மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரெட்டச்சுழி - விமர்சனம் இமயமும் + சிகரமும்

காதல் பிரச்சனையால் நாற்பது வருட பகையுடன் தி‌ரியும் இரண்டு முதியவர்கள், அவர்களுக்கு பக்கவாத்தியமாக இரு டஜன் வாண்டுகள். காலை வாருவதும், காமெடி செய்வதுமாக செல்லும் வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை காதல் குறுக்கிடுகிறது. பிரச்சனை பெ‌ரிதாகி பூகம்பமாக வெடித்ததா, புஸ்வாணமாக சுபத்தில் முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.

பொதுவுடமைக்காரர் சிங்காரவேலர் (பாரதிராஜா) தெருமுனை‌‌க் கூட்டம் போட்டாலும் அது தனக்கெதிராக நடத்தும் சதி என்று நடுங்கும் கையில் துப்பாக்கி ஏந்துகிறவர் முன்னாள் காங்கிரசுக்காரர் ராமசாமி (பாலசந்தர்). வறட்டு கௌரவத்துடன் பாரதிராஜாவின் சைக்கிள் காற்றை பிடுங்குவது, அவரது போஸ்டரை கிழிப்பது என்று பாலசந்தரை பால்வடியும் சந்தராக்கியிருக்கிறார் இயக்குனர். நக்கல் பாலசந்த‌ரின் ஆயுதம். தாமிரபரணியை எப்போ அடகு வச்சாங்க இவன் மீட்கிறதுக்கு என்று கேட்பதாகட்டும், காலாட்டிக் கொண்டே, உங்க வேலர் என்ன சொல்றார் என்று கிண்டலடிப்பதாகட்டும், நடிப்பிலும் சளைத்தவரல்ல என்று காட்டியிருக்கிறார்.

பாரதிராஜாவுக்கு அவரது குரலுக்கேற்ற கதாபாத்திரம். தாமிரபரணி முதல் காவே‌ரி வரை தனது அரசியல் பார்வையை பாரதிராஜா மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் தாமிரா. கண நேரம் வந்து போகும் முத்துக்குமார் நினைவு விளையாட்டுத்திடல் பெயர் பலகை திரையரங்கில் சலசலப்பை ஏற்படுத்துகிறது.

இந்த கிழட்டு‌ச் சிங்கங்களின் பகைக்கு பக்க வாத்தியம் அவர்கள் வீட்டு வாண்டுகள். குஷ்புவாக வரும் சிறுமி கருத்து சொல்வதும், ‘நீ கருத்து சொன்னாலே பிரச்சனையாயிடுது’ என்று மற்ற குழந்தைகள் கலாய்ப்பதும், குஷ்பு கோயிலுக்ககுள்ளால செருப்பு போட்டு வராத, பிரச்சனையாயிடும் என்பதும்... இயக்குனர் கலாய்ப்பது குஷ்புவையா இல்லை அவருக்கு எதிராக பேசுகிறவர்களையா என்பது தெ‌ரியவில்லை.

கவனத்தை கவரும் இன்னொரு வாண்டு அஞ்சலிக்கு துணையாக வரும் குட்டிப் பையன். ஆ‌ரி தனது முன்னாள் காதலை அஞ்சலியிடம் சொல்லி, உன் மனசுல என்ன இருக்கு என்று கேட்க, அதற்கு அந்த பையன், இங்கிலீஷ் டீச்சர் மனசுல என்ன இருக்கும்? லாங் லாங் எகோ, ஒன்ஸ் அப்பான் ஏ டைம் என்று திருப்பியடிப்பது ரசனை. பாரதிராஜாவை தோழரே என்று கலாய்க்கும் போது திரையரங்கு கலகலக்கிறது.

பாரதிராஜாவின் உசிரளவு பிடிச்சிருக்கு காதலாகட்டும், அஞ்சலியின் நான் செத்து சாமியா வந்து காப்பாத்துட்டுமா காதலாகட்டும் இரண்டிலும் உயிர்ப்பில்லை. பல வருஷம் காத்திருந்த காதல் கைகூடும் நேரத்தில் பாலசந்த‌ரின் சம்மதம் இல்லாமல் தாலி கட்டமாட்டேன் என்று ஆ‌ரி சத்தியம் செய்து கொடுப்பது திரைக்கதையின் தப்பாட்டம். இதைத் தொடர்ந்து வரும் கிளைமாக்ஸ் மெகா தொட‌ரின் மொண்ணை எபிசோட். இதற்கு நடுவிலும் காக்கிக்கு மேல் பட்டு சுற்றி திடீர் மாப்பிள்ளையாகும் கருணாஸ் சி‌ரிக்க வைக்கிறார். இன்ஸ்பெக்டரான அவரை, மாமா இந்த ட்ரெஸ்ல நீ போலீஸ் போலவே இருக்கே என வாண்டுகள் வம்பிழுப்பது அக்குறும்பு.

பாடல்களைவிட பின்னணி இசையில் சோபிக்கிறார் கார்த்திக் ராஜா. படத்துக்கு பலம் சேர்க்கிறது செழியனின் கேமரா. காட்சிகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு.

நாடகத்தனமான காட்சிகளுக்கிடையே வரும் நாட்டு நடப்பை பிரதிபலிக்கும் வசனங்களும் ஹாஸ்யங்களும் இழுவை திரைக்கதையை இழுத்துப் பிடிக்கின்றன. ஆ‌ரி குழந்தைகள் சொன்னதற்காக ராணுவத்தை கிராமத்துக்கு அழைத்து வருவதும், ஒரு சுப்ரபாதத்தில் திரும்பி செல்வதும் காதுலப்பூ.

யானையை வைத்து யுத்தமும் செய்யலாம், வித்தையும் காட்டலாம். தாமிரா செய்திருப்பது இரண்டாவது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.