மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


விக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010

தமிழ் புது வருட வாழ்த்துக்கள்
விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில், நவாம்சத்தில், சிம்ம லக்னம், கும்ப ராசியில், புதன் ஹோரையில், வைதி ருதி நாமயோகம், நாவகம், நாமகரணம், மரணயோகம், நேத்திரம் ஜீவனற்ற பஞ்சபட்சியில், மயில் துயில் கொள்ளும் நேரத்தில், புதன் தசை, ராகு புத்தியில் பிறக்கிறது.

விக்ருதி ஆண்டுப் பலன்களை ராசி வாரியாக ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் தொகுத்து அளித்துள்ளார்.

விக்ருதி வருட‌ப் பலன்கள் : மேஷம்

எடுத்த காரியங்களை விரைந்து முடிக்கும் வல்லமையுள்ளவர்களே! உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான் லாப வீட்டில் நிற்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுக்ரன் ராசிக்குள்ளேயே நிற்பதனால் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். தள்ளிப்போன திருமணம் உடனே முடியும். 6-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வதால் இழுபறியாக இருந்த பல வேலைகள் இந்தாண்டில் விரைந்து முடியும். விலையுயர்ந்த வாகனங்கள் வாங்குவீர்கள். பங்காளிப் பிரச்சனை தீரும். வழக்குகள் சாதகமாகும். பழைய கடனை பைசல் செய்வதற்கு குறைந்த வட்டியில் லோன் கிடைக்கும்.

உங்கள் ராசிநாதனான செவ்வாய் 27.5.2010 வரை நீச்சகதியில் இருப்பதால் அதுவரை உடல் பலவீனமாகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். ரத்தத்தில் ஹீமோகுளோபின், கால்சியம் சத்துக்கள் குறையும். 21.7.2010 முதல் 6.9.2010 வரை செவ்வாய் பாதகாதியான சனியுடன் சேர்வதால் இக்காலகட்டத்தில் சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், பண இழப்புகள், வீண் பழி வந்துநீங்கும். சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியது வரும்.

மூன்றாவது வீட்டில் இந்த வருடம் முழுக்க கேது தொடர்வதால் பிரபலங்கள் அறிமுகமாவார்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள். குல தெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்சனைகள் தீரும்.வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு.
இந்த வருடம் முழுக்க 9-ம் வீட்டில் ராகு தொடர்வதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். கருத்துமோதல்கள் வரக்கூடும். பிதுர் வழி சொத்துக்களை பெறுவதில் பிரச்சனைகள் வந்து நீங்கும்.

14.4.2010 முதல் 1.5.2010 முடிய மற்றும் 7.11.2010 முதல் 20.11.2010 முடிய உள்ள நாட்களில் மட்டும் குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பார். மற்ற நாட்களில் எல்லாம் 12-ம் வீட்டில் சென்று மறைவதாலும், உங்கள் ராசிக்கு விரைய வீட்டில் இந்தாண்டு பிறப்பதாலும் அனாவசிய செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளாலும் வீண் அலைச்சலும், செலவுகளும் வரும். வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது போன்ற சுபச்செலவுகளையும் குருபகவான் தருவார்.

வருடம் பிறக்கும் போது புதன் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். லாபாதிபதி சனி 6-ம் வீட்டில் நிற்பதால் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். ஆனி, ஆவணி மாத பிற்பகுதி, புரட்டாசி, தை, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் திடீர் யோகமும், லாபமும் உண்டாகும்.

உத்யோகத்தில் சூழ்ச்சியாலும், மறைமுக எதிரிகளாலும் இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். ஆனி, ஆடி, தை, மாசி மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அதன் மூலம் அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

கலைஞர்களே திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்தீர்களே! இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னிப்பெண்களே மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். தள்ளிப் போன கல்யாணம் விரைந்து முடியும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணாக்கர்களே! நீங்கள் எதிர்பார்த்த நல்ல நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். சிலருக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கிட்டும்.

இந்த விக்ருதி ஆண்டு புதிய முயற்சிகளில் வெற்றியையும், சொத்துச் சேர்க்கையையும் செல்வாக்கையும் தரும்.

பரிகாரம் :
திருச்செந்தூர் முருகப்பெருமானை சஷ்டி திதி அல்லது புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள். வருமானம் உயரும்.

விக்ருதி வருட‌ப் பலன்கள் : ரிஷபம்

எதார்த்தமாக பேசும் நீங்கள், சில நேரங்களில் தன் பேச்சில் பிறரின் தவறுகளை சுட்டிக் காட்டவும் தயங்கமாட்டீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். எதிர்பார்த்த பணமும் கைக்கு வரும். பூர்வபுண்யாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஆண்டு பிறப்பதால் வீடு கல்யாணம், கச்சேரி என்று களை கட்டும். இப்போது பத்தாம் வீட்டில் நின்றுகொண்டிருக்கும் குருபகாவன் 2.5.10 முதல் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நுழைவதால் அதுமுதல் எதிலும் வெற்றியுண்டாகும்.

அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் உடனே முடியும். வழக்குகளில் வெற்றியுண்டு. சிலருக்கு புது வேலை கிடைக்கும். மனை வாங்கி போட்டு வெகுநாட்களாகிவிட்டதே! அதில் இப்போது வீடு கட்டி முடிப்பீர்கள். பிள்ளைபாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் உடனே கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த அதிரடி திட்டங்கள் தீட்டி உழைப்பீர்கள்.

ஐந்தாம் வீட்டில் சனி நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளிடம் பிடிவாத குணம் இருக்கும். மகனை அயல்நாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் கூடுதலாக செலவு செய்து அதை சீர்திருத்தம் செய்வீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்துசேரும்.உங்கள் மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து வரன் அமையும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள்.

ஆனி மாதத்தில் புது முயற்சிகள் வெற்றியடையும். உங்களை குறை கூறியவர்களெல்லாம் இனி உங்களை பாராட்டி பேசுவார்கள். 14.4.10 முதல் 1.5.10 வரை மற்றும் 7.11.10 முதல் 20.11.10 வரை குரு ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் இக்காலக்கட்டத்தில் உத்யோகத்தில் சிறு சிறு இடர்பாடுகள், குடும்பத்தில் அதிருப்தி, கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், உங்களைப் பற்றிய வதந்திகள் வந்து போகும்.

