மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இணைய தளத்தின் விஸ்வரூபம்!

உலகின் ஒரே மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனமாக ஆகிவிட்ட 'இண்டர்நெட்' டின் சக்தி என்ன என்பதையும், அதன் வீச்சு எந்த அளவுக்கு பிரமாண்டமானது என்பதையும் தெரிந்துகொள்வதற்கான சமீபத்திய மிகச்சிறந்த உதாரணம் "விக்கிலீக்ஸ்" !

உலக போலீஸாகவும், உளவு பார்ப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போலவும் ஏக திமிராக நடந்துகொண்ட அமெரிக்காவின் பிடறியை பிடித்து உலுக்குவது போல, அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு தலைமைக்கு அனுப்பிவைத்த ரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்" இணைய தளம் வெளியிட்டதை பார்த்தபோது, இணைய தளம் என ஒன்று இல்லாது போயிருந்தால் இந்த அளவுக்கு அந்த தகவல் உலகம் முழுவதும் முழு முற்றிலுமாக பரவியிருக்குமா என்பது சந்தேகத்திற்குரியதுதான்!

என்னதான் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இருந்தாலும், அந்தந்த ஊடக நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்பத்தான் மேற்கூறிய தகவல்கள் வெளியாகி இருக்கும்.

கூடவே லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இவற்றை அச்சில் ஏற்றியோ அல்லது தொலைக்காட்சியில் காட்டி வாசித்தோ மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது என்பது நடைமுறையில் அத்தனை எளிதில் சாத்தியமான விடயம் அல்ல.

மாறாக இப்படி வேண்டியவர்கள், வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது போன்று சர்வர்கள் இழுக்க இழுக்க, ஆவணங்களையும், ஆதாரங்களையும் கொட்டி வைத்து தகவல்களை அள்ளிக்கொள்ள வைத்துள்ளது "விக்கிலீக்ஸ்" !

இதன் மூலம் உலகையே புரட்டி போட வைத்துள்ள 'இண்டர்நெட்'டின் சக்தி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ரகசிய தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு மட்டுமல்லாது, தெரிந்த மற்றும் தெரியாத விடயங்கள் குறித்த தகவல்களை அறிவதற்கும் உலகின் ஒரே மிகப்பெரிய ஆதாரமாக 'இண்டர்நெட்' விளங்குகிறது.

2005 ஆம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்கள் இண்டர்நெட்டை பயன்படுத்திய நிலையில், தற்போது அது 40 பில்லியனாக விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம்.

இதில் இந்தியர்கள், உலக அளவில் இண்டர்நெட்டை பயன்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக பிரபல இணைய தேடுதளமான கூகுள் தெரிவிக்கிறது.

அதே சமயம் கருத்து சுதந்திரத்திற்கு ஏக கெடுபிடி காட்டும் சீனாவில் 300 மில்லியன் மக்கள் இண்டெர் நெட்டை பார்ப்பதால் முதலிடத்தையும், அமெரிக்காவில் 207 மில்லியன் மக்கள் 'இண்டெர்நெட்' டை பார்ப்பதால் இரண்டாம் இடத்தையும், 100 மில்லியன் அளவை கொண்டு இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளதாக கூறுகிறார் கூகுள் இந்தியாவிற்கான தலைமை அதிகாரி வினய் கோயல்!

மேலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் 40 மில்லியன் மக்கள் மொபைல் போன் மூலம் இண்டெர்நெட்டை பார்ப்பதாகவும்,வரும் 2012 ஆம் ஆண்டிற்குள் மொபைல் 'இண்டெர்நெட்' டை பயன்படுத்துபவர்களை லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பார்க்கவைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

அதே சமயம் 'இண்டெர்நெட்' டை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், பாடல்களை தேர்ந்தெடுப்பதில்தான் அதிகம் கவனம் செலுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வரை பிரச்சனை இல்லை. வில்லங்கமாக்கினால் சிக்கல்தான்!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.