மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


**தந்தைக்கு ஆற்றும் உதவி.......

வணக்கம்,

சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் "தமிழ்க்குரல்" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை.

அன்பகலா,
கண்ணன் நடராசன்


'தந்தையருக்கு(ம்) ஒரு தினம்!! - சபேசன்

தந்தையர் தினம் (பாதெர்'ச் டாய்)! மேற்கத்திய நாடுகளில் தாய்மார்கள் தினம், காதலர் தினம் என்று தாய்மார்களுக்கும், காதலர்களுக்கும் தனித் தினங்கள் ஒதுக்கப்பட்டு கொண்டாடப்படுவது போல், தந்தையர்களுக்கு ஒரு தினம் ஒதுக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

நாட்டுக்கு நாடு தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள் வித்தியாசப்பட்டாலும், 'தந்தையர் தினம்' என்ற அந்த நாள் உணர்வுபுர்வமான, அர்த்த புர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது.

தந்தையர் தினம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்கு, பலவிதமான பதில்கள் காத்திருக்கின்றன. அமெரிக்கா நாட்டின், மேற்கு வேர்ஜினியாவில் 1908 ஆம் ஆண்டு தந்தையர் தினம் ஆரம்பமானது என்று ஒரு சிலரும், வாஷிங்டனில் உள்ள வான்கூவர் நகரத்தில் தந்தையர் தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது என்று சிலரும் சொல்வதுண்டு.

சிக்காகோ நகரின் 'லயன்ஸ் கழகத்தின்' தலைவரான ஹாரிமீக் என்பவர் தந்தைகளைப் போற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பலதரப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் என்றும், அதன் காரணமாக அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அமெரிக்க லயன்ஸ் கழகம் அவருக்கு 'தந்தையர் தின நிறுவனர்', என்று பட்டமளித்ததாகவும் வரலாற்று குறிப்பு உண்டு.

எது எப்படி இருப்பினும், 'தந்தையர் தினம்' என்ற ஒரு தினம் ஏற்படுத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக விளங்குவது ஓர் ஆணின் கடமையால், நன்றி கொண்ட ஒரு பெண்தான் என்பதனை வரலாறு பதிவு செய்து நிற்கிறது.

1909 ஆம் ஆண்டளவில் வாஷிங்டனில் உள்ள ஸ்போகேன் (ச்போக்ணே) நகரின் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாய்மார்கள் தினம் கொண்டாடப்படுவது, அப்போதுதான் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேவாலயத்தில் அமர்ந்திருந்து பிராத்தித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு மட்டும் தாயின் நினைவுகள் நிழலாடவில்லை. மாறாக, அவளுக்கு தன் தந்தையின் ஞாபகங்கள் தான் நெருணி நிரைத்த வண்ணம் இருந்தன. ஏனென்றால் அப்பெண் மிகச்சிறு வயதாக இருந்த போதே அவளது தாயார் இறந்து விட்டாள். அந்த பெண்ணையும், அவளது ஐந்து சகோதரர்களையும் அன்புடன் பராமரித்து, தாயாக அன்புகாட்டி தந்தையாக வளர்த்து வந்தது அவளது தகப்பனார் தான். அந்த ஆராதனையில், தாயை பற்றிச் சொல்லப்பட்ட ஒவ்வொரு சொல்லும் அவளுக்குத் தன் தந்தையைத்தான் ஞாபகப்படுத்தியது.

திருமணமாகி தன்னுடைய குடும்ப வாழ்வை தொடங்கி விட்டிருந்த அந்த பெண்மணியின் பெயர் திருமதி சொனாரா டொட் (ம்ர்ச்.சோனொர ளௌய்செ டோட்ட்). திருமதி சொனாரா டொட்டின் தாயார் தனது மகவொன்றின் பிரசவத்தின் போது 1898 ஆம் ஆண்டு அகால மரணமடைந்திருந்தார். சொனாராவையும், அவரது ஐந்து சகோதரர்களையும், தனி ஒருவனாக அவர்களது தந்தையே வளர்த்திருந்தார். அந்த தந்தையின் பெயர் வில்லியம் ஜக்ஸன் ஸ்மார்ட் (நீல்லியம் ஜாச்க்சொன் ச்மர்ட்) தன்னுடைய சின்னஞ்சிறிய குழந்தைகளை- ஆறு பிள்ளைகளை- தாயாக, தந்தையாக அன்பு காட்டி அரவணைத்து வளர்த்தெடுத்த வில்லியம் ஜக்ஸன் யார் தெரியுமா நேயர்களே? ஓரு போராளி! தனது நாட்டுக்காகப் போராடிய போர் வீரன்! தனது மனைவியை இழந்த போதும், தன் தாய் நாட்டின்மீது தான் காட்டிய நேயத்தை, தாயை இழந்த தன் மகவுகளிடம் காட்டிய ஓர் உண்மையான மனிதன், தந்தை கிறிஸ்தவச் சமயத்தின் அம்மையப்பன். அன்று - அன்றைய தினம் - தேவாலயத்தில் தாய்மார்களின் சிறப்பைப்பற்றிய உரைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த போராளியின் மகளுக்கு, அவையெல்லாம் தன் தந்தையைப் பற்றித்தான் சொல்வது போலிருந்தன.