2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் நிற்பதால் பேச்சில் அதிகம் கடுமை காட்டாதீர்கள். சில நேரங்களில் நீங்கள் விளையாட்டாக பேசப் போயி அது விபரீதமாக முடியும். உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். டென்சன், அரசு விஷயங்களில் தடுமாற்றம் வந்துபோகும். கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகளின் நட்பு கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள்.

ஆவணி மாதத்தில் வரவேண்டிய பணம் வந்துசேரும். நீண்டகால திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது முடியும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். சேமிக்கவும் தொடங்குவீர்கள். புது வீடு, மனை, சொத்து வாங்குவீர்கள். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். ஐப்பசி மாதத்தில் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டு.

உடன்பிறந்தவர்களுடன் கருத்து மோதல்கள் வெடிக்கும். வழக்குகளில் அவசர முடிவுகள் வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.
28.11.2010 முதல் 5.1.2011 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் மனைவிக்கு உடல் நிலை பாதிக்கும். கருத்து மோதலும் வரக்கூடும். வாகனங்களை இயக்கும் போது கவனம் தேவை. தை, மாசி, பங்குனி மாதங்களில் அதிரடியான மாற்றங்கள் நிகழும். பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்யாணம் பேசி முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் சென்ற வருடத்தில் நட்டப்பட்டீர்களே! இந்த வருடத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். போட்டியாளர்கள் வியக்கும்படி கடையை விரிவுபடுத்தி பெரியளவில் கொள்முதல் செய்வீர்கள். தை மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

உயரதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். கிசுகிசு தொல்லைகள் குறையும். பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும்.

கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தைகளும் சுமுகமாக முடியும். மாணாக்கர்களே, நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடங்குவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதுடன் தைரியமான முடிவுகளையும் எடுக்கச் செய்யும்.

பரிகாரம் :
ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள். சுபிக்ஷம் உண்டாகும்.

விக்ருதி வருட‌ப் பலன்கள் : மிதுனம்

தீவிரமாக யோசித்து மிதமாக முடிவெடுப்பவர்களே! மற்றவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்பவர்களே! உங்கள் ராசிநாதன் புதனும், யோகாதிபதி சுக்ரனும் லாபவீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். தடுமாறிக் கொண்டிருந்த நீங்கள், இனி சரியான பாதையை தேர்ந்தெடுப்பீர்கள். உங்கள் ராசிநாதனின் நட்சத்திரத்திலும் மற்றும் உங்களது 10-வது ராசியிலும் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் உங்கள் அந்தஸ்து ஒருபடி உயரும். இதுநாள் வரை நீங்கள் சிந்திய வியர்வைக்கு நல்ல பலன் இனி கிடைக்கும்.

குடும்பத்தில் கடந்த வருடத்தில் ஏற்பட்டு வந்த கூச்சல் குழப்பங்களெல்லாம் நீங்கும். தள்ளிப்போன கல்யாணம் இனி நல்லவிதத்தில் முடியும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து அத்தியாவசியமான செலவுகளை மட்டும் இனிமேல் செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்கள் இருவருக்குள்ளும் வீண் வம்புசண்டையை ஏற்படுத்திய உறவினர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.

வாங்கியிருந்த கடனை எப்படி அடைப்பது என வருந்தினீர்களே! இனி அதற்கான வழி கிடைக்கும். பிரச்சனைகளை தொலைநோக்குப் பார்வையுடன் தீர்க்கும் மதிநுட்பம் அறிவீர்கள். குழந்தை இல்லையே என வருந்திக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு அழகான வாரிசு உருவாகும். வயிற்றுக்கோளாறு, மூட்டுவலி மற்றும் நெஞ்சுவலி இவற்றிலிருந்து விடுபடுவீர்கள். அரைகுறையாக நின்றுபோன கட்டிடவேலைகளையும் இனி விரைந்து முடிப்பீர்கள்.

குரு 9-ம் வீட்டில் பலமாக அமைந்திருப்பதால் காசுபணத்திற்கு குறைவிருக்காது. ஆனால் 2.5.10 முதல் குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிற்கு செல்வதால் வீண் செலவுகள், அலைச்சல், ஏமாற்றம் வரும். உத்யோகத்தில் உறுதியற்றநிலை உண்டாகும். உங்களைப் பற்றிய அவதூறானப் பேச்சுகள் அதிகரிக்கும். யாருக்கும் காரெண்டர் கையெழுத்திட வேண்டாம்.

இந்தாண்டு முழுக்க 4-ம் வீட்டில் சனி தொடர்வதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களால் புறக்கணிக்கப்படுவீர்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். சொந்த வாகனத்தில் தொலை தூரப்பயணங்களை தவிர்ப்பது நல்லது. வீட்டில் அடிக்கடி கழிவுநீர் பிரச்சனை வரும். முதுகு, மூட்டுவலி வந்து நீங்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ராசிக்குள் கேது நிற்பதால் எண்ணெய்யில் பொறித்த உணவுகள், வெளிஉணவுகளை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது முன்கோபம் வரக்கூடும். 7-ல் ராகுவும் நிற்பதால் மன உளைச்சல், விரக்தி, ஏமாற்றங்கள் வந்துபோகும். தலைசுத்தல் வரும். சகோதர வகையில் மற்றும் தாயாருடன் வீண் விவாதம் வரக்கூடும். கொஞ்சம் அனுசரித்துப் போங்கள்.

ஆவணி, கார்த்திகை மாதங்களில் புதிய திட்டங்கள் நிறைவேறும். இழுபறியான பல வேலைகளை அதிரடியாக முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சொந்தம் பந்தங்கள் மெச்சும்படி திருமணத்தை முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்காமல் சந்தை நிலவரம் அறிந்து செயல்படப்பாருங்கள். வேலையாட்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். அனுபவமிகுந்த புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். கெமிக்கல், ஷேர், மரவகைகளால் ஆதாயமுண்டு.

