கமல்ஹாசன் நடித்த திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களாகிறது. கமல் தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத ஆளுமை. தமிழின் சிறந்த பத்து திரைப்படங்களின் பட்டியலை தயாரித்தால் கமல் நடித்த மூன்று படங்களேனும் அதில் இடம்பெறும். நடிகன் ஒரு முகம். திரைக்கதையாசிரியர் இன்னொரு முகம். தேவர் மகனின் திரைக்கதை தமிழின் ஆகச் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. இயக்குனராக ஹேராம், விருமாண்டி. பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என்று உதிரி முகங்கள் பல.
சினிமா ஒரு விஞ்ஞான தொழில்நுட்பமும்கூட என்பதை அறிந்து அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதில் கமல்ஹாசன் முன்னோடி. அவர் ஆளுமை செலுத்த தொடங்கிய பிறகு தமிழில் அறிமுகமான நவீன தொழில்நுட்பங்களில் அறுபது சதவீதம் அவர் வழியாக தமிழ்த் திரையுலகை வந்தடைந்ததே. தொலைக்காட்சியால் சினிமாவுக்கு பாதிப்பு என்று அன்றைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தொலைக்காட்சிக்கு நடிகர், நடிகைகள் பேட்டியளிக்க தடை விதித்த போது அதனை துணிந்து உடைத்தவர் கமல். தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்பு. அறிவியலுக்கு அணை போட முடியாது என்று அன்று அவர் சொன்னது இன்று உண்மையாகியிருக்கிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை நம்பியே இன்று பல படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
கமலின் குணா ஒரு மைல் கல். இன்றும் அதன் நினைவுகளில் தோய்ந்து போகிற ரசிகனை காணலாம். நிதி நிறுவன மோசடி தமிழகத்தை உலுக்குவதற்கு முன்பு வெளியானது மகாநதி. 786 நம்பர் சட்டையணிந்த நாயகன் ஆடிப் பாடும் இடமாக இருந்த சிறைச்சாலையை அதன் உண்மை குரூரத்தோடு முன் வைத்த முதல் தமிழ் சினிமா மகாநதி. தீவிரவாதிகள் ஜனங்களை காரணமின்றி கொன்றழிப்பவர்கள் என்ற ஒற்றைப்படையான விமர்சனத்தை உருவினால் குருதிப்புனல் ஓர் அற்புதம்.
யார் காதிலும் பூ சுற்றும் சகலகலா வல்லவன் ரசனையில் இருந்த ரசிகனை ரசனையின் அடுத்தடுத்த படிகளில் குணாவும், மகாநதியும், குருதிப்புனலும் ஏற்றிவிட்டன.
இன்று கமல் ரசிகன் அவர் உயர்த்திவிட்ட ரசனையின் மேல் படிகளில் ஒன்றில் அமர்ந்திருக்கிறான். அவனை அதற்கு மேலும் உயரச் செய்ய வேண்டிய கமலின் படங்கள் எப்படி இருக்கின்றன? அவரது ரசிகனின் ரசனைக்கு தீனி போடும் வகையில் அவை அமைந்திருக்கின்றனவா?
உறுதியாகவும், வெளிப்படையாகவும் கூறுவதென்றால்... இல்லை.
அன்பே சிவம், விருமாண்டி தவிர்த்து ஆரோக்கியமான முயற்சி எதுவும் கமலிடமிருந்து கடந்த சில ஆண்டுகளாக வரவில்லை. கிடைத்ததெல்லாம் தசாவதாரம், மன்மதன் அம்பு போன்றவையே. சகலகலா வல்லவன் ரசனைக்கு ரசிகனை கமலின் படங்களே மீண்டும் கீழிறக்குவது என்பது எவ்வளவு பெரிய துயரம்? நடமாடும் பல்கலைக்கழகம் என்று வர்ணிக்கப்படும் ஒரு கலைஞனுக்கு இந்த சறுக்கல் ஏன் நிகழ்கிறது?
