மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஜெயிக்க விஜய் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு திரைப்படமும் ஒரு நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறது. தமிழில் உருவாகும் திரைப்படங்களில் பெரும்பான்மையானவை பணம் பண்ணுவது என்ற நோக்கத்திற்காக எடுக்கப்படுபவை. அங்காடித்தெரு போன்றவை விதிவிலக்கு.

இவற்றிற்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தாலும், நடைமுறை வாழ்வில் இருக்கும் நிஜத்தை காட்சிப்படுத்தும் நோக்கத்தையும், நல்ல சினிமா என்ற விமர்சனத்தை பெற்றுவிட வேண்டும் ஆவலையும் இவ்வகைப் படங்கள் தன்னகத்தே கொண்டுள்ளன.

விஜய்யின் திரைப்படங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரே நோக்கம் அதிக ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைப்பது, அதன் மூலம் அதிக லாபம் சம்பாதிப்பது என்பது மட்டுமே. திரைப்படங்கள் வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்ட இந்த‌ச் சூழலில் இதை ஒரு குற்றச்சாற்றாக யாரும் முன்வைக்க முடியாது என்பதே உண்மை.

இந்த நோக்கத்திற்கு ஏற்ப விஜய் படங்கள் தயா‌ரிப்பாளர்கள், திரையரங்கு உ‌ரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், கேன்டீன் நடத்துகிறவர்கள் என சகல தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுக்கும் அட்சய பாத்திரமாகவே இருந்து வந்தன. ர‌ஜினிக்குப் பிறகு அனைத்து தரப்பினரும் லாபம் பெற்றுத் தரும் நடிகர் என்று விஜய்யையே கை காட்டுகிறார்கள். ர‌ஜினி மூன்று நான்கு வருடங்களுக்கு ஒரு படம் என்று சுருங்கியப் பிறகு விஜய்யின் முக்கியத்துவம் அபி‌ரிதமான அளவு வளர்ந்தது.

ஆனால் இன்று நிலைமை வேகமாக மாறி வருகிறது. அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என சமீபத்தில் விஜய் நடித்தப் படங்கள் அனைத்துமே வசூலில் திருப்தியை தரவில்லை. நடுவில் வந்த போக்கி‌ரி மட்டும் விதிவிலக்கு. இந்த நிலைமைக்கு விஜய்யே முழு பொறுப்பு என்று கூறிவிட முடியாது.

என்றாலும் இந்த நிலையை மாற்றும் முழுப் பொறுப்பும், கடமையும், அதற்கான சாத்தியமும் விஜய்க்கு மட்டுமே உள்ளது. இனி வரும் படங்களில் அவர் சில மாற்றங்களை கண்டிப்பாக யோசித்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். பார்வையாளர்கள் விரும்பும் சில மாற்றங்கள் பற்றி பார்ப்போம்.

பூமியை பிளந்து கொண்டோ, வானத்தை கிழித்துக் கொண்டோ வரும் அறிமுகக் காட்சி, அதனைத் தொடர்ந்து வரும் அறிமுகப் பாடல் என்ற வழக்கத்தை விட்டொழிப்பது.

நான் அடிச்சா தாங்க மாட்டே, கை வச்சா யோசிக்க முடியாது என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் பழக்கத்தை விட்டொழிப்பது.

ஆம்பள நான் அப்படிதான் இருப்பேன், பொம்பள நீ இப்படிதான் இருக்கணும் என்று பொம்பளைக்கு புத்தி சொல்லும் பழக்கத்தை மறந்துவிடுவது.

நூறு லேப் டாப்பை விற்று நூறு கோடி பணம் சம்பாதிப்பது போன்ற காமெடிகளை முடிந்தவரை தவிர்ப்பது.

என் பின்னாடி ஒரு சிங்கக் கூட்டமே இருக்கு என்று விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு படத்தில் இரை போடுவதை சுத்தமாக விட்டொழிப்பது.

ஜனங்களுக்கு ஏதாவது செய்யணும் போல இருக்கு என்று படத்திலும், நிஜத்திலும் அரசியல் பிரவேசத்துக்கு அடிபோடாமலிருப்பது.

காமெடி என்றதும் தோளை குறுக்கி தலையை ஆட்டி வாய்ஸை மாற்றும் மிமிக்கி‌ரியை அடியோடு நிறுத்தி‌க் கொள்வது.

ஆறு பாட்டு, நாலு சண்டை என்ற பார்முலாவை முடிந்தவரை தவிர்ப்பது. இந்த பார்முலாவுக்குள் எந்தக் கதையைப் போட்டாலும் அது ஒரே கதையாகிவிடும் ஆபத்து அதிகமுண்டு.

அதிகம் அடிக்காத, அதிகம் ஆவேசப்படாத பூவே உனக்காக, காதலுக்கு ம‌ரியாதை, லவ்டுடே போன்ற படங்கள்தான் தனக்கு திருப்புமுனையாக அமைந்தது என்பதை உணர்ந்து அந்தவகைப் படங்களை அவ்வப்போதாவது செய்ய முயற்சி மேற்கொள்வது.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழி எல்லோர் வாழ்விலும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை பு‌ரிந்து கொள்வது.

பார்வையாளர்களின் இந்த பத்து எதிர்பார்ப்புக்கு விஜய் செவிகொடுக்க முன்வந்தால் தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தி என்ற பட்டம் அவருக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. செய்வாரா இளைய தளபதி?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.