மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தீபாவளிப் படங்கள் ‌சிற‌ப்பு கண்ணோட்டம்.

நான்குப் படங்கள் வெளியாவதாக இருந்த இந்தத் தீபாவளி இறுதியில் இரண்டுப் படங்களாக சுருங்கியிருக்கிறது. உடம்பு ச‌ரியில்லை முன்பு போல் வேலை செய்வது கடினமாக இருக்கிறது என்று தனது மயக்கம் என்ன தீபாவளிக்கு வெளியாகாததற்கு விளக்கம் அளித்துள்ளார் செல்வராகவன். ஒஸ்தி குறித்து சிம்பு எந்த விளக்கமும் தரவில்லை. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மற்றும் தயா‌ரிப்பு தரப்பின் நெருக்கடி ஆகிய காரணங்களால் ஒஸ்தியும் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆக, வெளிவரவிருப்பது முருகதாஸின் 7 ஆம் அறிவு, ராஜாவின் வேலாயுதம் இரண்டு மட்டுமே.

மூன்று தீபாவளிக்கு முன்புவரை, நான் விஜய் மாதி‌ரியெல்லாம் கிடையாது, அவரைப் போல் ஆட எனக்கு வராது என்று விஜய்யை புகழ்ந்துப் பேசும் நிலையில் இருந்தார் சூர்யா. இன்று காட்சி மாறியிருக்கிறது. விஜய்யை குறித்துப் பேசுவது, அவருக்கு தேவையில்லாமல் ஒரு அந்தஸ்தை உருவாக்கித் தந்துவிடும் என்று நினைக்கும் இடத்துக்கு சூர்யா வந்திருக்கிறார். ர‌ஜினி, கமலுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர்தான். இந்த கௌரவத்தை இதற்கு முன் வைத்திருந்தவர் விஜய். 7 ஆம் அறிவு, வேலாயுதத்துக்கு இடையேயான போட்டியின் கனம் இப்போது ஏகதேசமாக பு‌ரிந்திருக்கும்.

ஷங்கருக்குப் பிறகு கமர்ஷியலில் அடி பின்னுவது முருகதாஸ்தான். இவர் உருவாக்கும் உணர்வுபூர்வமான திரைக்கதைப் பின்னலில் ரசிகர்கள் லா‌ஜிக் ஓட்டைகளை மறந்துவிடுகிறார்கள். இந்தமுறை தமிழனின் பெருமையை சொல்லும் போதி தர்மர் என்று இன உணர்வுக்கு செமத்தியான தீனி தரும் சப்ஜெக்ட். முடிந்த அளவுக்கு இதனை பீக்கிற்கு கொண்டு சென்றிருப்பார். நோக்கு வர்மம், சர்க்கஸ்காரன், இளமை ததும்பும் இளம் விஞ்ஞானி ஸ்ருதி, வெளிநாட்டு வில்லன், ஜெட்லீ டைப் சண்டைகள்... தொலைந்தான் ரசிகன். பிளாக்கில் எவ்வளவுக்கு விற்றாலும் தமிழன் பார்த்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளி வைக்கப்படுவோம்.

விஜய்யை பொறுத்தவரை தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காவலன் பெ‌ரிய வெற்றி என்றதெல்லாம் சும்மா. நான்கு கோடியைக்கூட இப்படம் சென்னையில் வசூல் செய்யவில்லை.

தெய்வத்திருமகள் எட்டு கோடி அளவுக்கு வசூலித்தது. அப்படியானால் காவலன் எந்த மாதி‌ரி வெற்றி என்று பார்த்துக் கொள்ளுங்கள். வேலாயுதத்தைப் பொறுத்தவரை விஜய் இரண்டு மாங்காய் அடித்தாக வேண்டும். முதலில் தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி. இரண்டாவது பாக்ஸ் ஆஃபிஸில் 7 ஆம் அறிவின் பக்கத்திலாவது இருந்தாக வேண்டும். கடினமான இலக்குகள்.

பாக்ஸ் ஆஃபிஸையே வி‌ரித்து பிளாட்ஃபார்ம் ஆக்கியது போன்ற சப்ஜெக்ட் என்பதால் 7 ஆம் அறிவின் வெற்றியில் சந்தேகமில்லை. ஆனால் வேலாயுதம் விஷயம் அப்படியல்ல. கெட்டவனை அழிக்கும் சூப்பர் ஹீரோ. சூப்பர் ஹீரோ கந்தசாமி நொந்த சாமியான ச‌ரித்திரம் நம்மிடையே உண்டு. கிராமத்தில் விதவை தாயார், ஒரே தங்கை சரண்யா மோகன், முறைப்பெண் ஹன்சிகா மோத்வானி என வாழ்ந்துவரும் விஜய், தங்கையின் திருமணத்தை முன்னிட்டு தான் பணம் போட்டிருக்கும் நிதி நிறுவனத்திலிருந்து பணம் எடுக்க பட்டணம் வருகிறார். வந்த இடத்தில் தொலைக்காட்சி நிருபர் ஜெனிலியாவின் அறிமுகம் கிடைக்கிறது. இதனிடையில் பட்டணத்து ரவுடிகளிடமிருந்து ஜெனிலியா காப்பாற்றப்படுகிறார். தன்னை காப்பாற்றியது ஒரு சூப்பர் ஹீரோ என்று ஜெனிலியா ஊடகம் வழியாக செய்தி பரப்புகிறார். இப்போது விஜய்யே அந்த சூப்பர் ஹீரோவாக கெட்டவர்களையெல்லாம் அ‌ழிக்கிறார். இதுதான் வேலாயுதத்தின் ஏகதேசமான கதை. சென்டிமெண்ட், காமெடி, ஆக்சன், காதல் என்று சகலத்தையும் பிழிந்து செய்யப்பட்டிருக்கும் ராஜா ஸ்பெஷல் பதார்த்தம்.

டிக்கெட் ‌ரிசர்வேஷன், திரையரங்குகளின் எண்ணிக்கை, வெளிநாடு மற்றும் கேரள உ‌ரிமை. தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமை என முதல் சுற்றில் வேலாயுதத்தை முந்தியிருக்கிறது 7 ஆம் அறிவு. இறுதி சுற்று எப்படி அமையும் என்பது தீபாவளி அன்று தெ‌ரிந்துவிடும். போதி தர்ம‌ரின் வர்மக் கலையை சூப்பர் ஹீரோ சமாளித்தால் இயக்குனர் ராஜாவுக்கு உண்மையிலேயே ஒரு ஓ போடலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.