மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ராம்கோபால் வர்மா நட்சத்திர பேட்டி

நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை இவர் அளவுக்கு திரையில் நெருக்கமாகச் சொன்ன இயக்குனர்கள் இல்லை. தெலுங்கில் சிவா படத்தின் மூலம் அறிமுகம். தமிழில் இந்தப் படம் உதயம் என்ற பெய‌ரில் இளைஞர்களை பெ‌ரிதும் ஈர்த்தது. இவரது சத்யா க்ரைம் த்‌ரில்லர் வ‌ரிசையில் இன்னும் உலகப் படங்களுக்கு நிராக வைத்துப் போற்றப்படுகிறது.

சர்க்கார், சாக்கார் ரா‌ஜ், ரான் என்று அடுக்கடுக்காக ஆச்ச‌ரியங்களைத் தரும் ராம்கோபால் வர்மாவின் புதிய அட்டாக், ரத்த ச‌ரித்திரம். சூர்யா, விவேக் ஓபராய் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பத்தி‌ரிகையாளர்களை சென்னையில் சந்தித்தார் வர்மா. அவருடனான உரையாடலிலிருந்து...

ரத்த ச‌ரித்திரம் என்ன கதை?

ஆந்திராவை கலக்கிய ப‌‌ரி‌ட்டால ரவி என்ற மனிதனின் கதையைதான் ரத்த ச‌ரித்திரம் என்ற பெய‌ரில் இயக்கியிருக்கிறேன். ரவி என்ற மனிதனின் வளர்ச்சி, அரசியல், அதிகாரம் பற்றியெல்லாம் நான் தொடர்ந்து தெ‌ரிந்து வைத்திருந்தாலும், ஆந்திராவில் ராமநாயுடு ஸ்டுடியோ அருகில் ரவியை கொல்ல நடந்த வெடிகுண்டு சம்பவத்தில்தான் சூ‌ரி என்கிற மனிதனைப் பற்றி தெ‌ரிந்து கொண்டேன். இந்த இரண்டு மனிதர்களின் கதைதான் ரத்த ச‌ரித்திரம்.

யார் யார் நடித்திருக்கிறார்கள்?

ப‌ரி‌ட்டால ரவியாக விவேக் ஓபராயும், சூ‌ரியாக சூர்யாவும் நடித்திருக்கிறார்கள். சூர்யாவின் ஜோடியாக ப்‌ரியாமணி நடித்துள்ளார்.

படத்தில் யார் ஹீரோ?

இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் இரண்டு பாகங்களாக வருகிறது. முதல் பாகத்தில் சூர்யா இல்லை, இரண்டாம் பாகத்தில்தான் அவர் வருகிறார். தமிழைப் பொறுத்தவரை இந்த இரு பாகங்களையும் இணைத்து இயக்கியிருக்கிறேன். ரவியை பழி வாங்கும் சூ‌ரியின் வெறி ஜெயிலில் அடைக்கப்பட்ட போதும் தணியாமலே இருந்தது. ஜெயிலில் இருந்தபடியே ரவியை கொலை செய்யும் திட்டத்தில் வெற்றி பெறுகிறான். இந்தப் படத்தில் சூர்யா, விவேக் ஓபராய் இருவருமே ஹீரோக்கள்தான்.

உண்மைக் கதை எனும் போது அதிகம் உழைக்க வேண்டி இருக்குமே?


இந்தப் படத்திற்காக ரவி, சூ‌ரி இருவருடனும் நெருக்கமாக இருந்த பல்வேறு ஆட்களை நே‌ரில் சந்தித்து ஆய்வு நடத்தினேன். சூ‌ரியின் குடும்பத்தை சந்தித்து அவர்களின் உணர்வுகளையும் பதிவு செய்திருக்கிறேன். ரவி கொலை வழக்கில் தற்போது அனந்த‌ப்பூர் ஜெயிலில் இருக்கும் சூ‌ரியையும் நே‌ரில் சந்தித்து திரைக்கதைக்கு தேவையான விஷயங்களைப் பெற்றேன். போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்தி‌ரிகை, சாட்சிகள் போன்ற ஆதாரங்களும் திரைக்கதைக்கு உதவின.

படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தால் வெறும் வெட்டும் குத்துமாக இருக்கிறதே?

இது இரண்டு தனி மனிதர்களுக்கிடையே நடந்த ரத்தம் உறையும் திருப்பங்கள் நிறைந்த கதை. என்றாலும் இதன் பின்னணியில் ஜாதி, அரசியல், அதிகாரம், விதி, குடும்பம், குற்றம் போன்ற எல்லா காரணிகளும் இருக்கிறது.

சூர்யாவுடன் பணிபு‌ரிந்த அனுபவம்..?

ரத்த ச‌ரித்திரத்தை படமாக்குவது என்று முடிவு செய்த போதே சூர்யாதான் சூ‌ரி என்பதை முடிவு செய்தேன். இதுவரை நான் இயக்கிய நடிகர்களில் அமிதாப்பச்சனுக்கு அடுத்து பவர்ஃபுல் கண்களை உடையவர் சூர்யாதான். இந்தப் படத்துக்கு தேவையான திறமையும் உழைப்பும் அவருக்கு இருப்பதை காக்க காக்க, க‌ஜினி படங்களைப் பார்த்து தெ‌ரிந்து கொண்டேன். க‌ஜினியில் அமீர்கானைவிட சூர்யாவே பெட்டராக செய்திருப்பதாக நினைக்கிறேன். ரத்த ச‌ரித்திரத்தில் நீங்கள் புதிய சூர்யாவை பார்க்கலாம்.

தொடர்ந்து தாதா கதைகளையே படமாக்குகிறீர்களே?


நான் அப்படி நினைக்கவில்லை. கடந்த 20 வருடங்களாக அதிகம் வெளிச்சம் படாத மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கியிருப்பதாகவே கருதுகிறேன்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.