** உலகை வியக்க வைக்கும் இந்திய பொதுத் தேர்தல்! கோவி. லெனின்
இந்தியாவை உலக நாடுகள் ஆச்சரியத் தோடு பார்ப்பதற்கு கலை, ஆன்மீகம், கலாச் சாரம் போன்ற பல அம்சங்கள் இருந்தாலும், நவீன உலகத்தின் பார்வையில் இந்தியாவின் ஆச்சரியகரமான அம்சமாக இருப்பது இங்கு நிலவும் ஜனநாயகமாகும். 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியா வில் 70 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மக்கள் தொகையுடன் கடந்த 60 ஆண்டுகளாக தேர்தல் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுவருவதை சர்வதேச சமுதாயம் வியப்போடு பார்க்கிறது.தற்போது இந்தியாவின் 15--வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
சுதந்திர இந்தியா, 1950-ஆம் ஆண்டில் முழுமையான குடியரசு நாடான பிறகு, 1952-இல் முதல் பொதுத் தேர்தல் நடை பெற்றது. இதற்கான வாக்குப்பதிவு 1951- ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 4 மாதங்கள் நடைபெற்றது. 26 மாநிலங்களில் 489 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 245 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார் பண்டிதர் ஜவஹர்லால் நேரு. ஐந்தாண்டுகள் கழித்து, இரண்டாவது பொதுத்தேர்தல் 1957-ஆம் ஆண்டு நடைபெற்றது. 490 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் காங்கிரஸ் கட்சி 296 இடங் களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நேருவே மீண்டும் பிரதமரானார். 1962- இல் 3-வது பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் வெற்றிபெற, மூன்றாவது முறையாகப் பிரதமரானார் நேரு.
நாடு விடுதலையடைந்ததிலிருந்து பிரதம ராகப் பொறுப்பேற்றிருந்த நேரு, 1964-ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து, பிரதமர் பொறுப்பை லால்பகதூர் சாஸ்திரி ஏற்றார். இரண்டாண்டுகள் மட்டுமே பிரதமராக இருந்த அவர், ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்டு நகருக்கு சென்றபோது மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து 1966-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமரானார் நேருவின் மகள் இந்திராகாந்தி. 1967-ஆம் ஆண்டில் நான்காவது பொதுத்தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைப் (297) பெற்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.
வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சி, இந்திரா ஆட்சிக்காலத்தில் இரண்டாகப் பிளவுற்றது. காமராஜர், மொரார்ஜிதேசாய், நிஜலிங்கப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்களைக் கொண்ட ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காந்தியை தலைவராகக் கொண்ட இந்திரா காங்கிரஸ் என இரு கட்சிகளானது. தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் ஐந்தாவது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டார் இந்திராகாந்தி. இதனையடுத்து, 1971-ல் தேர்தல் நடை பெற்றது. 352 தொகுதிகளில் இந்திராகாங்கிரஸ் வெற்றிபெற, மீண்டும் இந்திரா பிரதமரானார். ஆனால், இந்திராகாந்தி வெற்றி பெற்றது செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்ட தால், அதிலிருந்து மீள்வதற்காக 1975-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார் பிரதமர் இந்திராகாந்தி. எதிர்க்கட்சியினர் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன.
1977-இல் நெருக்கடி நிலை திரும்பப்பெறப் பட்டது. சிறையிலிருந்து விடுதலையான எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரணியில் நின்று ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் ஜனதா கட்சியை உருவாக்கினர். 1977 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. ஜனதாகட்சி 298 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. மொரார்ஜி தேசாய், பிரதம ரானார். இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அரசு, ஜனதா அரசுதான். ஜனதா கட்சித் தலைவர் களிடையே ஏற்பட்ட மோதல்களால் அக்கட்சி பிளவுபட்டது. பெரும்பான்மையை இழந்த மொரார்ஜி தேசாய் நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியடைந்தார். இதையடுத்து, 1979-ல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சரண்சிங் பிரதமரானார். சில வாரங்களே நீடித்த அந்த அரசும் கவிழ்ந்தது.
