""இலக்கியம் சோறு போடாது எட்கார். வியாபாரத்திற்கு வா... வளமையாக வாழலாம்'' என்று ஜான் ஆலன் எவ்வளவோ வற்புறுத்தியும், தன் இளமையின் ரத்தத் திமிரில் அந்த வளர்ப்புத் தந்தையின் வேண்டுகோளை முரட்டுத்தனமாக நிராகரித்துவிட்டு இலக்கியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும், வழிதவறி வறுமையில் வாழ்ந்து அற்ப ஆயுளில் மறைந்தவன்தான் எட்கார் ஆலன் போ (Edgar Alan Poe) என்ற அமெரிக்கக் கவிஞன்.
அமெரிக்காவின் மஸாசுஸெட்ஸ் நகரில் பிறந்த எட்காரின் பெற்றோர் இருவருமே நாடக நடிகர்கள். தந்தை டேவிட் போ மொடாக் குடியன், ஊதாரி. தாய் எலிச பெத் போ வீடு தங்காதவள், காசநோய்க்காரி. துரதிருஷ்டவசமாகப் பெற்றோர் இருவரும் எட்காரின் மூன்றாவது வயதிலேயே இறந்துபோனார்கள்.
ரிச்மாண்ட் நகரைச் சேர்ந்த வியாபாரக் கனவான் ஜான் ஆலன் என்பவர் எட்காரை எடுத்து வளர்த்தார். ஜானின் தயவால் எட்கார் வெர்ஜீனியா சர்வகலாசாலைக்குச் சென்றான். படிக்கப் போன இடத்தில் எட்கார் கெட்ட நண்பர்களின் சாவகாசத்திற்குள் விழுந்தான். பெருங்குடியும் சூதாட்டமும் எட்காரைக் கடனாளியாக ஆக்கியது. தனது கடனை அடைப்பதற்கு எட்கார் வளர்ப்புத் தந்தையிடம் வேண்டினான். ஆனால் எட்காரின் தவறான வாழ்க்கை முறைக்குத் தன்னால் ஒருநாளும் ஒத்துழைக்க முடியாது என்றும்; சூதாட்டத்தில் ஏற்பட்ட அவனது கடனை அடைக்க முடியாது என்றும் ஜான் ஆலன் உறுதியாக மறுத்து விட்டார்.
என்னதான் வளர்ப்புத் தந்தை உதவி செய்ய மறுத்தாலும், தனது எட்கார் போ என்ற பெயரின் இடையில், ஆலன் என்று அவரது பெயரையும் சேர்த்து எட்கார் ஆலன் போ என்று அழைக்கப்படவே அவன் கடைசிவரை விரும்பினான்.
பணப்பற்றாக்குறை படிப்பைப் பாழ்படுத்தியது. குடி குணத்தைக் கெடுத்தது. சூதாட்டம் வாழ்க்கையை நிலைகுலையச் செய்தது. எட்கார் ஏ பெர்ரி (Edgar A. Perry) என்ற போலிப் பெயரில் அமெரிக்க ராணுவத்தின் பீரங்கிப் படையில் (Artillery) கொஞ்ச நாட்களும், பின்பு ராணுவப் பள்ளியிலும் சேர்ந்து பணியாற்றினான் போ. போர் நடவடிக்கையின் பொருட்டு தெற்கு கரோலினா பகுதியில் உள்ள சல்லிவன் தீவுகளுக்கு அனுப்பப்பட்டான். ஏறுக்குமாறான- கீழ்ப்படியாத குணத்திற்காகவும், கடமை தவறலுக்காகவும் எட்கார் ராணுவத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டான்.
வாழ்க்கைப் போராட்டத் திற்கு இடையில் எட்காருக்கு, தனது விதவை அத்தையின் மகள் வெர்ஜீனியா க்ளெமென்மீது காதல் அனுபவமும் ஏற்பட்டது. 1836-ல் 11 வயதே நிரம்பிய க்ளெமெனை 27 வயதான எட்கார் திருமணம் செய்து கொண்டான். இப்போது மாமியாரையும் மனைவியையும் பாதுகாக்கும் பொறுப்பும் எட்காருக்கு ஏற்பட்டது. திருமணமான பிறகு எட்கார் திருந்தி வாழ ஆசைப்பட்டான். ஆனால் நல்ல பழக்க வழக்கங் கள் இல்லாத காரணத்தால் இவனால் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடிய வில்லை. கொடுமையான வறுமை யில் கையில் காசில்லாமல் பல கெட்ட பழக்கங்களுடன் தெருவில் அலைய ஆரம்பித்தான் எட்கார்.
