ஒரு சிற்றூரில் வசித்த குடியானவன் ஒருவனுடைய பூனை அதிகம் சேட்டை செய்து வந்தது. அந்தப் பூனை செய்த குறும்புகளால் ஊர் மக்கள் பலரின் பகையை அவன் சம்பாதிக்க நேர்ந்தது. பல முறை எச்சரித்தும் பூனை கேட்காததால் அதனை ஒரு கோணிப் பையிலிட்டு காட்டில் கொண்டு விட்டுவிட்டு வந்துவிட்டான் அந்தக் குடியானவன். அந்தப் பூனை காட்டில் வசித்த வேடனொருவனின் பரணில் அடைக்கலம் தேடிக் கொண்டது. தினமும் பசிக்கும் போது வெளியேறி பறவையையோ எலியையோ கொன்று தின்று பசியாறி விட்டு பரணுக்குத் திரும்பிவிடும்.
இவ்வாறாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் இரை தேடிச் சென்ற பூனையை பெண் நரி ஒன்று பார்த்துவிட்டது. அந்த நரி அதற்கு முன் பூனைகளைப் பார்த்தே இராததால் அதிசயமுற்று பூனையிடம், "தாங்கள் யார்? இதற்கு முன் தங்களைப் போன்ற விலங்கினத்தை நான் கண்டதே இல்லையே!" என்று கேட்டது.
அதற்கு பூனை, "என்னைப் பற்றி யாரும் உனக்குச் சொல்லவில்லையா? நான்தான் அரசர் சார்பில் இந்தக் காட்டை ஆள வந்திருக்கும் தளபதி. எனது பெயர் மகாவீரன்" என்றது.
அதனைக் கேட்ட நரி பூனையுடன் நட்பு பாராட்ட எண்ணி அதனைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தது. பூனையும் அதற்கு இசைந்து நரியுடன் அதன் வளைக்குச் சென்றது. பூனைக்கு விருப்பமான உணவுகளைப் படைத்த நரி, "தளபதியாரே, தங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?" என்று கேட்டது. பூனை இல்லை என பதிலளித்ததும், "என்னை நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இனிதே பணிவிடை செய்வேன்" என்று பூனையிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தது. நரியின் ராஜோபசாரத்தில் மனம் குளிர்ந்த பூனையும் அந்த யோசனைக்கு ஒப்புக் கொண்டது.
பூனையும் நரியும் மண வாழ்க்கையைத் தொடங்கிய பின் ஒரு நாள் நரி இரை தேட வெளியில் சென்றது. அப்போது எதிரில் வந்த ஓநாய் நரியை நோக்கி, "ஊசி முக தேவதையே, உன்னைக் கொஞ்ச நாளாக வெளியில் காணவில்லையே, என்ன காரணம்?" என்று கேலியாகக் கேட்டது.
சினம் கொண்ட நரி, "நான் முன்பு போலத் தனியாள் இல்லை. வீராதி வீரரான என் கணவருக்கு நீ என்னைக் கேலி செய்தது மட்டும் தெரிந்தால் நீ உயிருடனே இருக்க மாட்டாய்" என்று எச்சரித்தது.
"என்ன, உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா! உனது கணவர் அவ்வளவு பெரிய வீரரா?" என்று வியப்புடன் கேட்டது ஓநாய்.
"உன்னைப் போன்ற முட்டாள்களுக்கெல்லாம் அரசர் அனுப்பிய தளபதியைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அதனால்தான் நீ இப்படி ஒரு கேள்வி கேட்கிறாய்" என்று ஏளனம் செய்தது நரி.
"எனது அறியாமைக்காக மன்னிப்புக் கோருகிறேன். எனக்கு உன் கணவரைச் சந்திக்க ஆவலாக இருக்கிறது. எப்போது அவரை சந்திக்கலாம்?" என்று ஆவலாகக் கேட்டது ஓநாய்.
"அவரது அந்தஸ்துக்கு அவரை வெறும் கையுடன் பார்க்க வந்துவிடாதே. ஒரு கொழுத்த காளையை வேட்டையாடிக் கொண்டு வா. அவர் மிகவும் கோபக்காரர். அதனால் அவர் கண்ணில் படும்படி நிற்காதே. பார்த்தாரோ தொலைத்து விடுவார்" என்று கூறியது நரி. ஓநாயும் அதற்கு ஒப்புக் கொண்டு காளையைத் தேடிச் சென்றது.
சிறிது நேரத்தில் எதிர்ப்பட்ட கரடியும், "இப்போதெல்லாம் உன்னை அதிகம் பார்க்கவே முடியவில்லை! நீ வெளியே வராவிட்டால் இந்தக் காடே இருண்டுவிட்டாற் போல இருக்கிறது" என்று நரியைக் கேலி செய்தது. ஓநாய்க்குச் சொன்ன அதே பதிலை கரடிக்கும் சொன்னது நரி. கரடியும் தளபதியாரைப் பார்க்க ஆவல் கொள்ள, "ஓநாய் காளை கொண்டு வருகிறது. நீ ஒரு செம்மறி ஆடு எடுத்து வா. என் கணவரது கண்ணில் நீ பட்டால் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது. அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது" என்று கண்டிப்பாகக் கூறியது நரி.
