மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 2010 ன் சிறந்த தமிழ் திரைப்படங்களின்.

எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த திரைப்படங்களின் பட்டியல் உலகில் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. பல்வேறு ரசனைகள் உள்ள மனிதர்களை ஒரு பட்டியலின் வழியாக திருப்திப்படுத்துவதென்பது நடைமுறை சாத்தியம் இல்லாதது. புத்திசாலிகள் இதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு வருடத்தில் வெளியான படங்களில் எவை வசூலில் முதலிடத்தை பிடிக்கின்றனவோ அவற்றை சிறந்தப் படங்களாக வைத்து பட்டியல் தயாரிப்பது.

வசூல் அடிப்படையில் அமையும் இந்தப் பட்டியலை அவ்வளவு எளிதாக புறக்கணிக்க முடியாது. ஆனாலும் கேள்விகள் எழுப்புகிறவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக சேனல்கள் தயாரிக்கும் படங்களுக்கு நிமிடத்துக்கொரு விளம்பரம் வெளியிடுகிறார்கள். நியாயமாக இந்த விளம்பரக் கட்டணத்தையும் படத்தின் பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும், சொந்தச் சேனலாக இருந்தாலும். அதன்படி பார்த்தால் இந்த விளம்பரக் கட்டணம் படத்தின் பட்ஜெட்டைவிட அதிகமாகிவிடும்.

இந்தக் காரணங்களால் சிறந்தப் படங்கள், வசூலில் முதலிடத்தைப் பிடித்த படங்கள் என்று பட்டியல் தயாரிப்பதைவிட முக்கியமான திரைப்படங்கள் என பொத்தம் பொதுவாக கூறிவிடுவது சாலச்சிறந்தது. விமர்சகன் தப்பித்துக் கொள்ள பாதுகாப்பான வழி.

2010 ல் 145 நேரடித் திரைப்படங்களும், 50 மொழி மாற்றுத் திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு வருடத்தில் அதிக திரைப்படங்கள் உற்பத்தி செய்யப்பட்டது இந்த வருடத்தில்தான். படங்களின் எண்ணிக்கை அதிகமிருந்தாலும் முக்கியமான படங்களின் பட்டியலை தயாரிப்பது சுலபமானது. அதற்கு வசதியாக நமது இயக்குனர்கள் குறைவான திரைப்படங்களையே உருவாக்கியிருக்கிறார்கள், மற்றவை உற்பத்தி செய்யப்பட்டவை.

ஒரே நேர்கோடான திரைக்கதை, ஆகம விதிகளுக்குட்பட்ட காட்சிகள் என்று பாடம் செய்யப்பட்ட தமிழ் சினிமாவை கொலாஜாக மாற்றியதில் வெங்கட்பிரபுக்கு கணிசமான பங்குண்டு. இவரின் சென்னை 28, சரோஜா அந்தவகையில் முக்கியமான படங்கள். சென்ற வருடம் வெளியான கோவாவும் இதே வகையைச் சேர்ந்தது என்றாலும் வெறுமனே கூத்தடிச்சிட்டாங்க என்று பெருவாரியான ரசிகர்கள் கோவாவை விலக்கி வைத்தார்கள். முக்கியமாக ஹோமோ செக்சுவலை காட்டிட்டாங்க என்பது அவர்களின் வருத்தம்.

அவர்களை சொல்லி குற்றமில்லை. திரையில் நல்லதை மட்டுமே பார்க்க விரும்பும் நல்ல மனசுக்காரர்கள் இவர்கள். யதார்த்தம் எந்த கழுதையாக இருந்தாலும் திரையில் குதிரையை மட்டுமே பார்க்க விரும்புகிறவர்கள். ஆனால் இந்தியாவிலேயே ஹோமோ செக்ஸ் வைத்திருப்பவர்கள் சங்கம் அமைத்து உரிமைக்காக போராடி வருகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை துணிச்சலாக சொல்வதும், அதன் மூலம் விமர்சனத்தை உருவாக்குவதுமே ஒரு படைப்பாளியின் முக்கிய கடமை. அந்த வகையில் கோவாவை சென்ற ஆண்டின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக கருத இடமுண்டு.

முழுமைப் பெறாத சில படைப்புகள் சரித்திரத்தில் இடம் பிடிப்பதும், முழுமையான சில படைப்புகள் சரித்திரத்தின் போக்கில் புறந்தள்ளப்படுவதும் உண்டு. முயல் வேட்டைக்கு சென்று வெற்றி பெற்றவனைவிட, யானை வேட்டைக்கு சென்று மழுங்கிய வேலுடன் திரும்புகிறவனையே இந்த உலகம் கொண்டாடும். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் அந்தவகை. சும்மா காதலையே எத்தனைப் படத்தில் சொல்வது என்று சரித்திரத்தின் தோளில் செல்வா ஏறிய படம்தான் ஆயிரத்தில் ஒருவன். அந்த கோபமும், உழைப்பும் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே தேவை. ஆனால் சரித்திரத்தை சாதுர்யமாக பின்னுவதில் செல்வா செய்தது பெரும் பிழை. செல்வாவுக்கு கிடைத்தது மழுங்கிய வேல்தான் என்றாலும் சென்ற வருடத்து பெருமையில் அவருக்கும் பங்குண்டு.