உத்யோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களின் முன் ஜெயித்துக் காட்டுவீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். ஆனால் 10-ல் குரு தொடர்வதால் எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.கலைத்துறையினர்களே, பரபரப்பாக காணப்படுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

கன்னிப் பெண்களே, பெற்றோரின் ஆலோசனையில்லாமல் சில முடிவுகளை எடுத்து அவஸ்தைப் பட்டீர்களே! இனி அந்த நிலை மாறும். தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். காதல் கைகூடும். கனவுத்தொல்லையால் சிரமப்படுவீர்கள். மாணாக்கர்களே! எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேர்வீர்கள். சிலருக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கிட்டும்.

இந்தாண்டு கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் ஓரளவு வெற்றியைத் தரும்.

பரிகாரம் :
உளுந்தூர் பேட்டைக்கு அருகிலுள்ள பரிக்கல் ஸ்ரீலஷ்மி நரசிம்மரை பூரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.

விக்ருதி வருட‌ப் பலன்கள் : கடகம்

நீதி, நியாயத்திற்கு கட்டுப்பட்ட நீங்கள், ஏமாற்றங்களையும், துரோகங்களையும் தாண்டி சாதிப்பவர்கள். உங்களுக்கு ஒன்பதாம் வீட்டில் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். கடன்பிரச்சனை, நோய், சின்ன சின்ன அவமானங்கள் என்று பலகோணங்களிலும் அலைகழிக்கப்பட்டீர்களே! அதிலிருந்து இனி விடுபடுவீர்கள். 8-ல் மறைந்து கிடக்கும் குருபகவான் 2.5.10 முதல் ராசிக்கு 9-ம் வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

குடும்பத்தாருடன் மனம்விட்டுப்பேசுவோம் என்று பேசத்தொடங்கி கடைசியில் சண்டை சச்சரவில் போய் முடிந்ததே! இனி பக்குமாகப் பேசுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களுடனும், சகோதரர்களுடனும் மாறி மாறி மனஸ்தாபம் வந்ததே! இனி மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் ஆசைப்பட்டதைக் கூட வாங்கிக் கொடுக்கமுடியாமல் போனதே! இனி விரும்பிய அனைத்தையும் வாங்கிக் கொடுப்பீர்கள்.

ஆவணி, புரட்டாசி, கார்த்திகை மாதங்களில் களையிழந்த வீடு சுபநிகழ்ச்சிகளால் களைகட்டும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள் கூட வலிய வந்து நட்புபாராட்டுவார்கள். காற்றோட்டமின்றி, இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்தீர்களே! இனி எல்லா வசதிகளும் கூடிய வீட்டிற்கு குடிபுகுவீர்கள்.

உங்கள் யோகாதிபதி செவ்வாய் 27.5.10 வரை உங்கள் ராசிக்குள்ளேயே நீச்சம்பெற்றிருப்பதால் முன்கோபம் அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. சகோதரவகையில் அலைச்சல் இருக்கும்.
இந்த ஆண்டு முழுக்க 3-ம் வீட்டிலேயே சனி தொடர்வதால் பிரபலங்கள், தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். ராகு 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். நீண்டகாலமாக போகாமல் இருந்த குலதெய்வக்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகையின்மையால் சரக்குகள் தேங்கிப் போனதே, இனி புது யுக்தியுடன் அவற்றையெல்லாம் விற்றுத்தீர்ப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நாசூக்காக வசூலிப்பீர்கள். நீசப்பொருட்களான இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள் மூலம் லாபம் வரும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நம்பிக்கைக்குறியவர்களிடம் கடையை விரிவுபடுத்து குறித்து ஆலோசனை செய்வீர்கள். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் கச்சிதமாக இனி வேலையை முடிப்பார்கள்.

உத்யோகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இனி வேலையில் விருப்பம் வரும். மேலதிகாரியுடனான மனஸ்தாபங்கள் விலகும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். ஐப்பசி, மாசி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களை குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி உங்களின் பரந்த மனசை சரியாக புரிந்து கொள்வார்கள்.

கலைஞர்களே, உங்களைப் பற்றி தினந்தோறும் வதந்திகள், கிசுகிசுக்கள் என வந்ததே! இனி நிம்மதியடைவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உண்டு.

கன்னிப்பெண்களே, சக தோழிகளுக்கெல்லாம் கல்யாணம் முடிந்து விட்டதே, நமக்கில்லையே என வெதும்பினீர்களே! இனி கெட்டிமேளச்சத்தம் கேட்கும். வேலையும் கிடைக்கும். மாணாக்கர்களே! மேற்படிப்பைத் தொடர அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். நல்ல நட்புச்சூழல் அமையும்.

இந்த விக்ருதி ஆண்டு வெற்றி மாலையை அணிவிக்கும்.

பரிகாரம் :
காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாமாட்சியம்மனை திங்கள் கிழமை அல்லது பூரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைக் கன்னிப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள். மகிழ்ச்சி பொங்கும்.

விக்ருதி வருட‌ப் பலன்கள் : சிம்மம்

தட்டிக் கேட்கும் குணம் கொண்ட நீங்கள், காயப்பட்டு வருவோரை தேற்றுவதில் வல்லவர்கள். ராசிக்கு 7-ம் வீட்டில் குருவும், 11-ம் வீட்டில் கேதுவும் பலம்பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் உங்கப் பேச்சுக்கு மதிப்பு கூடும். மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள்.

குடும்ப வருமானத்தை உயர்த்த புதுவழி கிடைக்கும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது, என்பதை புரிந்து செயல்படுவீர்கள். அவர்களை படிப்பில்மட்டும் இல்லாமல் விளையாட்டு மற்றும் கலைகளிலும் உற்சாகப்படுத்துவீர்கள். சகோதரியின் திருமணம் தள்ளிதள்ளிப் போனதே! இனி நல்ல இடத்தில் வரன் அமையும். சிறப்பாக கல்யாணத்தை நடத்திமுடிப்பீர்கள். அவ்வப்போது வரும் முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

2.5.10 முதல் உங்கள் பூர்வபுண்யாதியான குருபகவான் 8-ம் வீட்டில் மறைவதால் பயணங்கள் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பிள்ளைகள் சில நேரங்களில் கோபப்பட்டுப் பேசுவார்கள். குரு 8-ல் மறைந்தாலும் ஆட்சிப் பெற்று வலுவடைவதால் அன்னிய நபர்கள் மூலம் ஆதாயமுண்டு. 5-ல் ராகு நிற்பதால் பூர்வீகச் சொத்தில் பிரச்சனை வரும். கர்ப்பிணிப் பெண்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

இந்த வருடம் முழுவதும் பாதச்சனி தொடர்வதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடவதோ, பண விஷயத்தில் பொறுப்பேற்றுக் கொள்வதோ வேண்டாம். மற்றவர்களின் குடும்ப விஷயத்தில் அனாவசியமாக நுழையாதீர்கள். காலில் அடிபடும். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வரவேண்டிய பணத்தை நயமாக பேசி வசூலிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் குறையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தால் இருந்த தொந்தரவு நீங்கும்.

