மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ராவண‌ன் - விமர்சனம்

தளபதி படத்தில் மகாபாரத கதையை எடுத்துக் கொண்ட மணிரத்னம் இந்தமுறை எடுத்திருப்பது ராமாயணத்தை.

மலைவாழ் மக்களின் ஆதர்ஷ நாயகனாக இருப்பவன் வீரா (விக்ரம்). ஆனால் காவல்துறையை பொறுத்தவரை பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி. வீராவின் அண்ணன் சிங்கராசா (பிரபு)இ தம்பி சக்கரை (முன்னா), தங்கை வெண்ணிலா (ப்‌ரியாமணி).

வெண்ணிலாவின் திருமணத்தன்று வீராவை பிடிக்க வரும் போலீஸ் ப்‌ரியாமணியை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் வெண்ணிலாவின் இறப்புக்கு பழி வாங்க போலீஸ் அதிகா‌ரி தேவின் (பிருத்விரா‌ஜ்) மனைவி ராகினியை (ஐஸ்வர்யாராய்) வீரா கடத்துகிறான். ராகினியின் துணிவும், அழகும் வீராவை கவர்கிறது. இந்த பொருந்தாத காதல் நடைமுறைக்கு ச‌ரிவராது என்று அவளை அவளது கணவன் தேவுடன் அனுப்பி வைக்கிறான் வீரா. ஆனால் தேவ் மனைவியின் கற்பை சந்தேகப்படுகிறான். ராகினி கணவனைவிட்டு வீராவை தேடி வருகிறாள். அவளுக்கும் வீரா மீது காதல் தோன்றுகிறது. ஆனால் ராகினி ஒரு துருப்பு சீட்டு என்பதை நாமும், வீராவும் உணரும் போது காலம் கடந்துவிடுகிறது.

மணிரத்னத்தின் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷுவல் ட்‌ரிட் ஒவ்வொரு ப்ரேமிலும் நிரம்பி வழிகிறது. குறிப்பாக உசுரே போகுதே பாடல் காட்சி. இத்தனை அடர்த்தியான, அழகான காட்டை இதற்குமுன் எந்த தமிழில் சினிமாவிலும் பார்த்ததில்லை என்று உறுதியாக கூறலாம்.

ரஹ்மானின் இசையில் உயிரே போகுதே, வீரா பாடல்கள் கவர்கின்றன. நடிப்பைப் பொறுத்தவரை அனைவருமே பாஸ் மார்க் வாங்குகிறார்கள். ஆனாலும் டிஷ்டிங்ஸன் விக்ரமுக்கும், ஐஸ்வர்யாராயுக்கும்தான். முரட்டு வீரா கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்திப் போகிறார் விக்ரம். முகபாவங்கள் காட்டி வந்த ஐஸ்வர்யாராய்க்கு தனது உடல் பலத்தையும் காட்ட வேண்டிய கதாபாத்திரம். படத்தின் நிறைவான கதாபாத்திரமும் இவருடையதுதான். அனுமானை நினைவுப்படுத்தும் காட்டிலாகா அதிகா‌ரியாக வருகிறார் கார்த்திக். நீ இனிமே இங்கத்தானே இருக்கப் போற என்று விக்ரம் சொன்னதும் ஒரு முகபாவம் காட்டுகிறாரே...சபாஷ். பிரபு, ப்‌ரியாமணி, முன்னா, ரஞ்சிதா ஆகியோருக்கு இந்தப் படம் இன்னொரு வாய்ப்பு மட்டுமே.

சந்தோஷ் சிவன், மணிகண்டன் இருவரும் அசுரத்தனமாக உழைத்திருக்கிறார்கள். சமீர் சந்தாவின் கலை இயக்கம் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக அந்த சிவன் சிலையும், கோடு போட்டா பாடல் காட்சியில் வரும் அந்த கோயில் பகுதியும். ஆக்சன் காட்சிகளும் பழுதில்லை.

தொழில்நுட்பம் மற்றும் நடிப்பைப் பொறுத்தவரை ராவணன் படத்தில் குறைகள் பெருமளவு இல்லை என்றே சொல்லலாம். ஆனால் படம் ரசிகர்களை கவர்கிறதா என்றால், இல்லை. படத்தின் நிறைகள் ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் பொருந்தாமல் குழப்பியடிப்பதுதான் முக்கிய காரணம்.

