மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


** தனித்தன்மை மிக்க தனியா

ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் ஒரு மருத்துவச் சோலையாக இருக்க வேண்டும் என்பதே நமது முன்னோர்களின் கனவு. அதனால்தான் உணவே மருந்து என்ற கோட்பாட்டை கடைபிடித்தார்கள். உணவின் மூலமே நோயின் தாக்குதலிலிருந்து விடுபட வைத்தனர். வரும் முன் காப்பதில் நம் முன்னோர்க்கு ஈடு இணை இல்லை.

அந்த வகையில் நம் வீட்டு சமையல் அறையிலுள்ள அஞ்சரைப்பெட்டிகளில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும் தனியா என்று அழைக்கப்படும் கொத்தமல்லியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தனியாவின் மருத்துவத் தன்மை தனிச்சிறப்பு வாய்ந்தது. உடலை சமநிலைப்படுத்தும் வாத, பித்த, கபத்தின் நிலைகளை சீர்ப்படுத்துவதில் தனியாவின் பங்கு அதிகம்.

இதனை உருள் அரிசி என்றும் அழைப்பர்.

Tamil - Kothamalli vidhai, Dhaniya

English - Coriander Seeds

Malayalam - Kottam palar

Sanskrit - Dhanyaka

Botanical Name - Coriandrum sativum

இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இது சிறு செடி வகையைச் சார்ந்தது.

சமையலில் தினமும் தனியா சேர்க்காமல் சாப்பிடுபவர்கள் இருக்க முடியாது. மசலா பொடியில் தனியாவையும் சேர்த்து அரைப்பார்கள். இது நறுமணத்தையும் சுவையையும் தருவதோடு சீரண சக்தியையும் தூண்டுகிறது.

சீரண சக்தியை அதிகரிக்க

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றில் உள்ள அபான வாயு சீற்றமாகி மேல் நோக்கி எழும்பி தலைவலியை உண்டாக்குகிறது. சில சமயங்களில் கீழ்நோக்கி சென்று மூலப்பகுதியைத் தாக்கி புண்களை ஏற்படுத்துகிறது. சீரண சக்தி நன்றாக இருந்தால்தான் மலச்சிக்கல், வயிறு மந்தம் போன்றவை ஏற்படாது. நாம் எத்தகைய கடினமான அதாவது எளிதில் சீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் அதனுடன் மல்லி விதை பொடியையும் சேர்த்துக்கொண்டால் உணவு எளிதில் சீரணமாகும்.

வாய் துர்நாற்றம் நீங்க

பல் இடுக்குகளில் உள்ள கிருமிகளாலும், குடல் அல்லது வயிற்றுப் புண்களாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் வீசும். இவர்கள் மல்லி விதையை வாயில் வைத்து மெதுவாக மென்று உமிழ்நீரை இறக்கினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

இதயம் பலப்பட

ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரியும் இதயம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையை பொறுத்தே உடலின் இரத்த ஓட்டம் சீர்பெறும். இதயம் பலப்பட அடிக்கடி உணவில் மல்லியைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

புளித்த ஏப்பம் நீங்க

சிலருக்கு சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். சில சமயங்களில் இது புளித்த ஏப்பமாகவும் மாறும். இதனைப் போக்க தனியாவுடன் சிறிது சோம்பு சேர்த்து வாயில் போட்டு மென்று சாறு இறக்கினால் சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும்.

கண்கள் பலப்பட

கண்கள்தான் உயிரின் பிரதான உறுப்பாகும். கண்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.

ஆனால் இன்று உடலைவிட கண்களுக்கே அதிக வேலை கொடுக்கிறோம். 12 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்து பின் தொலைக்காட்சி முன் அமர்பவர்களும் உண்டு. கண்கள் சோர்வடையும் போது உடலும், மனமும் எளிதில் சோர்வடையும். இரவு வேலை செய்பவர்களுக்கும், வெப்ப ஒளி உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் கண்கள் எளிதில் பாதிப்படையும். இவர்கள் மல்லி விதையை நீரில் இட்டு கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் புத்துணர்வு பெறும்.

பித்த தலைவலி நீங்க

பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் மல்லியை அரைத்து பற்றுபோட்டால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.

ஜலதோஷம் பிடித்திருந்தாலும் சிலருக்கு தலைவலி உண்டாகும். இவர்கள் மல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கபால சூலைநீர் நீங்கி தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.

தலைச்சுற்றல் நீங்க

கொத்தமல்லி விதை, சந்தனம், நெல்லி வற்றல் இவற்றை நீரில் நன்றாக ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு குறையும்.

பித்தம் குறைய

சுக்கு மல்லி இவற்றை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு, ஒரு கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பொடியைப் போட்டு கஷாயம் போல் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து மாலை வேளையில் அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

நாள்பட்ட புண்கள் ஆற

மல்லி விதையை நன்றாக நீர்விட்டு அரைத்து நாள்பட்ட புண்கள் மீது பற்று போட்டால் புண்கள் விரைவில் ஆறும்.

நன்றி :: நக்கீரன்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.