வியாபாரத்தில் மாறிவரும் நவீன சந்தை நிலவரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினீர்களே! வேலையாட்களும் அவ்வப்போது விடுப்பில் சென்று உங்களை தடுமாற வைத்தார்களே! இனி அந்த அவலநிலை மாறும். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். கார்த்திகை, தை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புரோக்கரேஜ், உணவு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

உத்‌தியோகத்தில் பழைய சிக்கல்களெல்லாம் பனியாய் விலகும். வைகாசி மாதத்தில் புதிய வேலை கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களின் நெடுநாள் கனவான பதவியுயர்வும், சம்பள உயர்வும் கார்த்திகை, தை மாதங்களில் கிடைக்கும். உங்கள் வேலையை மற்றொருவரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

கலைத்துறையினர்களே, உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வீண் வதந்திகள் விலகும்.

கன்னிப்பெண்களே! கல்யாணப்பேச்சு வார்த்தைகள் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்ததே, இனி நல்ல இடத்தில் வரன் அமையும். வயிற்றுவலி, தலைச்சுற்றல் விலகும். மாணாக்கர்களே! விளையாடும்போது சிறு சிறு காயங்கள் ஏற்படும். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு உண்டு.

இந்த புத்தாண்டு உங்களை கொஞ்சம் அலைய வைத்தாலும், ஆதாயத்தையும் தரும்.

பரிகாரம் :
சிதம்பரத்திற்கு அருகிலுள்ள புவனகிரியில் அவதரித்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீராகவேந்திரரை சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். தொழு நோயாளிக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.

விக்ருதி வருட‌ப் பலன்கள் : கன்னி

கலகலப்பாக கற்பனையாக பேசும் நீங்கள், போராடவும் தயங்கமாட்டீர்கள். உங்களுக்கு 7-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். 2.5.10 முதல் குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் இனந்தெரியாத சோகத்தில் மூழ்கியிருந்த உங்கள் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், பணவரவும் உண்டு. ஒருவருக் கொருவர் பேசிக் கொள்ளாமல் ஒரு மௌன யுத்தமே கணவன்-மனைவிக்குள் நடந்ததே! இனி அன்யோன்யம் உண்டாகும்.

பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு கவலைப்பட்டதுதானே மிச்சமாயிருந்தது. இனி குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வி.ஐ.பி மூலமாக மகனுக்கு வேலை வாங்கித்தருவீர்கள். உடன்பிறந்தவர்கள் இதுவரை ஒத்துழைக்கவில்லையே! இனி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சகோதரியின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். ஒரு வாரிசு கூட இல்லையே என புழுங்கித்தவித்த தம்பதியருக்கு குழந்தைபாக்யம் உண்டாகும்.

ஜென்மச்சனி தொடர்வதால் முடிவெடுப்பதில் கொஞ்சம் தடுமாற்றம், மறதி வரக்கூடும். கை-கால் மூட்டுவலியால் அவதிபடுவீர்கள். நீரிழிவுநோய் வரக்கூடும். தலை சுற்றல், வயிற்றுவலி, நெஞ்சு எரிச்சல் வந்துநீங்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருங்கள். பழைய நண்பர்கள், உறவினர்களிடத்தில் பகைமை வரக் கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு செலவினங்கள் அதிகரிக்கும். கடன் தொகையில் அசல் அடைபடவில்லையே, வட்டிப் பணம் மட்டுமே தானே தரமுடிகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்.

நெடுங்கால லட்சியமாக நினைத்திருந்த வீடு வாங்கும் திட்டம் வைகாசி, ஆனி, கார்த்திகை மாதங்களில் நிறைவேறும். பழைய வாகனத்தையும் மாற்றுவீர்கள். குலதெய்வ கோவிலுக்குச் சென்று எவ்வளவு காலமாகிவிட்டது. இனி குடும்பத்துடன் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறினீர்களே! மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே! இனி இந்த வருடத்தில் அனுபவ அறிவால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். உணவு, ஸ்டேஷ்னரி, கட்டிட சாமான்கள், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். முரண்டுபிடித்த பங்குதாரர்களை சமாளிக்கும் வித்தையை அறிவீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்திவிடுங்கள்.

10-ம் வீட்டில் கேது நிற்பதால் உத்யோகத்தில் அதிகாரிகளால் நாலாப்புறம் பந்தாடப்பட்டீர்களே! செல்வாக்கு இருந்தும் நீங்கள் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்காமல் திண்டாடினீர்களே! அந்த நிலை இனி மாறும். ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மறுபக்கம் செல்வாக்கு கூடும். ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களில் மாற்றம் வரும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிய சலுகைகளுடன், சம்பள உயர்வும் உண்டு. வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்கள் உங்கள் தகுதியறிந்து வாய்ப்பு தரும்.

கலைஞர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடி உங்களை சட்டச்சிக்கலில் சிக்கவைத்தார்களே! இனி அவற்றிலிருந்து மீள்வீர்கள். உங்களின் தகுதியறிந்து புதிய நிறுவனம் வாய்ப்பளிக்கும்.

கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். அடிக்கடி பதட்டப்பட்டு தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் சிக்கித்தவித்தீர்களே! இனி அமைதியாக இருந்து சாதிப்பீர்கள். வேலை கிடைக்கும். திருமணம் கூடி வரும்.

மாணாக்கர்களே! விளையாட்டில் கவனம் செலுத்தி படிப்பில் கோட்டை விட்டீர்களே! பல அவமானங்களை கடந்த நீங்கள் இனி உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள்.

இந்த புத்தாண்டு புலம்பிக் கொண்டிருந்த உங்களை மகிழ வைப்பதுடன், வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம் :
திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரையில் வீற்றிருக்கும் ஸ்ரீவக்ரகாளியம்மனை சதயம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.