படத்தின் மைய கதாபாத்திரம் வீரா. ஆனால் இந்த வீரா யார் என்று சா‌ரியாக காட்டப்படவில்லை. ஒருநேரம் கிராமத்தில் இருக்கிறார். இன்னொரு நேரம் மலைவாழ் மக்களுடன் இருக்கிறார். இவர் போராடுவது இதில் யாருக்காக? குறிப்பாக எதை எதிர்த்துப் போராடுகிறார்? மலைவாழ் மக்கள் வீராவைப் பற்றி சொல்லும் சித்திரம் அந்த கதாபாத்திரத்தை விளக்குவதற்குப் பதில் குழப்பவே செய்கிறது. இந்த தடுமாற்றம் உரையாடல், லேண்ட்ஸ்கேப், கலை இயக்கம் என்று எல்லாவற்றிலும் பிரதிபலிக்கிறது.

படத்தின் மிகப் பெ‌ரிய ஏமாற்றம் பின்னணி இசை. பெரும்பாலான நேரம் காட்சிக்கு ஒட்டாமலே ஒலிக்கிறது. உதாரணமாக ஐஸ்வர்யாராய் விக்ரமை தாக்கும் இடம். அவர் ஆக்ரோஷமாக தாக்க, விக்ரம் அதை ரொமான்டிக்காக அனுபவிக்க பின்னணியில் யாத்தே... காட்டு சிறுக்கி என்றெல்லாம் ஈனஸ்வரத்தில் பாடல் வருகிறது. நடிப்பு, உணர்வு, சூழல், பின்னணி இசை என எதுவும் பொருந்திப் போகாத இடங்களில் இதுவும் ஒன்று.

வசனத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். ப்‌ரியாமணி திருநெல்வேலி ஸ்லாங்கில் ஏல போட்டு பேசுகிறார். திடீரென அம்புட்டுதேன் என்று திருநெல்வேலிக்கு சம்பந்தமில்லாமலும் பேசுகிறார். தங்கை திருநெல்வேலி பாஷை பேச அண்ணன்கள் பேசுவதோ வேறு ஒன்று.

தண்ணீருக்கு நடுவில் படகை உடைத்து ஒரு பெண் கடத்தப்படுகிறாhள். கடத்தியது யார் என்று தொ‌ரியாது. என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியாது. இந்நிலையில் அந்தப் பெண் என்ன செய்வாள்? மணிரத்னம் படத்தின் நாயகி ஆக்ரோஷமாக கவிதைப் படிக்கிறாள். யதார்த்தத்தை மீறி மணிரத்னம் செய்யும் இந்த ரொமான்டிஸம் படம் நெடுக வருகிறது. படத்தின் சீ‌ரிஸ்னசுக்கு வேட்டு வைப்பது இந்த ரொமான்டிஸம்தான்.

படத்தின் இன்னொரு முக்கியமான குறை லேண்ட்ஸ்கேப். கதை திருநெல்வேலி அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரம் என்ற ஊ‌ரில் நடிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அங்கு நடக்கும் ப்‌ரியாமணியின் திருமண ஊர்வலத்தில் வாரணாசியில் உள்ளது போன்ற கோயில்களும் கோபுரங்களும் பின்னணியில் வருகின்றன. வட இந்தியர்களைப் போலதான் பலநேரம் உடை உடுத்தியிருக்கிறார்கள் இந்த திருநெல்வேலி மக்கள். ஃபெர்பக்ஷனிஸ்ட் என்று அழைக்கப்படுகிற மணிரத்னத்தின் படத்தில்தான் கதைக்களம் இந்தளவுக்கு துண்டாடப்பட்டிருக்கிறது. (இதற்கு முந்தையப் படம் குரு).

கதை கூறும் முறையிலும் கோர்வையில்லாமல் காட்சிகளும், உணர்வுகளும் துண்டாடப்படுகின்றன. படத்தின் லா‌‌ஜிக் மீறல்கள் பற்றி பல பாராக்கள் எழுதலாம். மொத்தத்தில்,

ராவணன் - ஆன்மா இல்லாத அழகு.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.