மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


++ கிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தனுஷிகாவின் படுகொலை

வீரகேசரி நாளேடு 5/5/2009 9:02:45 AM

தனுஷிகாவை முதலில் உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்!

அவளுக்கு அப்பா இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனுஷிகாவின் அப்பா சதீஷ்குமாரை இனந்தெரியாதவர்கள் யாரோ கடத்திச் சென்று விட்டார்கள். அதற்குப் பிறகு அவர் பற்றிய செய்திகள் எதுவும் இதுவரை இல்லை. தனுஷிகாவின் அம்மா நித்திய ரஜினி. கணவனைப் பறிகொடுத்த துயரம் நெஞ்சு நிறையக் கிடந்தாலும், பிள்ளைகளை எப்படியாவது வளர்த்தெடுக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்! நித்திய ரஜினி முன்பு மட்டக்களப்பு மாநகர சபையில் வேலை செய்து வந்தார். இப்போது கல்லடியிலுள்ள பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் கடமை புரிகின்றார்.

அம்மா வேலைக்குப் போவதால், தனுஷிகாவை அவளின் தாத்தா முத்துவேல்தான் பாடசாலைக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவார். அன்று செவ்வாய்க்கிழமை ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி காலை 7.30 மணி வழமைபோல் தனுஷிகா அவளின் தாத்தாவுடன் பாடசாலை செல்கிறாள். அதே நாள் நண்பகல் 1 மணியிருக்கும் பாடசாலை முடியும் நேரம் முத்துவேல் வந்து தனது பேர்த்தி தனுஷிகாவை அழைத்துச் செல்லக் காத்து நிற்கின்றார். நேரம் செல்கிறது. ஆனால், தனுஷிகா வரவேயில்லை. பிள்ளையைக் காணாத தாத்தா பதற்றமடைகிறார். குழந்தையைத் தேடுகிறார். பாடசாலை ஆசிரியர்கள், பிள்ளைகளிடம் விசாரிக்கின்றார். அப்போதுதான் தெரிகிறது, தனுஷிகா வகுப்புக்கே வரவில்லையென்று. வரவுக் குறிப்புப் புத்தகத்தில் தனுஷிகா பாடசாலைக்கு வந்ததாகத்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ""தனுஷிகா பாடங்களுக்கு வரவில்லை. வெளியில் சென்று விளையாடிக் கொண்டிருந்தாள்'' என்கிறார்கள் அவளின் வகுப்பில் படிக்கும் சக பிள்ளைகள். அப்படியென்றால், தனுஷிகா எங்கே போனாள்? அவளுக்கு என்ன ஆனது? பிள்ளையின் குடும்பமே தேடத்தொடங்கியது! ஆனால், தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. தனுஷிகாவின் குடும்பமே அதிர்ந்து போய்க் கிடக்கிறது.

அதே தினம் இரவு 8 மணியிருக்கும் தனுஷிகாவின் வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவளின் அம்மா நித்தியரஜினிதான் பதிலளித்தார். மறுமுனையில் ஒருவன் பேசினான். அவன் தனுஷிகாவைக் கடத்தி வைத்திருப்பதாகச் சொன்னான். விடுவிக்க வேண்டுமென்றால் முதலாம் திகதிக்கு முன்னர் 30 இலட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என்றான். தனுஷிகாவின் அம்மாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ்வளவு பணம் தன்னிடம் இல்லையென்றும், குறைவான தொகையென்றால் எப்படியாவது தருவதற்கு முயற்சிக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஆனால், கேட்ட தொகையிலிருந்து அவன் மாறவேயில்லை. தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

அழைப்பு எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் அது ஒரு கைப்பேசி இலக்கம்! அந்த இலக்கத்தைத் தொடர்புகொண்டால் அழைப்புக் கிடைக்கவில்லை.

