மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


பத்திரிக்கைச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் எந்தவொரு அதிகார மையத்திற்கும் உட்பட்டதல்ல.

தேர்தல் நடத்தி, அதன் மூலம் மக்கள் தங்களுடைய வாக்குச் சுதந்திரத்தை பயன்படுத்தி, தங்களை ஆள ஒரு அரசை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அவர்களுக்கு அளிப்பதனால் மட்டுமே ஒரு நாட்டை ஜனநாயக நாடாக உறுதி செய்திட முடியாது.

அந்த நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் முறையாக காப்பாற்றப்படுகின்றனவா? கண்ணியத்துடனான வாழ்வுரிமை, கல்வியுரிமை, தொழிலுரிமை, பாதுகாப்பு ஆகியன மட்டுமின்றி, அவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் முழுமையாக உள்ளதா? என்பதைத் தீர்மானித்தே அந்த நாட்டை முழுமையான ஜனநாயக நாடாக ஒப்புக்கொள்ள முடியும்.

கருத்துச் சுதந்திரத்தை அடிப்படை மனித உரிமை என்கிறது ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம். “சுயமான கருத்தைக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை உள்ளது; எவ்வித புறத் தலையீடுமின்றி ஒரு கருத்தைக் கொண்டிருக்கவும், தகவல்களை கோரவும், பெறவும் மட்டுமின்றி, எவ்வித எல்லைக்கும் உட்படாமல் தகவல்களையும், கருத்துக்களையும் எந்தவொரு ஊடகத்தின் வாயிலாகப் பெறுவதும் இந்த உரிமைக்கு உட்பட்டதாகும்” என்று ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration of Human Rights 1948) கூறுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி வாழ்வுரிமை, சுதந்திரம், பாதுகாப்பு ஆகியன அடிப்படை உரிமையாகிறோ அதே அளவிற்கு கருத்துச் சுதந்திரம் முக்கியமானதாகிறது. கருத்துச் சுதந்திரம் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் நாட்டில்தான் ஜனநாயகம் உண்மையாக தழைத்தோங்குகிறது. அதனால்தான் பத்திரிக்கைகளை ஜனநாயகத்தின் ஒரு (நான்காவது) தூணாக கருதப்படுகிறது.

ஆனால், கருத்துச் சுதந்திரம் எந்த அடிப்படையில் நிறைவேறுகிறது? அது பத்திரிக்கைகள் உட்பட்ட ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாட்டினால்தான் நிறைவேறுகிறது. அதனால்தான் பத்திரிக்கைச் சுதந்திரம் ஒரு நாட்டில் எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு அந்த நாட்டில் கருத்துச் சுதந்திரம் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படும் நாட்டில் அல்லது அந்த காலகட்டத்தில் தனி மனித கருத்துச் சுதந்திரம் இருக்க முடியாது, ஏனெனில், மக்கள் அறிய வேண்டிய தகவல்கள் தடுக்கப்படுகின்றன. எனவே கருத்துச் சுதந்திரம் நிலைபெற அங்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.

எனவே கருத்துச் சுதந்திரத்தின் அச்சாணியாகத் திகழ்வது பத்திரிக்கை உள்ளிட்ட ஊடகங்களின் சுதந்திரமே. எனவேதான், எந்த ஒரு நாட்டில் பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு, பத்திரிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடும் அச்சுறுத்தலும் நிலவுகிறதோ அந்த நாட்டில் மக்களுக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறை நிலவுகிறது என்பதை உறுதியாகக் கூறிலாம்.இது வரலாற்றில் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்தில் உலக நாடுகளும் தெற்காசியாவும்

