மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரேனிகுண்டா விமர்சனம்

கொலைக்கு அஞ்சாத இளம் குற்றவாளிகளின் கதை. கேட்ட கதை என்றாலும், படமாக்கியிருக்கும் விதம் ரத்தம் தெறிக்கும் யதார்த்தம்.

அப்பா, அம்மாவை கொன்றவனை பழி வாங்க முடியாமல் தோற்று சிறைக்கு வருகிறார் ஜானி. சிறையில் போலீஸின் சித்ரவதை. யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று ஜானியைப் போலவே பார்வையாளர்களும் ஏங்கும்போது ஆதரவு கொடுக்கிறது நால்வர் அணி. போலீஸையே போட்டுத் தள்ளுவோம்ல என்று மிரட்டும் இந்த நான்கு பேரும் விடலைப் பருவத்தின் விளிம்பில் நிற்பவர்கள்.


WDஜெயிலில் இருந்து தப்பிக்கும் இந்த நால்வருடன் இணைந்து கொள்கிறார் ஜானி. விரும்பி சேர்ந்த சேர்க்கையில்லை, இருக்கிற ஒரே ஆதரவு சாய்ஸ் அவர்கள் மட்டுமே. மும்பை செல்லும் வழியில் ஐவரும் ரேனிகுண்டாவில் எதிர்பாராமல் இறங்க நேர்கிறது. அங்கேயும் ஒரு நட்பு, ஒரு காதல், சில கொலைகள். முடிவு என்ன என்பது யூகிக்க முடிந்தாலும், கிளைமாக்ஸ் கற்பனைக்கு எட்டாத த்‌ரில்.

இளம் குற்றவாளிகளின் உலகை இத்தனை நேர்த்தியாக சித்த‌ரித்த வேறு தமிழ்ப் படம் இல்லை. ஐவ‌ரின் காஸ்ட்யூம் முதல் நடிப்பு வரை அத்தனையும் யதார்த்தம். அதிலும் அந்த டப்பா (தீப்பெட்டி கணேசன்) செமத்தியான அறிமுகம். தேடி வந்து சங்க அறுப்போமில்ல... என்று போலீஸிடமே தெனாவெட்டாக பேசுவதும், அந்த வெள்ளச் சட்டக்கா‌ரியில்லையே என்று காதல் போதையில் ஜானியிடம் கேட்பதும் திரையரங்கை குலுங்க வைக்கும் காட்சிகள். வெள்ளைச் சட்டக்கா‌ரியுடனான காதல் காட்சிகள் கொஞ்சம் நீளம்.

அப்பா, அம்மாவை பறிகொடுத்துவிட்டு, போலீஸிடம் அடி வாங்கும் ஜானிக்கு அப்படியே அப்பாவி முகம். அவரே, நண்பனை பறிகொடுத்த கோபத்தில் எதி‌ரியை நார் நாராக கிழிக்கும்போது சுர்ரென்கிறது. முதல் படமா? நம்ப முடியவில்லை.

ரேனிகுண்டாவில் அடைக்கலம் தரும் பங்கர் குரூப், சின்ன பசங்க என்று ஐந்து பேரையும் திருப்பி அனுப்புகிறது. ‘நாம என்ன ஐஸ் சாப்பிடுற பசங்களா? யாருடா அவன்?’ என்று நாலே வார்த்தையில் கொலைக்கு தயாராகும் நிசாந்தின் டீம் டீலர்ஷிப் ரொம்பவே அமர்க்களம். அவரை கூட்டமாக அடித்துக் கொல்லும்போது திரையரங்கே அழுகிறது.

பத்தாம் வகுப்பு ப‌ரிட்சை எழுதிவிட்டு வந்தவரை போலிருக்கிறார் சனுஜா. அவரது எ‌ண்ட்‌ரி படத்துக்கு புது கலர். தோழியாக வரும் வெள்ளைச் சட்டக்கா‌ரியின் வயசுக்கு மீறிய பேச்சுதான் கொஞ்சம் நெருடல். பாலியல் தொழிலாளியாக வரும் சஞ்சனா சிங், அடைக்கலம் தரும் பங்கர் என ஒவ்வொரு கேரக்டரும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டிருக்கிறது.

போலீஸும், மழையும் ஜானியை துரத்தும் முதல் காட்சி, அப்படியே தேகோட்டைக்கு பிளாஷ்பேக்கில் செல்லும் விதம் திரைக்கதையின் வலிமையை உணர்த்திவிடுகிறது. ஆளில்லாத வனாந்தரத்தில் ‌ஜீப்பில் வரும் வில்லனை போட்டுத் தள்ளுவதை, ஐவரும் டெமான்ஸ்ரேஷன் செய்து காண்பிப்பது, பயங்கரம்.

படத்துக்கு உயிர் கொடுத்திருப்பது சக்தியின் கேமராவும், கச்சிதமான எடிட்டிங்கும், கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசையும். நறுக்கென்று விழும் சிங்கப்புலியின் வசனங்களில் ரௌத்ரம் அளவுக்கு ஜாலியும் இருக்கிறது. கால், கைகளை மடக்கி நெஞ்சில் ஏறி அமர்ந்து போட்டுத்தள்ளும் ராஜசேக‌ரின் சண்டைக் காட்சிகள் பயமுறுத்துகின்றன. அதிலும் நண்பர்கள் மாட்டிக் கொள்ளும் இடம், படுபயங்கரம்.

அம்மா, அப்பாவை நடுத் தெருவில் சாகடிக்கும் போது எல்லோரும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். போலீஸ் பூட்ஸ் காலால் மிதிக்கிறது. அம்மணமாக சித்ரவதை செய்கிறது. கேட்பதற்கு யாருமில்லை. கொலை செய்தவனோ சுதந்திரமாக வெளியே தி‌ரிகிறான். நான் செய்த குற்றமென்ன? நடு இரவில் கண்ணீர் விடுகிறவனிடம் நிசாந்த் கேட்கிறான், “அவனை தூக்கிரலாமா?” திரையரங்கே விசில் அடித்து வரவேற்கிறது. வன்முறை தூக்கல் என்று வரும் விமர்சனங்களைத் தாண்டி இயக்குனர் வெற்றிபெறும் இடம் இதுதான்.

ரேனிகுண்டா - பெருமைக்கு‌ரிய முயற்சி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.