மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> Honda நிறுவனத்தின் 2வது தொழிற்சாலை

மோட்டார் பைக் தயாரித்து விற்பனை செய்யும் ஹோன்டா நிறுவனம், ராஜஸ்தானில் மோட்டார் பைக், ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது.

ஜப்பானைச் சேர்ந்த ஹோன்டா நிறுவனத்தின் துணை நிறுவனம் ஹோன்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா லிமிடெட்.

இதன் தயாரிப்பான யூனிகார்ன் டாஜிலர் பைக் அறிமுக விழா கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இந்நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சின்ஜி அயோமா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் ஹோன்டா பைக் விற்பனை அதிகரித்து வருகிறது. இதன் தேவையை நிறைவேற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் ஆர்வல் என்ற இடத்தில் அடுத்த ஆண்டு மோட்டார் பைக் உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை அமைக்கின்றோம்.

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக ஹோன்டா பைக் விற்பனை அதிகரித்து வருகிறது. இதே போல் இந்த நிதி ஆண்டிலும் விற்பனை 18 விழுக்காடு அதிகரிக்கும். இதை ஈடுகட்ட உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது வருடத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கின்றோம். இதை 2 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரிக்க உள்ளோம்.

எங்கள் தொழிற்சாலை ஹரியானா மாநிலத்தில் குர்கானுக்கு அருகே மனிஸ்வர் என்ற இடத்தில் உள்ளது. இங்கு அதிகபட்சமாக வருடத்திற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே தயாரிக்க முடியும்.

எனவே இரண்டாவது தொழிற்சாலையை ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் அமைக்கின்றோம். இந்த நவீன தொழிற்சாலை 52 ஏக்கர் பரப்பளிவில் அமையும். இது வருடத்திற்கு 1 லட்சம் மோட்டார் பைக், ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த தொழிற்சாலை ரூ.500 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி அடுத்த வருடம் ஜூலையில் இருந்து தொடங்கும்.

இது இல்லாமல் இந்தியாவில் மேலும் ரூ.1,200 கோடி முதலீடு செய்ய உள்ளோம் என்று சின்ஜி அயோமா தெரிவித்தார்.

இந்தியாவின் மொத்த மோட்டார் பைக் விற்பனையில், ஹோன்டாவின் பங்கு 14 விழுக்காடாகவும், ஸ்கூட்டர் விற்பனையில் 50 விழுக்காடாகவும் உள்ளது.

இந்தியாவில் வருடத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் யூனிகார்ன் டாஜிலர் பைக் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த வருட இறுதியில் 125 சி.சி சி.பி.யூ விஎப்ஆர் ரக பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பைக்,ஸ்கூட்டர் ஏற்றுமதி செய்கின்றோம். சென்ற வருடம் 30 நாடுகளுக்கு 80 ஆயிரத்திற்கும் அதிகமாக இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.

ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்லாது, ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளுக்கும், தென் கிழக்காசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று சின்ஜி அயோமா தெரிவித்தார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.