உலக நாடுகளில் குறிப்பாக வட அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பத்திரிக்கைச் சுதந்திரம் அதன் முழுமையான வீச்சுடன் செயல்படுகிறது. அது அரசுகளைத் தாண்டி, மக்களையும், மானுடத்தின் இன்றைய, எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. அதன் விளைவே, சுற்றுச்சூழல் விழுப்புணர்வு மேற்கத்திய நாடுகளில் மேலோங்கி இருக்கக் காரணமாகவுள்ளது. ஆர்டிக் கடலில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதையும், அதன் காரணமாக அங்கு வாழும் பனிக் கரடிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலையும் உள்ளது உள்ளவாறு செய்தியாக்கின அங்குள்ள ஊடகங்கள். அது தொடர்பான ஆய்வுகளை வெளியிடுவதில் முன்னுரிமை அளித்தன.
ஒரு பனிக்கரடி தனது குட்டியுடன் சிறிய பனிப்பாறை ஒன்றில் கவலையுடன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டு, புவிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை வெளிப்படுத்தின. புவியின் இயற்கையைப் பாதிக்கும் எந்த தொழிலையும் எதிர்க்கும் உணர்வை மேற்கத்திய மக்கள் பெற்றுள்ளதற்கு ஊடகங்கள் திரட்டித் தந்த தகவல்களே பெரும் பங்கு வகித்தன.

உலகை உலுக்கிய கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்குக் காரணம், நாளும் அதிகரித்துவரும் தேவையே என்று கச்சா உற்பத்தி நாடுகளும், அவைகளை சுத்திகரிப்பு செய்து விற்கும் பெரு நிறுவனங்களும் கதை விட்டபோது, அந்தப் பொய்யை உடைத்தது ஊடகங்களே. பெட்ரோலியத் தேவை அதிகரித்து வருமானால், பயன்பாடு அதிகரித்திருக்க வேண்டுமே? அப்படி ஏதும் இல்லாத நிலையில் விலையேற்றம் ஏன் என்ற கேள்வியை எழுப்பியதோடு நி்ன்றுவிடாமல், விலையேற்றத்திற்குக் காரணம் ஊக வணிகமே என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி, விலையிறக்கத்திற்கு வழிவகுத்தன.

இது தெற்காசிய நாடுகளில் குறிப்பாக மாபெரும் ஜனநாயக நாடென்று வர்ணிக்கப்படும் இந்தியாவில் நடைபெறவில்லை. கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக 143 டாலர்கள் வரை உயர்ந்தது. பிறகு அடுத்த சில மாதங்களில் 67 டாலருக்கு குறைந்த பிறகும், கச்சா விலை உயர்வைக் காட்டி உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலைகள் குறைக்கப்படாமல் இருந்ததற்கு காரணம் என்ன என்று இங்குள்ள ஊடகங்கள் பேச மறுத்தன.

பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க வேண்டிய நடுவண் அரசு, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையிலும் குறைக்காததற்கு, இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு பெரும் நிதி ஆதாரமாகத் திகழும் ஒரு பெரு நிறுவனத்தின் இலாப நலனே காரணம் என்பதை தெரிந்திருந்தும் எழுத மறுத்தன.

இந்திய அரசியலை உலுக்கிய போபர்ஸ் பீரங்கி பேரத்தில் தரகுப் பணம் கைமாறியுள்ளது என்ற தகவலை சுவீடன் நாட்டு வானொலி ஒன்று தனது செய்தியில் கூறியவுடன், தனது அயல்நாட்டு செய்தியாளரின் வாயிலாக அச்செய்தியைப் பெரிதாக்கி, அதன் உள் விவரங்களை வெளிக்கொணர்ந்த இந்த நாட்டின் ‘பாரம்பரியமிக்க’ ஆங்கில நாளிதழ், பின்னாளில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை புதைக்கும் நோக்குடன், அவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஒட்டோவியோ குட்ரோக்கி மீதான குற்றச்சாற்றை - போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி - திரும்பப் பெறும்போது, அமைதியாக அந்தச் செய்தியை வெளியிட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது.