மாஸ் ஹீரோ வேண்டும், மனசை கவ்வுற கதை வேண்டும் என்று ஜல்லியடிக்கிற தமிழ் சினிமாவில் இவை இரண்டும் இல்லாமல் யதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக சொல்லி கல்லா கட்டிய களவாணியும், மலைப்பிரதேச மனிதர்களின் வாழ்க்கையும் காதலுமாக மனசை அள்ளிய மைனாவும் பல நூறு உதவி இயக்குனர்களுக்கு தன்னம்பிக்கை அளித்திருக்கிறது. தெரிந்த வாழ்க்கையை வைத்தே சிறப்பான சினிமா செய்யலாம் என்பது இவ்விரு படங்களும் காட்டியிருக்கும் புதுவழி.

21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு, தனக்கு எதிர்மறையான விஷயத்தையும் வியாபாரமாக்குவது. அந்த இலக்கணத்தில் தமிழில் முதல்முறையாக வெளிவந்த முழுமையான திரைப்படம், தமிழ்ப் படம். படத்தின் பல காட்சிகள் ஒரிஜினல் படங்கள் அளவுக்கு சுவாரஸியம் இல்லாதவை. ஆனாலும் தமிழ் சினிமாவுக்கு புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தியதால் தமிழ்ப் படக்காரர்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

நம்ம ரசிகர்களுக்கு அடிச்சு சொன்னதான் புரியும் என்ற நினைப்பு பலருக்கு உண்டு. வசந்தபாலனுக்கு அது கொஞ்சம் அதிகம். சோகம் மேலும் சோகம் முற்றிலும் சோகம் என்பது அவர் ஃபார்முலா. அங்காடித்தெருவில் உள்ளவர்கள் மீது கருணை வந்தே ஆக வேண்டும் என்று அவர் அடுக்கிய சோகத்துக்கு அளவில்லை. அதில் உண்மையின் சதவீதம் அதிகம் என்பதால் தெருவையும் தேர் ஏற்றலாம்.

மிஷ்கினின் நந்தலாலாவுக்கு மட்டும் இந்த வருடம் இரண்டு சிறப்புகள். டகாஷியின் கிகுஜிரோ பார்த்து ஆறு வருடங்களுக்கு முன்பே பரவசப்பட்ட எந்த ரசிகனும் நந்தலாலாவை ஒப்புக் கொள்ள மாட்டான். கதையை மட்டுமின்றி காட்சி, பாடி லாங்வேஜ;, எடிட்டிங் என்று எல்லாவற்றையும் உருவியிருந்தார் மிஷ்கின். இணையத்தில் கிழிப்பதுவரை கிகுஜிரோ பற்றி அவர் வாயே திறக்கவில்லை என்பது, ஒரு படைப்பாளி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணம். கிகுஜிரோவை பார்க்காதவர்களுக்கு நந்தலாலா புது அனுபவம். அந்த அனுபவத்தை ரசித்தவர்களுக்காக நந்தலாலாவையும் நமது பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக எந்திரன். நாம் இதுவரை பார்த்த படங்கள் அகக்காரணங்களுக்காக சொல்லப்பட்டவை. எந்திரன் புறக்காரணம். 150 கோடியில் ஒரு படத்தை எடுத்து 400 கோடிக்கு வியாபாரம் செய்ய முடியும் என்று நிரூபித்தது... ஹhலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்தால் அவர்கள் ரேஞ்சுக்கு தொழில்நுட்பத்தில் அனிமேஷன் செய்ய முடியும் என்று உணர்த்தியது... ஒரு திரைப்படத்தின் வெளியீட்டை விளம்பரத்தின் மூலம் தேசிய நிகழ்வாக மாற்ற முடியும் என புரிய வைத்தது என புறக்காரணங்கள் நிறைய. அகக்காரணம் எதுவுமில்லையா என சிலர் சட்டையை பிடிக்கக் கூடும். அவர்கள் ஆசைப்படி அந்த பெருமையை எந்திரனுக்கு கொடுத்தால் மேலே உள்ள படங்களை எல்லாம் இந்தப் பட்டியலில் இருந்து தூக்க வேண்டி வரும்.

இந்த வருடமேனும் முக்கிய படங்களின் பட்டியலை தயாரிக்கும் ஒருவரை தமிழ் இயக்குனர்கள் திணறடிக்க வேண்டும். அதற்கு, உற்பத்தி செய்யப்படும் படங்களின் எண்ணிக்கையை குறைத்து படங்களை உருவாக்கப் பழகிக் கொண்டாலே போதுமானது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.