தன்னந்தனியனாகத் தம்மை வளர்ப்பதற்கு, தம் தந்தை பட்ட கஷ்டங்களெல்லாம் அந்த மகளின் மனதை மீண்டும், மீண்டும் உருக்கின. தாய்மார்களுக்கு ஒரு தினம் என்பது போல, தந்தையருக்கும் ஒரு தினம் தேவை - என்ற எண்ணம் அந்த பெண்ணுக்கு, அந்த மகளுக்கு உருவானது. அது வலுப்பெற்றது. அவள் ஒரு போராளியின் மகள் அல்லவா! ஆகையால், அவள் தன் எண்ணத்தை செயலாற்றத் துணிந்தாள்.

கிறிஸ்தவ தேவாலயத்தின் ஊடாக, மதகுருமார்கள் ஊடாக, திருமதி சொனாரா டொட் அவர்கள் தனது பிரச்சாரத்தை, பரப்புரையை ஆரம்பித்தார். ஏற்கனவே, தாய்மார்கள் தினத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்த பத்திரிகைகள், திருமதி சொனாரா டொட்டின், தந்தையர் தினத்தை வரவேற்றுச் செய்திகளை வௌயிட ஆரம்பித்தன. ஸ்போக்கேன் நகர பிதாவும், கவர்னரும், திருமதி டொட் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அறிக்கைகளை விடுத்தார்கள்.

வில்லியம் ஜென்னல்ஸ் பிரைன் போன்ற அரசியல்வாதிகளும், தந்தையர் தினம் என்ற திட்டத்தை வரவேற்று பேசினார்கள். வாஷிங்டன் நகர், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை, தந்தையர் தினமாக பிரகடனப்படுத்திக் கொண்டாட ஆரம்பித்தது.

திருமதி சொனாரா டொட்டின் தந்தையான வில்லியம் ஜக்ஸன் ஸ்மார்ட்டின் பிறந்த மாதமும், ஜூன் மாதத்தில் தான் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும், தாய்மார்களின் தினம் போல், தந்தைமார் தினம் உடனடியாக பிரபலம் அடையவில்லை என்பதே உண்மையாகும்.
(அதனை இன்றைய தந்தைமாரும், மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள் என்பது வேறு விடயம்.)

1916 ஆம் ஆண்டளவில் அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன் (நோஒற்றொந் நீல்சொன்), இந்த தந்தையர் தினக் கருத்தை ஏற்றுக் கொண்ட போதும் அது, தேசிய மயமாக்கப்படவில்லை.

1924 ஆம் ஆண்டு, ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் (சால்வின் சோஒலிட்கெ) தந்தையர் தினத்தை, ஒரு தேசிய நிகழ்வாக பிரகடனம் செய்தார். 1966 ஆம் ஆண்டு, அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த லின்டன் ஜோன்சன், யூன் மாதத்து 3 ஆவது ஞாயிற்றுக்கிழமையை அமெரிக்காவின் தந்தையர் தினமாக பிரகடனம் செய்தார். ஆயினும், உலகின் பல்வேறு பாகங்களில் வெவ்வேறு மாத தினங்களில், தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றதனை நாம் காணக்
கூடியதாக இருக்கிறது.

உதாரணமாக அவுஸ்திரேலியாவிலும், நியுசிலாந்திலும் செப்டெம்பர் மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதனை இங்கு சுட்டிக் காட்டலாம். வெள்ளை ரோஜா மலரும், சிவப்பு ரோஜா மலரும் தந்தையர் தினத்திற்கு உரிய மலர்கள் என்பதை, இங்கே ஒரு உபரித் தகவலாக தர விழைகின்றோம்.

வெள்ளை ரோஜா மலர் - ஒருவரது தந்தை காலமாகி விட்டார் என்பதையும்,
சிவப்பு ரோஜா மலர் - ஒருவரது தந்தை வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதையும் குறிப்பிட்டு கௌரவப்படுத்துகின்ற விடயங்களாகும்.

