மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இய‌க்குன‌ர்க‌ள் சீமான் சத்யராஜ் சந்திப்பு.

தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேலூர் ‌சிறை‌யி‌ல் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைவரும், தமிழ்த் திரைப்பட இயக்குனருமான சீமானை நடிகர்கள் சத்யராஜ், இயக்குனர்கள் அமீர் உள்ளிட்டவர்கள் இ‌ன்று சந்தித்தனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் சீமானை, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்று கூறி தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து வேலூர் மத்தியச் சிறையில் சீமான் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் அமீர், ஆர்.சுந்தர்ராஜன், ‌வி‌க்ரம‌ன், ‌சி‌பி, சீமான் கடைசியாக நடித்த மகிழ்ச்சி திரைப்படத்தின் இயக்குனர் வ.கெளதமன், அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் இன்று சீமானை வேலூர் சிறையில் சந்தித்துப் பேசினர்.

சுமார் 30 நிமிட சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் நடிகர் சத்யராஜ் பேசினார்.

இயக்குனர் சீமானை நட்பின் அடிப்படையிலும், உணர்வுகளின் அடிப்படையிலும் சந்தித்துப் பேசினோம். இந்தச் சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. தமிழன் என்ற உணர்வின் அடிப்படையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

சீமான் சிறையில் தெளிவாகவே இருக்கிறார். அவர் கொண்ட கொள்கையில் உறுதியாக நிலைத்து நிற்பதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. தமிழனுக்கு ஒரு இடர் என்றால் தன்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று அவர்உளம் உருகச் சொன்னது எங்கள் நெஞ்சங்களை உருக வைத்தது. கண்ணீரையும் வரவழைத்தது.

வ.கெளதன் இயக்கியுள்ள மகிழ்ச்சி படத்தில் சீமான் கைது செய்யப்படுவதற்கு முன்பாக கடைசியாக நடித்தார். இதில் சீமான் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அந்த மகிழ்ச்சியை சீமானுடன் பகிர்ந்துகொண்டோம்.

நா‌ங்க‌ள் தைரியம் சொல்லும் அளவிற்கு அவர் ஒன்றும் கோழை அல்ல. மிகவும் துணிச்சலாகவே உள்ளார். தமிழ் இன உணர்வு தொடர்பான பிரச்சனைகளில் நாங்கள் உங்களுடன் உறுதுணையாக இருப்போம் என்ற உறுதியை அவரிடம் அளித்துவிட்டு வந்திருக்கிறோம் என்று சத்யராஜ் கூறினார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.