மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சன் T.V யில் புதிய கேம் ஷோ

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமாகத் திகழ்ந்து வரும் சன் தொலைக்காட்சி, வரும் (அக்டோபர்) 31ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் `டீலா நோ டீலா' என்ற பெயரில் புதிய கேம் ஷோ நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.

இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியை சன் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து சர்ஃப் எக்ஸல் மற்றும் என்டிமோல் நிறுவனங்கள் வழங்குகின்றன.

`ஆனந்த தாண்டவம்', `பிரிவோம் சந்திப்போம்' படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ரிஷி இந்த கேம் ஷோவை தொகுத்து வழங்கவுள்ளார்.

சென்னையில் `டீலா நோ டீலா' அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் வித்யாசாகர், சன் டி.வி தொடங்கப்பட்ட காலம் முதல் அனைத்து அறிமுகப்படுத்திய அனைத்து நிகழ்ச்சிகளுமே வெற்றிகரமாக அமைந்ததைச் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் இப்போது புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் இந்த கேம் ஷோவும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.

தொலைக்காட்சி வரலாற்றில் தென்னிந்தியாவில் இருந்து, அதுவும் சன் குழுமத்தில் இருந்து தமிழ் மொழியில் இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருப்பது நல்ல தொடக்கம். எதிர்காலத்தில் இதேபோன்ற பல கேம் ஷோக்கள் வெளிவருவதற்கு இது வழிவகுக்கும் என்றும் அஜய் குறிப்பிட்டார்.

மேலும் இந்த கேம் ஷோ பற்றிய அறிவிப்பை சன் டி.வியில் அறிவிப்பு செய்து, பங்கேற்க விரும்புவோர் பற்றி தெரிவிக்கக் கேட்ட முதல் நாளிலேயே சுமார் 11 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் இருந்து தொலைபேசியிலும், குறுந்தகவல் சேவை மூலமாகவும் பங்கேற்கும் விருப்பத்தைத் தெரிவித்ததே அந்த ஷோவின் வெற்றியை முன்கூட்டியே உணர்த்தியுள்ளதாகவும் அஜய் கூறினார்.

தமிழ் மொழிக்கேற்ப இந்த நிகழ்ச்சியை சற்றே வித்தியாசப்படுத்தி, உலகத் தரம் மாறாமல் தயாரித்து வழங்கப்படவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாக தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரவி மேனன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கேம் ஷோ குறித்த விவரத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.

என்டிமோல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபக் தார் கூறுகையில், தென்னிந்தியாவில் பிரபல நிறுவனமாக விளங்கும் சன் குழுமத்துடன் இணைந்து கேம் ஷோ ஒளிபரப்பில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்க பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.

பொழுதுபோக்குடன் கூடிய மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை சன் டிவியுடன் இணைந்து தொடர்ந்து என்டிமோல் வழங்கும் என்றார்.

73 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சிக்கான மொத்த பரிசுத்தொகை 500 கோடி ரூபாயாகும்.

இந்த விளையாட்டில் 26 பெட்டிகள் (சூட்கேஸ்கள்) இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 1 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வைக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் ஏதாவது ஒரு சூட்கேஸை எடுத்து அதில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறியாமலேயே மற்ற 25 பெட்டிகளிலும் உள்ள அதிகபட்ச பணத்தை அவர் தேர்வு செய்ய வேண்டும்.

போட்டிக்கு இடையே வங்கியாளர் ஒருவர், போட்டியாளரின் சூட்கேஸை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவிப்பார். இதுவே டீலா நோ டீலா போட்டி.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் என்ன `ரேட்டிங் டீல்' கொடுக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.