மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நட்சத்திர பேட்டி - சாந்தனு பாக்யரா‌ஜ்

தமிழ் சினிமாவின் இனிப்பான சக்கரக்கட்டி சாந்தனு. சன் ஆஃப் கே.பாக்யரா‌ஜ் என்ற அடையாளம் இவருக்கு கூடுதல் ஈர்ப்பு. ஆனால் அப்பாவின் அடையாளம் இல்லாமல் ஜெயிக்க வேண்டும் என்பதே இந்த இளைஞனின் விருப்பம். தந்தையின் இயக்கத்தில் நடித்த சித்து பிளஸ் டூ விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் சாந்தனுவின் பேச்சில் பொறுப்பும், பொறுமையும் பளிச்சிடுகிறது.

அப்பாவின் இயக்கத்தில் நடித்தது எப்படி இருக்கிறது?

மறக்க முடியாத அனுபவம். ரொம்ப என்ஜாய் செய்து நடித்தேன். எத்தனையோ நடிகர், நடிகைகள், இயக்குனர்களை உருவாக்கியவர்... அவரது டைர‌க்சனில் நடித்த ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது.

பல காட்சிகளை நீங்கள் மாற்றினீர்களாமே? இயக்குன‌ரின் வேலையில் ஒரு நடிகர் தலையிடுவது ச‌ரியா?

சித்து பிளஸ்டூ-வில் நான் நடிகன் மட்டுமில்லை, ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரா டைர‌க்சன், எடிட்டிங், கம்போஸிங், ‌‌ரீ ரெக்கார்டிங்னு எல்லா வேலையும் பார்த்திருக்கிறேன். சில காட்சிகளைப் பற்றி அபிப்ராயம் சொன்னேனே தவிர இயக்குன‌ரின் வேலையில் தலையிடலை.

படத்தின் கதை என்ன, சொல்ல முடியுமா?

சராச‌ரியான ஒரு கல்லூ‌ரி மாணவன் காதலில் விழுவதுதான் படத்தோட ஒன்லைன்.
படத்தில் என்ன சிறப்பம்சம்?

இந்தப் படத்தைப் பார்க்கிற ஒவ்வொருவரும் நான் மெச்சூ‌ரிட்டியா நடிச்சிருக்கிறதா கண்டிப்பா சொல்வாங்க. அந்தளவுக்கு என்னோட பாத்திரப்படைப்பும், நடிப்பும் அமைஞ்சிருக்கு. ஹீரோயின் சாந்தினியும் பேசப்படுவாங்க.

மலையாளத்தில் ஏஞ்சல் ஜான் படத்தில் மோகன்லாலுடன் நடித்தீர்கள்...?

ஆமா, அது ஒரு நல்ல எக்ஸ்பீ‌ரியன்ஸ். இந்தப் படம் கேரளாவிலும் எனக்கு நல்ல பெயர் சம்பாதித்து கொடுத்திருக்கு. மலையாளத்தில் நடித்தாலும் என்னுடைய கவனம் முழுக்க இப்போது தமிழில்தான்.

என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

ஹோசிமின் இயக்கத்தில் ஆயிரம் விளக்கு படத்தில் நடிக்கிறேன். ஆ‌க்சன் கதை. சத்யரா‌ஜ் சாரும் நடிக்கிறார். கேங்ஸ்டர் படம் என்றாலும் அதற்குள் ஒரு அழகான கதையை இயக்குனர் வச்சிருக்கிறார். தாதாவாக இருக்கும் சத்யரா‌ஜ் சா‌ரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வெயிட்டான கேரக்டர் எனக்கு. சனா கான் எனக்கு ஜோடியா நடிக்கிறாங்க. மதுரையை பின்னணியாக வைத்து படம் தயாராகியிருக்கு. அப்புறம் முகிலன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறேன்.

இப்போதைய நடிகர்கள் இரண்டாவது படத்திலேயே பன்ச் டயலாக் பேசி எகிறி அடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆ‌க்சன் ஹீரோ இமே‌ஜ்தான் நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. நீங்கள் எப்படி?

ஆ‌க்சன், சாஃப்டான ஹீரோன்னு எந்த இமே‌ஜ் வட்டத்துக்குள்ளும் சிக்க விருப்பமில்லை. சக்கரக்கட்டியில் சாக்லெட் ஹீரோவாகதான் அறிமுகமானேன். ஆயிரம் விளக்கில் ஆ‌க்சன் செய்திருக்கிறேன். இப்போதே முழு ஆ‌க்சன் ஹீரோவாகும் எண்ணமெல்லாம் இல்லை. ரசிகர்கள் என்னை எப்படிப் பார்க்க பி‌ரியப்படுகிறார்களோ அதை வைத்தே என்னுடைய நடிப்பு ஸ்டைல் அமையும்.

தெலுங்கிலும் கவனம் செலுத்துகிறீர்களே..?

சித்து பிளஸ் டூ தெலுங்கில் சாரே நீ இஷ்டம் என்ற பெய‌ரில் வெளியாகிறது. தெலுங்கில் ஹன்‌ரிட்டா ஹீரோயினா நடிச்சிருக்காங்க. இதுதவிர வேறு எந்த தெலுங்குப் படத்திலும் நடிக்கவில்லை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.