மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வெப்பத்தைத் தணிக்கும் காசினி கீரை

ஒவ்வொரு இதழிலும் மூலிகை சமையல் பகுதியில் நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் கீரை உள்ளிட்ட மூலிகைக் குணம் கொண்ட காய்கறிகள் பற்றி அறிந்து வருகிறோம். கீரைகளின் மருத்துவக் குணங்களை சிலர் படித்து அறிந்து, உபயோகித்து, எங்களிடம் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். சிலர் இவை எங்கு கிடைக்கும் என்று ஆர்வத்துடன் கேட்கின்றனர்.

இவை நமக்கு அருகிலேயே நம் சுற்றுப்புறங்களில் கிடைக்கின்றன. கீரைகளைப் பயன்படுத்தி உணவின் மூலம் நோய் வராமல் பாதுகாப்பதே நமது நோக்கம்.

கீரைகளைப் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயமாக உள்ளது.

இந்த இதழில் காசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்த கீரை புளிச்சக் கீரை வகையைச் சார்ந்தது. மூலிகை மருத்துவத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நல்ல சுவையுடைய கீரையாகும்.

உடல் சூடு குறைய

தற்போது கோடைக் காலம் என்பதால் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். இதனால் உடலானது அதிக சூடடைகிறது. மேலும் பல வெப்ப நோய்கள் தாக்க ஏதுவாகிறது. இன்னும் சிலருக்கு குளிர்காலத்தில் கூட உடம்பு அதிக சூடாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் சூடு குறையாமல் இருக்கும். இவ்வாறு எப்போதும் உஷ்ணமாக இருப்பவர்களுக்கு காசினிக் கீரை சஞ்சீவியாக உதவுகிறது.

காசினிக் கீரையோடு தூதுவளைக் கீரையையும் சேர்த்து கூடவே பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து நன்றாக கடைந்து அல்லது மிக்ஸியில் இட்டு அரைத்து சாதத்துடன் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடல் காங்கை என்னும் உடல் சூடு தணிய இதுவே நல்ல கீரை என்கின்றனர் சித்தர்கள்.

உடல் எடை குறைய

சிலரின் உடலானது நன்கு குண்டாக காணப்படும். இவர்களால் அதிக தூரம் நடக்க முடியாது. வேகமாக செயல்பட முடியாமல் தவிப்பார்கள். ஓல்லியாக இருப்பவர்களைப் பார்த்து ஏக்க மூச்சு விடுவார்கள். சில சமயங்களில் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருப்பார்கள். சிலர் பல உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லை என்பார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்து காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் எடை குறையாது. இவர்கள் காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடலை சீராக வைக்க உதவும்.

மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயாளிகளுக்கு காசினிக் கீரை ஒரு அற்புத மருந்தாகும். உணவு, தூக்கம், உடற்பயிற்சி இவை சரியாக இல்லாததால் சர்க்கரை என்னும் நீரழிவு நோய் உருவாகிறது. மேலும் பரம்பரை மற்றும் சில காரணங்களாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

காசினிக் கீரை, சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபடவைக்கும்.

காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் காலை வேளையில் ஒரு டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல், அதிக உதிரப்போக்கு இவற்றிற்கு காசினிக் கீரை நல்ல மருந்து.

காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

அல்லது காசினிக் கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.

ஆறாத புண் குணமாக

சிலருக்கு புண்கள் ஏற்பட்டால் எளிதில் ஆறாது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு சென்றுவிடும். இதற்கு காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் கனமாக பற்று போட்டு கட்டி வந்தால் வெகு விரைவில் புண்கள் ஆறிவிடும்.

இரத்தத்தை சுத்தப்படுத்த

இன்றைய நவீன முறை உணவு வகைகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தின் வீரியம் குறைந்து போகிறது. மேலும் தூய்மையான பிராணவாயுவும் கிடைப்பதில்லை. மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலில் பித்தம் அதிகரித்து பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தம் மாசுபடுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது.

இதற்கு காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தாதுவை விருத்தி செய்ய

தாதுவை விருத்தி செய்யும் குணம் காசினிக் கீரைக்கு உண்டு. காசினிக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

இதன் வேர் காய்ச்சலைப் போக்கி உடலுக்கு வலு கொடுக்கும். அதிக உயிர்ச்சத்து கொண்ட கீரை இது.

இத்தகைய பயனுள்ள கீரையை அடிக்கடி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.

நன்றி :: நக்கீரன்


Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.