மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


>விண்டோஸ் ஸ்கை டிரைவ் - ஆன்லைன் ஸ்டோர் ரூம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ் என்ற வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. பாஸ்வேர்ட் மூலம் பைல்களைப் பாதுகாத்து அவற்றை ஆன்லைனில் ஸ்டோர் செய்து வைக்கலாம். இதனால் உலகின் எந்த மூலையில் இருந்தும் நம் பைல்களை இறக்கிப் பயன்படுத்தலாம்.

அப்படி என்றால் நம் பைல்களை அடுத்தவர்கள் எடுத்துப் பார்த்துவிடுவார்களே என்ற அச்சம் ஏற்படுகிறதா? அல்லது இவ்வாறு வைத்திடும் சில பைல்களை நான் மட்டுமே பார்க்க வேண்டும்; சில பைல்களை என் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பார்க்க வேண்டும்; மற்றவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்காகவே மைக்ரோசாப்ட் இந்த மூன்று வகைகளிலும் பைல்களை ஸ்டோர் செய்து வைக்கும் வசதியைத் தருகிறது.

Personal Folder என்ற பிரிவில் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்ட பைல்களை தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டும் என ஒதுக்கி வைத்துப் பயன்படுத்தலாம். Shared பிரிவில் பைல்களை அடுக்கி வைப்பவர்கள் தாங்கள் விரும்பும் நபர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்கலாம். Public என்ற பிரிவில் அனைவரும் பார்த்துப் பயன்படுத்தக் கூடிய ஷேர்வேர் பைல்களை வைக்கலாம். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் 5 ஜிபி அளவிலான இடத்தை அளிக்கிறது. இந்த இடத்தில் 1000 பாடல்கள், 30 ஆயிரம் டாகுமெண்ட்கள், 30 ஆயிரம் டிஜிட்டல் படங்களை வைக்கலாம். ஒரு பைலின் அளவு 50 எம்பிக்கும் மேல் இருக்கக் கூடாது.


அவர்கள் விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த பைல்களை பயன்படுத்தலாம். அளவில்லாமல் பைல்களை கடிதங்களுடன் வைத்துக் கொள்ள இமெயில் தளங்கள் இருக்கும் போது இத்தகைய வசதி மக்களிடையே எடுபடுமா? என்று கேட்டால் ,

"இந்த வசதியின் மூலம் ஒருவர் தன் நண்பர்களுடனும் நெட்டில் உலாவரும் எவருடனும் தன் பைல்களைத் தேர்ந்தெடுத்து பகிர்ந்து கொள்ளலாம். இது இமெயில் அக்கவுண்ட் மூலம் முடியாது. உலக அளவில் 40 கோடி பேர் விண்டோஸ் லைவ் சர்வீஸைப் பயன்படுத்தி வருகின்றனர்.இவர்கள் இன்டர்நெட் மையங்களில் என்ன மாதிரியான பைல் டவுண் லோட் களில் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வு செய்த பின்னரே இந்த வசதியை வகைப்படுத்தி' வழங்க முன்வந்தோம்' என்று கூறுகின்றனர் .

உங்களிடம் விண்டோஸ் லைவ், ஹாட் மெயில், மைக்ரோசாப்ட் பாஸ்போர்ட் இருந்தால் அதன் மூலம் இந்த விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவை அதில் பதிந்திடாமலேயே பயன்படுத்தலாம். இது போன்ற வசதிகள் சில புராஜக்ட் தயாரிப்பில் ஈடுபடும் மாணவர்கள் குழுவினருக்கு பயன்படும். அவர்களுக்குள் குழுவாக பைல்களைப் பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல வசதி. மற்றவர்களும் தங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை அடுத்தவர் அறியாமல் அதே நேரத்தில் தாங்கள் எண்ணிய போதெல்லாம் பயன்படுத்த பைல்களைப் பத்திரமாகப் பாதுகாக்கும் தள வசதியாக இது பயன்படும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.