தேசிய பட்டியலை இறுதி செய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட கூட்டம் ஒன்று நாளையதினம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 14 ஆசனங்களைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு மேலதிக ஆசனங்களை பெற்றுள்ள நிலையில், மேலதிக ஆசனங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட போதும் முடிவுகள் எட்டப்படவில்லை எனத் தெரியவருகிறது…
குறிப்பாக கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்ட புளொட், ஈபிஆர்எல்எவ், ரெலோ ஆகியவற்றிற்கு ஒரு ஆசனத்தையும், தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனத்தையும் பகிருமாறு கோரப்பட்ட போதும் அதற்கு கட்சியின் தலைவர் இரா சம்பந்தன், மற்றும் செயலாளர் மாவை சேனாதி ராஜா ஆகியோர் இன்னும் இணங்கவில்லை எனத் தெரியவருகிறது…
இம்முறை கிடைக்கப்பெற்ற 2 தேசியபட்டடியல் ஆசனங்களை
1 ) திருமலையில் துரை ரட்ணசிங்கத்திற்கும்
2) அம்பாறைக்கும் கொடுக்க முனைவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கடுமையான காலங்களில் பல சோதனைகளுக்கு மத்தியில் கூட்டமைப்பின் வெற்றிகளுக்காக பாடுபட்ட அதன் பேச்சாளரும் கூட்டமைப்பின் தலைவரக்ளில் ஒருவருமான கூரேஸ் பிரேமச் சந்திரனுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் வலியுறுத்தி உள்ளன… எனினும் தமிழரசுக்கட்சியின் 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன…
இதேவேளை கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டு இறுதியில் பின்னணியில் நிற்பதாக அறிவிக்கப்பட்ட அருந்தவபாலனுக்கும் தேசியப் பட்டியல் ஊடாக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது…
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலமை நாளை என்ன முடிவை எடுக்க உள்ளது என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்…
கௌரவ இரா.சம்பந்தன் அவர்கள்
தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இராஜவரோதயம் வீதி
திருகோணமலை
ஐயா,
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பாக
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டிதற்கு எமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது மக்கள் நிரந்தரமாக இம்மண்ணில் தலைநிமிர்ந்து அனைத்து தரப்பினருடனும் சமமாக கைகோர்த்து நடப்பதற்கான தமது விருப்பத்தை வாக்களிப்பின் மூலம் நிரூபித்துள்ளனர். இதில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்பு அளப்பரியது என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
எதிர்பாராத விதமாக கூட்டமைப்பின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் அங்கத்துவக் கட்சியின் தலைவருமான திரு.சுரேஷ் க.பிறேமச்சந்திரன் அவர்கள் இத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார். ஆனால் கூட்டமைப்பின் வெற்றியில் அவரது பங்களிப்பு கணிசமாக இருந்ததைத் தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
கூட்டமைப்பின் ஜனநாயகத்தைக் காப்பதற்கும் அவரது குரல் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் ஒலிப்பதற்கும் தாங்கள் உரிய நடவடிக்கையை எடுப்பீர்கள் என்று நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் தங்களை 19.08.2015 அன்று திருகோணமலையில் தங்களது இல்லத்தில் நேரில் சந்தித்தபோதிலும் தாங்கள் அவர்களுக்குச் சாதகமான பதிலை அளிக்காமையானது எமக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
எனவே கீழே கையொப்பமிட்டுள்ள பொது அமைப்பின் பிரதிநிதிகளான நாம் தேசியப் பட்டியல் ஆசனத்தில் ஒன்றை திரு.சுரேஷ் க.பிறேமச்சந்திரனுக்கு அளித்து கூட்டமைப்பின் ஒற்றுமையையும் ஜனநாயகத்தையும் காப்பீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
மிகவும் நெருக்கடியான காலம்தொட்டு இன்றுவரை அவர் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளதை கவனத்தில்கொண்டு அவருக்கு அப்பதவியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது நான்கு கட்சிகளின் கூட்டிணைவு என்பதால் கிடைத்திருக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் இரண்டும் கூட்டமைப்புக்குச் சொந்தமானது என்பதை கவனத்தில் கொண்டு ஒரு கட்சியின் தலைவர் தோல்வியடைந்திருப்பதால் தாங்களாகவே முடிவெடுத்து அவருக்கு தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தைக் கொடுப்பீர்கள் என்று உங்கள்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். தாங்கள் அவ்வாறு நடந்துகொள்ளாமையால் நாங்கள் இக்கடிதத்தை எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதையும் தங்களது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு-கிழக்கில் போட்டியிட்டவர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்தனர். அத்தேர்தலில் அண்ணன் அமிர் அவர்கள் மட்டக்களப்பில் தோல்வியைத் தழுவியபோதிலும் அன்றைய இளைஞர்கள் அவரை தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்கினர். அவர்களின் அந்த ஜனநாயகப் பண்பிற்குத் தாங்கள் சற்றும் சளைத்தவர் அல்ல என்னும் எதிர்பார்ப்பிலேயே நாங்கள் இந்தக் கோரிக்கையைத் தங்களிடம் வைக்கின்றோம்.
எனவே, தாங்கள் சற்றும் தாமதியாமல் திருவாளர் சுரேஷ்.க.பிறேமச்சந்திரன் அவர்களுக்கு ஒரு ஆசனத்தை வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
நன்றி.
1.நிம் ஆலம், மீனவர் சங்கங்களின் சமாச தலைவர், மன்னார்.
2. வடமாகாண மீனவர் தொழிலாளர் சங்கங்களின் கிளைத்தலைவர்
3. க.அன்ரனி டேவிட், மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் தலைவர்
4. அந்தோனிமாஸ், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர்
5. முல்லைத்தீவு மாவட்ட கிராமங்களின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசம்
6. பருத்தித்துறை இளைஞர் கழகம்
7. யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம்
8. வவுனியா பனை, தென்னை கூட்டுறவுச் சங்கம், வவுனியா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.