மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 2010 MICROSOFTக்கு சவாலாக அமையுமா

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுபட்டு வர்த்தகத்தை மேற்கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனமும், தொடர்ந்து சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கும். இந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் சவால்களைச் சந்தித்த வண்ணம் உள்ளது அனைவரும் அறிந்ததே.

2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தன் கட்டமைப்பில் பல சிக்கல்களை மைக்ரோசாப்ட் சந்தித்தது. இதன் பல பிரிவுகளில் அலுவலர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். இதன் காலாண்டு வருமானம் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் குறைவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் ஆண்டின் இறுதியில் விண்டோஸ் 7 கை கொடுக்க, மைக்ரோசாப்ட் தலை நிமிர்ந்தது. சிஸ்டம் பொதுமக்களுக்கு வெளியாவதற்கு முன் வெளியிட்ட சோதனைத் தொகுப்புகளே இதன் இமேஜை நிமிர்த்தின. அக்டோபரில் விண்டோஸ் 7 வெளியானபோது மைக்ரோசாப்ட் உறுதியான தளத்தில் இருந்தது.

இதன் சர்ச் இஞ்சின் பிங் மிக அருமையான இலக்குகளை முன்வைத்து மற்றவற்றிலிருந்து மாறுபட்ட இயக்கத்தைக் கொடுத்து வெற்றி பெற்றது. இதன் வழி விளம்பர வருமானமும் இதற்குக் கை கொடுத்தது. இதன் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் வெளியான அஸூர் இன்னும் உறுதியான எதிர்காலத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கியது.

இருந்தாலும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய பெரிய நிறுவனம் மேலும் பல காரணங்களால் பாதிக்கப்படுவது இயற்கையே. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மைக்ரோசாப்ட் தப்ப இயலவில்லை. தற்போது பன்னாட்டளவில் பொருளாதார நிலை சீரடைந்து வருவதால், 2010 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஆண்டாகத் தான் இருக்கும்.

மொபைல் பிரிவு

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 6.5 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், இங்கும் தன் வலிமையை நிரூபித்து நிலைக்க முடியும் என்று எண்ணியது. ஆனால் அது எடுபடவில்லை. ஏற்கனவே உறுதியாக இயங்கிக் கொண்டிருக்கும் பல நிறுவனங்களுக்குப் போட்டியாக நுழைந்து வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுப்பது, வெற்றி பெற முடியாத சவாலாகவே மைக்ரோசாப்ட் 2009ல் கண்டது.

ஆர்.ஐ.எம்., பால்ம், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் வெற்றி, வாடிக்கையாளர்கள் ஒரே நிறுவனத்திலிருந்து தங்கள் போன்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் ப்ராஜக்ட் பிங்க் என்ற பெயரில் தன் மொபைல் போன்களை தயாரிக்கும் திட்டம் ஒன்றை அறிவித்தது. அதில் ஸூன் சர்வீஸ் இணைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப் பட்டது. அப்படியானல் இன்னும் ஓராண்டு நாம் அதற்காகக் காத்திருக்க வேண்டும். ஐ போன்,பிளாக்பெரி, பால்ம் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் ஆகியவற்றுடன், மொபைல் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் போட்டியில் இயங்க முடியவில்லை. நல்ல ஒரு பார்ட்னர் நிறுவனத்துணையுடன் சாப்ட்வேர், சர்வீசஸ் ஆகிய இரண்டுடனும் இறங்கினால் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் மொபைல் சந்தையில் இயங்க முடியும். இல்லையேல் இந்தப் பிரிவை மறக்க வேண்டியதுதான்.

விண்டோஸ் 7

2007–09 ஆம் ஆண்டுகள் மைக்ரோசாப்ட்டிற்கு மிகுந்த சோதனையைக் கொடுத்தது. இதற்குக் காரணம் மக்களிடையே எடுபடாமல், பல பிரச்சினைகளை வாடிக்கையாளர் களுக்குக் கொடுத்து வந்த விண்டோஸ் விஸ்டா இயக்கத்தொகுப்பாகும். ஆனால் விண்டோஸ் 7 வந்தவுடன் அதில் விஸ்டாவின் இயக்கம் துளி கூட இல்லை என்ற செய்தியே கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இனிப்பாக இருந்தது. தொடக்க விற்பனையும், விஸ்டா 7 குறித்து வந்த ஆய்வுக் குறிப்புகளும் மைக்ரோசாப்ட் நிலையைத் தூக்கி நிறுத்தியது. 2010ல் இந்த நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலையாய பணியாக இருக்கும்.

எம்.எஸ். ஆபீஸ்

மைக்ரோசாப் நிறுவனத்திற்கு, மற்ற எந்த சாப்ட்வேர் தொகுப்பினைக் காட்டிலும் அதிக வருமானம் தரும் தொகுப்பு அதன் ஆபீஸ் தொகுப்புதான். இலவசமாகக் கிடைக்கும் ஓப்பன் ஆபீஸ் மற்றும் ஸோஹோ தொகுப்புகள் ஆபீஸ் தொகுப்பிற்கு போட்டியா என்பது இன்னும் கேள்விக் குறிதான். சர்வர்களைக் கொண்டு அலுவலகப் பணிகளை இயக்கி வரும் பெரிய நிறுவனங்கள் தற்போது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பைத்தான் விரும்புகின்றன. ஆனால் கூகுள் தற்போது மிக வேகமாகக் கொண்டு வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் அப்ளிகேஷன்கள், டேட்டா ஸ்டோரேஜ் போன்ற விஷயங்கள், மைக்ரோசாப்ட் நிலையைச் சற்று அசைத்துப் பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அடுத்த 2010 ஜூனில் வெளியாக இருக்கும் ஆபீஸ் 2010 கூகுள் தரும் அப்ளிகேஷன்களைச் சமாளிக்க வேண்டியதிருக்கும். எனவே தன்னுடைய ஆபீஸ் தொகுப்பு எப்படி மற்றவற்றைக் காட்டிலும் சிறந்தது என்று காட்ட வேண்டிய சவாலை மைக்ரோசாப்ட் நிறுவனம் சந்திக்க வேண்டியதிருக்கும்.

பிங் சர்ச் இஞ்சின்

வரும் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சின் இலக்கு மிக எளிதான ஒன்றாக இருக்கும். விளம்பர வழி வருமானத்தைப் பெருக்குவதும், சர்ச் இஞ்சின் பிரிவில் பெரிய அளவில் இடம் பெறுவதும் ஆகும். தற்போது இந்தப் பிரிவில் 9.9% இடத்தை பிங் கொண்டுள்ளது. யாஹூவுடன் கொண்டுள்ள ஒப்பந்தம் மற்றும் பிங் தொடர்ந்து கொடுத்து வரும் புதிய வசதிகள் நிச்சயம் 2010 ஆம் ஆண்டில் இதனை உயரத்திற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

எழுதியவர் : KarthiK
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.