என்னுடைய சினிமா கேரியரை தொடங்கிய போது 7 ஆம் அறிவு மாதிரி ஒரு படத்தில் நடிப்பேனென்றோ, இப்படியொரு வரவேற்பு கிடைக்கும்னோ நான் நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. இந்தப் படம் தியேட்டர் பக்கமே வராம இருந்த பலரை தியேட்டருக்கு வரவழைச்சிருக்கு. இந்தியா வெளிநாடு இரண்டிலும் அமோக வரவேற்பு கிடைச்சிருக்கு. இதுக்கு நான் பிரஸ்ஸுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.
7 ஆம் அறிவு தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த சூர்யாவின் பேச்சில் மகிழ்ச்சி கரைபுரண்டது. கான்ட்ரவர்ஸியான கேள்விகளுக்கும் யோசித்து கோபப்படாமல் பதிலளித்தார். போதி தர்மர் சூர்யாவுக்கு பொறுமை தந்திருப்பது சந்தோஷத்துக்குரியது.
படத்துக்கு எதிராகவும் விமர்சனங்கள் வந்திருக்கே?
ஆமா வந்திருக்கு. பாராட்டுகளை ஏற்கிற அதே மனநிலையில் இதையும் நான் தலைவணங்கி ஏத்துக்கிறேன். சமீபத்தில் திரையுலக பிரமுகர் ஒருவர் தனது மகனுடன் படம் பார்த்திருக்கிறார். அவர் என்னிடம், சிலர் சொல்ற மாதிரி படம் தவறா ஒண்ணும் இல்லையே நல்லாதானே இருக்கு என்றார். அவர் பல படங்கள் தயாரிச்சவர். தங்கர்பச்சான் சொன்ன மாதிரி குறையுள்ளவன்தான் மனிதன். அந்த மனிதனின் படைப்புகளில் குறைகள் ஏற்படுவது சகஜம். அதை பொறுத்துகிட்டு ஆதரவளித்தால் மேலும் நல்ல படைப்புகள் வரும். இப்போ நீங்க சுட்டிக் காட்டியிருக்கிற குறைகள் அடுத்தப் படத்தில் வராத அளவுக்கு பார்த்துப்பேன்.
ஸ்ருதிக்கு உங்களைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது பற்றி...?
இதில் வர்ற முக்கியமான கதாபாத்திரமான போதி தர்மனில் நான்தானே நடித்தேன். இந்தக் கதையை எனக்கு முதலிலேயே முருகதாஸ் சொல்லிட்டார். இரண்டாம் பாகத்தில் ஸ்ருதிக்கு முக்கியத்துவம் என்பது எனக்கு முன்பே தெரியும். கதை அவர் மீதுதான் பயணிக்கும். அதுதான் கதை. அதையும் மீறி ஒவ்வொரு கேரக்டருக்கும் உள்ள முக்கியத்துவத்தை முருகதாஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த கேரக்டரை ஸ்ருதி சரியாக செய்தார் என்று நினைக்கிறீர்களா?
அவருக்கு இது தமிழில் முதல் படம். அப்படி பார்த்தால் 13 வருஷத்துக்கு முன்னாடி நானும் மூட்டையை கட்டியிருக்கணும். ஸ்ருதி இந்தப் படத்தில் ஆர்வமாக நடித்தார். சில குறைகளைத் தாண்டி முதல் படம் என்ற வகையில் அவரது ஆர்வமும், உழைப்பும் பாராட்டத்தக்கது.
கமல் மகள் என்ற பயம் இருந்ததா?
முதல் மூணு நாள் பயமாகதான் இருந்தது. ஸ்ருதி வரும் போது கமல் சாரே வர்றது மாதிரி இருக்கும். கொஞ்ச நாள்தான், அப்புறம் சகஜமாயிட்டேன்.
படத்தின் வசூல் எப்படி?
நான் நடித்த படங்களிலேயே சிங்கம்தான் அதிக வசூல் செய்த படமா இருந்திச்சி. சிங்கத்தோட வசூலை இந்தப் படம் பத்தே நாளில் கடந்திடுச்சி. தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியா இருக்கார். இன்னும்கூட வெளியூர்களில் டிக்கெட் கிடைக்காமல் நல்ல வசூலுடன் படம் ஓடிகிட்டிருக்கு. வெளிநாடுகளிலும் நல்ல கலெக்சன். தமிழறிஞர்கள், உணர்வாளர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள்னு எல்லா தரப்பினரும் பாராட்டுறாங்க. என்னுடைய கேரியரில் 7 ஆம் அறிவு மிகப்பெரிய படம். முருகதாஸுக்கு என் நன்றி.
ரஜினி, கமல் என்ன சொன்னாங்க?
ரஜினி சாரை நேரில் போய் அழைத்தோம். சொன்ன நேரத்துக்கு ஷார்ப்பா வந்தார். படம் பார்த்து வெளியே வந்ததும் கட்டிப் பிடித்து ஃபெண்டாஸ்டிக்னு சொன்னார். கமல் சார் படம் பார்க்கும் போதே பையன் ஃபுல் ஃபார்முல இருக்கான்னு சொன்னதா வைரமுத்து சார் சொன்னார். கமல் சாரை நேர்ல பார்த்தப்போ கேட்டேன், ஆமா, உண்மையை சொன்னேன்னு சொன்னார். இது மிகப்பெரிய பாராட்டு.
வேலாயுதம் பார்த்திட்டீங்களா?
இன்னும் 7 ஆம் அறிவு படத்தையே பார்த்து முடிக்கலை. இனிமேல்தான் வேலாயுதம் பார்க்கணும். ஆனா இரண்டு படங்களுமே நல்லா போய்கிட்டிருக்கு. அப்படிதான் இருக்கணும். ஒரு படம் கமர்ஷியலா வந்தா இன்னொரு படம் வேற டைப்பா வரணும்.
விஜய் உங்க படத்தைப் பார்த்தாரா?
தெரியலை. ஆனால் அவர் வொய்ஃப்புக்கு ஜோ 7 ஆம் அறிவு படத்தை போட்டு காமிச்சாங்க. நல்லாயிருக்குன்னு பாராட்டியிருக்காங்க.
அடுத்தப் படம்? கே.வி.ஆனந்தின் மாற்றான். ஆக்சன், பொழுதுபோக்குன்னு 7 ஆம் அறிவைவிட பெரிசா வரும்னு நினைக்கிறேன்.
இனி சரித்திரப் படங்களில் நடிப்பீர்களா?
பெரிய இயக்குனர் ஒருவர் 17 ஆம் நூற்றாண்டு கதையொன்றை சொன்னார். முதல் பாதி அற்புதமா இருந்திச்சி. இரண்டாம் பகுதியும் பிடிச்சிருந்து தயாரிப்பாளரும் அமைந்தால் நடிப்பேன்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.