இவ் விடயம் ஊரெல்லாம் பரவி, பிறகு தேசிய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக மாறியது. பாடசாலைத் தரப்பார், ஊர் மக்கள் எல்லோரும் தனுஷிகாவை விடுவிக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அரசியல்வாதிகளிலிருந்து அதிகாரிகள் வரை கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால், தனுஷிகா மட்டும் வரவேயில்லை. ""தனுஷிகா வீட்டுக்கு மூத்த பிள்ளை. நான்கு வயதில் ஒரு தங்கையிருக்கிறாள். மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் தனுஷிகாவுக்கு எட்டு வயதுதான் ஆகிறது. வகுப்புத் தலைவியும் அவள்தான். கடைசியாக நடந்த வகுப்பேற்றப் பரீட்சையில் 3ஆவது ஆளாக வந்தாள். கெட்டிக்காரி'' என்று தொண்டை கனக்கப் பேசுகிறார் தனுஷிகாவின் மாமா ஜனரஞ்சன். ""கடத்தியவர்கள் பிறகு எப்போதாவது தொடர்பு கொண்டார்களா?'' ஜனரஞ்சனிடம் கேட்டோம். ""ஆம். முதலாம் திகதி பிற்பகல் 2 மணியளவில் இரண்டாவது தொலைபேசி அழைப்பு வந்தது. அன்றைய தினம் பிற்பகல் 5 மணிக்கே பணத்தை தர வேண்டுமென்றார்கள். தனுஷிகாவின் அம்மாதான் பேசினார். ஆனால், எங்கே? எப்படி? கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் சொல்லவில்லை. அடுத்த நாள் காலை பிள்ளையின் சடலம்தான் கிடைத்தது'' என்றார் அவர். செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்ட தனுஷிகா 02ஆம் திகதி சனிக்கிழமை காலை, பாழ்ங் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாள்! பிள்ளை கடத்தப்பட்ட அன்று அல்லது அதற்கு மறுநாளே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் நம்பப்படுகிறது. அந்தளவுக்கு சடலம் மிகவும் அழுகிப் போயிருந்தது. இத்தனைக்கும் பாடசாலையிலிருந்து சடலம் கிடந்த கிணறு சுமார் 500 மீற்றர் தூரத்துக்குள்தான் இருக்கிறது. பிறகென்ன வழமைபோல் பொலிஸார் வந்தார்கள். நீதிபதி வந்தார். சட்ட வைத்திய அதிகாரி வந்தார். அஞ்சலி தெரிவிக்க ஊரவர்கள் வந்தார்கள்.

ஆனால், தனுஷிகா ?

ஒரு பூவைக் கிள்ளிக் கசக்கி எறிவது போல் யாரோ ஒருவர் இதைச் செய்து விட்டுப் போயிற்று! ஆனால், எட்டு வருடங்கள் கோடிக்கணக்கான கனவுகளுடன் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த அவள் தாயின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்வது? யார் பதில் சொல்வது?

கணவனைப் பறிகொடுத்து இரண்டு வருடங்கள் கழிவதற்குள் குழந்தையையும் இழந்து தவிக்கும் அந்தத் தாய்க்கு ஆறுதல்தான் இனி ஏது?

திருகோணமலையில் குழந்தை வர்ஷா கொலையாகி இரண்டு மாதமாகவில்லை. அதற்குள் இன்னுமொரு கொலை! இவைகளுக்கெல்லாம் என்னதான் காரணம்? ஆராய்ந்து பார்த்தால், ஆகக்குறைந்தது 04 தேவைகளுக்காக சிறுவர்கள் இவ்வாறு கடத்திக் கொலை செய்யப்படுவதாக அறிய முடிகிறது. அவை;