முதன் முதலில், "யுத்த களத்தில் கண்டெடுத்த கைப்பிரதி' (A manuscript found in Battle) என்ற கதைக்காக நூறு டாலர் சன்மானம் கிடைக்கப் பெற்றதும் வானத்திற்கும் பூமிக்கு மாக எம்பிக் குதித்தான் எட்கார். வருமானத்திற்கு வழி தெரிந்து விட்டது. வாழ்க்கையில் புதுத் தெம்பு பிறந்தது எட்காருக்கு.
அதன்பின் கதை, கவிதை என எழுத ஆரம்பித்து விட்டான். "சதர்ன் லிட்ரரி மெசேன்ஜர்', "க்ரஹாம்ஸ் மேகஸின்' போன்ற பத்திரிகைகளில் தொடர் கதையாளராகவும், விமர்சகராக வும், ஆசிரியராகவும் பணியாற்றி னான். பத்திரிகை உலகம் இவனுக்குச் சோறு போட்டது. இவனது புத்தக விமர்சனம் (Review & Criticism) பத்திரிகை யின் சர்க்குலேஷன் எண்ணிக் கையை அதிகரித்தது. அதே சமயம் இவனது அமிலமான விமர்சனம் பலரின் விரோதத்தைச் சம்பாதித்தது. இதுவே இவனது முன்னேற்றத்திற்குத் தடை யாகவும் இருந்தது. எவ்வளவு தான் திறமை இருந்தபோதிலும் வன்மமான வார்த்தைகளும் மகாக்குடியும் பத்திரிகை உலகிலிருந்து இவனை நீக்கியது.
திருமண வாழ்க்கையும் பத்து ஆண்டுகள்தான் நீடித்தது. 1847-ல் எட்காருக்குப் பேரிடி ஒன்று விழுந்தது. எட்காரின் அன்பு மனைவி வெர்ஜீனியா க்ளெமென் கொடிய காசநோயால் பாதிக்கப்பட்டு, இடைவிடாத ஜுரத்தால் ரத்தநாளம் வெடிக்க, ரத்த வாந்தியெடுத்த நிலையில் தனது இருபத்தியிரண்டாவது வயதில் மரணமடைந்தாள்.
மனைவி இறந்ததும் தன்னை நல்வழியில் செலுத்த முயன்றான் எட்கார். ஆனால் அதற்குள் காலம் மலையேறிவிட்டது. சிறுவயதில் பெற்றோர் இழப்பு, ஓயாத குடி, போதை, சூதாட்டம், கல்லூரியில் நீக்கம், வளர்ப்புத் தந்தை ஆலனுடன் பிணக்கம், ராணுவத்தில் கீழ்ப் படியாமை, கடன் தொல்லை, கையில் காசில்லாமை, மனைவி மறைந்த சோகம், தனது வன்மமான வார்த்தைகளினால் சம்பாதித்துக் கொண்ட பலரின் விரோதம், காதல் தோல்வி என்ற ரீதியில் உடலும் மனமும் பாதிக்கப்பட்ட நிலையில் மூளை இறுக்கம் (Brain Congestion) ஏற்பட்டது. கிட்டத்தட்ட மரணம் இவனைத் தொட்டு விட்டது என்றே கூறலாம்.
சாகும்போது மறுகல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும்வேறு இருந்ததாம் இவனுக்கு! மனைவி இறந்த பிறகு முன்னாள் காதலி எல்மிரா ராய்ஸ்டர் என்பவளுடன் தொடர்பு ஏற்பட்டது. 1849, அக்டோபர் மாதம், 7-ஆம் தேதி காதலியைப் பார்க்கப்போன சமயத்தில், நன்றாகக் குடித்து விட்டு நடுரோட்டில் மூன்று நாட்களாக மயங்கி விழுந்து கிடந்து இறந்துபோனான் எட்கார் போ.