அன்று மாலை ஒநாய் கொழுத்த காளை ஒன்றினை சிரமத்துடன் இழுத்து வர, எதிர்த் திசையில் கரடி செம்மறி ஆட்டினைத் தூக்கிக் கொண்டு வந்தது. இருவரும் சந்தித்த போது கரடி, "என்னைப் போல நரியின் கணவரைப் பார்க்கத்தானே நீயும் வந்திருக்கிறாய்? ஓடிப் போய் நரியிடம் நாம் வந்திருப்பதைச் சொல்லி வா" என்று கூறியது.
"ஏன், நீ செல்லலாமே?" என்று நடுக்கத்துடன் கேட்டது ஓநாய்.
"அவர்தான் மிகவும் கோபக்காரராமே? அவரது கண்ணில் பட்டுவிட்டால் நீயாவது வேகமாக ஓடிவிடலாம். என்னால் ஓட முடியாதே!" என்று விளக்கமளித்தது கரடி.
"தளபதியார் என்னைவிட வேகமாக ஓடக் கூடியவராக இருந்தால் என்னை விரைவில் பிடித்துவிடுவாரே! இந்த வம்புக்கு நான் வரவில்லை" என்று நடுக்கம் குறையாமல் பேசியது ஓநாய்.
அந்த சமயம் அங்கே வந்த ஒரு முயலிடம், "நரியிடம் போய் நாங்கள் இருவரும் காணிக்கையுடன் தளபதியாரைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறு" என்று பணித்தன. பயந்த முயலும் நரியின் வளையை நோக்கி ஓடியது.
கரடி வேகமாய் அருகிலிருந்த மரத்தில் ஏற முயன்றது. "கரடியாரே, என்னால் மரமேறி மறைந்து கொள்ள முடியாது. தயவு செய்து என்னைப் புதரில் மறைத்து வைத்துவிட்டுப் பின் மரத்தில் ஏறிக் கொள்ளுங்கள்" என்று வேண்டிக் கொண்டது ஓநாய்
அதன்படியே, புதரின் அருகிலிருந்த சிறிய பள்ளத்தில் ஓநாயைப் படுக்கச் சொல்லி, அதன் மேல் காய்ந்த சருகுகளைப் போட்டு மறைத்தது கரடி. பின் மரத்தின் உச்சிக் கிளையில் ஏறி தன்னையும் நன்கு மறைத்துக் கொண்டது.
முயல் சொல்லிய தகவலைக் கேட்ட நரியும் பூனையும் வளையை விட்டு வெளியே வந்தன. மரத்தினருகில் வைக்கப் பட்டிருந்த காளையையும் ஆட்டினையும் பார்த்த பூனை அவற்றின் மேல் குதித்து நகத்தால் பிறாண்டி, "மி........யாவ் மி.....யாவ்" என்று வாயைப் பெரிதாகப் பிளந்து ஒலியெழுப்பியது. இதனை மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கரடிக்குக் கிலியெடுத்தது. 'இவ்வளவு இரை கொண்டு வந்தும் தளபதியாருக்குத் திருப்தியில்லை போலும். அதனால்தான் இப்படி கோபமாக ஒலியெழுப்புகிறார்' என்று நினைத்தது.
ஓநாய் பள்ளத்தில் இருந்ததால் அதனால் பூனையைப் பார்க்க முடியவில்லை. அதனால் மெதுவாக சருகுகளை விலக்கிப் பார்க்க முயன்றது. சருகுகளுக்கு அடியில் ஏதோ அசைந்ததைப் பார்த்த பூனை, எலியென எண்ணிப் பாய்ந்தது. அதன் கூறிய நகம் சரியாக ஓநாயின் மூக்கில் பதிய, அலறியடித்துக் கொண்டு பள்ளத்திலிருந்து வெளியேறி தப்பித்தால் போதுமென ஓடியே போனது ஓநாய்.
நடந்ததைப் பார்த்த கரடி, ஓநாயைப் பூனை கொல்ல முயன்றதாக எண்ணி, தனது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்ற பயத்தில் உச்சிக் கிளையிலிருந்து 'டொம்' எனத் தரையில் குதித்து, திரும்பிப் பார்க்காமல் ஓடியது.
நரி தன் கணவரின் வீரத்தை மிகவும் மெச்சியது. அன்றைய நிகழ்வுக்குப் பின் தளபதியாருக்கு காணிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. திருவாளர் பூனையும் திருமதி நரியும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.