மத்திய, மாநில அரசுகளின் செயலிடங்களே நமது நாட்டு ஊடகங்களின் செய்தி மையங்கள் ஆகிவிட்டன. ஒரு நேரத்தில் புலனாய்வு செய்திகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இன்றைக்கு இல்லை. இருந்திருந்தால், மத்திய இந்தியாவில் உள்ள தண்டகாரண்ய வனத்திலுள்ள பழங்குடியின மக்களுக்கு, அங்குள்ள வளங்களை தோண்ட வரிந்துகட்டிக்கொண்டு வந்து நிற்கும் பெரு நிறுவனங்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல் வெளிக் கொணரப்பட்டிருக்கும். அதனை அம்மக்களிடையே பணியாற்றி வந்த காந்தியவாதியான ஹிமான்சு குமார் வெளிக்கொணர்ந்தார். அவருக்கும் இங்குள்ள பத்திரிக்கைகள் இடம் கொடுக்கவில்லை.

அரசு கூறுவதை அப்படியே செய்தியாக்கிடும் கிளிப்பிள்ளைகளாக முன்னணி ஊடகங்கள் (Main Stream Medium) உருமாறியுள்ளன. பழங்குடியின மக்களின் வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தலாகியுள்ள அந்தப் பெரு நிறுவனங்களின் (Corporates) விளம்பரங்கள் தங்களை வாழ வைப்பதால் அவற்றிற்கு எதிரான உண்மைகளை வெளியிடத் தயங்குகின்றன.

இலங்கைப் பிரச்சனையில் ஊடகங்கள்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி சிறிலங்கப் படைகள் நடத்திய இனப் படுகொலைப் போர் தொடர்பான உண்மைகளை பிபிசி, சிஎன்என், அல் ஜசீரா போன்ற பன்னாட்டு ஊடகங்கள் துணிந்து வெளியிட்டன. அதற்காக சிறிலங்க அரசு அவைகளை நாட்டை விட்டு வெளியேற்றியது. ஆனால் இந்தியாவின் எந்த ஒரு செய்தி நிறுவனமும், வேறு எந்த ஒரு முதன்மை ஊடகமும் உண்மைகளை வெளிக்கொணர அக்கறை காட்டவில்லை. கொழும்புவில் அமர்ந்துகொண்டு, சிறிலங்க இராணுவப் பேச்சாளர் கூறியதை மட்டுமே செய்தியாக்கி, இந்திய மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு இரண்டகம் செய்தன.இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்று தி டைம்ஸ், லி மாண்ட், நியூயார்க் டைம்ஸ் என்று அயல்நாட்டு ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களை வைத்து செய்தி வெளியிட்டன. அப்படிபட்ட தார்மீகமான எந்தப் பணியையும் செய்யாதது மட்டுமின்றி, சிறிலங்க அரசு என்ன கூறியதோ அதையே அச்சரம் பிசகாமல் வெளியிட்டு தங்களது வணிகத் தர்மத்தை நிலைநாட்டின. இதில் இந்திய அரசின் பின்னணியும் இருந்தென்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஊடக தர்மத்தை நிலை நிறுத்திய மனிதாபிமானிகள்!

மாறாக, தங்கள் நாட்டு மக்கள் மீது சிறிலங்க அரசப் படைகள் நடத்திய மானுடப் படுகொலைப் போரை கண்டித்து அந்நாட்டைச் சேர்ந்த தமிழ், சிங்களப் பத்திரிக்கையாளர்கள் துணிந்து எழுதினர். அதற்கான விலையாக தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.

சிறிலங்க அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளை, அது எந்த அளவிற்கு இனப் பகைமையுடன் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை எழுதிவந்த தர்மரத்தினம் சிவராம் (தாரகி) 2005ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்யப்பட்டார்.

