மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கௌதமை மிக மோசமாக விமர்சிக்கு‌ம் மும்பை ஊடகங்கள் ?

கௌதம் வாசுதேவ மேனனின் ஏக் தீவானா தா நேற்று வெளியானது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ‌‌ரீமேக்கான இதனை மும்பை ஊடகங்கள் எதிர்கொண்டிருக்கும் விதம் மிக மோசமானது.

விண்ணைத்தாண்டி வருவாயா தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்ற படம். ஒரு மொழியில் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் வெற்றிபெறும் என்று சொல்லிவிட முடியாது. அதேபோல் கலா‌ச்சார வித்தியாசத்தில் அப்படம் ஜனங்களுக்குப் பிடிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. எஸ்.ஜே.சூர்யாவின் குஷி தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றது. அதே படம் இந்தியில் தோல்வியடைந்தது. இடுப்பைப் பார்த்ததால் ஏற்படும் காதலர்களின் ஈகோ யுத்தம் தமிழுக்கும், தெலுங்குக்கும் உறுத்தாமல் இருந்தது. இந்தியில் அது எடுபடவில்லை. இடுப்பு அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதை பார்ப்பது தவறுமில்லை.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சில அம்சங்கள் மாடர்ன் மும்பைக்கு பொருந்தக் கூடியதல்ல. கதாநாயகியைவிட நாயகன் ஒரு வயது சிறியவன் என்பதும், விருப்பம் இருந்தும் நாயகி நாயகனுடன் செல்லாமல் அவனை தவிர்ப்பதும், இதெல்லாம் ஒரு காரணமா என்று நினைக்க வைப்பவை. இடைவேளைக்குப் பின் கதாநாயகியை பிடித்தாட்டும் குழப்பம் எந்த மொழி ரசிகனுக்கும் சிறிது எ‌ரிச்சலை தரவே செய்யும்.

இவையெல்லாம் ஏக் தீவானா தா படத்தின் சிறு குறைகள். ஆனால் இதனை மும்பை ஊடகங்கள் அளவுக்கதிகமாக‌ப் பெ‌ரிதுப்படுத்தியுள்ளன என்றே தோன்றுகிறது. இந்த இடத்தில் தமிழ் கலைஞர்களின் மீது அவர்கள் காட்டும் காழ்ப்பையும் குறிப்பிட்டாக வேண்டும். தமிழ் கலைஞர்களையும், அவர்கள் படங்களையும் பாலிவுட் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டாலும் மும்பை ஊடகங்கள் அதனை ஒத்துக் கொள்வதாய் இல்லை. தமிழிலிருந்து செல்லும் ஒருவனை மட்டம் தட்ட அவை எப்போதும் தயாராக உள்ளன. விதிவிலக்கு ரஹ்மான். ரஹ்மானின் சர்வதேச புகழ் எளிதில் அவர் மீது கை வைக்கும் துணிச்சலை மும்பை ஊடகங்களுக்கு தருவதில்லை.

ஆனால் இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதிய பலரும் ரஹ்மானின் இசை ஒன்றுமில்லை என்ற ‌ரீதியில் எழுதியுள்ளனர். அதேபோல் கௌதமை மட்டம் தட்டுவதற்காக Mediocre Maniratnam Stuff என்று எழுதுகிறார் ஒருவர். கௌதமின் படத்தில் ஒளிப்பதிவு எப்படி இருக்கும் என்பது நமக்கு‌த் தெ‌ரியும். ஏக் தீவானா தா படத்தின் சிறப்பம்சங்களாக இணைய விமர்சகர் ஒருவர் ஒளிப்பதிவை குறிப்பிடுகிறார். இன்னொருவர் ஒளிப்பதிவை அமெச்சூர் என வர்ணிக்கிறார்.

இன்னொரு பெண் விமர்சகர் படத்தை விட்டுவிட்டு நாயகியின் உடை எப்படி இருக்க வேண்டும், தோல் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதுகிறார். அந்த விமர்சனம் முழுக்க ஒரே உளறல். எமி ஜாக்சனின் தோல் நிறத்தை டி‌ஜிட்டலில் மாற்றியிருப்பதாக அவர் எழுதுகிறார். எமி ஜாக்சன் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்கார பெண் என்பதுகூட அவருக்கு‌த் தெ‌ரியவில்லை. அதேபோல் தென்னிந்திய பெண்கள் எண்ணெய் தேய்த்து முடியை ஜடை போட்டிருப்பார்கள் அல்லது கொண்டை போட்டிருப்பார்கள். அப்படி இல்லாமல் மலையாளப் பெண்ணாக வரும் எமி ஜாக்சன் தலைமுடியை மும்பை பெண்களைப் போல் பறக்க விட்டிருக்கிறார் என இன்னொரு உளறல். இவர்கள் இருப்பது ஆப்பி‌ரிக்காவிலா இல்லை இந்தியாவிலா? தென்னிந்திய பெண்கள் ஷாம்பு பயன்படுத்த மாட்டார்கள் என்ற அளவில்தான் இவர்களின் உலக அறிவு இருக்கிறது. இவர் அப்படத்துக்கு தந்திருப்பது ஒரு ஸ்டார். இன்னொரு விமர்சகர் மைனஸ் ஒரு ஸ்டார் தந்திருக்கிறார். இப்படியொரு ரேட்டிங் இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும்.

மும்பை சினிமா மல்டி பிளிக்ஸ்களை நம்பத் தொடங்கிய பிறகு அவற்றின் முகமே மாறிவிட்டது. அதீத காமம், அதீத வன்முறை என்று மென்மையான உணர்வுகளை அவர்கள் இழந்து வருகிறார்கள். சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற படங்களே இதற்கு சான்று. காதலைச் சொல்ல ஒருவன் தயங்குவது அவர்களைப் பொறுத்தவரை பேடித்தனமாக‌த் தெ‌ரிகிறது. அதே நேரம் முன் பின் தெ‌ரியாத ஒருவனுடன் நாயகி படுக்கையை பகிர்ந்து கொண்டால் அவள் மாடர்ன் கேர்ள், 21ஆம் நூற்றாண்டின் நாக‌‌ரிக மங்கை. நான்கு ஸ்டார் ரேட்டிங் தாராளமாகக் கிடைக்கும். இந்த போலியான உலகத்திற்குள் இருப்பவர்களால் தென்னிந்திய பெண்கள் எண்ணைய் தலையுடன்தான் தி‌ரிவார்கள், தோலை டி‌ஜிட்டலில் ஆல்டர் செய்திருக்கிறார்கள் என்று கற்பனை பிம்பத்தில்தான் கதைவிட முடியும். எதார்த்தத்தை இவர்களால் ஒருபோதும் த‌ரிசிக்க முடியாது.

பின் குறிப்பு - இந்தியில் டோபி காட், யுடான் போன்ற நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம் இதில் குறிப்பிடுவது கமர்ஷியல் படங்களைத்தானே தவிர இவற்றையல்ல. மேலும் இந்த விமர்சகர்கள் ஏக் தீவானா தா மோசம் என்று காட்டுவதற்கு உதாரணம் சொல்வது டோபி காட், யுடான் போன்ற படங்களையல்ல. யாஷ் சோப்ரா போன்றவர்களின் சைக்கோ படங்களையே.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.