விக்ருதி வருட‌ப் பலன்கள் : துலாம்

எதிர்ப்பார்ப்புகள் இன்றி எதிரிக்கும் உதவுபவர்களே! கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரன் 7-ம் வீட்டிலும், 3-ம் வீட்டில் ராகுவும் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றியுண்டு. பழைய கடன் தீரும். வருமானம் உயரும். இழந்தப் புகழ், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எப்பொழுதும் உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இப்பொழுது குடும்பத்துடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வீட்டில் அவ்வப்போது தடைபட்ட கல்யாணம் கூடி வரும்.

கணவன்-மனைவிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அன்யோன்யம் குறையாது. விலையுயர்ந்த சமையறை சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அடிக்கடி வருந்தினீர்களே! இனி அவர்களின் வருங்காலத்திற்கான பாதையை அமைத்துக் கொடுப்பீர்கள். சித்திரை, ஆனி, ஆவணி, தை மாதங்களில் பொண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உறவினர்கள், நண்பர்கள் மெச்சும்படியாக திருமணத்தை நடத்துவீர்கள். உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். ஆனால் புது கடன் வாங்க வேண்டி வரும்.

ஏழரைச்சனி தொடர்வதால் தலைச்சுற்றல், விபத்து, வீண்சந்தேகம், குழப்பம் வந்துபோகும். உறவினர்கள் உங்கள் உண்மை நிலையறியாது பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தவிர்க்கப்பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.

2.5.10 முதல் குருபகவான் 6-வது வீட்டில் மறைவதால் வீண் செலவுகள், திடீர்பயணங்களுக்கு குறையிருக்காது. மறைமுகப் பகை வந்துபோகும். மனதில் பட்டதை பேசினாலும் அதை தவறாக எடுத்துக் கொள்கிறார்களே! என வருந்துவீர்கள். உணவு விஷயங்களில் கண்டிப்பு தேவை. அடிக்கடி கொழுப்பு, சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் நார்சத்து, இரும்புச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அரசுக் காரியங்களில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். 9-ம் வீட்டில் கேது நிற்பதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் கருத்துமோதல்கள் வரக்கூடும்.

ஆடி, ஆவணி மாதங்களில் வேலையில்லாமல் திண்டாடியவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உங்களின் நிலையறிந்து உதவுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். பழைய சரக்குகளை விளம்பர யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வைகாசி மாதத்தில் கடையை விரிவுப் படுத்துவீர்கள். ஏழரைச்சனி நடைபெறுவதால் வேலையாட்களிடம் அரவணைப்பாகப் பேசுவது நல்லது. அதிக முன் பணம் யாருக்கும் தர வேண்டாம். வேற்று மதத்தினர், வெளிநாட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கார்த்தி, தை, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள்.

உத்யோகத்தில் உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்கு புரியவில்லையே என வருந்துவீர்கள். உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு புது அதிகாரியால் சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். ஆவணி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய வாய்ப்புகள் வந்தமையும். சக ஊழியர்கள் குறை கூறும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள்.

கலைத்துறையினர்களே, வரவேண்டிய சம்பளபாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களை அரவணைத்துப் போங்கள். உங்களைப் பற்றி வீண் வதந்திகள் வந்தாலும், பதறாமல் நடந்துகொள்ளுங்கள்.

கன்னிப்பெண்களே, தள்ளிப் போய்க் கொண்டிருந்த கல்யாணம் நல்லபடியாக முடியும். ஏழரைச்சனி நடைபெறுவதால் காதல் விவகாரத்தில் பெற்றோரின் ஆலோசனையின்றி முடிவெடுக்காதீர்கள். மாணாக்கர்களே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும்.

இந்த புத்தாண்டு இடையிடையே உங்களை சிரமப்படுத்தினாலும், வருட முடிவில் வளமாக்கும்.

பரிகாரம் :
விருத்தாசலம் ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆட்சி புரியும் ஸ்ரீ ஆழத்து வினாயகரை ரேவதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள். வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.

விக்ருதி வருட‌ப் பலன்கள் : விருச்சிகம்

சுற்றி வளைக்காமல் எடுத்த எடுப்பிலேயே தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் நீங்கள் வெகுளிகள். உங்களின் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் உங்களின் நீண்டநாள் ஆசைகளெல்லாம் நிறைவேறும். 4-ல் அமர்ந்து கொண்டு உங்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் குருபகவான் 2.5.10 முதல் 5-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் எதிர்பார்ப்புகள் யாவும் பூர்த்தியாகும். குழந்தை பாக்‌கியம் கிடைக்கும்.

பிரிந்திருந்த சொந்தம்-பந்தத்துடன் சேர்வீர்கள். பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். மகளுக்கு கல்யாணத்தை சீரும்சிறப்புமாக செய்து வைப்பீர்கள். மகனுக்கு இருந்த கூடா பழக்க வழக்கங்களெல்லாம் நீங்கும். பல வருடங்களாக நடைபெற்று வரும் பூர்வீகச் சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்து ஊர் மக்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். 27.5.10 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலவீனமாக இருப்பதால் வேலைச்சுமை, களைப்பு, சோர்வு, முதுகுவலி வந்து நீங்கும்.

சனிபகவான் 11-ம் வீட்டில் இந்த வருடம் முழுவதும் இருப்பதால் எதிர்பாராத பணவரவால் பழைய கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். பிரபலங்களின் துணையுடன் சில காரியங்களை சாதிப்பீர்கள். சந்தேக மனப்பான்மையால் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த கணவன்-மனைவிக்குள் இனி சந்தோஷம் உண்டாகும். என்றாலும் ராகு-கேது சரியில்லாததால் உங்களுக்குள் உரசலை சிலர் ஏற்படுத்துவார்கள். உடன்பிறந்தவர்கள் மதிப்பார்கள். வீடு கட்டி புதுமனை புகுவீர்கள். உங்கள் கனவு இல்லம் நனவாகும்.