எட்கார் ஆலன் போ என்ற அந்த மனிதன் வாழ்ந்தது குறுகிய வருடங்கள் மட்டுமே. ஆனால் சாதித்தது அதிகம்தான். இவனுடைய கெட்ட பழக்கங் களுக்கு அப்பால் மிகச்சிறந்த இலக்கியவாதியாக இவன் மிகவும் நேசிக்கப்பட்டான். தனது வாழ்நாளெல்லாம் சொல்ல முடியாத துயரப்பட்ட போ என்ற அந்த கவிஞன், சாவில் தான் நிம்மதியடைந்தான் என்ப தும் காலம்காட்டும் உண்மை.
எட்கார் ஆலன் போவின் பெரும்பாலான படைப்புகள் வன்மை, கொடுமை, பழிக்குப் பழி என்ற அடிப்படையில் துன்பவியல் பாதிப்புள்ள வையாகவே அமைந்திருக்கும். தான் வாழ்ந்த காலம் வரை எட்கார் ஆலன் போ சுமார் அறுபது கவிதைகள் மட்டுமே எழுதினான். இவனது கவிதை எதுகை மோனைக்கும் சப்தங்களின் ரசனைக்கும் பெயர் பெற்றது. இதனாலேயே அமெரிக்க உலகில் இவன் ஓண்ய்ஞ்ப்ங் ஙஹய் என்று அழைக்கப்பட்டான்.
அண்டங் காக்கையைப் பற்றி The Raven என்றொரு கவிதையை எழுதினான். இந்தக் கவிதையில் எட்கார் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அந்த அண்டங் காக்கை "இனி ஒன்றும் இல்லை' என்று பொருள்படும்படி 'Never More' என்று ஒவ்வொரு முறையும் ஒற்றை வரியில் பதில் சொல்லும் அழகே அழகுதான். இக்கவிதையைப் படித்தவர்கள் பல நாட்கள் ''Never More... Never More...' என்று தங்களை அறியாமலேயே உச்சரித்தார் களாம். அந்த ரீதியில் எட்கார் ஆலன் போவினால் படைக்கப் பட்ட "உலாலும்' என்ற கவிதை யும் மகோன்னதமான படைப்பாகும்.
உலாலும்- கவிதைச் சுருக்கம்
அக்டோபர் மாதம், மலைச்சரிவில் நடக்க ஆரம்பித் தேன். என்னையும் அறியாமல் அது அக்டோபர் மாதம் என்று உணராமல் நான் நடந்தேன். பகல் தேய்ந்து இரவு வளர ஆரம்பித்தது. வானம் சாம்பல் வண்ணத்துடன் சோகமயமாகக் காட்சியளித்தது. மரங்களிலிருந்து மொறுமொறுப்பான இலைகள் உதிர ஆரம்பித்தன. பனியும் படலமாகப் பெய்து கொண்டிருந்தது. கடந்த ஒரு வருடமாக என் மனம் எரிமலையாகி என்னையும் என் ஆத்மாவையும் தகித்துக் கொண்டிருந்தது. வானத்து நட்சத்திரங்கள் ஒருபுறம் சிங்கமாக மாறி என்னை பயமுறுத்தின. "ஓடிவிடு... இங்கிருந்து ஓடிவிடு' என்று என்னை அதைரியப்படுத்தின. இன்று அனைத்து ஆன்மாக்களின் இரவு (All Souls Night) என்று எனக்குத் தெரியும். இறந்துபட்ட ஆன்மாக்கள் அனைத்தும் இன்று பூமிக்கு வந்து தாங்கள் வசித்த பகுதியையும் தாங்கள் பழகிய மனிதர்களையும் கண்டுகளிக்கு மாம். அதோ அந்த வானத்தில் பிறைச்சந்திரன் தெரிகிறது. முழு நிலவைக் காட்டிலும் இந்த பிறைச்சந்திரன் எனக்கு மிகவும் பிடிக்கும். பிறைச்சந்திரன்தான் காதலையும் காதலின் மகத்துவத் தையும் நினைவுபடுத்துகிறது. அதுதான் காதலியை மீண்டும் என் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
வழிநெடுகிலும் சைப்ரஸ் மரங்கள். ஹோ... சைப்ரஸ் மரங்கள்... புதைபூமியில்... தகன பூமியில்.... மயான பூமியில் மட்டுமே வளரும் இந்த மரங்கள் இங்கெப்படி தோன்றுகின்றன? என்னையறியாமல் நான் எங்கோ வளர்ந்துகொண்டிருக்கிறேனே. அதோ அந்த முழுச்சந்திரன் செல்லும் பாதையிலே நானும் செல்கிறேன்.
