மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வால்மீகி - ஏதோ மிஸ்ஸிங்க்!

விகடனின் இன்னொரு தயாரிப்பு 'வால்மீகி'. ஸ்ரீபெரும்பதூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து கதை பின்னப் பட்டிருக்கிறது. சென்னையில் 'பிக் பாக்கெட்' அடிக்கிற ஒரு கேரக்டரை வைத்து கதை நகர்கிறது. திருடுவது, காசு கிடைத்தால் போதையாவது, எங்கே வேண்டுமானாலும் தங்கிவிடுவது என தனக்கென எதுவும் லட்சியங்கள் இல்லாத ஒரு ஊதாறி பையன் பாண்டி (அகில்). மீரா நந்தன் 'குட்டிச் செல்லம்' என்கிற குழந்தைகளுக்கான க்ரஷ் ஒன்றை நடத்தி வருகிறார். மனநிலை சரி இல்லாதவர்கள், திருடர்கள் என தான் சந்திக்கும் நபர்களை அக்கறையோடு வழிநடத்தும் நல்ல பெண்மணி.

தன்னை கொல்ல வந்த மனநிலை சரி இல்லாதவனை மனநல காப்பகத்தில் சேர்த்து அவனை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவரும் அளவிற்கு அவ்வளவு நல்லவர். மனநிலை
சரி இல்லாதவனிடமிருந்து மீரா நந்தனை காப்பாற்றுவது அகில். அகில் காப்பாற்றுவது மீரா நந்தனின் கழுத்தில் இருக்கும் செயினை திருடத்தான் என்பது பின்னர் அவருக்கே தெரிய வரும். உயிரை காப்பாற்றியவன் மீது காதல் வரும், காதல் வந்தால் எங்கேயாவது வயல் வெளியில் டூயட் வரும்...

இப்படி இவர்களின் காதல் வண்டி ஓடிக்கொண்டிருக்க, இருக்க இடம் இல்லாததால் பூக்காரி தேவிகா வீட்டில் தங்கி இருக்கிறான் பாண்டி. பூக்காரி தேவிகாவுக்கும் அகில் மேல காதல், பின்னர், அகில் - மீரா நந்தனின் காதல் தேவிகாவுக்கு தெரியவருகிறது. அதற்குள்ளாக கடற்கரை ஓரம் டூயட் எல்லாம் பாடி முடித்துவிடுவது வேடிக்கை. எப்படித் தான் சினிமாவில் மட்டும் தப்பு செய்யும் ஹீரோக்கள் மேல் ஹீரோயின்களுக்கு காதல் வந்து விடுகிறதோ. வேறென்ன பூக்காரி தேவிகாவுக்கு வேறு ஒரு நல்ல உழைக்கும் மனிதரை திருமணம் செய்து வைக்கிறார்கள்.

அகில் ரொம்ப நல்லவன் என்று நினைத்த மீரா நந்தனுக்கு அடுத்தடுத்து அகிலைப் பற்றி அதிர்ச்சியான தகவல்கள் தெரியவர, இவர்களின் காதல் கேள்விக்குறியாகி விடுகிறது. க்ளைமாக்ஸில் ஹீரோ திருந்தி விடுவார் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், அகில் எப்படி திருந்துகிறார் என்பதை யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அகில், 'பாண்டி' கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகம். இயல்பான நடிப்பு. கதாநாயகிகளும் சொன்னதை சொன்னபடியே செய்திருக்கிறார்கள். எழுத்தாளர் அஜயன் பாலா தன் கதாபாத்திரம் எல்லோர் மனத்திலும் பதியும்படி நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் ஹீரோ திருந்தி விடுவார் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், பாண்டி எப்படி திருந்துகிறார் என்பதை யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இசைஞானியின் முதல் பாடலும், இறுதிப் பாடலும் இதயத்துக்கு இசை மழை. பல இடங்களில் திரைக்கதையின் தவறுகளை இசை மறைத்து விடுவது முற்றிலும் உண்மை. அலட்டல், அட்டகாசங்கள் இல்லாத அம்சமான ஒளிப்பதிவு.

இயல்பான கதைதான் என்றாலும், ஏதோ மிஸ்ஸிங்க்! இயக்குநர் சில சமரசங்களை தவிர்த்திருந்தால் நிச்சயம் படம் இன்னும் உயரத்திற்கு சென்றிருக்கும். படத்தின் துவக்கத்தில் ஹீரோவுக்கு ஒரு தனிப்பாடல், இரண்டு ஹீரோயின் என்பதால் இரண்டு பேருடனும் இரண்டு டூயட், யாரு என்னனு தீர விசாரிக்காம சுத்தி சுத்தி காதலித்துவிட்டு, ஹீரோ கெட்டவன் என்று தெரிந்தவுடன் காதலை காற்றில் பறக்க விடுவது, காதலனை திருத்தும் காதலி, என தமிழ் சினிமாவின் வழக்கமான சென்டிமெண்ட் சொரியல்கள் இதிலும் உண்டு.

காதலுக்காகவோ காதலிக்காகவோ ஹீரோ திருந்தாமல் வேறு ஒரு மூன்றாவது கதாபாத்திரத்தை பயன்படுத்தி புருவங்களை உயர்த்த செய்திருப்பது முற்றிலும் புதுமை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இயக்குநர், சொல்ல வந்ததை சொல்லியிருக்கிறாரோ இல்லையோ எப்படியெல்லாம் 'பிக் பாக்கெட்' அடிக்கலாம் என்பதை ரொம்ப நல்லாவே சொல்லியிருக்கிறார்.

விகடன் நிறுவனத்தாரே அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு எப்போது ஒரு நல்ல படத்தை சமர்பிக்க போகிறீர்கள்!

வால்மீகி - ஏதோ மிஸ்ஸிங்க்!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.