14.4.10 முதல் 1.5.10 வரை மற்றும் 7.11.10 முதல் 20.11.10 வரை குரு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அக்காலகட்டத்தில் கொஞ்சம் அலைச்சலும், தாயாருக்கு மருத்துவச் செலவுகளும், தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்களும் வந்த நீங்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும். சிலர் நகரத்திலிருந்து விலகி சற்றே ஒதுக்குப் புறமான பகுதிகளுக்கு குடிபெயர்வார்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தி விடுங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். சித்திரை மாதத்தில் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பாராத பெரிய பதவிகள், பிரபலங்களின் நட்பு, நாடாளுபவர்களால் பலன் அடைதல் வாகனம் வாங்குதல் ஆகியன நிகழும்.

ஆவணி, தை மாதங்களில் நல்ல செய்திகள் வந்துசேரும். வெகுநாட்களாக வெளிநாடு செல்ல விசா கிடைக்காமல் திண்டாடினீர்களே! இனி தடை நீங்கும். குலதெய்வக் கோவிலுக்கு பங்காளிகளுடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். சித்தர்கள், ஆன்மீகவாதிகளின் ஆசி கிடைக்கும்.

வியாபாரத்தில் எந்த சரக்கும் விற்காமல் முடங்கிப் போய் கிடந்தீர்களே! இனி புது சரக்குகள் வாங்குமளவிற்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். மரவகைகள், ரியல்எஸ்டேட், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உங்களை விட்டு விலகிச் சென்ற பங்குதாரர்கள் மற்றும் அனுபவமிகுந்த வேலையாட்கள் மீண்டும் வருவார்கள். கூட்டுத்தொழிலில் முன்னேற்றமுண்டு. சித்திரை, ஆவணி, தை மாதங்களில் அதிரடி லாபமுண்டு.

உத்‌தியோகத்தில் உங்களைப் பற்றி புகார் கடிதங்கள் வந்ததே! இனி அவையெல்லாம் குறையும். உயரதிகாரிகள் இனி உங்களை மதிப்பார்கள். ஆவணி, புரட்டாசி, தை மாதங்களில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும்.

கலைஞர்களே! எதையும் வெளிப்படையாகப் பேசி மரியாதையை இழந்தீர்களே! இனி இடம்பொருள் ஏவல் அறிந்து பேசுவீர்கள். உங்கள் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே! காதல் தோல்வி மட்டுமில்லாமல், கல்வியிலும் தேர்ச்சியடையாமல் நிலைகுலைந்துப் போனீர்களே! இனி கல்வியில் வெற்றி பெற்று வேலையில் அமர்வீர்கள். வீட்டில் பார்க்கும் வரனே முடியும். ஆவணி, கார்த்திகை மாதங்களில் கல்யாணம் நடக்கும். மாணாக்கர்களே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெற்று பெற்றோரை தலைநிமிரச் செய்வீர்கள். ஒழுக்கமற்ற நண்பர்களை உதறித்தள்ளுங்கள்.

இந்த தமிழ்‌ப் புத்தாண்டு சிதறிக்கிடந்த உங்களை சீர்செய்வதுடன், வி.ஐ.பி அந்தஸ்தையும் தரும்.

பரிகாரம் :
கோவை அருகிலுள்ள மருதமலையில் ஸ்ரீபாம்பாட்டி சித்தருடன் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப்பெருமானை அசுவணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் நெய்தீபமேற்றி வணங்குங்கள். விதவை பெண்ணுக்கு உதவுங்கள். வெற்றியடைவீர்கள்.

விக்ருதி வருட‌ப் பலன்கள் : தனுசு

யாருக்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத நீங்கள் அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்கள். ராசிக்கு 5-ம் வீட்டில் சுக்ரனும், புதனும் வலுவாக நிற்கும் போது, இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப் பற்றாக்குறை ஓரளவு நீங்கும். குடும்பத்தாரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது பனிப்போர் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது.

பிள்ளைகளை உயர்கல்விக்காக அயல்நாடு அனுப்பி வைப்பீர்கள். மகனுக்கு பல இடங்களில் வரன் பார்த்து அலுத்துப் போனீர்களே! 27.5.10-க்கு பிறகு உங்கள் தகுதிக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றாற்போல நல்ல சம்பந்தம் அமையும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் என்று நினைக்கத்தோன்றும்.

உங்கள் ராசிநாதனான குரு 2.5.10 முதல் 4-ம் வீட்டில் நுழைவதால் வீண் குழப்பம், பதட்டம், காரியத்தடைகள் வரக்கூடும். தாய், தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி அடுத்தடுத்து செலவுகள் துரத்தும். பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய சித்திரை, வைகாசி மாதங்களில் சில வாய்ப்புகள் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்தக் கடனை போராடித் தீர்ப்பீர்கள்.

ராசிக்குள்ளேயே ராகு நிற்பதால் முன்கோபம் அதிகரிக்கும். ராசிக்கு 7-ம் வீட்டில் கேது தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது சச்சரவுகள், சந்தேகங்கள் வரக்கூடும். யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்ய வேண்டாம். தங்க நகை, இரவல் தர வேண்டாம், இரவல் வாங்கவும் வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள்.

வருடம் முழுக்க ராசிக்கு 10-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வதால் வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். உறவினர்கள், நண்பர்களின் கல்யாண, கிரகப் பிரவேச வைபவங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு வரும்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை வைகாசி மாதத்தின் பிற்பகுதியில் விற்று முடிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் புரிந்து கொண்டு நடப்பார்கள். ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்‌தியோகத்தில் வேலைச் சுமை அதிகமாகும். மேலதிகாரி உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. ஆவணி மாதத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும். புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரும்.

கலைஞர்களே! கிடைக்கிற வாய்ப்பு சின்னதாக, சாதாரணமானதாக இருந்தாலும் பயன்படுத்துங்கள். அதற்கான பலன் கிட்டும்.

கன்னிப் பெண்களே! உடல் பருமனாகி விடுமென நினைத்து குறைத்து சாப்பிடாதீர்கள். மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். அலைபாய்ந்த உங்கள் மனசு இனி அமைதியடையும். விடுபட்ட கல்வியை தொடருவீர்கள். வருட மையப்பகுதியில் புது வேலை கிடைக்கும். கல்யாணமும் நடக்கும்.
மாணாக்கர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். புகழ்பெற்ற கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

இந்த தமிழ்‌ப் புத்தாண்டு எதிலும் மூன்றாவது முயற்சியில் உங்களை வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம் :
கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை ஞாயிற்றுக் கிழமை அல்லது உத்திரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். கால் இழந்தவர்களுக்கு உதவுங்கள். அமைதி கிட்டும்.

