மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பெர்சனல் கம்ப்யூட்டிங்கில் மாற்றத்தினை ஏற்படுத்துமா கூகிள்?

சென்ற ஜூலை 7ல் தன் வலைமனையில் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தர இருப்பதாக கூகுள் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. கூகுள் பிரவுசர் போல இது வேகமாகவும் எளிமையாகவும் இயங்கும் என்றும்,இந்த ஓ.எஸ். பைல் அளவில் சிறியதாக இருக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. குரோம் என்ற பெயரில் இது வரலாம். இணைய தளப் பயன்பாட்டை மையப்படுத்தி இது வடிவமைக்கப்படுகிறது. விண்டோஸ், மேக் ஓ.எஸ்., பலவகையான லினக்ஸ் ஓ.எஸ், ஏன் தன் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். ஆகிய அனைத்தைக் காட்டிலும் சிறப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகத் தன் குரோம் ஓ.எஸ். இருக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. குரோம் பிரவுசர் அறிமுகப்படுத்தப்பட்டு ஒன்பது மாதங்கள் கழித்து இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. குரோம் பிரவுசரை 3 கோடிப் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருவது கூகுள் நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது.

முதலில் தற்போது பெருகிவரும் நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட கூகுள் திட்டமிடுகிறது. 2010 ஆம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் இது வெளியிடப்படலாம். நெட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் இதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொள்ளும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் முழுவதும் ஓப்பன் சோர்ஸ் முறையில் அமையும். இதற்கான கோடிங் குறியீடுகளை கூகுள் விரைவில் வெளியிடும். குரோம் ஓ.எஸ். எக்ஸ் 86 மற்றும் ஏ.ஆர்.எம். (x86 & ARM) சிப்களில் இயங்கும்.

இந்த முயற்சி மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சரியான போட்டியாக அமையும். ஏற்கனவே கம்ப்யூட்டரில் தகவல் தேடுவதற்கான சர்ச் இஞ்சின் புரோகிராம்கள், வெப் மெயில், பிரவுசர், மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பல துறைகளில் இரண்டு நிறுவனங்களுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனால் தான் மைக்ரோசாப்ட் தன் விண் டோஸ் 7 ஆப்பரேட் டிங் சிஸ்டத்தினை நெட்புக் கம்ப்யூட்டருக்காகவும் உருவாக்கி வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சவாலுக்கு இழுப்பதில் கூகுளின் வர இருக்கும் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் முதல் முதலில் வந்தது என்று சொல்வதற்கில்லை. ஏற்கனவே லினக்ஸ் வந்தது. ஆனால் லினக்ஸில் இல்லாதது குரோம் பிரவுசரில் இருக்கும். அதுதான் இணைய தளப் பயன்பாட்டினை ஒட்டிய செயல்பாடு. அந்த வழியில் குரோம் மைக்ரோசாப்ட் சிஸ்டத்தை மிஞ்சலாம்.


ஆனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் பல பயனுள்ள அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்கி வருகின்றன. எடுத்துக் காட்டாக எம்.எஸ். ஆபீஸ் மற்றும் அடோப் புரோகிராம்களைக் கூறலாம் இந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் தரும் பயன்பாட்டினை புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அளிக்குமா? அதனை ஒட்டி புதிய புரோகிராம் தொகுப்புகள் எழுதப்படுமா? என்பது கேள்விக் குறியே. இது குறித்து கூகுள் நிறுவனத்தில் துணைத் தலைவராகப் பணியாற்றும் சுந்தர் பிச்சை குறிப்பிடுகையில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் இன்டர்நெட் வழிதான் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்கிறார்கள். எனவே அதன் அடிப்படையில் குரோம் ஓ.எஸ். ஒரு வெப் அடிப்படையிலான ஓ.எஸ். ஆக இருக்கும் என்றார்.

