நீண்ட காலத்திற்குப் பிறகு வெற்றியை ருசி பார்த்திருக்கிறார் இளைய தளபதி. அதுவும் ஆகாயம் அளவுக்கு புகழப்பட்ட 7 ஆம் அறிவுடன் போட்டியிட்டு கிடைத்திருக்கிற வெற்றி. இதற்கு பளபளப்பு அதிகம்.
ரசிகர்களின் பெருத்த ஆதரவால் படத்துக்கு மேலும் பல பிரிண்ட்கள் போடப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் 2ஆம் தேதி முதலே சென்னையின் பிரதான திரையரங்குகள் எதுவும் ஹவுஸ்ஃபுல்லாகவில்லை என்கின்றன செய்திகள். ஆனால் இந்த செய்தி வேலாயுதத்தின் கமர்ஷியல் வெற்றியை பாதிக்கப் போவதில்லை. ஏற்கனவே 50 கோடிக்கும் அதிகமாக படம் வசூலித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் வேலாயுதம் 111 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மம்முட்டி, மோகன்லால் படங்கள்கூட இத்தனை அதிக திரையரங்குகளில் வெளியாவதில்லை. கொச்சியில் விஜய் வந்திறங்கிய போது பெரும் கூட்டம் அவரை வரவேற்றது. மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கே ஆச்சரியமளித்த பெருங்கூட்டம். இதனை பார்த்ததும் மலையாள திரையுலகம் அவசர கூட்டம் நடத்தி பிற மொழிப் படங்களை எப்படி தவிர்ப்பது என்று ஆலோசித்தது. தமிழகத்தைத் தாண்டி இப்படியொரு ரசிக கூட்டம் வைத்திருப்பது ரஜினி, கமலுக்குப் பிறகு விஜய்தான் என்பது உறுதியாகியிருக்கிறது. அஜித்துக்கு கேரளாவில் விஜய் அளவுக்கு ரசிகர்கள் இல்லை, என்றாலும் மங்காத்தா அங்கு சூப்பர்ஹிட்டானது.
சென்னையில் முதல் ஐந்து தினங்களில் வேலாயுதம் 1.95 கோடி வசூலித்திருக்கிறது. இரண்டு வாரங்களில் எட்டு கோடியை சென்னையில் மட்டும் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை விஜய் படம் எதுவும் சென்னையில் எட்டு கோடி வசூலித்ததில்லை. இந்த சாதனையை அஜித்தின் மங்காத்தா, விக்ரமின் தெய்வத்திருமகள் இரண்டும் சாதித்திருக்கிறது. இந்த இரு படங்களின் சாதனையை வேலாயுதம் முறியடிக்கும் என்பது நிச்சயம்.
வசூல் ரீதியில் வேலாயுதத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எல்லோரும் புதுத் தெம்புடன் உலவுகின்றனர், பேட்டி தருகின்றனர், பார்ட்டி வைக்கின்றனர். சரி, படம் எப்படி?
விஜய்யின் தோல்விப் படங்களான சுறா, வேட்டைக்காரன் ப்ளேவரில்தான் இந்தப் படமும் உருவாகியிருக்கிறது.
விஜய்யும், அவரது தங்கை சரண்யா மோகனும் காமெடி என்ற பெயரில் கிராமத்தில் அலும்பு செய்கின்றனர். தங்கைக்காக விஜய் கூரை ஏறி வீடுகள் தாண்டி கோழி பிடிக்கிறார். கிணற்றில் தங்கம் இருப்பதாக விஜய் சொன்னதும் ஊரே கூடி கிணற்றை இறைக்கிறது.
தண்ணீரை இறைத்து வண்டலை வாரி எடுத்ததும் அதிலிருந்து தங்கையின் இருநுhறு ரூபாய் மதிப்புள்ள மோதிரத்தை தேடி எடுத்து, தங்கம் கிடைச்சிடுச்சி என்கிறார் விஜய். ரயிலில் தங்கச்சிக்கு இடம் பிடிக்க அரிவாளால் சீட்டை வெட்டுகிறார். ஊரே கூடி பணம் போட்டு அண்ணன், தங்கையை சென்னைக்கு அனுப்புகிறது.
காமெடி என்ற பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சிகளில் எதார்த்தம் எத்தனை சதவீதம் இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கியிருக்கும். முக்கியமாக ஐந்து வயசுக்கு மேல் மூளையே வளராத தினுஷில் எப்போதும் விஜய்யை ஈஷிக் கொண்டு திரியும் ஹன்சிகாவின் முறைப் பெண் கதாபாத்திரம். ஷகிலா படத்துக்கு எப்படி பிட்டோ அதே மாதிரி இந்தப் படத்துக்கு ஹன்சிகா. வெண்ணையாக உடம்பு இருக்க லாஜிக் எதுக்கு என்று நினைத்திருப்பார்கள் போல.
வில்லன்களை கொல்ல வேலாயுதம் வருவார் என்று ஜெனிலியா கற்பனையில் எழுதி வைப்பதெல்லாம் படு அமெச்சூர்தனம். அசாஸின் க்ரிட் கெட்டப்பில் விஜய் வில்லன்களை பொடிமாஸ் செய்கிறார். குண்டு வைக்கும் வில்லன்களை எல்லாம் முஸ்லீமாக சித்தரித்துவிட்டு பேலன்ஸ் செய்வதற்காக ஒரு நேர்மையான முஸ்லீம் போலீஸை காட்டியிருக்கிறார்கள். சினிமா கண்டு பிடிக்கப்பட்ட நாளிலிருந்து இதைத்தானப்பா பண்றீங்க.
எனது அறிவில் சென்னையை தீவிரவாதிகள் தாக்கியதில்லை. உன்னைப்போல் ஒருவன் முதல் வேலாயுதம் வரை சென்னையில் குண்டு வைக்கிற மாதிரியே எடுக்கிறார்கள். இவர்களுக்கு சென்னையில் தீவிரவாதி குண்டு வைக்க வேண்டும் என்று ஏன் இவ்வளவு ஆசை, வெறி? இவர்களின் ஹீரோயிசத்தை காண்பிக்க உருப்படியாக வேறு எதையாவது கற்பனை செய்தால் என்ன.
எதார்த்தமில்லாத, அறிவுக்கு சற்றும் பொருந்தாத ஒரு மழுங்கின மசாலாதான் வேலாயுதம். இந்தப் படம் எப்படி மாஸ் ஹிட்டானது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நமது ரசனையை இன்னும் எத்தனை கிலோ டிட்டர்ஜன் போட்டு வெளுத்தாலும் அது சுத்தமாகப் போவதில்லை என்பதைதான் வேலாயுதத்தின் வெற்றி காட்டுகிறது.
விடலைகள் இந்தப் படத்திற்கு பாலாபிஷேகம் பீரபிஷேகம் செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது. அறிவில் நாங்க பெரிய இவங்க என்று சொல்லும் ஐடி அறிவுஜீவிகள் பின்னூட்டங்களில் பிதற்றுவதைதான் சகித்துக் கொள்ள முடியவில்லை.
எப்போப்பா திருந்தப் போறீங்க?
padam
ReplyDelete