விக்ருதி வருட‌ப் பலன்கள் : மகரம்

தொலை நோக்குச் சிந்தனையுள்ள நீங்கள், பரந்த மனசுக்குச் சொந்தக்காரர்கள். தன வீடான 2-ம் வீட்டில் குருவும், 4-ம் வீட்டில் சுக்ரனும், புதனும் அமர்ந்திருக்கும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கிக் கிடந்த பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். எவ்வளவோ கடினமாக உழைத்தும் எதுவும் ஒட்டவில்லையே என வருந்தினீர்களே! கைக்கு எட்டியது வாய்க்கு கிட்டாமல் போனதே!

எதிலும் ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் திறமையிருந்தும் முன்னுக்கு வரமுடியாமல் போனதே! அந்த நிலையாவும் இனி மாறும். உங்கள் பாக்யாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பணபலம் கூடும். கடன் பிரச்சனை தீரும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர் யார் என்பதை உணருவீர்கள்.

சித்திரை மாதத்தில் வீட்டில் நல்லது நடக்கும். குலதெய்வ கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேச இனி நேரம் ஒதுக்குவீர்கள். கணவன் -மனைவிக்குள் அவ்வப்போது இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை இல்லையென வருந்திய தம்பத்தியர்களின் கவலையை போக்கும் வகையில் அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்கள் மகளின் திருமணம் ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்ததே! வைகாசி, ஆனி மாதங்களில் நல்ல வரன் அமையும்.

9-ம் வீட்டில் சனி தொடர்வதால் தந்தையாரின் உடல்நிலை லேசாக பாதிக்கும். 6-ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் யோகம் உண்டாகும். ராகு 12-ல் மறைந்ததால் ஓய்வு நேரம் குறையும். 2.5.10 முதல் 3-ல் குரு அமர்வதால் முயற்சிகளில் சில முட்டுகட்டைகள் வரும். என்றாலும் விடாமல் உழைத்து வெற்றி பெறுவீர்கள். நெஞ்சுவலி, கால், மூட்டுவலி வந்துபோகும். உங்களின் கோபத்தை அதிகப்படுத்தும் விதமாக சிலர் நடந்து கொள்வார்கள். சகோதர வகையில் மனக்கசப்புகள் வந்துபோகும்.ஆவணி மாதத்தில் சொத்து வாங்குவீர்கள். ஆடி மாதத்தில் தந்தையுடன் வீண் வாக்குவாதங்கள் வரும். அரசுடன் மோதல், ரத்தசோகை, அசதி வந்துபோகும். விரையச்செலவுகளால் சேமிப்புகள் கரையும்.

புரட்டாசி மாதத்தில் எதிர்பாராத பணம் வரும். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். உங்களின் உதவியால் வளர்ச்சியடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவுவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும்.

வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருவார்கள். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஐப்பசி மாதத்தில் வராது என்றிருந்த பாக்கித்தொகை வந்துசேரும். பங்குதாரர்களின் தொந்தரவுகள் குறையும். போர்டிங், லார்ட்ஜிங், ஹோட்டல், வாகன உதிரிபாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயமுண்டு.

உத்‌தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். தடைபட்ட பதவியுயர்வு ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கும். சிலர் வேலையை உதிரி தள்ளிவிட்டு சொந்த தொழில் தொடங்குவீர்கள்.

கலைஞர்களே! அரசால் கவுரவிக்கப்படுவீர்கள். உங்களின் படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும். கன்னிப்பெண்களே, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாதவிடாய்க்கோளாறு, ஒற்றைத்தலைவலி நீங்கும். கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். மாணாக்கர்களே! நினைவாற்றல் பெருகும். சோம்பல் நீங்கும். கெட்ட பழக்கங்கள் விலகும். மதிப்பெண் அதிகரிக்கும்.

இந்த விக்ருதி ஆண்டு வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

பரிகாரம் :
விருத்தாசலம் அருகிலுள்ள ஸ்ரீமுஷ்ணம் எனும் ஊரில் அருள்பாலிக்கு ஸ்ரீ பூவராகவப் பெருமாளை உத்திரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும்.

விக்ருதி வருட‌ப் பலன்கள் : கும்பம்

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது அந்த காலம், பொங்கி எழுந்தால் தான் இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள முடியுமென்பதை அறிந்தவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 2-ம் வீடான குடும்பஸ்தானத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறப்பதால் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி நிமிர்வீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டீர்களே, அந்த நிலை மாறும்.

பிரச்சனையாலும், சந்தேகத்தாலும் பிரிந்திருந்த கணவன்-மனைவி இனி சேர்வீர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களை ஆட்டிப்படைக்கும், அலைகழிக்கும் குருபகவான் 2.5.10 முதல் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டில் அமர்வதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். களைப்பு, கோபம் விலகும். பிள்ளைகள் மனம்போன போக்கில் சென்றார்களே! இனி குடும்பச் சூழ்நிலையை புரிந்து கொள்வார்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் வரும்.

உங்கள் ராசிநாதனான சனிபகவான் 8-வது வீட்டில் மறைந்து அஷ்டமத்துச்சனியாக இந்த வருடம் முழுக்க நீடிப்பதால் எரிச்சல், முன்கோபம், எதிலும் படபடப்பு, அவ்வப்போது சலிப்படைதல், தன்னை யாரும் மதிப்பதில்லை என்ற எதிர்மறை எண்ணம் யாவும் வந்துவிலகும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். சின்ன சின்ன விபத்துகள், பணம் கொடுத்து ஏமாறுதல், எந்த விஷயத்தையும் உடனடியாக முடிக்கமுடியாமல் போகுதல், தர்மசங்கடமான சூழ்நிலை என திணறுவீர்கள். ஆனால் உங்கள் ராசிநாதனை 2.5.10 முதல் குருபகவான் (7.11.10-20.11.10 தவிர) பார்த்துக் கொண்டே இருப்பதால் கெடுபலன்கள் குறையும். இடைவிடாத முயற்சியால் இலக்கை எட்டிப்பிடிப்பீர்கள்.

