மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கோ‌ரிப்பாளையம் - விமர்சனம்

தூங்கா நகரமான மதுரையில் தூக்கத்தை தொலைத்த இளைஞர்களின் கதை. படத்தின் கேப்ஷனுக்கு தகுதி சேர்க்கிற மாதி‌ரி படமெடுத்திருக்கும் ராசு மதுரவனுக்கு முதலில் ஒரு சபாஷ். தூக்கம் தொலைந்ததற்கான காரணத்தை விளக்குகிறேன் பேர்வழி என்று வயலின் வாசித்ததற்காக செல்லமாக ஒரு குட்டு.

நான்கு நண்பர்கள். இவர்களுக்கு மத்தளமாக ஒரு மைனர், ஒரு பாட்டு வாத்தியார். வெட்டி ஆஃபிசர்களான இவர்களுக்கு கத்தி காட்டி மாமூல் வசூலிப்பதும், அவசியம் வந்தால் பிலிம், ட்ரெய்லர் ஓட்டுவதும்தான் வேலை. அதென்ன பிலிம்? இதே கேள்வியைதான் கேட்கிறார் சோட்டா தாதாவான ரா‌ஜ்கபூர். பேசியபடியே ரா‌ஜ்கபூ‌ரின் தம்பியின் விலாவில் கத்தியை செருகி, இதுதாண்டி பிலிம் என்கிறார்கள் சுள்ளான்கள். அப்படியே ரா‌ஜ்கபூ‌ரின் மூக்கையும் உடைக்கிறார்கள். அதுதான் ட்ரெய்லர்.

இவன்களுடன் நேரடியா மோதக்கூடாது என்று படா தாதா ரவிம‌ரியாவுடன் கோர்த்து விடுகிறார் ரா‌ஜ்கபூர். ரவிம‌ரியாவின் தங்கைக்கும், இந்த சுள்ளான் கோஷ்டிக்கும் ஒரு இது என்ற ரா‌ஜ்கபூ‌ரின் கதைக்கு திரைக்கதை எழுதுறமாதி‌ரியே சம்பவகள் நடக்க, வெடிக்கிறது விப‌‌ரீதம். அதன் பிறகு நடப்பதெல்லாம் திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வாடா வாடாதான்... ரணகளம்.

நான்கு பேரை லைவ்வாக நடிக்க வைத்து படமெடுப்பது ஒரு கலை. ராசுமதுரவனுக்கு அது கைகூடியிருக்கிறது. எண்ணெயில் போட்ட கடுகாக எப்போதும் வெடித்துக் கொண்டிருக்கும் ஹ‌‌ரீஷ் படத்தின் மைய கதாபாத்திரம். குரலும், தோற்றமும், நடிப்பும்... பலே. காதலித்த முறைப்பெண் தன்னை விரும்பவில்லை தனது நண்பனைதான் விரும்பியிருக்கிறாள் என்பது தெ‌ரிந்ததும் கல்யாணமான அன்றே தாலியை அறுத்தெறிந்து அவளை நண்பனுக்கு தாரைவார்ப்பது ‘சுருக்’ காட்சி.

ராமகிருஷ்ணன் தூங்கும் இடம் பார்த்து வந்து கதாநாயகியின் நாய் அவர் முகத்தில் மூத்திரம் பெய்கிறது. அதுவே நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்கிறது. ஒருவேளை இதுதான் நாய் காதலோ? மாலையும் கழுத்துமாக ராமகிருஷ்ணன், அப்பா அம்மா முகத்தைதான் பார்க்கலை, என் குழந்தையோட முகத்தையாவது பார்க்கிறேண்ணே என்று விக்ராந்திடம் கெஞ்சும் போது, விக்ராந்தின் கத்தி கருணை காட்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால்.. திரையரங்கே நிசப்தமாகிவிடுகிறது.

படத்தின் எ‌ண்டர்டெய்னர் அவார்ட் நிச்சயம் வசனகர்த்தாவுக்குதான். அதுவும் மைனர் சிங்கம்புலி அடிக்கிற ஒவ்வொரு பிட் டும் காமெடி ஹிட். பொது இடத்தில் அவரை பார்க்கும் போதெல்லாம் ஒருத்தி அடிக்கிறாள். ஏய், அதெல்லாம் ஊருக்கே தெ‌ரிந்த ரகசியம்யா என்று டபாய்ப்பவர் அந்த ரகசியத்தை போட்டுடைக்கும் போது, கலகலக்கிறது ஜனம். ஆப்பக்கா‌ரி கடைக்கு ஏன் போகலை என்ற கேள்விக்கு ஆப்பத்தை திருப்பிப்போட முடியுமா என்று சூசகமாக கேட்கிறார். விசில் பறக்கிறது. பாட்டு வாத்தியாராக வரும் மயில்சாமி காமெடியாக அறிமுகமாகி சென்டிமெண்‌ட்டாக சோகம் காட்டுகிறார்.

மதுரையின் அதே எலும்பு கடி வில்லன்கள்தான் இதிலும். அளவுக்குமீறி சவுண்ட் விடாதது ஆறுதல். ஹ‌‌ரீஷுடன் தனது தங்கைக்கு தொடர்பு இருப்பதாக தவறாக பு‌ரிந்து கொள்ளும் ரவிம‌ரியா அடுத்தகணமே தங்கையை கொலை செய்துவது அதிர்ச்சி என்றால் அதை அவரது குடும்பம் மறுபேச்சில்லாமல் ‌‌ஜீரணிப்பது அதைவிட அதிர்ச்சி.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் மூன்றும் படத்துக்கு வலுசேர்க்கின்றன. பாடல்கள் பரவாயில்லை ரகம். வசனமும், நடிப்பும், படமாக்கியிருக்கும் விதமும் கோ‌ரிப்பாளையத்தின் பலங்கள். இளைஞர்கள் ரவுடியாவதற்கான காரணத்தை விளக்கும் பொறுப்பு தனக்கிருப்பதாக இயக்குனர் வலிந்து நினைத்துக் கொண்டதுதான் படத்தின் மிகப்பெ‌ரிய பலவீனம்.

ஒருவனுக்கு அம்மா ச‌ரியில்லை, இன்னொருவன் அனாதை, ஹீரோவுக்கு அப்பா ச‌ரியில்லை... உப்பளம் அளவுக்கு கண்ணீர்... கண்ணீர். இந்த பேக்ரவுண்டில் யாராவது பல் விளக்கினியாப்பா என்று கேட்டாலே கண்கலங்கிவிடுகிறார்கள். கூலிக்கு கொலை செய்யும் விக்ராந்துக்கும் இருக்கிறது ஒரு சால்ட் பிளாஷ்பேக். இயற்கையான கதைக்கு இவர் செயற்கை உரம், எடுபடவில்லை.

மதுரையில் முக்கால்வாசி பேர் லந்து பார்ட்டிகளோ என்று நினைக்கும்படி வருகிறவர்கள் எல்லாம் ரவுடியாகவோ, ஆப்பக்கா‌ரி, பப்ளிக்கில் அடிக்கும் அக்கா போலவோதான் இருக்கிறார்கள். அதேமாதி‌ரி அழகான பெண்களுக்கு ஆறு நாள் தாடியுடன் பிளாட்பாரத்தில் துங்கும் ரவுடிகளைதான் பிடித்திருக்கிறது. இதுபோன்ற தமிழ் சினிமாவின் பாரம்ப‌ரிய நோய்த்தொற்று இருந்தாலும்,

கோ‌ரிப்பாளையத்தை கொண்டாடலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. sounds intense. maybe watch it before light heartedn comedy.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.