மேற்கத்தைய நாடுகளில் தந்தையர் தினம் என்பதை, இன்று ஓர் அவசியமான தினமாகப் பரிமாணம் எடுத்துள்ளதோடு, வியாபார ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தற்கால உலக வழிமுறைகளுக்கு ஏற்ப, உணர்வுக்கும் - பொருளியலுக்கும் ஓர் அருமையான தளத்தையும், தந்தையர் தினம் இன்று ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தந்தையர் தினம், தாய்மார்கள் தினம் போன்றவை எல்லாம் வெள்ளைக்காரன் பண்பாடு, தமிழர்களாகிய எங்களுக்கு இவையெல்லாம் தேவையில்லை! எமக்கு ஆண்டின் எல்லா நாட்களும் தந்தையர் தினம் தான்!
தாய்மார் தினம் தான்! என வாதிடும் எம்மவர்களையும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இவர்களது வாதங்கள் தப்பானவை என்றே எமக்கு தோன்றுகிறது.

தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டு வாழ்வியலின் பல அம்சங்கள், இப்போது குறியீடுகளாகவே அடையாளம் காணப்படுகின்ற காலகட்டத்திற்கு நாம் வந்துள்ளோம்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் ஓர் இனத்தின் பண்பாட்டு மேன்மைக்கும் நாகரிகச் சிறப்பிற்கும் அத்தியாவசியமாக அமைந்து வருகின்றன. அத்தகைய சிறப்பும், தகுதியும் தமிழ் மொழிக்கு இருப்பதனால் தான், தமிழ் மொழியும் ஆயிரம், ஆயிரம் ஆண்டுக் காலமாக அழியாது, தழைத்து சிறந்து, வளர்ந்து வளர்கின்றது.

பழைமையை போற்றுவதாக நினைத்துக் கொண்டு, புதுமையை ஏற்றுக் கொள்ள மறுத்தோமேயானால், நாங்கள் பழைமையை இழப்பதோடு மட்டுமல்லாது, புதுமையையும் தவறவிடுகின்ற வரலாற்றுத் தவறுகளுக்கு உடந்தையாக இருக்க நேரிடும். புதுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் தாக்கிப்பதற்கு 'எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்', என்பதல்ல பொருள்.

முன்னர் நாம் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டவற்றையெல்லாம் மீள் பரிசீலனை செய்து செரிவானவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,
பொருள் கொள்ளலாம்.

'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்; அப்பொருள்,
மெய்ப்பொருள் காண்பதறிவு - என்பதே வள்ளுவரின் வாக்கு ஆகும்.

மற்ற இனங்களைப் போல, ஆணாதிக்கக் கட்டமைப்பு முறை, தமிழரிடையே இருந்தாலும், அடிப்படையில் அது ஒரு தாய்வழிச் சமுதாயமாகவே இயங்கி வந்துள்ளது. அதனடிப்படையில் பார்த்தாலும், 'தந்தை என்பவருக்குரிய பண்புகளும், பொறுப்புகளும் தொல் தமிழர் வாழ்விலே எடுத்துக் கூறப்பட்டிருப்பதை நாம் காணுகிறோம்.

தந்தை என்ற தமிழ் சொல்லே தந்தைக்குரிய தகுதியை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. ஒருவன், ஒரு பொருளைத் தந்தால், அவன் தந்தவன் ஆகிறான். உலகியலில் உள்ள தருதல் வழக்கத்தை உன்னித்து உணர்ந்தால் உண்மை புலப்படும்.

தந்தை-என்ற பெயருக்கு உள்ள அடிப்பொருளும் தெளிவாகும். மகவைத் தந்தவன் தந்தையானான். பழந்தமிழர் வாழ்க்கை முறையில், இன்னும் ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்ககூடும்.

காதல் வாழ்க்கையின் போதும், மணவாழ்க்கையின் போதும், தலைவன் தலைவி என்றும், கணவன் மனைவி என்றும், ஆணை முதன்மைப்படுத்தியே விளிக்கப்பெற்று வந்தததையும் மகவு பிறந்த பின்னர், தாய்-தந்தை, அம்மையப்பன் என்று பெண்ணை முதன்மைப்படுத்துவதையும், நாம்
சுட்டிக் காட்டலாம்.

தந்தையின் கடமைகள் குறித்து திருக்குறளிலும், சங்க இலக்கியங்களிலும் சொல்லப்பட்டிருப்பதையும் நாம் காண்கின்றோம்.

"தந்தை மகற்காற்று நன்றி, அவையத்து முந்தி இருப்பச் செயல் - (குறள்-67) என்ற குறள் மூலம் தந்தையானவன், தனது மகவுக்கு செய்ய வேண்டிய முதற்கடமை, அவனை கல்வியில் சிறந்தவன் ஆக்குதலே என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

ஒரு தந்தை, தனது மகனை செல்வனாக்குவதிலும் பார்க்க, அவனை கல்விமானாக்குவதே சிறந்தது என்பது இக்குறளின் உட்கருத்தாகும். தந்தையின் இந்த முதற் கடமையை நாம் புறநானூறிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. பொன்முடியார் பாடிய இப்பாடல் ஒரு மறக்குடித்தாயின் மனநிலையை கூறுவது போல் அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பாக அமைகின்றது.

