மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அசல் அலசல் - ‌விம‌ர்சன‌ம்

ஒரு ஊ‌ரில் ஒரு பெரியவர். அவருக்கு மூன்று மகன்கள். இரண்டு பேர் கெட்டவங்க, ஒருத்தர் நல்லவர். கெட்டவங்க சொத்துக்காக நல்லவரை அழிக்கப் பார்க்கிறாங்க. எண்பதுகளில் எஸ்.பி.முத்துராமன் பொள்ளாச்சியில் எடுத்தப் படத்தை சரண் பிரான்சில் எடுத்திருக்கிறார். கதை, கறிவேப்பிலை என்று கை கால் உடம்பை நம்பாமல் தல-யை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்.

அசலின் ஒன்மேன் ஆர்மி அ‌‌ஜீத். கொடுவா மீசை கல‌ரிங் முடி என்று கெட்டப்பே கிளப்புகிறது. பவர் ஆஃப் சைலன்ஸ் சப் டைட்டில் மாதி‌ரி படம் முழுக்க அண்டர்ப்ளே செய்திருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்க்கிற இடங்களில் சிகார் புகையுடன் ஸ்லோமோஷனில் எ‌ண்ட்‌ரியாகும் போது அரங்கம் அப்ளாஸில் குலுங்குகிறது. மாஸ்... மாஸ்.. மற்றபடி?

அண்டர்ப்ளே என்று முடிவெடுத்ததால் அளந்துதான் பேசுகிறார் வார்த்தைகளை. ரொமான்ஸ், காமெடி என்று எந்த ‌ரியா‌க்சனும் இல்லை, எப்போதும் சி‌ரிக்காத சீ‌ரியஸ் முகம். அப்பா அ‌ஜித்துக்கு அதிக வேலையில்லை. எப்போதும் இருமிக் கொண்டேயிருக்கிறார் (வயசானவராம்). விட்டால் இரண்டு நாளில் இருமியே செத்திருப்பார். அவரைப் போய் கரண்ட் ஷாக் கொடுத்து, முகத்தில் தலையணையை அழுத்தி... பாவம்பா.

சம்பத்தும், ரா‌‌ஜீவ் கிருஷ்ணாவும் துஷ்டப் பிள்ளைகள். அ‌ஜித்திடம் மோதும் போது அசட்டுப் பிள்ளைகள். தம்பியை முதுகில் சுட்ட ரா‌‌ஜீவ் சமீராவிடம், ‘உன்னை எப்பவோ அடைஞ்சிருக்க முடியும். ஆனா உன் ஒரு வார்த்தைக்காகதான் காத்திருக்கேன்’ என்று கண்ணிய மணி அடிப்பது படு தமாஷ். சம்பத்திடம் கோவா மேன‌ரிசம் பிரதிபலிக்கிறதோ என்று ஐயம். இவர்களின் மாமாவாக வரும் பிரதீப் ராவத் சகுனி வேலையை கச்சிதமாக செய்கிறார்.

சமீரா ரெட்டி, பாவனா இருவரும் அ‌ஜித்தின் மீதுள்ள காதலால் பொறாமையில் புகைந்து பரஸ்பரம் வார்த்தையில் வம்புக்கிழுப்பது ச்சோ... ஸ்வீட். சமீரா அ‌ஜித்தின் சட்டையை போட்டிருப்பதைப் பார்த்து, நான் என்னோட ட்ரெஸ்ஸை தரட்டுமா என்று பாவனா கேட்பதும், உன்னோட சைஸ் என்ன என்று சமீரா நக்கலாக பதிலளிப்பதும் அசலான பெண்மையின் பொறாமை. சமீராவின் ஹேர் ஸ்டைல் சிலநேரம் ஐந்து வயது அதிகமானவராக காட்டுகிறது.

சுரேஷுக்கு இது ‌‌ரீஎ‌ண்ட்‌ரி. பிரான்ஸ் போலீஸாக வில்லன்களுக்கு உதவி செய்து கிளைமாக்சில் திருந்துகிறார். ரா‌‌ஜீவ் கிருஷ்ணாவை சுரேஷ் கொன்றிருப்பார் என சம்பத் சந்தேகப்படுவது திரைக்கதையில் டெம்போவை சேர்க்கும் இடம். புரொடியூசர் என்பதால் பிரபுவையும் ஆட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஆயுத டீலராக வரும் கெல்லி டோர்‌ஜி அலட்டாமலே அட்டகாசம் செய்கிறார். பிரபுவின் ஹைடெக் அடியாள் யூகிசேது. முண்டம்னு சொன்னா தலை வந்திடும் என்று அல்லக்கைகளிடம் இவர்விடும் அக்குறும்புகள் கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெ‌ரியவரும்.

ஸ்டைலிஷான சண்டைக் காட்சிகள். வெளிநாட்டு சண்டைக் கலைஞர்கள் அற்புதமாக எகிறுகிறார்கள், உதைக்கிறார்கள்... எல்லாம் அ‌‌ஜீத்துக்கு ஐந்தடி தள்ளி. பரத்வா‌ஜின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார். டொட்டடாய்ங் பாடலில் மட்டும் அ‌‌ஜீத் உற்சாகமாக ஆடுகிறார். மற்ற பாடல்களிலும் அதே அண்டர்ப்ளே.

கையில் துப்பாக்கியும் கண்ணெதி‌ரில் அ‌‌‌ஜீத்தும் இருந்த பிறகும் அவரை கட்டிப் போட்டு கரண்ட் ஷாக் கொடுக்கும் வில்லன்களைப் பார்த்தால் ப‌ரிதாபமாக இருக்கிறது. கிளைமாக்ஸில் அப்பாவை‌க் கொன்றது அண்ணன்தான் என்று தெ‌ரிந்ததும் கட்டுகளை அ‌ஜித் உடைத்தெறிவதெல்லாம் பொறுத்தது போதும் மனோகரா. பிளாக் அண்ட் ஒயிட்லேயே பார்த்திட்டோமே.

காஸ்ட்லி காஸ்ட்யூம், வகை வகையான கார்கள், ஹைடெக் வீடுகள், கல‌ரிங் முடி என்று எக்ஸ்ட்ரா பிட்டிங்கில் எனர்‌ஜியை செலவ‌‌ழித்தவர்கள் கதை, திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

அசல் - அ‌ஜித் ரசிகர்களுக்கு மட்டும்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.