ஹரியின் மற்றுமொரு கள்ளன் போலீஸ் விளையாட்டு. வெள்ளை உடை வில்லன், டாடா சுமோ துரத்தல், பன்ச் டயலாக் ஹீரோ என்று பார்த்து ரணமாகிய ஃபார்முலா என்றாலும் இரண்டரை மணி நேரம் ரசிகர்களை சீட்டில் உட்கார வைப்பது சிங்கத்தின் ஸ்பெஷாலிட்டி.நல்லூர் கிராமத்து சப் இன்ஸ்பெக்டர் சூர்யா. மளிகை கடை வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவரை காக்கி போட வைக்கிறது அப்பா ராதாரவியின் ஆசை. கொலை வழக்கில் சிக்கும் சென்னை தாதா பிரகாஷ்ராஜ் நல்லூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று கோர்ட் உத்தரவிடுகிறது. பிரகாஷ்ராஜ் கையெழுத்துப் போட பினாமி ஒருவரை ஏற்பாடு செய்ய சூர்யா அதை மறுக்க தொடங்குகிறது ஆடு புலி ஆட்டம்.
சூர்யா இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சென்னை வருகிறார். வந்த பிறகுதான் தெரிகிறது இந்த பதவி உயர்வும் மாற்றலும் பிரகாஷ்ராஜின் கைங்கர்யம் என்று. அப்புறமென்ன... வில்லன் சவால் விட, ஹீரோ சாகஸம் செய்ய ரணகளத்துடன் கிளைமாக்ஸ்.
போலீஸ் உடைபோட்ட புல்டோசர் போலிருக்கிறார் சூர்யா. ஜீப்பின் கதவு மேற்கூரையை பிய்த்துக் கொண்டு அறிமுகமாகும் போது நமக்கு வியர்க்கிறது. திரையிலிருந்து இறங்கி வந்து நம்மையும் நாலு சாத்து சாத்துவாரோ என்று. கட்டுமஸ்தான உடம்பு காரணமா தெரியவில்லை, காதல் காட்சிகளிலும் சூர்யாவிடம் விறைப்பு தெரிகிறது.
சூர்யாவைவிட பல அங்குலம் அனுஷ்கா உயரம். இந்த இன்பாலன்ஸை சரி செய்வதற்கே ஒளிப்பதிவாளர் ப்ரியன் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். நெருக்கமான காட்சிகளிலும் தள்ளியே இருக்கிறார்கள் இருவரும். கமர்ஷியல் படத்திலும் கறிவேப்பிலையை தாண்டி ஹீரோயினை பயன்படுத்தியதற்காக ஹரிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்.
பிரகாஷ்ராஜிடம் அதே சலிக்காத பழைய மிரட்டல். வில்லன் ஹீரோவிடம் அடங்கிப் போக வேண்டும் என்ற நியதி இருப்பதால் இவரது கதாபாத்திரமும் ஒருகட்டத்தில் கொட்டாவி வரவைக்கிறது. போஸ்வெங்கட், நாசர் இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஏட்டு எரிமலையாக காமெடி என்ற பெயரில் ராவடி செய்கிறார் விவேக். சிரிப்புக்குப் பதில் எரிச்சல்தான் வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில்தான் நமது காதுகளை சோதிக்கிறார். ஹரியின் கதைக்கேற்ற ஒளிப்பதிவு.
சூர்யாவின் ஊர் பாசம், பிரகாஷ்ராஜுக்கு எதிராக ஊர் மக்கள் திரள்வது, பிரகாஷ்ராஜின் திட்டங்களை வைத்தே அவரை மடக்குவது என்று ஹரி ஸ்பெஷல் படம் நெடுக இருக்கிறது.
லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ரசிகனை யோசிக்க விடாத திரைக்கதையின் வேகம் சிங்கத்தை காப்பாற்றுகிறது.
சிங்கம் - கர்ஜனை மட்டும்.
its an entertaining film, hands off to hari for his speed and super screen play, i like surya acting, vivek comedy is boring, finally not a bad film, i have seen that film two times.
ReplyDelete