நினைத்திருந்தால் சிறிலங்க அதிபர் ராஜபக்சவுடன் தனக்கிருந்த தோழமையை பயன்படுத்திக் கொண்டு தன் வாழ்வை வளப்படுத்திக் கொண்டிருக்கலாம், ஆனால், தமிழர்களுக்கு எதிராக அவர் நடத்திய போரைக் கண்டித்து எழுதினார். அரசின் ஊழல் முகத்தை வெட்ட வெளிச்சமாக்கினார். சிங்கள அரசால் தனது உயிருக்கு அச்சுறுத்தில் உள்ளது என்பதை ஒரு தாக்குதலிற்குப் பின்னர் உணர்ந்தும் கூட, தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து எழுதினார், தனது மரண சாசணத்தை எழுதி வைத்துவிட்டு பணியைத் தொடர்ந்த அந்த பத்திரிக்கையாளர் கொழும்புவில் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டார். லசந்த விகரமதுங்காவின் மரணம், ஒரு அச்சுறுத்தலாக நடத்தப்பட்டதை உணர்ந்தும், பல தமிழ், சிங்கள பத்திரிக்கையாளர்கள் இருமடங்கு துணிச்சலுடன் செயல்படத் துவங்கினார். தங்கள் உயிரைக் காத்துக்கொண்டு ஊடகத் தர்மத்தை அழிய விடாமல் நிலைநிறுத்தினார். அதற்காக நாட்டை விட்டு வெளியேறி இன்றுவரை பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்தும் வருகின்றனர்.

உள்நாட்டுப் போரினால் வாழ்விடங்களை இழந்து அகதிகளான மக்களுக்கு தேவையான அளவிற்கு உணவை அளிக்காமல், உணவையே தமிழ் மக்களுக்கு எதிரான போர் ஆயுதமாக சிறிலங்க அரசு பயன்படுத்துகிறது என்று எழுதியமைக்காக பத்திரிக்கையாளர் திசைநாயகம் பயங்கரவாத சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுக்கால சிறைத் தண்டனை வழங்கியது, ஆனால், ஊடக செயல்பாட்டிற்கான ஐரோப்பிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.

சிறிலங்க அரசின் அச்சுறுத்தலுக்குள்ளாகிய சிங்கள பத்திரிக்கையாளர்கள் பலர் தமிழர்களைப் போலவே நாட்டை விட்டு வெளியேறி இன்றுவரை அகதிகளாக வாழ்கின்றனர். அவர்களில் சிலர், தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய இனப்படுகொலைப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பான அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முன் நின்று சாட்சிமளித்தனர்.

ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவர்களின் பலவீனத்தை நன்கறிந்து, தட்ட வேண்டிய விதத்தில் தட்டி, அவைகளை அடிமைப்படுத்தி அரசுகளும், கட்சிகளும், நிறுவனங்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. அதன் விளைவே உண்மையை மக்களுக்கு கொண்டுவருவதில் முன்னணியில் இருந்த பெரும்பாலான இந்தியப் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இங்கு அரசுகளின் ஊதுகுழலாய், நுகர்வோர் கலாச்சாரத்தினை திணிக்கும் கருவிகளாய், நகர வாழ் மேல்தட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் காட்சி ஊடகங்களாய் உருமாறியுள்ளன.

பிரச்சனையையும் எடுத்துக் கூறி, பிரச்சனைக்கான தீர்வையும் முன்மொழிந்து அரசிற்கே வழிகாட்டியாக இருந்து ஜனநாயகத்தினை பலப்படுத்திவந்த இந்திய ஊடகங்கள் இன்றைக்கு தன்னிலையையும் கடைபிடிக்க வேண்டிய ஊடக தர்மத்தையும் கைவிட்டு நிற்கும் நிலையில், இந்திய மக்கள், தங்களுக்கு இந்திய அரசமைப்பு வழங்கிய கருத்துச் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி, நாட்டின் நடப்புகளில் உள்ள உண்மையை தன் முயற்சி எடுத்துப் புரிந்துகொள்ள முற்பட வேண்டும். வணிகத்திற்காக தங்களையே விற்றுவிடும் ஊடகங்களை இனம் கண்டுகொள்வது மட்டுமின்றி, கருத்துரிமை எனும் உன்னதமான ஜனநாயக உரிமையை நாம் காத்துகொள்ளவும் இந்த தன் முயற்சி அவசியமானதாகும்.

மே 03 யுனஸ்கோவால் பிரகடனம் செய்யப்பட்ட உலக பத்திரிக்கையாளர்கள் தினம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.