மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அஜீரணம்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த பழமொழி அஜீரணத்திற்கும் பொருந்தும்.

அஜீரணம் ஏற்பட முக்கிய காரணம் மிதமிஞ்சிய உணவுதான். இன்றைய நவீன உணவு மாறுபாட்டாலும், அவசரமாக உணவு உண்பதாலும் அஜீரணக் கோளாறுகள் உருவாகின்றன. மன அழுத்தம் மிகுந்தவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. இரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது.

நாம் ஒரு நாளைக்கு எத்தனை விதமான உணவுப் பொருள்களை சாப்பிடுகிறோம் என்று பட்டியலிட்டுப் பார்த்தால் நமக்கே பிரமிப்பாக இருக்கும். வெப்பம், குளிர்ச்சி, கரடுமுரடு, மிருது, கசப்பு, இனிப்பு இப்படி பலவிதமான உணவுகளை உண்கிறோம்.

இப்படி எந்தவகையான உணவுகளையும் ஏற்கும் இடம் பை போன்ற அமைப்புடைய இரைப்பையே. இந்த இரைப்பையின் கொள்ளளவு சாதாரணமாக

1 1/2 லிட்டர் ஆகும். இது சுருங்கி விரியும் தன்மை கொண்டது.

இதன் முக்கிய பணிகள்,

1. உண்ணும் உணவை சேகரித்துக் கொள்ளுதல்.

2. சேகரித்த உணவுப் பொருளை உடலின் செரிமான சக்திக்கு தகுந்தபடி சிறுகுடலுக்கு அனுப்பி வைத்தல்.

3. சாப்பிட்ட உணவை கடைந்து, கடைந்த உணவை நன்றாகப் பிசைந்து திரவமாக மாற்றுதல்,

இந்த இரைப்பையின் ஜீரண சக்திதான் மனித வாழ்விற்கு மிகவும் இன்றியமையாததாகும். உடலின் ஜீரண சக்தி குன்றினால் எல்லா வியாதியும் எளிதில் தாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போவதற்கு அஜீரணமும் ஒரு காரணமாகும்.

ஜீரண சக்திக்கு அக்னி (தீ) என்ற பெயர் உண்டு. இரைப்பையில் உள்ள அக்னி நாம் உண்ட உணவுகளை அதன் செயல்பாட்டிற்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும். இந்த அக்னி சரியாக செயல்படாத நிலையில் பசியின்மை, வயிற்றில் வாயுவின் சீற்றம், உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, வயிறு எரிச்சல், அடிக்கடி ஏப்பம், மலச்சிக்கல், மூலநோய் போன்ற பல கோளாறுகளை நாள்தோறும் எதிர்கொள்ள நேரிடும்.

இந்த அக்கினி குறைவுக்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் சில உண்மைகள் நமக்கு புலப்படும்.

* உடலுக்கு ஒவ்வாத அல்லது ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணவுப் பொருட்களை உண்பது.

* மலம், சிறுநீர் இவற்றின் வேகத்தை அடக்குவது,

* அளவுக்கு மீறி நீர் அருந்துவது, அல்லது நீர் அருந்தாமல் இருப்பது, போதை வஸ்துக்களை உபயோகிப்பது,

* இரவில் தூங்காமல் கண்விழிப்பது, கணினி, தொலைக்காட்சி முன் வெகுநேரம் அமர்ந்திருப்பது.

* இடைவெளி இல்லாமல் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு பார்த்தங்களை நொறுக்குத்தீனியாக உண்பது.

* அளவுக்கு அதிகமாக உண்பது அல்லது உணவே அருந்தாமல் பட்டினியாகக் கிடப்பது.

* பகலில் தூங்கிக்கொண்டே இருப்பது, இரவு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்வது,

* அதிக கோபம், அச்சம், சிந்தனை, மன உளைச்சல், மன அழுத்தம், மனக் கொந்தளிப்பு போன்றவை ஏற்பட்டாலும் அஜீரணக் கோளாறு உண்டாகும்.

இரைப்பையில் அக்னி நன்றாக செயல்படும்போது உண்ட உணவானது எளிதில் ஜீரணமாகிறது. இதனால் உடலின் எல்லா பாகங்களுக்கும் சத்து கிடைப்பதால் உடல் உறுப்புக்கள் சரியாக இயங்குகிறது. அப்போது உடலின் பலம் , ஆரோக்கியம், புத்துணர்வு, சுறுசுறுப்பு, ஞாபகசக்தி போன்றவை அதிகரிக்கும். தோல் பளபளப்பு அடையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரும நோய்கள் அண்டாது.

உடல் வளர்ச்சி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் இவற்றிற்கு ஆதாரமாக இருப்பது இரைப்பையின் அக்னி செயல்பாடுதான்.

எனவே, அஜீரணம் ஆகாமல் இருக்க

· அளவாக சாப்பிட வேண்டும்.

· பசித்த பிறகே உணவு உண்ண வேண்டும்.

· கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

· எளிதில் ஜீரணமாகும் மென்மையான உணவுகளை உண்பது நல்லது.

· இரவு உணவை குறைவாக உண்ண வேண்டும், உணவுக்குப்பின் குறுநடை போடவேண்டும்.

· தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது நல்லது.

· கோபம், மன இறுக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும்.

· தொலைக்காட்சி பார்த்க்கொண்டோ, பேப்பர் படித்துக்கொண்டோ பேசிக்கொண்டோ சாப்பிடக் கூடாது.

· உடலுக்கு ஒவ்வாத அதாவது முரண்பாடான உணவுகளை உண்ணக்கூடாது.

அஜீரணம் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்..


நன்றி :: நக்கீரன்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.