நிவர்த்தி செய்திடுமா என்ற நோக்கிலேயே விண்டோஸ் 7 இயக்கிப் பார்க்கப்பட்டது. இருப்பினும் விண்டோஸ் 7 தொகுப்பின் இறுதிப் பதிப்பு இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இதன் புதிய பரிமாணங்கள் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.
ஒரு பக்கம் விண்டோஸ் விஸ்டாவின் குறைகள். இன்னொரு பக்கம் நாள் தோறும் ஏதேனும் புதிய வசதிகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் லினக்ஸ்சிஸ்டம் என்ற நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 7 தொகுப்பை மிகச் சிரமப்பட்டு பல கூடுதல் வசதிகளைத் தர முயற்சித்திருப்பது நன்கு தெரிகிறது.
முதலில் நமக்கு வித்தியாசமாகத் தெரிவது விண்டோஸ் டாஸ்க்பார் தான். இதனை முழுவதுமாக மாற்றி இருக்கிறார்கள். இதில் தற்போது எந்த டெக்ஸ்ட்டும் காணக் கிடைக்காது. ஒரு அப்ளிகேஷன் புரோகிராமின் ஐகானை இங்கு நிறுத்தி வைக்கலாம். இந்த புரோகிராம் இயங்காத நிலையிலும் இது காட்டப்படுகிறது. இதனைக் கிளிக் செய்து புரோகிராம் மற்றும் அதன் டாகுமெண்ட்களைப் பெறலாம். இதைத் தானே குயிக் லாஞ்ச் பார் செய்கிறது. பின் ஏன் இந்த வசதி டாஸ்க் பாரில் தரப்பட்டுள்ளது? ஆம், இது சற்று குழப்பத்தினையே தருகிறது. ஏனென்றால் குயிக் லாஞ்ச் பாரும் வலக்கம்போல் இடது பக்கத்தில் இதே வகையில் செயல்படுகிறது.
டாஸ்க் பார் அருகே கர்சரைக் கொண்டு சென்றால் இயங்கும் புரோகிராம்களின் தம்ப் நெயில் படங்கள் காட்டப்படுகின்றன. இந்த வகையில் காட்டப்படும் பிரிவியூ காட்சிகள் நமக்கு வழி காட்டுகின்றன. ஆனால் சில வேளைகளில் ஒரு சிறிய பைலை இயக்க திரை முழுவதும் சுற்றி வர வேண்டியுள்ளது. அடுத்த மாற்றம் நோட்டிபிகேஷன் ஏரியாவில் தரப்பட்டுள்ளது.
முன்பு இங்கு இயங்கும் அப்ளிகேஷன்களின் அனைத்து ஐகான்களும் காட்டப்பட்டு வந்தது. ஆனால் இப்போது நீங்கள் அனுமதிக்கும் ஐகான்கள் மட்டுமே காட்டப்படும். மேலும் இங்கிருந்தே நெட்வொர்க் கனெக்ஷன்களை எளிதாக நிர்வகிக்க முடிகிறது. விண்டோ ஒன்றினை மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக இழுத்தாலே அது மினிமைஸ் ஆகிறது. பக்க வாட்டில் இழுத்தால் அது பெரிய செவ்வகமாக திரையில் நிற்கிறது. விண்டோவின் டைட்டில் பாரினை ஷேக் செய்து மினிமைஸ் மற்றும் ரெஸ்டோர் செய்திடலாம்.
அப்ளிகேஷன் ஒன்றின் ஷார்ட் கட் ஐகானின் அம்புக்குறியைக் கிளிக் செய்தால் அதற்கென ஒரு ஜம்ப் லிஸ்ட் கிடைக்கிறது. இதிலிருந்து அண்மையில் பயன்படுத்தப்பட்ட அந்த அப்ளிகேஷனின் பைல்களுக்கு ஜம்ப் செய்து போகலாம். பயன்படுத்திய போல்டர்களுக்கும் செல்லலாம். வெகுநாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் நமக்குக் காட்டப்பட்டு வந்த கால்குலேட்டரில் தற்போது பல்வேறு மாற்றங்கள் தரப்படுகின்றன.
