காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது விசாரணை அமர்வு சனிக்கிழமை காலை ஆரம்பமானது. களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணியளவில் ஆரம்பமான இந்த அமர்வானது மாலை ஐந்து மணி வரை நடைபெற்றது. இந்த அமர்வின்போது களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் சாட்சியங்களை பதிவுசெய்தனர்.
இரு தினங்களிலும் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 639 பேர் சாட்சியமளிப்பதற்கென அழைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான சாட்சியமளிப்புத் திகதி குறித்த கடிதங்கள் ஆணைக்குழுவினால் உரிய முறைப்பாட்டாளர்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சனிக்கிழமையன்று 324 பேர் சாட்சியங்களை பதிவுசெய்யவதற்காக அழைக்கப்பட்டுள்ளதுடன் ஞாயிற்றுக்கிழமை 315 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ. திலகரத்ன ரத்னாயக்க மற்றும் அமைச்சுக்களின் ஓய்வு பெற்ற செயலாளர் ஹேவாஹெற்றிகே சுமணபால ஆகிய இரு அங்கத்தவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் முன்னதாக இயங்கிவரும் இந்தக் குழுவில் நீதியமைச்சின் சட்ட வரைஞர் திணைக்கள முன்னாள் பிரதி சட்ட வரைஞரும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணையாளருமான மனோகரி ராமநாதன், குடிசன மதிப்பீட்டு புள்ளிவிவரத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரீ.வி. பிரியந்தி சுரஞ்சனா வித்யாரெத்ன ஆகியோரடங்கிய குழுவினர் காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதின்படி காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் நான்கு தினங்கள் நடாத்தப்படும் அமர்வுகளின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 1081 பேர் விசாரிக்கப்படவுள்ளனர். இந்த அமர்வில் திங்கட்கிழமை 25 ஆம் திகதி செவ்வாயன்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் காணாமல் போனோர் பற்றிய சாட்சியங்கள் பதிவு செய்யப்படும்.
இதற்கென கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ளவர்கள் சாட்சியமளிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 24 ஆம் திகதி திங்களன்று இடம்பெறும் சாட்சியமளிப்புக்காக 255 விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விசாரணை இறுதித் தினமான செவ்வாயன்று இடம்பெறும் விசாரணையில் 187 பேர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
எனினும், இதுவரை தமது உறவுகள் காணாமல் போனது பற்றி காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு விண்ணப்பிக்காதோர் விசாரணை நடைபெறும் அனைத்து தினங்களிலும் புதிதாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.