நாட்டின் 7-வது பொதுத்தேர்தல் 1980-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்திரா காங்கிரஸ் கட்சி 351 இடங்களில் வெற்றி பெற்றது. இந்திராகாந்தி மீண்டும் பிரதமரானார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலுக்குள் இருந்த தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவத்தை அனுப்பினார் இந்திரா. இது சீக்கிய மதத்தினரின் மனதை புண்படுத்தியது. 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி தனது பாதுகாவலர்களாலேயே இந்திரகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார். உடனடியாகப் பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்தார்.
1984-ஆம் ஆண்டு நடந்த 8-வது பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 403 இடங்களில் வெற்றிபெற்றது. ராஜீவ்காந்தி பிரதமர் பொறுப்பை யேற்றார். அவரது கட்சியில் நிதியமைச்சராக இருந்த விஸ்வநாத் பிரதாப்சிங் (வி.பி.சிங்) ஆட்சியின் ஊழல்களை சுட்டிக்காட்டியதால் வெளியேற்றப்பட்டார். ஜனமோர்சா என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் அது மேலும் சில கட்சிகளுடன் இணைந்து ஜனதாதளமானது. ஜனதாதளம், தி.மு.க, தெலுங்குதேசம், அசாம் கண பரிஷத் உள்ளிட்ட 7 கட்சிகள் அடங்கிய தேசிய முன்னணி உருவானது. 1989 தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. வி.பி.சிங் பிரதமரானார். பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷனை அமல்படுத்தியதாலும் பாபர் மசூதியை இடிக்க முயன்ற பா.ஜ.கவின் ரதயாத்திரையைத் தடுத்ததாலும் வி.பி.சிங் ஆட்சி 1990-ல் கவிழ்ந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமரானார். அவரது ஆட்சி சில மாதங்களே நீடித்தது.
1991 தேர்தலின்போது ராஜீவ்காந்தி படு கொலை செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்றது. பி.வி. நரசிம்மராவ் பிரதம ரானார். 5 ஆண்டுகள் பதவி வகித்தார். 1996 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. 13 நாட்கள் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார். பின்னர் மாநிலக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் ஆதரவில் எச்.டி. தேவகவுடா, குஜ்ரால் ஆகி யோர் பிரதமராக இருந்தனர். ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. 1998-ல் நடந்த பொதுத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி யமைத்த வாஜ்பாய் 13 மாதங்களே ஆட்சியில் இருந்தார். அ.தி.மு.க. தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. 1999-ஆம் நடந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, வாஜ்பாய் பிரதமரானார். 2004-ஆம் ஆண்டு நடந்த 14-வது நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாகாந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிக இடங்களில வென்றது. டாக்டர் மன்மோகன்சிங் பிரதமரானார்.
இந்த நிலையில்தான் நாட்டின் 15-வது நாடாளு மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. வலிமைமிக்க ஒரே தலைவர், பெரும்பான்மைமிக்க ஒரே கட்சி என்ற நிலைமை இன்று இந்தியாவில் இல்லை. உயர்சாதி ஆதிக்கத்தை தகர்த்து பிற்படுத்தப்பட்ட,-தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அரசியல் அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மாநிலக் கட்சிகளின் தயவின்றி மத்தியில் எந்த ஆட்சியும் அமையமுடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.மாநிலக் கட்சிகள் ஒதுக்கும் இடங்களை தேசியக் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலே நிலவுகிறது. இதன் மூலம் ஒரே இடத்தில் அதிகாரம் குவிவது தடுக்கப்பட்டு, மாநில நலன்களில் கவனம் செலுத்தப்படுகின்றன. இந்த நிலை நீடித்து, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால், எதிர்காலத்தில் மாநில சுயாட்சி என்ற கனவு சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன
வாழ்த்துக்கள் தர்ஷன் தொடரட்டும் வலைப்பதிவு முயற்சி .
ReplyDeleteநன்றி பிரபா
ReplyDelete