கமல்தான் கமலின் பிரச்சனை. கமல் சிறந்த நடிகர். கூடவே வெற்றி பெற்ற ஹீரோ. நடிகனுக்கும், ஹீரோவுக்குமான மோதல் அவரது அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இயக்குனர் கமலுக்கு ஹீரோ கமல் ஒருபோதும் அடங்குவதில்லை. அன்பே சிவத்தில் வரும் காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் ஹீரோ கமலை திருப்திப்படுத்த புனையப்பட்டவை. அப்படத்தின் பண்படாத காட்சிகளும் இவைதான். விருமாண்டியின் அனைத்து கதாபாத்திரங்களும் மண் சார்ந்த துலக்கத்துடன் இருக்க கமலின் கதாபாத்திரம் மட்டும் ஒட்டுச் செடியாக விலகி நிற்கும்.
ஹீரோ கமலே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிறவராக இருக்கிறார். சக ஹீரோவான ரஜினியே இவரின் இலக்கு. ஹீரோக்களின் ஈகோ கலெக்சனை முன்னிறுத்தியது. சிவாஜியின் கலெக்சனை முந்துவதற்காக உருவானது தசாவதாரம். எந்திரனுக்கு போட்டியாக விஸ்வரூபம் அமைந்துவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை. கமலின் போட்டி ரஜினி அல்ல. வேண்டுமானால் அமீர்கானை சொல்லலாம். தயாரிப்பாளர் கமலுக்கு போட்டி டோபி காட், பீப்லி லைவ். இயக்குனர் மற்றும் நடிகர் கமலுக்கு போட்டி தாரே ஜமின் பர். நிச்சயமாக சிவாஜியோ, எந்திரனோ அல்ல.
நடிகர் கமலே ரசிகர்களின் இன்றைய தேவை. பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்தரிடம் தன்னை முழுதாக கையளித்தது போல் இளம் இயக்குனர்களிடம் கமல் தன்னை ஒப்படைக்க வேண்டும். இந்த கையளித்தல் குறுக்கீடுகள் அற்றதாக இருத்தல் அவசியம்.
இயக்குனர் கமல் திறமையானவர். ஹீரோ கமலைத் தவிர எவரையும் திறம்பட வேலை வாங்கக் கூடியவர். விருமாண்டி கொத்தாளத் தேவன் பசுபதியையும், பேய்க்காமன் சண்முகராஜனையும் எப்படி மறப்பது? இந்த இரு நடிகர்களின் உச்சமாக இன்றும் விருமாண்டியே இருக்கிறது. இயக்குனர் கமல் ஹீரோ கமலை இயக்காமலிருப்பது உசிதம். அப்படி நிகழும் போதெல்லாம் இயக்குனரும், ஹீரோவும் எல்லைக் கோட்டருகே வெற்றியை தவறவிட்டு ஒருசேர தோற்றுப் போகிறார்கள். ஹேராமில் அதுதான் நடந்தது. விருமாண்டியில் அது உறுதிப்பட்டது.
பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், மைனா, ஆரண்யகாண்டம் போன்ற ஒரு முயற்சியையே கமலிடம் ரசிகன் எதிர்பார்க்கிறான். யாரிடமும் சினிமா கற்காத ஒரு அறிமுக இயக்குனரால் ஆரண்யகாண்டம் என்ற அற்புதத்தை தர இயலும் போது உலக சினிமாவை கரைத்துக் குடித்த ஐம்பது வருட அனுபவம் உள்ள கமலால் அது ஏன் சாத்தியமாகாமல் போகிறது?
சிவாஜி கணேசன் குறித்து பேசும்போது நாசர் ஒருமுறை இப்படி குறிப்பிட்டார். சிவாஜி ஒரு சிங்கம். அவருக்கு தயிர் சாதம் கொடுத்தே கொன்றுவிட்டோம். வெறும் அழுக்காச்சி படங்களில் அவரை வீணடித்ததை இப்படி வேதனையுடன் குறிப்பிட்டார். கமலும் ஒரு சிங்கம். தசாவதாரம், மன்மதன் அம்பு என்று தொடர்ந்து அவர் தயிர் சாதம் உண்பதைக் காண சகிக்கவில்லை. மகாநதி, குருதிப்புனல் என்று கறி சோறு உண்பது எப்போது?
கமல் சார்... ரசிகன் காத்திருக்கிறான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.