மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை

இந்திய கேப்டன் தோனி சாட்டையை சுழற்றியுள்ளார். அணியின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள இவர், காயம் அடைந்த வீரர்களுக்கு அணியில் இடமில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த “டுவென்டி-20′ உலக கோப்பை தொடரில் இந்திய அணி “சூப்பர்-8′ சுற்றோடு வெளியேறியது. இதற்கு பெரும்பாலான வீரர்கள் முழு உடல்தகுதியில்லாமல் பங்கேற்றதே முக்கிய காரணம் என கூறப்பட்டது.

உதாரணமாக வலது தோள்பட்டையில் லேசான வலி என்று சேவக் முதலில் கூறியுள்ளார். பின்னர் லண்டனில் சோதனை செய்த போது “ஆப்பரேஷன்’ செய்யும் அளவுக்கு பெரிய பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணியில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். இது தொடர்பாக கேப்டன் தோனி மற்றும் சேவக் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. காயத்தின் உண்மை தன்மையை சேவக், தன்னிடம் தெரிவிக்கவில்லை என தோனி ஆதங்கப்பட்டுள்ளார்.

அதிரடி “அட்வைஸ்’: இந்தச் சூழலில் இந்திய அணி அடுத்த கட்டமாக நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் போட்டி வரும் 26ம் தேதி நடக்கிறது. இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக சக வீரர்களிடம் மிகவும் காட்டமாக பேசியுள்ளார் தோனி. காயம் மற்றும் நூறு சதவீத உடல்தகுதி இல்லாத வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக கோப்பை போட்டிகளில் யுவராஜ், ஹர்பஜன், காம்பிர் போன்றவர்கள் சோபிக்கவில்லை. எனவே, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சீனியர் வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சூசகமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சக வீரர்களிடம் தோனி கூறியது: என்னை பொறுத்தவரை தனிப்பட்டவர்களை காட்டிலும் அணிக்கு தான் முன்னுரிமை அளிப்பேன். இதையே தான் அணியில் உள்ள ஒவ்வொருவரும் கடைபிடிப்பார்கள் என நம்புகிறேன். காயம் தொடர்பான உண்மையை மறைக்காதீர்கள். அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காயம் அடைந்திருந்தாலோ அல்லது தனிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலோ, அது பற்றி உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். காயத்துக்கு சிறிது காலம் ஓய்வு தான் தீர்வு என்றால், அதனை ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சோர்வோடும் வலியோடும் பங்கேற்றால், அது அணிக்கும் அவருக்கும் பின்னடைவு ஏற்படுத்தும். அணியில் இருந்து “பிரேக்’ எடுத்துக் கொள்ள விரும்பினால், என்னிடம் அல்லது இந்திய கிரிக்கெட் போர்டிடம் தெரிவிக்கவும். அணியின் நலனுக்காக சீனியர் வீரர்கள் இன்னும் அதிகமான திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஜூனியர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவது மிகவும் அவசியம். வீரர்கள் வெற்றியை பழக்கமாக கொள்ள வேண்டும். இவ்வாறு தோனி தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இம்முறை வீரர்கள் கவனமுடன் தேர்வு செய்யப்பட்டனர். காயம் அடைந்த சேவக்(வலது தோள்பட்டை காயம்), சச்சின் (விரல் பகுதியில்), ஜாகிர் கான் (தோள்பட்டை) சுரேஷ் ரெய்னாவுக்கு (கட்டை விரலில் லேசான எலும்பு முறிவு) ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக முறையே முரளி விஜய், அபிஷேக் நாயர், ஜாகிர், பத்ரிநாத் வாய்ப்பு பெற்றனர். முழு உடல்தகுதி கொண்ட இவர்கள் சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பி.சி.சி.ஐ., ஆதரவு: கேப்டன் தோனியின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி. சி.ஐ.,) ஆதரவு தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ., மீடியா கமிட்டிதலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,”"சக வீரர்களுக்கு “அட்வைஸ்’ அளிக்கும் உரிமை தோனிக்கு உண்டு. இவரது கருத்து வீரர்களின் உடல்தகுதியில் முன்னேற்றம் ஏற்பட உதவும். காயம் அடைந்த வீரர்கள் மற்றும் சோர் வாக இருப்பதாக உணருபவர்கள் அணியின் “பிசியோதரபிஸ்ட்’ அல்லது பி.சி.சி.ஐ.,யிடம், அது பற்றி தெரிவிக்க வேண்டும்,”என்றார்.

பன்றிக் காய்ச்சல் பீதியில் இந்திய வீரர்கள்: வெஸ்ட் இண்டீசில் பன்றிக் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதால் இந்திய வீரர்கள் பீதியில் உள்ளனர். ஓட்டலை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். அசைவ உணவு பக்கம் தலை காட்டுவதில்லையாம். வெஸ்ட் இண்டீசில் உள்ள டிரினிடாட், டுபாகோதீவுகளில் 18 பேர் பன்றிக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இங்கு நடக்க இருந்த கரீபிய விளையாட்டு மற்றும் இளைஞர் கால்பந்து கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தீவுகளில் இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காதது ஆறுதல் அளிக்கும் விஷயம். முதலிரண்டு போட்டிகள்(ஜூன் 26, 28) ஜமைக்காவிலும், 3, 4வது போட்டி(ஜூலை 3, 5) செயின்ட்லூசியாவில் நடக்க உள்ளன. ஆனாலும் நமது வீரர்கள் மிகுந்த முன்எச்சரிக்கையுடன் உள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.