இணைய இணைப்பிலேயே அனைத்து அப்ளிகேஷன்களும் கிடைக்கும். அதாவது எம்.எஸ். ஆபீஸ் மற்றும் அடோப் போன்ற புரோகிராம் பயன்பாடுகளை இணைய தளம் சென்று அங்குள்ள இது போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தி நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கெனத் தனியே அப்ளிகேஷன் புரோகிராம்களை காசு கொடுத்து வாங்கிப் பதிய வேண்டியதில்லை. மக்கள் உடனே இந்த நிலைக்கு மாற மாட்டார்கள். ஆனால் படிப்படியாய் மாறுவார்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது. அண்மைக் காலத்தில் இன்டர்நெட் என்பது அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கான ஒரு தளமாக மாறி வருகிறது. யாஹூ, கூகுள், பேஸ்புக், மை ஸ்பேஸ் ஆகியவற்றை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவது இதனை உறுதி செய்கிறது. எனவே தான் கூகுள் வெப் அடிப்படையிலான ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கித் தர இருக்கிறது. ஆனால் இதிலும் பல பிரச்சினைகள் உள்ளன. நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்களைக் (வெப் கேமரா, டிவிடி ரைட்டர் போல) கையாள்வது போல வெப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினால் கையாள முடியாது.

அடுத்து செயல்திறன். வெப் அடிப்படையிலான புரோகிராம்கள் எச்.டி.எம்.எல். மற்றும் சி.எஸ்.எஸ். (Cascading Style Sheets) ஜாவா ஸ்கிரிப்ட் போன்றவற்றின் அடிப்படையில் செயல்படுகின்றன. இதனால் தற்போது பெர்சனல் கம்ப்யூட்டரில் வைத்து செயல்படும் புரோகிராம்கள் போல இவை செயல்திறன் கொண்டிருக்காது. அடுத்த பிரச்சினை இன்டர்நெட் கனெக்ஷன். இன்டர்நெட் இல்லாத வெப் அப்ளிகேஷன்கள் நூல் இல்லாத தையல் மெஷின் மாதிரி. இன்றைக்கும், நவீன தகவல் தொலை தொடர்பு தொழில் நுட்பங்கள் வந்துவிட்ட போதிலும் இன்டர் நெட் தொடர்பினை நாம் உறுதியாக நம்பமுடியவில்லை.

ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் செயல்பட பல்லாயிரக்கணக்கில் டெவலப்பர்கள் இருந்தாலும் இவர்களால் இப்போது நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தரும் எளிமையையும் திறனையும் கொண்ட அனைத்து புரோகிராம்களையும் தர முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் கூகுள் அனைத்தையும் தன்னால் சமாளிக்க முடியும் என்றே எண்ணுகிறது. அதற்கான முயற்சிகளையும் வேகமாக எடுத்து வருகிறது. ஓ.எஸ். விவகாரத்தில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெரிய போட்டியாளராக அதனைக் கருத முடியாது. ஆனால் எதிர்காலத்தில் இதனைச் சமாளிப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் பெரிய தலைவலியாகத்தான் இருக்கும். கூகுள் இந்த முயற்சியில் சில தெளிவான இலக்குகளை வைத்துள்ளது. முதலாவதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாதாரண மக்கள், கம்ப்யூட்டரைப் பயன்படுத்த எளிதானதாகவும் பாதுகாப்பு கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த சிஸ்டம் பைல் சிறிய அளவிலும் இருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களைத் திறந்து இயக்கும் திறனை மையமாகக் கொண்டு விண்டோஸ் வந்தது. கூகுள் இந்த விண்டோஸ் செயல்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு புதிய விண்டோஸ் முறையைக் கொண்டு வர முயற்சிக்கிறது. வெப்– 2 சகாப்தம் என புதிய எழுச்சியில் எச்.டி.எம்.எல். 5 அடிப்படையில் அனைத்தும் இருக்க முடியும் என கூகுள் நம்புகிறது. இது ஒன்றும் முடியாதது அல்ல. ஏற்கனவே பாம் (Palm) இதனை முயற்சித்துப் பார்த்து வருகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கூகுளின் இலக்குகள் எல்லையற்றவை. பெர்சனல் கம்ப்யூட்டிங் செயல்பாட்டில் பெரிய மாற்றத்தினைக் கொண்டுவர அது முயற்சிக்கிறது.

கூகுள் எதனையும் செய்திட முடியும் என்ற இலட்சியத்தைக் கொண்டது. எனவே இதன் இலக்குகளை நிச்சயம் கூகுள் எட்டும் என எதிர்பார்ப்போம்.

மேலும் தகவல்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : கார்த்திக்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.