வருடம் பிறக்கும்போது கேதுபகவான் 5-ம் வீட்டில் இருப்பதால் சில நாட்களில் தூக்கமில்லா மல் போகும். தாய்வழி உறவினர்கள் உதாசீனப்படுத்தக் கூடும். பூர்வீகச் சொத்தில் பிரச்சனைகள் வந்து நீங்கும். ஆனால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வழிபாடுகளில் ஆர்வம் பிறக்கும். ராகுபகவான் லாப வீட்டில் தொடர்வதால் எதிர்பாராத பணவரவு, வி.ஐ.பிகளால் ஆதாயம், வெளிநாட்டில் வேலை என நல்லது நடக்கும்.

வியாபாரத்தில் வைகாசி, புரட்டாசி, ஐப்பதி, கார்த்திகை மாதங்களில் நல்ல லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவறவிடாதீர்கள்.

உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவியுயர்வு வைகாசி, கார்த்திகை மாதங்களில் கிட்டும். வழக்கில் வெற்றியடைவீர்கள். இழந்த சலுகைகளை பெறுவீர்கள். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள்.

கலைஞர்களே! ஒதுங்கியிருந்த நீங்கள் இனி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பரிசு, பாராட்டு கிடைக்கும். புது வாய்ப்புகளால் பேசப்படுவீர்கள்.
கன்னிப்பெண்களே! கசந்த காதல் இனிக்கும். நினைத்தபடி கல்யாணம் முடியும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

மாணாக்கர்களே! கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கிவிட்டு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கவிதை, கட்டுரைப்போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

இந்த புத்தாண்டு திரைமறைவு வாழ்க்கையில் இருந்த உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக அமையும்.

பரிகாரம் :
திருச்சி - சமயபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமாரியம்மனை பரணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று விளக்கேற்றி வணங்குங்கள். திருந்தி வாழும் கைதிகளுக்கு உதவுங்கள். செல்வம் பெருகும்.

விக்ருதி வருட‌ப் பலன்கள் : மீனம்

சோர்ந்து வருவோரின் சுமைதாங்கிகளே! இன்பம் துன்பம் எதுவாயினும் தனக்குள்ளேயே வைத்துக்கொள்பவர்களே! சுக்ரன் தன ஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் செலவுகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உங்கள் ராசியிலேயே இந்த புத்தாண்டு பிறப்பதால் ஓய்வெடுக்கமுடியாதபடி வேலைச்சுமை இருந்து கொண்டே இருக்கும். உங்களின் பலம் பலவீனத்தை அறிந்து கொள்ள சில சந்தர்ப்பங்கள் அமையும்.

2.5.10 முதல் உங்கள் ராசிநாதனான குருபகவான் ஜென்மகுருவாக உங்கள் ராசிக்குள் அமர்வதால் உள்மனதில் ஒருபயம், சின்ன சின்ன போராட்டம் வந்துசெல்லும். மற்றவர்கள் தன்னை தரக்குறைவாக பார்க்கிறார்கள் என்று நீங்களே நினைத்துக் கொள்ள வேண்டாம். 28.5.10 முதல் உங்கள் யோகாதிபதி செவ்வாய் வலுவடைவதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த கடனை தந்து முடிப்பீர்கள். சகோதர வகையில் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும்.

ராசிக்கு 7-ம் வீட்டில் இந்தாண்டு முழுக்க சனி தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள், சந்தேகம் வரக்கூடும். மனைவிவழி உறவினர்களுடன் மோதல் வரும். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வீண் செலவுகள், திடீர்பயணங்கள், ஏமாற்றங்கள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

உறவாடி கெடுக்கும் சிலரை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதத்தை மாற்றும்விதமாக அவர்களை இசை, யோகா, ஓவியம் போன்றவற்றில் ஈடுபடுத்துங்கள். வயிற்றுவலி, நெஞ்சுவலி வரக்கூடும். சில சமயங்களில் விபத்துகள் நேரிடலாம். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேசவேண்டாம். வீண் பழி, வதந்திகளை கண்டு அஞ்சாதீர்கள். செலவுகளை குறைத்து சிக்கனத்தை கையாளுவது நல்லது.

கேது 4-ம் வீட்டில் இந்த வருடம் முழுக்க தொடர்வதால் ஆன்மீக பயணம் சென்று வருவதால் மனநிம்மதி அடைவீர்கள். தியானத்தில் ஈடுபாடு கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பினால் புதிய அனுபவங்கள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் உங்கள் மகனுக்கு வெளிநாட்டில் நல்ல வேலை வாய்ப்புத் தேடி வரும். ராகு 10-ம் வீட்டில் தொடர்வதால் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும். கௌரவப் பதவிக் கிடைக்கும். அரசு காரியங்களில் சற்று நிதானம் தேவை. மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக யோசித்து கருத்துகளை வெளியிடுவது நல்லது. வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.

வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்த்து இருப்பதை வைத்து லாபத்தை பெருக்கப்பாருங்கள். ஆதாயத்தை குறைத்து புதிய சலுகைகளை அறிவிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். கூட்டுத்தொழில் வேண்டாமே. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் லாபம் அதிகரிக்கும்.
உத்யோகத்தில் நெருக்கடிகள் இருக்கும். உங்கள் திறமையை அதிகாரிகள் குறைத்து மதிப்பிடக்கூடும். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். மார்கழி, தை மாதங்கள் சாதகமாக இருக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய சில புதிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். மறதி, கவனக் குறைவால் தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலைஞர்களே! உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை குறை கூறவேண்டாம். கன்னிப்பெண்களே! பொய்க் காதலில் சிக்கிக் கொள்ள வேண்டாம். மாதவிடாய்க்கோளாறு, வயிற்றுவலி வந்துபோகும். மாணாக்கர்களே! விளையாட்டைக் குறைத்து படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம்.

இந்த புத்தாண்டு சில நேரங்களில் கம்பிமேல் நடப்பதாக இருந்தாலும் தன்னம்பிக்கையால் சாதிக்க வைக்கும்.

பரிகாரம் :
திருவண்ணாமலையில் அருள்மழை பொழியும் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரை பௌர்ணமி திதி அல்லது மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் கிரிவலம் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. தமிழ் வருட ராசிபலன்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.