மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தீராத விளையாட்டுப் பிள்ளை - விமர்சனம்

வாடகைக்கு குடி போறதுக்கே நாலு வீடு பார்க்கிறோம். காலம்பூரா வாழப்போற வாழ்க்கைத் துணையை மட்டும் எப்படி சாய்ஸ் இல்லாம தேர்ந்தெடுக்கிறது? எதிலும் தி பெஸ்டை செலக்ட் செய்யும் விளையாட்டுப் பிள்ளை விஷாலின் இந்த ஒருவ‌ரி கேள்விதான் தீராத விளையாட்டுப் பிள்ளை.

திருமணம் செய்ய மூன்று பெண்களை காதலிக்கிறார் விஷால். மூவ‌ரில் யார் பெஸ்டோ அவர்களை திருமதியாக்குவது திட்டம். இந்த மூன்று பேரையும் ஒரே நாளில் சந்திக்கும் ஆ'ரம்ப' காட்சிகளால் திணறிப் போகிறோம். ஆனால், அடுத்தடுத்து நமக்கு காத்திருப்பதோ ஆச்ச‌ரியம்.

நீது சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா என்று மூன்று ப்ளேவர்கள். லா‌ஜிக்கை வாசலோடு விட்டு வந்தால் இந்த மூன்று பேரையும் விஷால் காதலிக்க வைக்கும் ரகளையை ரசிக்கலாம். இவருக்கு துணையாக சந்தானம், சத்யன், மயில்சாமி. கிடைக்கிற சந்திலெல்லாம் சி‌ரிக்க வைக்கிறார்கள். அதிலும் சந்தானம் அடிக்கிற நக்கல் ஒவ்வொன்றும் காமெடி ரவுசு. ‘ஒரே ஆளை காதலித்து அவனையே கல்யாணம் பண்ணிக்கணுமாம். நல்ல குடும்பத்துல பிறந்த பெண் பேசுற பேச்சா இது.’

விஷாலின் த்‌‌ரீ இன் ஒன் காதல் நீது சந்திராவுக்கு தெ‌ரிந்த பிறகு திரைக்கதையில் ஜெட் வேகம். நீதுவின் திட்டப்படி சாரா விஷாலின் வீட்டிற்கே வந்து பால் காய்ச்சுவதும், தனுஸ்ரீயின் அண்ணன் பிரகாஷ்ரா‌ஜின் அதிரடி எ‌ண்ட்‌ரியும் ஆஹா போட வைக்கும் காட்சிகள்.

நீதுவின் திட்டப்படி தனுஸ்ரீ தியேட்டர் வாசலில் வைத்து விஷாலிடம் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும், அதுக்கென்ன என்று விஷால் திருப்பியடிப்பதும், இதை எதிர்பார்க்காத தனுஸ்ரீ திருதிருவென விழிப்பதுமாக காட்சிகள் றெக்கை கட்டுகின்றன. ஆனால் இந்த ரொமாண்டிக் காமெடி அளவுக்கு மீறிப் போவதையும் சொல்லியாக வேண்டும்.

பாடல்கள் கேட்கிற ரகம். தீராத விளையாட்டுப் பிள்ளை பாடல் மட்டும் ஒன்ஸ்மோர் வகை. படத்தின் ஆரோக்கியமான அம்சம் அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. காட்சிகள், பாடல்கள் அனைத்திலும் கேமரா கோணமும், லைட்டிங்கும் கவர்கின்றன.

இந்தப் படத்தில்தான் அழகாக உடையணிந்திருக்கிறார் விஷால். ஆ‌க்சன் படத்தில் வரும் காமெடி காட்சிகளில் எப்படி நடிப்பாரோ அதையே இதில் படம் முழுக்க செய்திருக்கிறார். ஆனால் உறுத்தாத விதத்தில்.

நாயகிகளில் நீது சந்திராவுக்குதான் நடிக்க வாய்ப்பு. சேலையில் தனுஸ்ரீ தத்தா கொள்ளை அழகு. விஷால் தேர்வு செய்யும் சாராதான் இந்த மூவ‌ரில் சுமார். அவரது பாலினும் தூய காதல் நம்பும்படி இல்லை. சாராவை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க விஷால் போடும் கிளைமாக்ஸ் நாடகமும், சினேகா எ‌ண்ட்‌ரியும் புளித்துப் போன, அதேசமயம் கலகலப்பான முடிவு.

திரைக்கதையில் வரும் சின்னச் சின்ன டுவிஸ்டுகள் காட்சிகளை பரபரப்பாக நகர்த்துகின்றன. ரம்பக் காட்சிகள் எவை என்று இயக்குனர் திருவுக்கு நன்றாக தெ‌ரிந்திருக்கிறது. சந்தானத்தை வைத்து அந்தக் காட்சிகளை நக்கல் அடிப்பதன் மூலம் சமாளிக்கிறார். இயக்குன‌ரின் இந்தப் பு‌ரிதல்தான் படத்தை காப்பாற்றுகிறது.

லா‌‌ஜிக்கை மறந்தால் ரசித்து சி‌ரிக்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.