2ஜி வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கையோ, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையோ தாம் குற்றம்சாட்டவில்லை என இன்று காலை மறுப்பு தெரிவித்த ஆ.ராசா, மீண்டும் பிரதமரை குற்றம்சாட்டியுள்ளார்.
2ஜி வழக்கில் நேற்று ராசா சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் சுசீல்குமார், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஒப்புதலுடனேயே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றதாகத் தெரிவித்திருந்தார்.
ராசா தரப்பிலான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை நடைபெற்ற வாதத்தின்போது, திடீரென ராசா தனது நிலையை மாற்றிக் கொண்டார்.
2ஜி வழக்கில் பிரதமரையோ, ப.சிதம்பரத்தையோ தாம் குற்றம்சாட்டவில்லை என்றும், அவர்களை சிக்கவைக்க வேண்டும் என்று தாம் ஒருபோதும் கருதியதில்லை என்றும், ஊடகங்கள்தான் தவறாக செய்திவெளியிட்டுவிட்டன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதே சமயம் ப.சிதம்பரத்தை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று அவர் வாதத்தில் வலியுறுத்தினார்.
இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்ற வாதத்தின்போது, ராசா மீண்டும் பிரதமர் மீது குற்றம்சாட்டினார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனைகளை ஆராய்வதற்காக அமைச்சரவைக் குழு ஒன்றை அமைக்க பிரதமர் தவறிவிட்டார்.
2ஜி கோப்பை நான் பிரதமருக்கு அனுப்பி வைத்தேன்.அதில் ஏதாவது முரண்பாடுகள் இருந்திருந்தால் அவர் அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்திருக்க வேண்டும்.
பிரதமர் எனக்கு மேலானவர்.அவர் அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்திருக்க வேண்டும்.
இந்த வழக்கில் சாட்சியாக விசாரிக்க அட்டார்னி ஜெனரலுக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்றும் ராசா தனது வாதத்தின்போது மேலும் கூறினார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.