புறநானூறில் 312 ஆவது பாடல், இவ்வாறு கூறுகின்றது -

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே:
சான்றோன் ஆக்குதல், தந்தைக்குக் கடனே:
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே:
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவான் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து
பெயர்த்தல் - காளைக்குக் கடனே
என்னுடைய முதன்மையான கடமை பெற்று வளர்த்து
வெளியே அனுப்புதல்.

தந்தையின் கடமையோ, அவனை சான்றோனாக ஆக்குதல்.

வேல் வடித்துத் தருதல் கொல்லனின் கடமை. நல்ல முறையிலே அவனுக்குப் போர்ப்பயிற்சி முதலியன அளித்தல் வேந்தனுடைய கடமை. இவ்வளவு கடமைகளையும் பிறர் செய்ய, ஒளிர்கின்ற வாளைப் போர்க்களத்திலே சுற்றிக் கொண்டு அஞ்சாது நின்று வென்று பகை மன்னர் களிற்றையும் கொன்று, மீண்டு வருதல் வளர்ந்து, காளையான அவனது கடமையாகும். இதனை அறிவீராக. என்று புலியுர் கேசிகன் பொருள் கூறுகின்றார்.

தந்தையர் தினத்தின் மூலம் தனது தந்தையை உலகளாவிய முறையில் திருமதி சொனாரா டொட் அவர்கள் உயர்த்திச் சிறப்பித்தார். இதே விடயத்தைத் திருவள்ளுவர் மறுவடிவமாகக் கூறுதல் மிகுந்த நயமுடையதாக உள்ளது.

"மகன் தந்தைக் காற்றும் உதவி, இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும்
சொல்" - குறள் 70-தான் பிறந்ததில் இருந்து, தன்னை வளர்த்துக் கல்வி கற்க வைத்து, உலகில் பிழைப்பதற்கு ஒரு தொழிலில் பயிற்று, மணம் செய்வித்து மனையறப் படுத்தி, தனது தேடலிலும், ஒரு கூறளித்த தன் தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கைம்மாறு என்ன!

மகன் செய்ய வேண்டிய கைம்மாறு 'இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல். அதாவது மகனின் அறிவாற்றலையும் நற்குண, நற்செயல்களையும் கண்டவர்கள், இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்று வியந்து கூறுகின்ற சொல்லை அவர்கள் வாயிலிருந்து தானாக வரச் செய்தலாகும். இந்த குறளில் இன்னுமொரு நயம் உள்ளது. இங்கே சொல் என்பது சொல்லைப் பிறர் மூலம் வருவிப்பதைக் குறித்து நிற்கின்றது. கொல் என்பது ஐயம் குறித்த இடைச் சொல்லாகும். தந்தை நெடுங்காலமாக செய்து வந்த பல்வேறு பெருநன்மைக்கும், மகன் செய்யவேண்டிய கைம்மாறு ஒரு சொல்லே என்று, ஒருவகை அணிநயம் படத் திருவள்ளுவர் கூறுகின்றார். இதனால் தந்தை செய்த நன்றிக்கு சரியாக ஈடு செய்தல் அது என்ற உட்பொருளையும் காணுகின்றோம்.

திரைப்படப்பாடல்களையும் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது. கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றில் வருகின்றது,

"குழந்தை பாரம் உனக்கல்லவோ, குடும்ப பாரம் எனக்கல்லவோ கொடியிடையின் பாரம் எல்லாம் பத்து மாதக் கணக்கல்லவோ!"

மனைவியுடன் குழந்தையையும் ஒருவனாக சுமக்கின்றேன். சுமப்பதுவும் சுகம் என்று மனதுக்குள்ளே ரசிக்கின்றேன் என்ற வரிகளை, எல்லாத் தந்தையர்களும் முற்றாக ஆமோதிப்பார்கள் என்ற தைரியத்தில் இந்த கட்டுரையை முடிக்கின்றோம்.

இந்த கட்டுரையை எழுதுவதற்கு,
ஒப்பியன் மொழி நூல்,
திருக்குறள்,
தமிழ் மரபுரை,
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்,
புறநானூறு,
தமிழ் வளம்-சொல், போன்ற நூல்கள் பெரிதும் உதவின. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள். சபேசன்

- நன்றி கண்ணன் நடராஜன்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

Note: Only a member of this blog may post a comment.