மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அவன் இவன் - பாலாவுக்கு குசும்பு ஜாஸ்தி.

சீ‌ரியஸாவே படமெடுக்கிறீங்களே கொஞ்சம் கமர்ஷியலாவும் எடுங்களேன் என்று பாலுமகேந்திராவுக்கு குடைச்சல் குடுக்க, கொலை வெறியில் ஒரு படத்தை எடுத்தார். படத்தின் பெயர் நீங்கள் கேட்டவை. (நீங்கத்தானடா கேட்டீங்க). இது அவரது சிஷ்யர் பாலாவின் முறை. கொஞ்சம் கடுமையை குறைச்சி காமெடியா பண்ணக் கூடாதா? இதோ எல்லோரும் கேட்ட மாதி‌ரி காமெடியா அவன் இவன்.

ஆனாலும் பாலாவுக்கு குசும்பு ஜாஸ்தி. என்னோட சீ‌ரியஸ் படங்களையே சி‌ரிப்பு படமா தர்றேன் என்று நமட்டு சி‌ரிப்போடுதான் திரைக்கதை எழுதியிருப்பார் போலிருக்கிறது. பிதாமகன் சீயானை தட்டி ஒட்டி விஷால் காதாபாத்திரம். சூர்யாவின் சாமர்த்தியத்தை மட்டும் உருவினால் அதுதான் ஆர்யா. நந்தா ரா‌ஜ்கிரணை அப்பாவியாக அசமந்தாக காட்டினால் அவன் இவன் ‌ஜி.எம்.குமார். எது எப்படி இருந்தால் என்ன... கடைசி இருபது நிமிடங்கள் மட்டும் ரசிகர்கள் முறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். மற்ற நேரம் திரையங்கு அதிர அதிர சி‌ரிப்பொலி. இப்படியொரு சி‌ரிப்பொலி கேட்டு நாளாச்சு.

கமுதிக்கோட்டை ஜமீனை கள்வர்கள் கோட்டைன்னு சொல்ற அனவுக்கு அது திருடர்களின் ரா‌ஜ்‌ஜியம். போலீஸ் வந்தால் சிக்னல் கொடுப்பதற்கென்றே கட்டி வைத்திருக்கும் காண்டாமணி, கறி சோறு போட்டு, இனி திருட மாட்டேன்னு சத்தியம் வாங்கும் போலீஸ் என்று கதைக்களமே புரையேற்றுகிறது. அண்ணன் விஷால். தம்பி ஆர்யா. ஆனால் இருவருக்கும் இரண்டு அம்மாக்கள். இவர்கள் போட்டுக் கொள்ளும் ஈகோ யுத்தம் இருக்கே... குஞ்சுமணியை புடிச்சி ஒண்ணுக்கு போக தெ‌ரியாதவன் என்று அம்பிகா ஆர்யாவை சதாய்ப்பதும், ஜட்‌ஜ் வண்டியில் வந்திறங்கும் ஆர்யா தனது அம்மாவுடன் ஆட்டம் போட்டு அம்பிகாவை வெறுப்பேற்றுவதுமாக கதற கதற சி‌ரிக்க வைக்கிறார்கள்.

விஷாலுக்கு இது ராஜபாட்டை. புழுதி கிளப்பியிருக்கிறார். பெண் வேடத்தில் அவர் போடும் ஆட்டத்திற்கு திரையரங்கு சேர்ந்தாடுகிறது. என்னா... நளினம். மாறுகண்ணும், உடல் மொழியும் நம்முன் காட்டுவது விஷாலையல்ல, ரத்தமும் சதையுமான வேறொரு மனிதனை. கறி சோறு போடும் இடத்தில் கான்ஸ்டபிள் ஜனனியை பின் தொடர்ந்து வழிவதும், கேப்பையில் நெய் வழியும் அதிசயமாக ஆர்யா அவர்களை ஃபாலோ செய்வதும் கிளாசிகல் டச். சூர்யா வரும் நவரச எபிசோடும் அற்புதம்.

உற்சாகத்தை ஊற்றி வடித்திருப்பார் போலிருக்கிறது ஆர்யாவின் கேரக்டரை. இசைக்கேற்ப பாய்ந்து வரும் முதல் காட்சியிலேயே மனதில் நச்சென்று உட்கார்ந்துவிடுகிறார். போதாதற்கு கூடவே ஒரு குண்டுப் பையன். ஆர்யாவின் லவ் ட்ராக்தான் ஒட்டாமல் குட்டிக்கரணம் போடுகிறது. பாவம் மது ஷாலினி. ஜனனிக்கு உதார் கான்ஸ்டபிள் வேடம். சட்டம் ஒழுங்கை நாமதானே காப்பாத்தணும்ணே என்று வீறாப்பாக கிளம்பும் போது விலா நோக வைக்கிறார்.

