
சிறு வயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக், ரஜினியின் நற்பணிகள், மேடைப்பேச்சுகள், திரைப்படக் காட்சிகள், அரசியல் குறித்த எதிர்பார்ப்புக்கள் போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு குறும்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற தணியாத ஆசையுடன் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
ரஜினியின் ஒப்புதலைப் பெற்று தயாரிக்கப்பட்ட இக்குறும்படம், அவராலேயே சில திருத்தங்களும் செய்யப்பட்டு தற்போது முழுவடிவம் பெற்றுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இக்குறும்படத்தில் சாதாரணமாகத் தொடங்கிய ரஜினியின் இளமைக்காலம் முதல் அவர் சினிமாவில் நுழைந்து சூப்பர்ஸ்டார் ஆனது வரையிலான வாழ்க்கை சம்பவங்கள், ரஜினி அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது போன்ற விவாதங்கள், சோ போன்றோரின் பேட்டிகள் இடம் பெற்றுள்ளன.
நேற்று இந்த குறும்படத்தை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் நடிகர் ரஜினியே தன் கரங்களால் வெளியிட்டார். எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குறும்பட தயாரிப்பாளர் கவின் கார்த்திக், ரஜினி ரசிகர் தலைமை மன்ற நிர்வாகி ராமதாஸ், நிர்வாகிகள் அண்ணாநகர் மு. ரஜினிடில்லி, ஷெனாய் நகர் ஸ்ரீகாந்த், டி. தாமஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது குறும்படம் தயாரித்த ரசிகர்களின் முயற்சியை ரஜினி மனம்விட்டுப் பாராட்டினார். மேலும் இதற்காக மேற்கொள்ளப்பட்ட வழி முறைகள், சந்தித்த சிரமங்களைப் பற்றி கேட்டறிந்த ரஜினி, இந்த முயற்சி நிச்சயம் வெற்றி அடைவதற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைக் கூறினார்.
இதைப்பற்றி தயாரிப்பாளர் கார்த்திக் கூறும்போது, " இந்தக் குறும்படத்தை தயாரிக்க ஐந்து மாதங்கள் ஆனது. ரஜினி சார் இதைப் பார்த்து விட்டு “ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க, நான் நடிச்சசீனை எனக்கே போட்டு காட்டுறீங்க சபாஷ்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். அந்த பாராட்டு எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது" என்று குறிப்பிட்டார்.
ரஜினி படங்களில் இடம் பெற்ற பின்னணி இசையை பயன்படுத்தியுள்ள இக்குறும்படத்திற்கு அரவிந்த் எடிட்டிங் செய்துள்ளார். அடுத்த மாதம் இந்த குறும்பட டி.வி.டி.க்கள் சந்தைக்கு வரும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.