இலங்கையின் 8வது பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பாராளுமன்றத்தின் 2ம் நாள் அமர்வு இன்று காலை 9.30க்கு மணிக்கு ஆரம்பமானது. இதன்போது, எதிர் கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நியமிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார். எதிர்கட்சித் தலைவர் பதவி குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எந்த கோரிக்கையையும் எழுத்து மூலம் முன்வைக்காத நிலையில், அந்த பதவிக்கான வெற்றிடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை நியமிப்பதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் பதவி 32 வருடங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
1977ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரையில் இரண்டு தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் என்ற வகையில் எதிர்கட்சித் தலைவராக செயற்பட்டார். அதன்பின்னர் 32 வருடங்களாக எதிர்கட்சித் தலைவர் பதவி தமிழர் ஒருவருக்கு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழர் ஒருவர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களின் மனதில் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
ஐக்கிய தேசிய கட்சி, ஜே வி பி, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் தம் விருப்பை வெளியிட்டிருந்தன.
சம்பந்தன் ஐயா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்
• 1933 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி இராஜவரோதயம்தம்பதிகளுக்கு திருகோணமலையில் பிறந்தார். யாழ். சம்பத்தரிசியார் கல்லூரி, குருணாகல் புனித. அன்னம்மாள், திருகோணமலை புனித. ஜோசப் மற்றும் மொரட்வ புனித. செபஸ்தியார் கல்லூரிகளில் கல்விகற்றுள்ளார்.பின்னர், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றி சட்டத்தரணியானார்.
சம்பந்தனின் மனைவியின் பெயர் லீலாவதி. சம்பந்தனுக்கு சஞ்சீவன், செந்தூரன் மற்றும் கிரிசாந்தி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
முதன் முதலாக 1977ம் ஆண்டு சம்பந்தன் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
1956ம் ஆண்டு சம்பந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அப்போதைய தலைவர் ஜே.வீ. செல்வநாயகம் 1963 மற்றும் 1970 களில் தேர்தலில் போட்டியிடுமாறு சம்பந்தனை அழைத்த போதிலும் அதனை அவர் நிராகரித்திருந்தார். 1972ம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழர் பேரவை உள்ளிட்டன கூட்டாக இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்த காரணத்தினால், 1983ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் திகதி சம்பந்தன் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார். 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் 2001ம் ஆண்டு முதல் இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.
இறுதியாக 2015ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அவர் 33,834 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
சம்பந்தன் ஐயா பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட விபரங்கள் வருமாறு
- 1977 திருகோணமலை த.வி.கூ - 15144 - வெற்றி
- 1989 திருகோணமலை மாவட்டம் த.வி.கூ 6048 - தோல்வி
- 2001 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 40110 - வெற்றி
- 2004 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 47735 - வெற்றி
- 2010 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 24488 - வெற்றி
- 2015 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 33834 - வெற்றி
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.