யூனிட் கன்வெர்டர், புள்ளிவிவரங்கள் அமைப்பு, லோன் திரும்ப செலுத்துதலைக் கணக்கிடுதல், எரிபொருள் கணக்கிடுதல், சம்பளத்தினை மணிக்கணக்கில் கணக்கிட்டுப் பார்த்தல், இரண்டு தேதிகளுக்கு இடையே எத்தனை நாட்கள் எனக் கணக்கிடுதல் எனப் பல்வேறு புதிய பயனுள்ள அம்சங்கள் கொண்டு வருகிறது. எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இதனை எப்போதும் இயக்கிய நிலையில் மினிமைஸ் செய்து தயாராய் வைத்தே கம்ப்யூட்டரை இயக்குவார்கள் என்பதில் மாற்றமில்லை.
விண்டோஸ் எக்ஸ்புளோரரில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. இதன் பக்கவாட்டு பார்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன. டாகுமெண்ட் போல்டருக்குப் பதிலாக லைப்ரரீஸ் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட வகையில் (டைப் – வேர்ட், ஜேபெக், எம்பி3 ..போல) அமைக்கப்பட்ட பைல்கள் அனைத்தையும் வரிசையாகக் காணலாம். அதே போல ஒரு பைலை உருவாக்கியவர், தேதி, ரெசல்யூசன் போன்றவற்றின் அடிப்படையிலும் வகைப்படுத்திக் காணலாம்.
கண்ட்ரோல் பேனலும் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. புதிய வகையில் ஒரு ஆர்டர் தெரிகிறது. ஆனால் தற்போது அனைத்து அப்ளிகேஷன்களும் காட்டப்படுவதால் லிஸ்ட்டில் ஒன்றை தேடிச் செல்வது சிறிய பயணம் போல் அமைகிறது.விண்டோஸ் மீடியா பிளேயர் தன் பதிப்பு 12க்கு இதன் மூலம் செல்கிறது. ஊடுறுவிச் செல்லும் திரை போல நமக்கு இதன் செயல்பாடு காட்டப்படுகிறது. நெட்வொர்க் இணைப்பிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. மொத்ததில் மல்ட்டிமீடியா பிரியர்களைக் கவரும் பல அம்சங்கள் இதில் உள்ளன.
சோதனைப் பதிப்பு என்பதால் முழுமையாக உள்ளே சென்று இதன் அம்சங்களைக் காண முடியவில்லை. இருப்பினும் மேலும் சில புதிய அம்சங்களை இங்கு சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.
* புளு ரே டிஸ்க்குகளில் எழுதவும் படிக்கவும் வசதி தரப்பட்டுள்ளது.
* புளுடூத் 2.1 சாதனங்களுக்கு ஆடியோ வினை மாற்றும் வசதி
* ரிமோட் கம்ப்யூட்டிங் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது; எளிமையாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரின் டெஸ்க் டாப்பினை நீங்கள் பார்வையிட்டு இயக்கலாம்.
* கம்ப்யூட்டர் பூட் செய்வதும் ஷட் டவுண் செய்வதும் மிகவும் குறைந்த நேரத்தில் அமைகிறது. இது நிச்சயமாய்ப் பலருக்கு சந்தோஷத்தினைத் தரும்.
*அதே போல யூசர் அக்கவுண்ட்டினை இயக்குவதும் எளிதாக்கப்பட்டுள்ளது.
* விண்டோஸ் கீயுடன் ப்ளஸ் கீயை அழுத்த அழுத்த மேக்னிபையர் கிடைத்து விண்டோஸ் விரிகிறது.
* பென்டிரைவ், கேமரா போன்ற இணைத்து எடுத்துவிடுகின்ற சாதனங்களை கம்ப்யூட் டரிலிருந்து எடுப்பதற்கு டிவைஸ் ஸ்டேஜ் என்று ஒரு தளம் தரப்படுகிறது. இதன் மூலம் இவற்றை எடுப்பது எளிதாக்கப்பட்டுள்ளது.
* ஜி.பி.எஸ். சென்சாருக்கு சப்போர்ட் தரும் வகையில் தொழில் நுட்பம் அமைந்துள்ளது.
* பேக்கப் மற்றும் ரெஸ்டோர் விஷயங்களில் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது.
* விர்ச்சுவல் ஹார்ட் டிரைவ் சப்போர்ட் தரப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.