வாவ்... என்ன அது? ஏதோ பெரிய கதவு என் வழியை மறைக்கிறது. அதன்பின் ஒரு வீடு. ஜன்னல்கள் இல்லாத வீடு. ஆச்சரியமாக இருக்கிறதே! அதற்கும் கதவு இல்லையே. ஏதோ கருங்கல் மாதிரி இருக்கிறதே. கல்லறையின் முகப்பு! எழுத்துக்கள் சில பொறிக்கப்பட்டிருக்கின்றனவே! என்ன அவை? கல்லறை வாசகம். யாரோ இறந்துபட்டு அவர்மீது எழுப்பப்பட்ட கல்லறையின் வாசகங்கள். அதில் என்ன எழுதியிருக்கின்றன?
"அன்புச் சகோதரியே, இந்த மாபெரும் கல்லறையின் மீது எழுதப்பட்ட அந்த வாசகங்கள்தான் என்ன? படித்துச் சொல்' என்ற எனது கேள்விக்கு "உலாலும்... உலாலும்' என்று பதில் வந்தது.
தூக்கி வாரிப்போட்டது எனக்கு. திடுக்கிட்டேன். திக்குமுக்காடினேன். என்னை அறியாமல் என் மனம் ஒருமுறை சொல்லியது "உலாலும்.'
ஹோ... இது என் அன்புக் காதல் தேவதையின் கல்லறையல்லவா? It is the Vault of thy Lost Ulalume. சென்ற வருடம் இதே மாதம், இதே நாளில் என் அன்புக் காதலியுடன்- அவள் பிணமாக என் தோளில், நான் நடைபிணமாக அவளைச் சுமந்து கொண்டு- இங்கு வந்தேனே! இறந்துபட்ட அவளைப் புதைத்து அதன்மீது எழுதப்பட்ட கல்லறை வாசகம் அல்லவா இது! இன்று எப்படி சரியாக வந்தேன்.
இறந்தவர் ஆவியும் பேய்களும் என்மீது இரக்கம் கொண்டு என்னை நிலவின் மூலம் இங்கே அழைத்தனவோ. சந்தோஷமும் துக்கமும் மனதை கனமாக்கியது. நினைவுகள் அழுத்தின. வாய் மட்டும் "உலாலும்' என்று முணுமுணுக்க திரும்ப ஆரம்பித்தேன்.'
160 வருடங்களுக்கு முன்பு- அதாவது 1867-ல் எட்கார் ஆலென் போ என்ற அந்த மாபெரும் கவிஞனால் எழுதப்பட்ட இக்கவிதை இன்றும் காலம் கடந்து கவிஞனின் மனத்துயரை தெரிவித்து படிப்போரின் மனதைக் கல்லாக்குகிறது. காதலியின் சிறிய நகக்கீறல்கூட கவிஞனின் வார்த்தைகளால் சாகாவரம் பெற்ற பொன்னெழுத்துகளாகி இலக்கியத்தின் சரித்திரப் பக்கங்களை அலங்கரிக்கிறது அல்லவா!
நாட்டுப்புறப் பாடல் பாணியில் இயற்றப்பட்ட இந்த "உலாலும்' கவிதை 104 வரிகள் கொண்டது. ஒரு நாவல் சொல்லும் கதையை- மனத்துயரை நூற்றுநாலே வரிகளில் சர்வ சாதாரணமாகப் படைத்திருக்கிறான் கவிஞன் போ. கவிதையைப் படித்ததும் இறந்துபட்ட வெர்ஜீனியா க்ளெமென் என்ற காதலியையும் கவிஞன் போவையும் காண்பதற்கு நம் மனது துடிக்கிறது. நம் துடிப்பில் கவிஞன் வெற்றி பெற்றுவிடுகிறான்.
கட்டுரையாக்கம்: சங்கர பத்மாவதி
நன்றி :: நக்கீரன்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.