கப்பம் பெறுவதற்காக, பாலியல் துஷ்பிரயோகம் புரிவதற்காக, பெற்றோர்களைப் பழிவாங்குவதற்காக, சும்மா பொழுது போக்குக்காக. நான்காவது காரணத்தைப் படிக்கும்போது ஏதோ "காமடி' போலகூட சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இந்தத் காரணம்தõன் மிகமிக அபõயகரமானது. அமெரிக்காவில் குழந்தைகளையும், சிறுவர்களையும் கடத்தி தொடராகக் கொலை செய்து வந்த ஒருவனைப் பொலிஸார் கைது செய்து விசாரித்தனர். அத்தனை கொலைகளையும் செய்ததற்கு அவன் சொன்ன காரணம் என்ன தெரியுமா? வேறொன்றுமில்லை. ""சும்மா பொழுதுபோக்குக்காகச் செய்தேன்'' அவ்வளவுதான். அவனைப் பற்றி பொலிஸார் தீவிரமாக விசாரித்த போதுதான் தெரியவந்தது. அவன் ஒரு வகையான மனநோயாளி. இவ்வாறானவர்கள் மற்றவர்களின் பார்வைக்கு சாதாரணமானவர்களைப் போல்தான் தெரிவார்கள். இவர்களுக்குள் இருக்கும் இந்த வக்கிரத்தையும், வன்மத்தையும் அத்தனை இலகுவில் நம்மால் அடையாளம் கண்டுவிட முடியாது. இவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள். ஆனால், ஒரேயொரு ஆறுதல், இவ்வாறான மனநோயாளிகள் சமூகத்திலும் ஆயிரத்தில், பத்தாயிரத்தில், லட்சத்தில் ஒருவர்தான் இருப்பார்களாம்! பணத்துக்காக அல்லது பாலியல் துஷ்பிரயோகத்துக்காகக் கடத்துவோர் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்வதில்லை. பிள்ளைகள் மீது அவர்கள் பிரயோகிக்கும் கடுமையான பலாத்காரம் அல்லது சித்திரவதையின் போதுதான் பல வேளைகளில் இந்தக் கொலைகள் நிகழ்கின்றன.

சிலர் "குழந்தைகளை விடுவித்தால், எங்கே நம்மை அடையாளம் காட்டி விடுவார்களோ' என்கின்ற பயத்திலேயே கடத்திய பிள்ளைகளைக் கொலை செய்து விடுகின்றார்கள். இப்படி ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு காரணம் பின்னணியில் இருக்கிறது. ஆனால், எந்தக் காரணமும் குழந்தையை இழந்த தாயின், தந்தையின், சகோதரர்களின் வலியை நிவர்த்திக்கப் போவதில்லை; அழுøகயை நிறுத்தப் போவதில்லை; வெறுமையை நிரப்பப் போவதில்லை.

ஒரு துர்மரணம் நிகழ்ந்து விட்டால், அது நிகழ்ந்ததுதான்! எனவே, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் உச்சபட்ச கவனத்தோடு இருப்பதற்கு முயற்சிக்கவேண்டும். யார் வந்து எதைச் சொல்லி அழைத்தாலும் பாடசாலையை விட்டுப்போகக்கூடாது, வெளியிடங்களில் யாராவது தின்பண்டம் தந்தால் வாங்கக்கூடாது, குடும்ப உறவு இல்லாதவர்களின் வாகனங்களில் ஏறக்கூடாது என்பது போன்ற சின்னச் சின்ன அறிவுரைகளை குழந்தைகளுக்குக் கூறலாம். இல்லவே இல்லாத
பேய்கள் பற்றியும், பூதங்கள் பற்றியும் கதைகளைச் சொல்லிச் சொல்லி குழந்தைகளை உறங்க வைப்பதை விடவும், நம் சமூகத்தில் இருக்கின்ற இந்தக் கொடூர மனிதர்கள் பற்றி நம் குழந்தைகளுக்கு உரக்கச் சொல்வோம்! அவர்களை விழிப்புடன் வைப்போம்!
OR
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

2 நான் சம்பாதிச்சது:

Note: Only a member of this blog may post a comment.