மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


++ IPL 2009 : அரை இறுதிக்கு அணிகள் தயார்


நாள்: மே 20

சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

சென்னை: 116 - 9
பஞ்சாப்: 92-8

ஆட்ட நாயகன்: முத்தையா முரளீதரன்


லீக் சுற்று ஆட்டங்கள் நாளையோடு முடிகின்றன. ஆனால் அரை இறுதியில் ஆடவிருக்கும் அணிகள் எவை என்பது இன்றைக்கே உறுதியாகிவிட்டது (டெல்லி, சென்னை, டெக்கான், பெங்களூர்). பஞ்சாப் அணி இன்று ஜெயித்திருந்தால் அது சென்னையை மூன்றாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும். அந்த அணி தோற்றதால் நாளைய ஆட்டங்கள் அரை இறுதிக்கான அணிகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்ற நிலை உருவாகியிருக்கிறது. டெக்கான் – பெங்களூர் போட்டியின் முடிவு இருவரில் யாருக்கு மூன்றாம் இடம் என்பதை மட்டுமே தீர்மானிக்கும்.

இன்றைய ஆட்டத்தில் டாஸை வென்ற சென்னை மட்டை பிடிக்கத் தீர்மானித்ததும் இரு தினங்களுக்கு முன்பு போலவே இப்போதும் மட்டையிலிருந்து வாண வேடிக்கைகள் நிகழும் என்று தோன்றியது.

முதல் 5 ஓவர்கள் மட்டையாளர்களுக்குச் சாதகமாகவே இருந்தன. 4.5 ஓவர்களில் 40 ரன் எடுத்திருந்தபோது ஜார்ஜ் பெய்லி ரன் அவுட் ஆனார். 32 ரன் எடுத்த பார்த்திவ் படேல் 7ஆம் ஓவரில் அவுட் ஆனார். 10ஆம் ஓவரில் பத்ரிநாத்தும் மகேந்திர சிங் தோனியும் அவுட் ஆனார்கள். 10 ஓவர் முடிவில் ஸ்கோர் 70-4.

ரன் வேகத்தைக் கூட்ட முடியாத அளவுக்குப் பஞ்சாபின் பந்து வீச்சு அமைந்தது. 14, 15 ஓவர்களில் முறையே சுரேஷ் ரைனாவும் (20) மன்ப்ரீத் சிங் கோனியும் (7) அவுட் ஆனார்கள். அதன் பிறகு ரன் வேகம் மிகவும் குறைந்தது. மொத்தம் 116 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. சைமன் கேட்டிச், யுவராஜ் சிங், குமார சங்கக்காரா ஆகிய வலுவான மட்டையாளர்களைக் கொண்ட பஞ்சாப் அணி இந்த ரன்னை எளிதாக எடுத்துவிடும் என்றே தோன்றியது.

ஆனால் சென்னையின் பந்து வீச்சு இன்று மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஸ்பின்னர்கள் முத்தையா முரளீதரனும் ரைனாவும் ஆர். அஸ்வினும் அருமையாகப் பந்து வீசினார்கள். சன்னி சோஹல் தொடக்கத்திலேயே அவுட் ஆனாலும் கேட்ட்டிச்சும் லூக் போமர்பேஷும் கவனமாக ஆடினார்கள். ஏழாம் ஓவரில் முரளீதரன் கேட்டிச்சை அவுட் ஆக்கினார். அதன் பிறகு வந்த யுவராஜ் சிங் மிக மிக கவனத்தோடு ஆடினார். 10 ஓவர் முடிவில் 42-2.

12ஆம் ஓவரில் முரளீதரன் மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த போமர்பேஷை (26) அவுட் ஆக்கினார். அடுத்த ஓவரில் ரைனா வீசிய ஒரு பந்து எதிர்பார்த்த அளவு எழும்பாமல் யுவராஜ் சிங்கின் மட்டைக்குக் கீழே சென்று ஸ்டெம்பை வீழ்த்தியது. 6 ரன்கள் மட்டுமே எடுத்து மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறியது பஞ்சாப் சிங்கம்.

அப்போதும் பஞ்சாபின் நம்பிக்கை உயிர்ப்புடன் இருந்தது. சங்கக்காரா, மோட்டா, இர்ஃபான் பத்தான், பிரெட் லீ ஆகியோர் இருந்தார்கள். 48 பந்துகளில் 68 எடுக்க வேண்டும். 15 ஓவர் முடிவில் 5 ஓவரில் 58 அடிக்க வேண்டிய நிலை. அடுத்த ஓவர், ஆட்ட நிலவரத்தைச் சென்னையின் பக்கம் திட்டவட்டமாகத் திருப்பியது. அஸ்வின் விசிய அந்த ஓவரில் இரண்டு விக்கெட்கள் விழுந்தன. அஸ்வினின் பந்தை அவர் தலைக்கு மேல் தூக்கி அடித்தார் சங்கக்காரா. உயரமான மனிதர் அஸ்வின் மேலும் உயர எழும்பி அந்தப் பந்தைப் பிடித்து சங்கக்காராவை வெளியேற்றினார். அதே ஓவரில் மோட்டாவும் அவுட்.

எடுக்க வேண்டிய ரன் விகிதம் அதிகரித்த நிலையில் ஆவேசமாக ஆடிய லீயின் விக்கெட்டை ரைனா வீழ்த்தினார். 17 ஆம் ஒவர் முடிவில் 18 பந்துகளில் 48 அடிக்க வேண்டிய நிலை. 18ஆம் ஓவரில்தான் பாலாஜியைப் பந்து வீச அழைத்தார் தோனி. அந்த ஓவரை அருமையாக வீசினார் பாலாஜி. பத்தான் கொடுத்த கேட்சை கோனி நழுவவிட்டார். அடுத்த ஓவரில் துஷாராவின் பந்தில் பத்தான் வீழ்ந்தார். கடைசி ஓவரில் 32 ரன் எடுக்க வேண்டும். களத்தில் பியுஷ் சாவ்லாவும் ரமேஷ் பொவாரும் இருந்தார்கள். பாலாஜி பந்து வீசினார். 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. சென்னை வெற்றி பெற்றது.

ரன் எடுக்கக் கஷ்டமான இந்த ஆடுகளத்தில் ஸ்பின்னர்களை தோனி பயன்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. இந்தத் தொடர் முழுவதும் ஓரிரு ஆட்டங்கள் தவிர சிறப்பாக ஆடாத யுவராஜ் சிங் இந்த மேட்சில் மிகவும் பொறுமையோடு ஆடியது அடுத்து வந்தவர்களின் சுமையைக் கூட்டிவிட்டது. ஒற்றை ரன்கள் எடுத்து ஸ்கோரைச் சீராக உயர்த்த அவரால் முடிந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறாக இருந்திருக்கலாம்.

4 ஓவர்களில் 8 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்த முரளீதரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சென்னை 17 புள்ளிகளுடன் வசதியாக இரண்டாம் இடத்தில் உள்ளது.


Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.