மணிரத்னம் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களுக்கு சந்தோஷ் சிவன்தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். தேடி வரும் வாய்ப்புகளை ஒப்புக் கொண்டாலே நாலு தலைமுறைக்கான பணமும், புகழும் உத்தரவாதம். ஆனால் பரிசோதனை முயற்சி, ஆவணப் படங்கள் என்று இயங்கிக் கொண்டிருக்கிறார் சந்தோஷ்சிவன். டெரரிஸ்ட், மல்லி என சர்வதேச அளவில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவரின் சமீபத்திய படம் உறுமி. மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த வாரம் தெலுங்கிலும் வெளியானது. அமோக வரவேற்பு என்கின்றன ஹைதராபாத் செய்திகள்.
உறுமி பற்றி...?
இதுவொரு பீரியட் படம். வாஸ்கோடகாமா கேரளா வந்த போது கொலை செய்யப்பட்டார். அந்தப் பின்னணியில் இந்தப் படத்தை இயக்கியிருக்கேன்.
சிலோன் என்றொரு படத்தை இயக்குவதாக இருந்தீர்களே...?
அது என்னுடைய கனவுப் படம். மூன்று புதுமுகங்களை வைத்து எடுக்கலாம் என்றிருக்கிறேன். அதற்கு நிறைய தயாரிப்புகள் வேண்டும். இப்போதைக்கு ஒரு டாக்குமெண்ட்ரி இயக்கிக் கொண்டிருக்கிறேன்.
டாக்குமெண்ட்ரி எதைப் பற்றியது?
குட்டநாடு விவசாயியை பற்றியது. அவனது வாழ்க்கை, கஷ்டங்கள் என்று எடுக்கிறேன். இதில் வெறும் கஷ்டம் மட்டும் இல்லாமல் அவனது வாழக்கையின் கொண்டாட்டங்களும் இடம் பெறும். ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஓடக் கூடியதாக இந்த டாக்குமெண்ட்ரி இருக்கும்.
உறுமி படத்தை எடுக்க என்ன காரணம்?
கோவா போன்ற ஊர்களுக்கு போகையில் அங்குள்ள பெரிய சர்ச்சுகளை பார்க்க நேரிடும். எங்கிருந்தோ வந்து இவ்வளவு பெரிய கோயில்களைக் கட்டும் அளவுக்கு அவர்கள் பெரிய வெற்றியை பெற்றது எப்படி என்று தோன்றும். நம்முடையது பாரம்பரியமான நாடு. போர் என்றால்கூட சூரியன் உதித்து அஸ்தமிக்கும் வரைதான் நடக்கும். இரவில் போர்புரிய மாட்டார்கள். இப்படி சண்டைக்கே விதிமுறைகள் வகுத்த நாம் அந்நியர்களின் வரவுக்குப் பிறகே சிதைந்து போனோம். குறிப்பாக இந்து, முஸ்லிம் பிரிவினை அந்நியர்களின் வரவுக்கு பிறகே வலுப்பெற்றது.
இரண்டு ஹீரோக்களை வைத்தே இங்கு படமெடுக்க முடியாது. நீங்கள் எப்படி பிருத்விராஜ், ஜெனிலியா, தபு, பிரபுதேவா, வித்யாபாலன் என்று முன்னணி நடிகர்களை ஒரே படத்தில் பயன்படுத்தினீர்கள்?
இவங்க எல்லோருமே என்னுடைய நண்பர்கள். அதனால எனக்கு எந்த கஷ்டமும் தெரியலை. முழு ஈடுபாட்டோட எல்லோரும் நடிச்சாங்க. நண்பர்களுடன் வேலை பார்ப்பதில் கஷ்டமில்லையே. ஜெனிலியா இந்தப் படத்துக்காக குதிரையேற்றமெல்லாம் கத்துகிட்டாங்க.
இந்தப் படத்தின் குறையாக பாடல்களை சொல்கிறார்களே?
நமது பராரம்பரியமும், பப்ளிசிட்டியும்தான் இதுக்கு காரணம். நம்முடையது பாடல்களை கேட்டு வளர்கிற சமூகம். அப்புறம் கமர்ஷியல் எலிமெண்டுக்காக பாடல்கள் தேவைப்பட்டது.
புதிதாக வரும் ஒளிப்பதிவாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது...?
அவங்கதான் சொல்லணும். அவங்கதான் எனக்கு புது விஷயத்தை கத்துத் தரணும். இன்னும் என்னை ஒரு மாணவனாகதான் நினைச்சுகிட்டிருக்கேன். ஒரு மாணவன் எப்படி கத்துக் கொடுக்க முடியும். தவிர இது கத்துக் கொடுத்து வர்ற விஷயமுமில்லைன்னு நினைக்கிறேன்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.