‌ஜி.எம்.குமாருக்கு அவரது உடம்பைப் போலவே வெயிட்டான கேரக்டர். கலா ரசிகராக, ஏமாந்த ஜமீன்தாராக வாழ்ந்திருக்கிறார். அவரை நிர்வாணமாக்கி ஆர்கே சாட்டையால் வெட்டவெளியில் அடித்து துரத்துவது உச்சக்கட்ட வன்முறை. ‌ஜி.எம்.குமாருக்காக விஷால் ஆக்ரோஷமாக கிளம்புகையில் திரையரங்கில் எழும் கைத்தட்டல் அந்த வன்முறையின் தாக்கத்தை உணர்த்திவிடுகிறது. ‌ஜி.எம்.குமார் கண்ணாடி முன் நின்று அழுததை விஷால் நடித்துக் காட்டும் போது மற்றவர்கள் சி‌ரிக்க ஆர்யா மட்டும் அழுவதும், எம் புள்ளைக்கு ஒண்ணுன்னா அறுத்துப்புடுவேன் என்று அம்பிகா ஆர்யாவுக்காக இன்ஸ்பெக்ட‌ரிடம் சண்டையிடுவதும் அடித்தட்டு மக்களின், சண்டையை தாண்டிய அன்பை பதிவு செய்யும் நுணுக்கமான காட்சிகள்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் ஆத்தே பாடலும் இசையும் ஐம்புலனையும் தாக்கி ஆட வைக்கிறது. யுவன் படத்தின் ‌ஜீவன். அதேபோல் ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு. வசனத்தில் எஸ்.ராவைவிட பாலாவின் நெடியே தூக்கல். உதாரணமாக, ஆய் போய்விட்டு வரும் விஷால், மாவு மாவா போகுதும்மா என்று சொல்ல, அம்பிகா அசட்டையாக பதிலளிக்கிறார். போகுது விட்றா... அதை வச்சு வீட்டுக்கு வந்தவங்களுக்கு ரொட்டியா சுட்டுத் தரப் போறோம். சண்டைக் காட்சிகள் வழக்கம் போல ஆக்ரோஷம்... ஆக்ரோஷம்... மேலும் ஆக்ரோஷம்.

காட்டுக்குள் சுள்ளி பொறுக்கினாலே சுண்ணாம்பு தடவிவிடுவார்கள். விஷாலும், ஆர்யாவும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மரத்தையே கடத்தி வருகிறார்கள். போலீஸ் ஆர்யாவை பிடித்து லாக்கப்பில் வைத்து கொஞ்சுகிறது. காமெடியா படம் பண்ணுன்னு சொல்லிட்டு லா‌ஜிக் வேற கேட்குதோன்னு பாலா நினைத்திருக்கலாம்.

ஆர்கே கதாபாத்திரம்தான் படத்தின் நெருடல். ஆர்கே இறைச்சிக்கு மாடுகள் விற்பவர். அவரை ‌ஜி.எம்.குமார் ஏன் போலீசிடம் போட்டுக் கொடுக்க வேண்டும்? லைசன்ஸ் இல்லாமல் தொழில் செய்கிறார் என்பதற்காகவா? அப்படியென்றால் அவரைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே திருடர்கள்தானே. இறைச்சிக்கு மாடுகளை விற்பது இந்தியாவில் தொழில் என்பதைத் தாண்டி மிகப் பெ‌ரிய அரசியல். இறந்த மாட்டுத் தோலை உ‌ரித்தார்கள் என்பதற்காக ஐந்து தலித்துகள்தான் எ‌ரித்துக் கொல்லப்பட்டார்களே தவிர மாடுகளை இறைச்சிக்கு விற்கக் கூடாது என்பவர்கள் எந்த சேதாரமும் இல்லாமல்தான் இருக்கிறார்கள். பாலாவுக்கு இந்த வெளிப்படை அரசியல் தெ‌ரியாதா என்ன? பிறகு ஏன் இப்படியொரு காட்சி?

முந்தையப் படங்களிலிருந்து மாறுபட்டு எடுத்திருப்பதாக பாலா கூறினாலும் அவரது பழைய சட்டகத்துக்குள்ளேயேதான் இம்முறையும் சுற்றி வந்திருக்கிறார். கதைக்களத்தை உருவாக்குவதிலும், கேரக்டர்களை தனித்தன்மையுடன் மெருகேற்றுவதிலும் பாலாவுக்கு நிகர் பாலாவே என்பதையும் இப்படம் நிரூபித்திருக்கிறது.

அதிக வெகுசன ரசிகர்களை கவர்ந்த பாலா படம் என்ற பெருமை இப்படத்துக்கு கிடைக்க அதிக சாத்தியமுள்ளதை குறிப்பிடும் அதே நேரம் பாலா மீதிருந்த ஆச்ச‌ரியத்தை இப்படம் கணிசமாக குறைத்திருப்பதையும் சொல்லியாக வேண்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.

    Tamil Movies Gallery

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.