யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் பயணித்த பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட கருவாட்டுப் பொதிக்குள்ளிருந்து 2 கிலோகிராம் எடையுடைய கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு, புறக்கோட்டை டேம் வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து கடத்திக் கொண்டுவரப்படும் போதைப்பொருள் பரிமாற்றம் செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று காலை முதல் குறித்த வர்த்தக நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றிரவு கொண்டுவரப்பட்ட கருவாட்டுப் பொதியொன்று தொடர்பில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தனர். காலை 10 மணியளவில் குறித்த கருவாட்டுப் பொதியைக் கொண்டு செல்வதற்கு இளைஞர் ஒருவர் வர்த்தக நிலையத்திற்கு வந்துள்ளார். வர்த்தக நிலையத்தில் இருந்து குறித்த பொதியுடன் வெளியேறியபோது அந்த இளஞரைக் சுற்றிவளைத்த குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
அந்தப் பொதியில் இருந்து சுமார் 2 கிலோகிராம் எடையுடைய கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்ட பின்னரே கிடைக்கப்பெற்ற தகவல் உண்மை என அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொண்டனர். கைது செய்யப்பட்ட நபரைப் பயன்படுத்தி பிரதான சந்தேகநபரைக் கைது செய்ய அதிகாரிகள் திட்டம் வகுத்த போதும் அது கைகூடவில்லை.
குறித்த பொதியைக் கொண்டு வரச்சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளமையை பிரதான சந்தேக நபர் அறிந்துகொண்டிருக்கக்கூடும்.எவ்வாறாயினும், கைப்பற்றப்பட்டுள்ள கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ள நபர் வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.