மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> BLUETOOTH பயன்பாடும் பாதுகாப்பும்.

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.
ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN 0r piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.

புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்:

அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.

பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன.

உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.

புளுடூத் செக்யூரிட்டி:

எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.
உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

எழுதியவர் : கார்த்திக்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

Note: Only a member of this blog may post a comment.